Monday 17 August 2015

மந்திரப் புன்னகை

மோனாலிசா 


குனித்த புருவமும், கொவ்வை செவ்வாயில் குமிழ்சிரிப்புமாக இருக்கும் உலகப்புகழ் பெற்ற ஓர் ஒவியம் மோனாலிசா ஓவியம்.
அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் முகத்தில் கடந்த 500 ஆண்டுகாலமாக இனம்புரியாத மர்மப் புன்னகை ஒன்று உதிராமல் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.
யார் அந்தப் பெண்? அந்த சிரிப்பின் மர்மம் என்ன என்பது இன்றுவரை யாருக்குமே புரியாத புதிர்.
ஓவியர் லியார்னோடோ டாவின்சி, இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்தபோது, பிரான்செஸ்கோ டி பர்த்தலோமியஸ் டி சானோபி டெல் ஜியாகோண்டா (?) என்ற பட்டுவணிகர் அவரைச் சந்தித்தார். தனது மூன்றாவது மனைவியான லிசா டி அன்டோனியோ மாரியார்டி நோல்டோ ஜெரார்டினியை (?) ஓவியமாக வரைந்து தரும்படி கேட்டார்.
ஜெரார்டினிக்கு அப்போது வயது 24. அவரை மாடலாக வைத்து ஓவியம் தீட்ட ஆரம்பித்தார் டாவின்சி. நான்கு ஆண்டுகள் கழித்து, அதாவது 1507ல் டாவின்சி பிரான்ஸ் நாட்டுக்குப் புறப்பட்டார்.

அப்போது மோனாலிசா ஓவியத்தை டாவின்சி, சில்க் வணிகரிடம் ஒப்படைக்க வில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். ஒன்று அந்த ஓவியம் அப்போது முற்றுப் பெறாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது அந்த  ஓவியத்தின் மீது டாவின்சி காதல் கொண்ட காரணத்தால், அதைத் தர மனமில்லாமல் கையோடு எடுத்துக் கொண்டு பிரான்சுக்குப் போயிருக்க வேண்டும்.
1516ல் பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்சிஸின் அரசவை ஓவியராகச் சேர்ந்தார் டாவின்சி. அப்போது மோனாலிசா ஓவியத்தை மன்னர் விரும்பிக் கேட்டதால் அதை 4 ஆயிரம் தங்க நாணயங்களுக்கு அதை விற்றார். ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான தொகை அது அப்போது.
மோனாலிசா ஓவியத்தை மன்னர் முதலாம் பிரான்சிஸ் மாட்டி வைத்திருந்த இடம் அவரது கழிப்பறை.
காலங்கள் கடந்து நெப்போலியன் போனபார்ட் பிரான்ஸ் நாட்டின் மன்னரான போது மோனாலிசா ஓவியம் அவரது படுக்கையறையை அலங்கரித்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப்பிறகு இந்த ஓவியம் பாரிஸ் நகரத்தின் லூவர் அருங்காட்சியகத்தில் போய்ச் சேர்ந்தது.
மோனாலிசா ஓவியம் எத்தனைப் பேரை பாடாய்ப்படுத்தியிருக்கிறது தெரியுமா? 1800களின் நடுப்பகுதியில் வாழ்ந்த ஓவியர் லுக் மாஸ்பெரோ என்பவர், எனது தற்கொலைக்கு மோனாலிசா ஓவியமே காரணம் என்று எழுதி வைத்து விட்டு நான்காவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
1911ல் லூவர் அருங்காட்சியகத்தில், ஊழியராக வேலைபார்த்த இத்தாலிக்காரர் ஒருவர் சமயம் பார்த்து மோனாலிசா ஓவியத்தை அமுக்கிக் கொண்டு இத்தாலிக்கு ஓடிவிட்டார். அன்று பாரிஸ் நகரமே அழுது புலம்பியது. மக்கள் தெருக்களில் நின்று அழுது புலம்பினார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் திருடரிடம் இருந்து ஓவியம் மீட்கப்பட்டது. மோனாலிசா ஓவியம் இத்தாலி நாட்டின் சொத்து. அதனால்தான் திருடினேன் என்று அந்த ஓவியர் வியாக்கியானம் வேறு செய்தார். நல்லவேளை, ஓவியம் அவரிடம் இருந்தபோது எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
1956ல் பொலிவியா நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞர், மோனாலிசா ஓவியத்தின் மீது கல்லை விட்டெறிய, மோனாலிசாவின் முழங்கைப் பகுதி பாதிப்படைந்தது. அதன்பின் குண்டு துளைக்காத மூன்றடுக்கு கண்ணாடிகளின் பாதுகாப்பில், 55 சதவிகித ஈரப்பதத்துடன் பத்திரமாக இருக்கிறது மோனாலிசா ஓவியம்.
லியோன் மெகுசா என்ற  தொழிலதிபர், மோனாலிசா மீது கொண்ட காதலால் மோனாலிசாவைத் தினமும் பார்க்கும் ஆசையில், தனது நிறுவனத்தை வந்த விலைக்கு விற்றுவிட்டு லூவர் மியூசியத்தில் சம்பளம் இல்லாத காவல்காரராக வேலைக்குச் சேர்ந்து விட்டார். ஒப்புரான சத்தியமா நான் காவல்காரன் என்று மோனாலிசாவைத் தினமும் காவல் (காதல்) புரிந்து வருகிறார் அவர்.
பாரிஸ் நகரின் லூவர் மியூசியத்தில் மொத்தம் ஆறாயிரம் அரிய கலைப்பொருள்கள் இருந்தாலும், மக்கள் நிதமும் முண்டியடித்து கூட்டம் கூட்டமாக வந்துபார்ப்பது மோனாலிசா ஓவியத்தைத்தான்.
அந்த ஓவியத்தைப் பார்க்கும்போது காதுக்குள் ஒரு மர்மான இசை கேட்பதாகக் கூட வதந்தி உண்டு.
இப்போது மோனாலிசாவின் மோகனப்புன்னகைக்கு வருவோம்.

Friday 14 August 2015

வார்டிசிசம்


11. வார்டிசிசம்

இது குறுகிய காலமே வாழ்ந்த கலை இயக்கம். 1914 முதல் 1915 வரை ஓராண்டு காலமே இது ஆட்சி செலுத்தியது.
பிரிட்டிஷ் ஓவியர் வின்தாம் லூயிஸ் இந்த இயக்கத்தை வழிநடத்தினார். அடிப்படையில் அணுகுமுறையில் இது கிட்டத்தட்ட கியூபிசம் மாதிரியானது. ஆனால் இத்தாலிய பியூச்சரிசத்தின் செல்வாக்கு இதில் அதிகமிருந்தது. (இத்தாலிய பியூச்சரிசத்துக்கு இது அதிக அளவில் கடன்பட்டிருந்தது)
நவீன தொழில்மய சமூகம் வார்டிசிசத்தின் கருப்பொருளாக இருந்தது. பலமான ஜியோமிதி வடிவங்கள், இயந்திரமயமான அமைப்புகளில் வார்டிசிச ஓவியங்கள் படைக்கப்பட்டன.
இந்த ஓவியங்களில் இயக்க அசைவுகளும், சக்தியும் செறிந்திருந்தன.
பியூச்சரிச ஓவியர் போசியானி, அனைத்து கலை படைப்புகளும் உணர்ச்சி ததும்பிய வார்ட்டெக்சில் இருந்து உற்பத்தியாக வேண்டும் என்று ஒருமுறை அறிவிக்க, அதன் அடிப்படையில் வார்டிசிசம் என்ற பெயர் உருவானது.
வின்தாம் லூயிஸ் உருவாக்கிய வொர்க்சாப் (1914-15)  என்ற ஓவியம், இந்த கலை இயக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டு.

Thursday 13 August 2015

அப்ஸ்ட்ராக்ட்


10. அப்ஸ்ட்ராக்ட்

ஓவியத்தின் நெடிய வரலாற்றில் அப்ஸ்ட்ராக்ட் இருந்தபோதிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அவாண்ட் கார்டே இயக்கத்துடன் இணைந்து அப்ஸ்ட்ராக்ட் கலைவடிவம் ஆரம்பித்தது.
அங்கீகரிக்கப்பட்ட ஸ்டைல்களை, அதன் பிரதிநிதித்துவங்களை அப்ஸ்ட்ராக்ட் இயக்கம் நிராகரித்தது.
ஓவியத்துக்கான வடிவப் பொருள்களை அது குறைத்து, அவற்றை எளிமைப் படுத்தப்பட்ட வடிவங்களாக மாற்றியது.
மெய்ம்மை உலக வாழ்வின் உடல் சார்ந்த ஓவியத்துக்கான வடிவப் பொருள்களை அப்ஸ்ட்ராக்ட் நிராகரித்தது. புதிய வடிவங்களில் அது ஓவியத்தைப் படைத்தது.
1917க்குப் பின் கான்டின்ஸ்கி, பியட் மான்டிரியான் ஆகியோர் படைத்த ஓவியங்கள், அப்ஸ்ட்ராக்ட் கலை வடிவத்துக்கு அற்புதமான சான்றுகள்.
1929ல் பியட் மான்டிரியான் படைத்த சிவப்பு நீலம் மஞ்சள் கருப்பு என்ற ஓவியம் இதற்கு நல்ல உதாரணம்.

Wednesday 12 August 2015

கியூபிசம்


9. கியூபிசம்

கியூபிசம் பாப்லோ பிகாசோ, ஜார்ஜஸ் பிரேக் போன்றவர்களால் உருவெடுத்த ஒரு கலை இயக்கம்.
பால் சீசானின் பிந்தைய ஓவியங்கள் மற்றும் ஆப்பிரிக்க சிற்பக் கலை வடிவங்களின் செல்வாக்கும் கியூபிசத்தில் ஓரளவுக்கு உண்டு.
கியூபிச ஓவியர்கள் பலநோக்கு பார்வை முனைகளில் அவர்களது ஓவியங்களைக் கட்டமைத்தார்கள்.
தொகுதி பகுதி ஒருங்கிணைப்பை (கம்போசிசன்) உள்ளடக்கி ஒரு தளத்தின் மீது மற்றொரு தளத்தை (பிளேன்) அவர்கள் படரச் செய்தார்கள். படியச் செய்தார்கள்.
மறுமலர்ச்சிக் காலம் தொடங்கி அதுநாள் வரை செல்வாக்கு செலுத்தி கோலோச்சி வந்த கோடுகள் வரிகள் அடங்கிய (லைனர்) பிராஸ்பெக்ட் (ஒரு படத்தில் தெளிவாகத் தெரியும்படி வரையும் காட்சி) கொள்கையை இதன் மூலம் அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்.
அதோடு கியூபிசத்தில் பார்வைக்குப் புலனாகும் ஒரு பொருளை, அது தெரியும் விதத்தில் இல்லாமல், அதை அறிந்த விதத்தில் வெளிப்படுத்த கியூபிச ஓவியர்கள் கங்கணம் கட்டி செயல்பட்டார்கள்.
மேலும், ஒரு பொருள் அது இருந்த ஒற்றை இடத்தில் அசையாத் தன்மையுடன் இருப்பதைத் தவிர்த்து, அசையும் தன்மையுடன் இயக்க விசையுடன் அதை அவர்கள் காட்சிப்படுத்தினார்கள்.
பாப்லோ பிகாசோ படைத்த கிடாரும் வயலினும், (1910) ஓவியம் கியூபிசத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு.


Tuesday 11 August 2015

எக்ஸ்பிரசனிசம்


8. எக்ஸ்பிரசனிசம்

உருவைக் கெடுத்து...  உண்மையைத் திரித்து....

எக்ஸ்பிரசனிசம் என்பது ஓர் ஓவியக் கருத்து. நேரில் தெரியும் யதார்த்தத்தின் பிரதிநிதித்துவத்தைக் கெடுத்து, உள்ளிருக்கும் தரிசனத்தை, பார்வையை வெளிக் கொண்டுவருவது எக்ஸ்பிரசனிசத்தின்  முக்கிய அம்சம்.
இம்ப்ரசனிஸ்டுகள் தத்தெடுத்து வளர்த்த கொள்கையான, இயற்கையை நகலெடுக்கும் பாணிக்கு இது முற்றிலும் நேர்எதிரான அணுகுமுறை ஆகும்.
ஜெர்மன் நாடு எக்ஸ்பிரசனிசத்தின் முக்கிய நடுவமாக உருவெடுத்தது.
டெர் பிளே ரெய்டர் (நீல சவாரிக்காரன்) என்ற குழு, மிக முதன்மையான எக்ஸ்பிரசனிச ஓவியக்குழுவாகத் திகழ்ந்தது.
வாசிலி கான்டன்ஸ்கி, பால்கிளி போன்றவர்கள் இந்தக் குழுவின் அனுக்க உறுப்பினர்கள்.
இலக்கிய உலகிலும் எக்ஸ்பிரசனிசம் புகுந்தது. ரியலிசம், இம்ப்ரசனிசத்துக்கு எதிரான கலகக்குரலாக அது மாறியது.
பிரான்ஸ் காப்கா, அகஸ்ட் ஸ்டிரின்ட்பெர்க், ஜேம்ஸ் சாய்ஸ் போன்றவர்கள் இலக்கிய உலக எக்ஸ்பிரசனிசத்தில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
1910ல் உருவான, இகோன் சிய்ல்லியின்  தன்னோவியத்தின் அலறல் என்ற கலைப்படைப்பு, எக்ஸ்பிரசனிசத்துக்கு மிக அழகான எடுத்துக்காட்டு.
ஸ்கீவெனிங்ஸ்சன் கடல் கிராமம் என்ற ஓவியமும் இந்த வகைப்பாட்டில் அடங்கும்.

Sunday 9 August 2015

ஃபாவிசம்


7. ஃபாவிசம்

பிந்தைய இம்ப்ரசனிசத்தில் இருந்து தோன்றி குறுகிய காலமே வாழ்ந்த ஒரு கலை இயக்கம் இது. குறுகிய காலமே வாழ்ந்து மறைந்தாலும், கலை வரலாற்றில் இதன் பதிவு மிக அழுத்தமானது.
ஃபாவிசத்துக்கு முந்தைய ஓவியர்கள், கண்முன் தெரியும் உருவங்களை வண்ணங்களால் பிம்பமெடுத்தார்கள்.
ஹென்றி மாட்டீஸ், ஆந்த்ரே தெரெய்ன், மாரிஸ் தெ விளாமின்ஸ்க் போன்றவர்கள் புகழ்பெற்ற ஃபாவிச ஓவியர்கள்.
இவர்கள் வண்ணங்களுக்கு அவற்றின் இயற்கைக் குணங்களில் இருந்து விடுதலையளித்தார்கள். அதாவது நீலம் என்பது வானத்தைக் குறிக்கும் வண்ணம் என்பதுபோன்ற கட்டுகளை இவர்கள் உடைத்தார்கள்.
இவர்களால் வண்ணங்கள் அவற்றின் பிரதிநிதித்துவ இயல்புகளை இழந்தன.
மாறாக, வண்ணங்களை இவர்கள் பலவித உணர்வுத் தோய்வுகளுக்காக பயனுறுத்தத் தொடங்கினார்கள்.
1905ல் திறந்த ஜன்னல் என்ற ஓவியத்தை ஹென்றி மாட்டீஸ் படைத்தார். வீட்டின் உள்விழும் நிழல்களை அவர் பச்சை நிறத்திலும், ஜன்னலுக்கு வெளியே நீர்நிலையில் தெரிந்த படகுகளின் பாய்மரங்களை சிவப்பு வண்ணத்திலும் தீட்டியிருந்தார்.
அவ்வப் பொருள்களின் இயற்கை நிறங்களை அவர் தேர்ந்தெடுத்துத் தீட்டவில்லை. பார்வைக்கு புலனாகும் வெறும் கட்புலன் வண்ணங்களைத் தேர்வு செய்யாமல், அந்த நேரத்தைய உணர்வுப் பெருக்கின் வெளிப்பாடாக அந்த வண்ணங்களை அவர் தெரிவு செய்திருந்தார்.
அந்த நேரத்திய உணர்ச்சி வெளிப்பாட்டின் வடிகாலாக, அதன் அடிப்படையில் அவரது வண்ணத்தேர்வு அமைந்திருந்தது.
வண்ணங்கள் தொடர்பான ஃபாவிச ஓவியர்களின் இந்த அணுகுமுறை, எக்ஸ்பிரசனிசம் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்ஸ்ட்ராக்சனிசத்துக்கான முன்னோட்டமாகவும் அமைந்தது.


Saturday 8 August 2015

பாயிண்ட்தலிசம்

6.பாயிண்ட்தலிசம்

சின்னஞ்சிறு புள்ளிகளில் முழு ஓவியம்

பாயிண்ட்தலிசம்.  புதிய இம்ப்ரசனிசத்தின் இன்னொரு பெயர் என்று இதைச் சொல்லலாம். பாயிண்ட்தலிசம் என்பது இம்ப்ரசனிச ஓவியர்களில் மிக முக்கியமான சிலர் பயன்படுத்திய நுணுக்கமான கலை வடிவம் ஆகும். ஜியார்ஜஸ் சூரா, பால் சிக்னாக் போன்றவர்கள் இந்த கலை வடிவத்துக்கு மெருகேற்றினார்கள்.
19ஆம் நூற்றாண்டில், வண்ணங்களுக்கு இருந்த அறிவியல் ரீதியிலான கொள்கையை இவர்கள் புதிய முறையில் அணுகினார்கள்.
தூய, முழுமையான கலக்காத வண்ணங்களில், பொடிப்பொடி புள்ளிகள் மூலம் இவர்கள் ஓவியங்களை வரைந்தனர்.
ஒன்றுடன் ஒன்று கலக்காத இந்த வண்ணச்சிறு புள்ளிகள் தொலைவில் இருந்து பார்க்கும்போது ஓவிய வடிவமாகத் துலங்கும்.
இதில் ஒவ்வொரு புள்ளியும் கவனமாக ஒன்றுடன் ஒன்று வினை புரிந்து, மிக அதிசக்தி வாய்ந்த அதிர வைக்கும் விளைவு ஒன்றை ஓவியத்தில் உருவாக்கி இருக்கும்.
இதே வண்ணங்களைக் குழைத்து, வழக்கமான ஓவியத்தைத் தீட்டினால் அந்த வனப்பு கண்டிப்பாக வராது.
புதிய இம்ப்ரசனிச ஓவியர்கள் பலர் பாயிண்ட்தலிசத்தைக் கையில் எடுத்தனர். இருபதாம் நூற்றாண்டு ஓவியத்தில் இந்த பாயிண்ட்தலிசம் பெரும் செல்வாக்கு செலுத்தியது.
ஜியார்ஜஸ் சூராவின் லெஸ் போசியஸ் ஓவியம் (1888) பாயிண்ட்தலிசத்தின் சிறந்த எடுத்துக்காட்டு.


Friday 7 August 2015

புதிய அல்லது பிந்தைய இம்ப்ரசனிசம்

5. புதிய அல்லது பிந்தைய இம்ப்ரசனிசம்

1880ல்தான் பிந்தைய இம்ப்ரசனிசம் இனிதே பிறந்தது.
பிந்தைய இம்ப்ரசனிசத்துக்கு இப்படியொரு பெயரைச் சூட்டியவர் ஒரு பிரிட்டிஷ்காரர். அவர் ஒரு ஓவிய விமர்சகர். அவரது பெயர் ரோகர் பிரை.
இந்த சொல்லாடலுக்குச் சொந்தக்காரர் அவர்தான். இதை முதன்முதலில் உச்சரித்தவரும் அவர்தான்.
பால் சீசான் அப்போது பாரிஸ் நகரின் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவராக உருவாகியிருந்தார்.
இம்ப்ரசனிச ஓவியங்களில் மட்டுமல்ல, பிந்தைய இம்ப்ரசனிச ஓவிய பாணியிலும் அவர் கொடி கட்டிப் பறந்தார்.
பாரிஸ் நகரில் அப்போது பல்கிப் பெருகியிருந்த பல்வேறு ஓவிய ஸ்டைல்களை விவரிக்க இந்த சொல்லாடலை ஓவியர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
ஓவியங்களில் புதுப்புது உத்தியை ஆய்ந்து பார்த்த ஓர் ஒவியத் தலைமுறையை இந்த பிந்தைய இம்ப்ரசனிசம் என்ற சொல் உள்ளடக்குகிறது.
பால் சீசான், பால் காகின், ஜார்ஜியஸ் சூரா, வின்சென்ட் வான்கா போன்றவர்கள் இந்த பாணியிலான ஓவியர்கள்.
இவர்களுக்குள் தனித்தனி ஓவிய ஸ்டைல்கள் இருந்தாலும், இவர்கள் அனைவரும் பின் இம்ப்ரசனிச ஓவியர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள்.

இந்த பின் இம்ப்ரசனிச ஓவியத்துக்கு அற்புதமான ஓர்எடுத்துக்காட்டு வின்சென்ட் வான்காவின் இத்தாலியப் பெண் என்ற ஓவியம். 1888ல் வான்காவின் வண்ணத்தில் அந்த ஓவியம் முகிழ்த்தது.
பால் சீசானும், வான்காவும்   பின் இம்ப்ரசனிச ஓவியர்கள்தான் என்றாலும் இருவருக்கும் இடையில் தனித்தனி ஸ்டைல்கள் இருந்தன.
பால் சீசான் அதே 1888ஆம் ஆண்டு தனது புகழ்  பெற்ற ஓவியம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியிருந்தார். அந்த ஓவியத்தின் பெயர் ஆப்பிள் ஆரஞ்ச் எலுமிச்சை.
பின்னாட்களில் அந்த ஓவியம் பால் சீசானின் தலைசிறந்த ஓவியமாகக் கொண்டாடப்பட்டது. லண்டன் சாத்பை ஏலக் கடையில், 29.5 மில்லியன் டாலருக்கு அது ஏலம் போனது.

இம்ப்ரசனிசம்

4. இம்ப்ரசனிசம் 

இம்ப்ரசனிசம் 1860களில் ஓர் எளிய ஓவிய இயக்கமாக உருவெடுத்தது. அன்றாட வாழ்க்கையின் எளியத் தன்மையை ஈர்த்தெடுப்பது இம்ப்ரசனிசம் என வகைப்படுத்தப்பட்டது.
மோனட், பால் சீசான் ஆகியோர் இம்ப்ரசனிச ஓவிய இயக்கத்தின் முன்னணி ஓவியர்களாக முகிழ்த்தார்கள். பிசாரே, ரெனார் போன்றவர்களும் இம்ப்ரசனிச ஓவியர்கள்தான்.
வெயில் பரப்பும் பெருவெளிகளில் இருந்தபடி இயற்கை அள்ளித் தெளிக்கும் அழகை இவர்கள் வேகவேகமாக வரைந்தனர். பார்த்ததை உடனுக்குடன் திரைச் சீலையில் பதிவு செய்தனர்.
இயற்கையை, அதன் ஒளியை, அதன் உருமாறும் தன்மையை கண்கவர் வண்ணங்களால் அவர்கள் கைப்பற்ற முயன்றனர்.
கிளாட் மொனேயின் வாட்டர் லில்லி என்ற அல்லிக்குளம் (1899) ஓவியம், இந்த இம்ப்ரசனிச ஓவியத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.


Thursday 6 August 2015

நேச்சுரலிசம்

3.நேச்சுரலிசம்

இயற்கையையும், அதன் கவின்மிகு இயல்பையும், அச்சு அசலாக அப்படியே பெயர்த்தெழுதிப் படைக்கும் இசம் நேச்சுரலிசமாக உருவெடுத்தது.
இயற்கையை இப்படி நகலெடுக்கும் கலையில், நேச்சுரலிச ஓவியர்கள், இயற்கையின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் கவனமாகப் பதிவு செய்வார்கள்.
அதே வேளையில் பொருளின் இயற்கை அழகை தங்கள் படைப்பில் கைப்பற்றவும் அவர்கள் தவறவில்லை.
ஓவியர் ழான் பிரான்சுவா மில்லட்டின் 1875ம் ஆண்டு படைப்பான சுத்தம் செய்பவர்கள் என்ற ஓவியம், நேச்சுரலிசத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.

Tuesday 4 August 2015

ரபேலைட்டுக்கு முந்தையவர்கள்

2. ரபேலைட்டுக்கு முந்தையவர்கள்

நவீன செவ்வியல் (நியூகிளாசிக்கல் ஓவியங்கள்), மரபார்ந்த வழக்கமான அகாடமிக் ஓவியங்களின் மீதிருந்த வெறுப்பால், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முகிழ்ந்த ஓவிய இயக்கம் இது.
1848ஆம் ஆண்டு பிரித்தானிய ஓவியக் கலைஞர்களின் கூட்டிணைவால் இந்த புதிய கலைஇயம் தோற்றமெடுத்தது.
ஹோல்மன் ஹண்ட், ஜான் எவரெட் மில்லாய்ஸ், தாந்தே காப்ரியல் ரோசட்டி ஆகியோர் ரபேலைட்டுக்கு முந்தைய ஓவியர்களில் மிக முக்கியமானவர்கள்.
அவரவர்களின் தனித்தன்மைகளில் வித்தியாசங்கள் இருந்தாலும், இந்த பாணியிலான ஓவியர்கள் ஸ்டைல்,
புத்துணர்வுக்காக பழைமையை, தேடுவது, இதிகாசம், வரலாறு, பண்டைய இலக்கியம்  போன்றவற்றில் இருந்து கருப்பொருளைத் தேடுவது போன்றவற்றில் ஒத்துப் போனார்கள்.
இவர்கள் இயற்கையைப் பார்த்து நேரடியாக வரை
ந்தார்கள். வரலாற்றுக் காட்சிகளை ஓவியமாக வரையும் போது அது உண்மையில் நடந்திருக்கலாம் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள்.
1864ல் தாந்தே காப்ரியல் ரோசட்டி படைத்த, ஹேரேஷியோ ஒபிலியாவின் உன்மத்தத்தைக் கண்டுபிடித்த போது என்ற ஓவியம், இந்த பாணியில் அமைந்த சிறந்த ஓவியம்.

Monday 3 August 2015

ஓவிய இசங்கள்

ஓவிய இசங்கள்


1. மறுமலர்ச்சிக் காலம்


மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், அறிவார்த்த கலை மேதமையும், ஓவியப் படைப்புகளும் மறுபிறப்பெடுத்தன. இயற்கையியல் ஈடுபாடு அப்போது கூடியது. பண்டைய ரோமின் கலைகளையும், இலக்கியங்களையும் புத்துருவாக்கம் செய்யும் ஆவல் வளர்ந்தது.
கட்டடக் கலைஞர்கள் பண்டைய ரோம் நகரின் வனப்புடன் புதிய கட்டடங்களைக் கட்டியெழுப்ப, ஓவியக் கலைஞர்களோ இதிகாசம், வரலாறு போன்றவற்றை பெர்ஸ்பெக்டிவ் நுட்பத்துடன் படைக்கத் தொடங்கினார்கள்.
1486ல் சாண்ட்ரோ பாட்டிசெல்லி வரைந்த
வீனஸின் பிறப்பு என்ற ஓவியம் இந்த வகைப்பாட்டில் அடங்கும்.