Sunday 24 January 2016

சிரசு மீன் (தலைமீன், மோளா)


விரிந்து பரந்த பெருங்கடல் பகுதியில் உலவும் வித்தியாசமான மீன் இது. இதன் விநோத உருவ அமைப்பு பார்ப்பவர்களை வியப்படைய வைக்கும்.
ஒரு பெருமீனின் உடலை தனியாகத் துண்டித்து எடுத்தபின் தலைப்பாகம் மட்டுமே எஞ்சியிருப்பது போல சிரசு மீனின் தோற்றம் இருக்கும். தலை மட்டுமே இருப்பது போல மீன் தோன்றுவதால் தமிழில் சிரசு மீன் என இது அழைக்கப்படுகிறது.
சிரசு மீன்களில் இருவகைகள் உள்ளன. ஒன்று பத்தடி நீளமும், ஆயிரம் கிலோ எடை வரை இருக்கக்கூடிய மிகப்பெரிய மீன். மற்றது இரண்டடி நீளம் மட்டுமே இருக்கக்கூடிய சிறுரக மீன். சிரசு மீனின் வாலருகே மேலும் கீழுமாக இரு நீளத் தூவிகள் உண்டு. மற்றபடி வால்தூவி கூட இந்த மீனுக்குக் கிடையாது.
சிரசு மீனின் தோல் முரடானது. இதன் எலும்பு சட்டகம் முறையாக வளர்ச்சி பெறாத ஒன்று. இந்தவகை மீனின் உடல்பகுதி சாம்பல் நிறமாகவும், அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும்.
திறந்த கடல்களில் மிக மெதுவாக நீந்திச்செல்லும் சிரசு மீன், சொறி மீன்களை (Jelly Fish) உணவாகக் கொள்ளும். பறவைச் சொண்டு (அலகு) போன்ற வாயால், கடல்மேல் மிதக்கும் கவுர்களையும் இது உணவாகக் கொள்ளும்.
சிரசு மீன், கிளாத்தி (Trigger) மற்றும் பேத்தா (Puffer) மீன்களுக்கு உறவுக்கார மீன்.
,சிரசு மீன்களில் சிறிய மீன்கள், செங்குத்தாக மற்ற மீன்களைப் போலவே நீந்தக்கூடியவை. வளர்ந்த பெரிய மீன்கள் நீந்தாமல், நீர்ப்பரப்பின் மேல் மிதந்தபடி நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படக் கூடியவை.

இரண்டரை அடி நீள சிறுரக சிரசு மீன்கள், சிறுகூட்டமாகத் திரியும். ஹவாய்த் தீவுப் பகுதி மக்கள் இதை புனிதமான மீனாகக் கருதுகிறார்கள். தமிழ்கூறும் நல்லுலகுக்கு சிரசு மீன் அரிதான மீன் என்றாலும், அந்நியமான மீனல்ல. ஈழத்தின் மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பகுதியில் ஒருமுறை சிரசு மீன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Wednesday 20 January 2016

மஞ்சள் கீளி (பார்க்கீளி)


பவழப்பாறைகளின் ஆழப்பொந்துகள், பாறைச் செறிவுகளில் வாழும் பார் மீன் இது. பழுப்பு கலந்த வெளிர் மஞ்சள் உடலும், சிவப்பு நிறம் கலந்த கருநிற வாலும் இதன்

முக்கிய அடையாளம். மஞ்சள்கீளியின் முதுகுத் தூவிகளின் முனைகள் கருமையாகவும், கீழ்தூவி, வால்தூவி, பக்கத் தூவிகள் மஞ்சளாகவும் விளங்கும்.
மஞ்சள் கீளி குட்டியாக இருக்கும்போது அதன் மஞ்சள் உடலில் படுக்கை வசமாக நீலநிறக்கோடுகள் காணப்படும். முதிர் வயதில் அவை மறைந்து விடும். கடலில் ஒரு மீட்டர் முதல் 75 மீட்டர் ஆழம் வரை பார்க்கடலிலும், பார் தாழ்ந்த மடைப் பகுதிகளிலும் மஞ்சள் கீளி தென்படும்.
இரவில் இரைதேடும் மஞ்சள் கீளி, சிறுநவரை, சிறுமீன்கள், நண்டு, இறால் போன்றவற்றை இரை கொள்ளும்.
ஆங்கிலத்தில் Black tail Snapper. Yellow margined sea perch. Flametail Snapper என்ற பெயர்கள் கீளிக்கு உள்ளன.

ஓரடிக்கும் சற்று குறைவான நீளமுள்ளது மஞ்சள் கீளி. அதையும் விட சிறியது சலம் தின்னிக்கீளி. பசும் சாணி நிறமுள்ள இந்த மீன், இறந்த மீன்கள், இதர கடலுயிர்களை வேக வேகமாக கொரித்துத் தின்ன வல்லது.

Saturday 16 January 2016

களவா

பார் மீன்களில் மிகப்பெரியது களவா (Grouper) களவாவில் பல இனங்கள். சில ஒரு மீட்டர் முதல் மூன்றேமுக்கால் மீட்டர் நீளமுள்ளவை. 100 கிலோ முதல் 400 கிலோ நிறையுள்ள களவாக்களும் உள்ளன. சில களவாக்கள் குட்டி கார் அல்லது குளிர்ப்பதன பெட்டி அளவுக்குப் பெரியதாக இருக்கும்.

களவா, Sea bass எனப்படும் கொடுவாவுக்கு உறவுக்கார மீன். அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும் களவா, கடலில் நீண்டதொலைவு அலையும் மீன் அல்ல. வேகமாக நீந்தும் மீனும் அல்ல.
பெரிய மீனாக இருந்தாலும், கடலில் நீரோட்டம் அதிகமாக இருந்தால், நீரோட்டத்தைச் சமாளிக்க பாறையின் பின்னால் ஒதுங்கிக் கொள்ளும் மீன் இது. அதனாலேயே பார்க்கடல் மீனாக களவா வாழ்கிறது. நீண்ட நேரம் வேகமாக நீந்தமுடியாது என்பதால் இது திடீரென இரையை வழிமறித்து தாக்கி கொல்லும். இதன் வாய் பெரியது. ஒரே விழுங்கில் சுறாவையோ, திருக்கையையோ களவா விழுங்க வல்லது. தூண்டிலில் சிக்கிய சீலாவையும் சில வேளைகளில் ஒரே கடியில் இது கொண்டு போகக் கூடியது.
நண்டு, இறால், கணவாய், மீன், ஆமைக்குஞ்சுகளையும் இது உணவாக்க வல்லது.
ஆண்டுக்கொருமுறை முழுநிலா நாளில் களவா மீன்கள் ஒன்றுகூடும். இது வெளிவிடும் முட்டைகளை யானைத் திருக்கையும், இதர சிறுமீன்களும் விரும்பி உண்ணும். களவாயில் மிகப்பெரிய ஓரினத்துக்கு யூதமீன் என்றொரு பெயர் உண்டு. பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர் யோனாவை விழுங்கிய மீன் களவா என்று நம்பப்படுவதால் Jew fish என இது அழைக்கப்படுகிறது.
50 ஆண்டுகாலம் வாழக்கூடிய களவா மீன், நிறம் மாற வல்லது. பிறக்கும் போது பெண்ணாகப் பிறக்கும் களவா வயது முதிரும்போது ஆணாக மாற வாய்ப்புள்ளது. முதிர்ந்த ஆண்மீன் கொஞ்ச காலமே வாழும். இதனால் களவாக்களில் முட்டையிடும் பெட்டை மீன்கள்தான் அதிகம்.
களவாவில், ஒரே காலகட்டத்தில் ஒரே வேளையில் ஆணாகவும், பெண்ணாகவும் வாழும்

களவாவும் உண்டு.

பவழப் பாறைகளில் பெண்மீன்களுடன் கூடிவாழும் ஓர் ஆண் களவா இறந்து போனால், அந்த பெண் களவாக்களில் ஒன்று ஆணாக மாறி, கணவனின் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.
களவாவும், அதன் உறவுகளான அழுவை, மூச்சா, மழுவன் மீன்களும் வழுவழுப்பான செதிள் கொண்டவை.

Tuesday 12 January 2016

சுங்கான்

கெழுது இனத்தில் ஏறத்தாழ 75 வகைகள். அதில் பார்களில் வாழும் ஒரே கெழுதினமாகக் கருதப்படுவது சுங்கான் மீன். ஓரடி நீள உடலும், அதில் அணில் போன்ற வரிகள் இருப்பதும் இந்த மீனின் முதன்மை அடையாளம்.
Coral Cat fish என அழைக்கப்படும் சுங்கான் மீன் கரும்பழுப்பு நிறமும், வெள்ளை நிற வயிறும் கொண்டது. இளமீன்களில் மஞ்சள் கலந்த வெள்ளைநிற வரிகள் நீளவாக்கில் உடல் முழுவதும் ஓடும். கெழுது இனத்துக்குரிய மீசை சுங்கானுக்கும் உண்டு.

பலமான நீரோட்டம் உள்ள பவழப்பாறைகள் இந்த இன மீனின் விருப்பத் தங்குமிடம். பார் அடுத்த சகதிப்பகுதியிலும் சுங்கான் காணப்படும். இளம் மீன்கள் 6 முதல் 100 மீன்கள் கொண்ட கூட்டமாகத் திரியும்.
இறால், நண்டு, சிறுமீன்கள், கவர் போன்றவை இவற்றின் முதன்மை உணவு. சிறுபந்து போல திரண்டு கூட்டமாகத் திரியும் சுங்கான்கள் கடலடித்தரையைக் கிளறி இரை தேடும். மேல்மட்ட மீன்கள் கீழேயும், கீழ்மட்ட மீன்கள் மேலேயும் இடம்மாறி சகதியைக் கிளறி இரைதேட, இந்தப் பந்து நகர்ந்து கொண்டே இருக்கும்.
முதிர் வயதில் சுங்கான் மீன் அதன் கோடுகளை இழந்து சாக்லெட் நிறமாகி விடும். பார்களில் தனித்து வாழும். சுங்கான் மீனின் தூவிப்பகுதிகளில் நச்சுமுட்கள் இருக்கும். பெருங்கடுப்பை உருவாக்கக்கூடியது இதன் முள்குத்து.

சுருட்டு போன்ற நீள்வடிவத்தில் இருப்பதால் சுங்கான் என்ற பெயர் இதற்கு வந்திருக்கலாம்.

Thursday 7 January 2016

சங்கு
முண்டஞ்சங்கு, வலம்புரி சங்கு, பேய்ச் சங்கு, முள்ளஞ்சங்கு, பூவேப்பு சங்கு, கோபுரச் சங்கு, நரித்தலை சங்கு, ஈட்டிச் சங்கு (ஈட்டி போன்ற இதன் முனையில் நஞ்சு உண்டு. குத்தினால் ஆபத்து).
இராக்கெட் சங்கு, இராவணன் சங்கு, எழுத்தாணி சங்கு, கிளாச் சங்கு (குழாய்ச் சங்கு), குருவிச்சங்கு, செவ்வாயன் சங்கு, சொறி சங்கு, பலகறை சங்கு, பால் சங்கு, முள்ளிச் சங்கு, யானை முள்ளிச் சங்கு, குதிரை முள்ளிச் சங்கு, கறுப்பு முள்ளிச்சங்கு, ரோஸ் வாயன், வாழைப்பூ சங்கு, வெள்வாயன் சங்கு, வெள்ளைப்பூண்டுச் சங்கு.
வயிற்றுக்காலி (தாழஞ்சங்கு), பூச்சிக்கூடு, வெள்ளை மூக்கு, சிவப்பு முள்ளி, வெள்ளைச் சாவல், சர்ப்பக் கூடு, சிவப்புப் பாத்திரம், கறுப்புக்குல்லாய், கட்ட சங்கு, ஆறுவிரல் சங்கு, சிலந்திச் சங்கு, மாட்டுத்தலைச் சங்கு, வரிப் பாத்திரம், புள்ளிப் பாத்திரம்.


சிப்பி, ஆளி, காவட்டி, கவடை, இனாட்டி, கிளிஞ்சல், சோவி, சோழி, மட்டி, வரிமட்டி, பஞ்சமட்டி, வழுக்கு மட்டி, முள்ளி, ஊரி, விரஞ்சான், தொப்பி, ஐவிரலி, கொம்பு, மொக்காய், ஊத்தி