Tuesday, 28 February 2017

திருவாளியன் சுறா (Leopard Shark). (Triakis Semifasciata)

கடலில் ஊர்மங்கும் தொலைவில் சுற்றித்திரியும் ஒருவகை சுறா இனம் திருவாளியன். ஆங்கிலத்தில் சிறுத்தைச்சுறா என்ற பொருளில் இது அழைக்கப்படுகிறது. காரணத்தை எளிதாக ஊகித்து விடலாம். ஆம். சிறுத்தையைப் போல உடலில் புள்ளிகள் இருப்பதால் இது சிறுத்தைச் சுறா எனப்படுகிறது. ஆனால் தமிழில் திருவாளியன் என்பதுதான் இதன் திருநாமம்.
கொஞ்சம் சிறியவகை சுறா இனம் இது. ஆனி ஆடி மாசி மாதங்களில் கடல் குளிர்ந்திருக்கும் காலத்தில் திருவாளியன் சுறாவின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அடர் மஞ்சள் நிற உடல் பின்னணியில் அங்கங்கே கறுப்புத்திட்டுகளுடன் இது காணப்படும். குதிரைக்கான சேணம் அதன்முதுகில் இருபுறமும் தொங்குவதுபோல, திருவாளியன் சுறாவின் முதுகின் மீது கறுப்புத்துணியைக் காய வைத்தது போல, சேணவடிவ கறுப்புப் பட்டைகள் காணப்படும். அடிவயிறு உடல்நிறத்தை விட வெளிர்வானது.
தட்டையான தலையும், கட்டையான வட்டத்தாடையும் கொண்ட மீன் இது. 1.2 முதல் 1.5 மீட்டர் வரை இது வளரலாம். பெண் திருவாளியன் ஒன்று 1.8 மீட்டர் வரை வளர்ந்திருக்கிறது. அதிக அளவாக இந்த சுறா 19 கிலோ வரை எடையிருக்கலாம்.
திருவாளியன் சுறாவின் மெல்லிய நீண்ட உடல் அது நன்றாக நீந்த உதவுகிறது. உடலும், வாலும் ஏதோ களிமண்ணால் செய்தது போல சொர சொரவென சாணைக்கல் போலக் காணப்படும். முதுகில் ஏறத்தாழ ஒரே அளவுள்ள இரு தூவிகள் இருக்கும். முதல்முதுகுத் தூவி நடுமுதுகிலும், 2ஆவது தூவி போதிய இடைவெளி விட்டு அதன் பின்னாலும் காணப்படும். இதன் நீண்ட வால், நீந்தும்போது முன்னும் பின்னும் அழகாக அசையும்.
திருவாளியன் சுறாவின் சாம்பல் நிற நீள்வட்டக்கண்கள் பார்வைத்திறன் மிகுந்தவை. வாசனை அறியும் திறனும் திருவாளியன் சுறாவுக்கு அதிகம். பகலிலும், இரவிலும் இந்த சுறாவின் நடமாட்டத்தைப் பார்க்க முடியும்.
திருவாளியன் சுறாவுக்கு அரம் போன்ற பற்கள் உண்டு. பெரிய திருவாளியன்கள் மீன் இனங்களை யும், குட்டி திருவாளியன்கள், நண்டு, மட்டி, இறால், கடல்புழு போன்றவற்றையும் உணவாகக் கொள்ளும்.
மட்டி (Clam) சிறிதாகத் திறந்து அதன் Sipon என்ற நாக்குப்போன்ற உறுப்பு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்போது, திருவாளியன் சுறா, அந்த நாக்கை மிக வேகமாக வாயால் கவ்வி வெளியே இழுத்து இரையாக்கக் கூடியது. மணற்பாங்கான கடல்தரையில் தரையை விட்டு ஓரடி உயரத்தில் நீந்தியபடி திருவாளியன் சுறா இரைதேடும். தடித்த கடற்புழுக்களை அவற்றின் துளைகளில் இருந்து வாயால் உறிஞ்சியும் திருவாளியன் உணவாக்கிக் கொள்ளும். எப்போதாவது தவறுதலாக இது பாசிகளையும் உட்கொள்ளும்.
நெத்தலி மீன்கூட்டத்தைக் கண்டால் வாயைத் திறந்தபடி கடிகார முள்ளுக்கு எதிர்திசையில் சுற்றி, கடிகாரச் சுற்றுத்திசையில் வரும் நெத்தலி மீன்களைத் தனது திறந்த வாய்க்குள் திருவாளியன் விழவைக்கும்.
திருவாளியன் தன்னின மீன்களுடன் மட்டுமின்றி, வெள்ளுடும்பன் சுறாக்கள், வாவல் திருக்கைகளுடனும் கூட்டணி சேர்ந்து திரியும். திருவாளியன் சுறாக்களில் சில, ஒரேஇடத்தில் தங்கி வாழக்கூடியவை. சில, கடலில் இருந்து ஊர்மங்கும் தொலைவில், இடம்விட்டு அங்குமிங்கும் அலைந்து திரியக்கூடியவை.
பெரிய இரையை வாயால் கவ்விப் பிடிக்கும்போது முதலையைப் போலவே உருள்வது திருவாளியன் சுறாவின் பழக்கம். மீன்வலைகளில் இது சிக்கிக் கொண்டால் மிகவேகமாக வலையை முறுக்கும். இந்த திருக்கல், முறுக்கல் காரணமாக, திருவாளியன் சுறாவை வலையில் இருந்து விடுவிக்க முயல்பவர்களின் கை,கால்கள் உடையக்கூட வாய்ப்புள்ளது.
மீன்களுக்கு இருப்பதைப் போல பள்ளை என்ற காற்றுப்பை, மற்ற சுறாக்களைப் போல திருவாளியன் சுறாவுக்கும் கிடையாது. பதிலாக, எண்ணெய்ப்பசை நிறைந்த பாலை என்ற ஈரல் உண்டு. இந்த ஈரல் எண்ணெய், சுற்றியுள்ள கடல்நீரை விட கனமானது. இதனால், நீந்தாமல் நிற்கும் சுறாவால் எளிதாக, விரைவாக கடலடியில் மூழ்கவும், முக்குளிக்கவும் முடியும்.
திருவாளியன் சுறாவின் வாழ்நாள் ஏறத்தாழ 30 ஆண்டுகள். புதிதாகப் பிறந்த திருவாளியன் பருவமடைய பத்தாண்டுகள் ஆகும். குட்டிகள் பிறந்தவுடனேயே தாயின் துணையின்றி வாழக்கூடியவை. கடல்அருங்காட்சியகம் ஒன்றில் பெண் திருவாளியன் ஒன்று, ஆண் துணையில்லாமலேயே சூல் கொண்டு, குட்டி ஈன்று, அத்தனைப் பேரையும் மூக்கின்மேல் விரலை வைக்கச் செய்திருக்கிறது.

திருவாளியன் சுறா, மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் தராத சுறா. கடலில் இதைக் கண்ணால் காண்பதை நற்குறியாக பரதவர்கள் கருதுவார்கள். திருவாளியன் சுறாவைக் கண்ணால் கண்டால் மீன்பிடிப்பு அதிகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதுபோல பிடிபட்ட திருவாளியன் சுறாவை படகின் முன்அணியத்தில் தொங்க விட்டால் நல்லதிர்ஷ்டம் வாய்க்கும் என்ற நம்பிக்கையும் காலம் காலமாக உள்ளது. (ஆனால், பிடிபட்ட திருவாளியனுக்கு அதிர்ஷ்டம் இல்லை போலும்)
function disableSelection(target){ if (typeof target.onselectstart!="undefined") //IE route

Saturday, 25 February 2017

மேய்ச்சல் சுறா (Basking Shark)


உலகின் மிகப்பெரிய மீன் அம்மணி உழுவை (Whale Shark). அந்த அம்மணி உழுவைக்கு அடுத்தபடி மீன்களில் மிகப்பெரிய மீன், மேய்ச்சல் சுறாதான்.
மேய்ச்சல் சுறாவுக்கு ஆங்கிலத்தில் வழங்கும் பெயர் பாஸ்கிங் ஷார்க். எப்போதும் கடல் மேற்பரப்பிலேயே, அலைந்து திரிந்து சூரிய ஒளியில் இது குளிப்பதாக நினைத்து, ஆங்கிலத்தில் Basking shark என்று இதற்குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
ஆனால், நம் தமிழ்மொழியைப் பொறுத்தவரை இந்த சுறாவின் பெயர் மேய்ச்சல் சுறா. தமிழர்களில் பெரும்பாலானோருக்கு குளிர்காலத்தில் சூரிய ஒளியில் கூரகாயும் அதாவது சூரிய குளியல் எடுக்கும் பழக்கம் கிடையாது. இதனால், கடல்மட்டத்தின் மேலேயே எப்போதும் நீந்தி இரையெடுக்கும் இந்த சுறாவுக்கு மேய்ச்சல் சுறா அல்லது மேச்சுறா என தமிழர்கள் பொருத்தமாகப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
பெரிய குகை போன்ற வாய் கொண்ட மிகப்பெரிய மீன் இனம் இது. கடலில் உள்ள கவுர்களை (Plankton) இது உணவாக உண்ணும். இப்படி கவுர்களை உண்ணும் மூன்று பெருஞ்சுறாக்களில் மேய்ச்சல் சுறாவும் ஒன்று. பலூன் போல விரியும் இதன் மிகப்பெரிய தாடை, நான்கடி வரை அகலமுடையது. ஆயிரத்து 500 காலன் நீரைப் பிடிக்கக் கூடியது. குகை போன்ற இதன் விரிந்த வாய்க்குள் நீங்களும், நானும் தாராளமாக குனிந்து உள்ளே நுழையலாம். வெளியே வரவும் செய்யலாம்(?)
வாயை அகலத் திறந்து வைத்தபடி, வேண்டிய மட்டும் கடல்நீரை உட்புகச் செய்து கடல்நீரில் உள்ள கவுர்களை மேய்ச்சல் சுறா, விறுத்து (Filter) அதாவது வடிகட்டி இரையாக்கும். கடல்நீரில் உள்ள கவுர்களைப் பிரித்தெடுத்து கடல்நீரை செவுள்கள் வழியாக இது வெளியே விடும். ஒரு மணிநேரத்தில் 2 ஆயிரம் டன் கடல்நீரை இது வடிகட்டிவிடக்கூடியது.
உணவு வேண்டி பெரும்பாலும் இது கடலின் மேல்மட்டத்திலேயே திரியும். ஊட்டச்சத்துக்காக சில வேளைகளில் மீன், கணவாய், நண்டு போன்றவற்றையும் இது உண்ணும்.
இரை கிடைக்காத நிலை ஏற்பட்டால், வாலை வாயால் கவ்வி, மேய்ச்சல் சுறா உடலை வளைத்து நீரின் மேல் செத்தது போல மிதக்கும். இதன் உடல்மேல் காவாப்புள், கருங்காக்கை போன்ற கடற்பறவைகள் நூற்றுக்கணக்கில் குவியும்போது, திடீரென வாலால் அடித்து கடற் பறவைகளை வீழ்த்தும். தப்பிப் பறக்கும் பறவைகள் போக, அடிபட்டு கடல்மேல் விழுந்து துடிக்கும் பறவைகளை மேய்ச்சல் சுறா இரையாக்கும்.
சளி படர்ந்தது போன்ற சாம்பல் அல்லது பழுப்பு நிற உடல் கொண்டது மேய்ச்சல் சுறா. வயிற்றின் அடிப்புறம் வெள்ளை நிறம். முதுகு மற்றும் பக்கவாட்டுத்தூவிகள் மிக நீளமானவை. வால் பிறைவடிவமானது. வாயில் கொக்கி போன்ற நூற்றுக்கணக்கான பலஅடுக்குப் பற்கள் கொண்ட மேய்ச்சல் சுறாவுக்கு அந்த பற்களால் எந்தப் பயனும் இல்லை. மேய்ச்சல் சுறாவின் பல் கால் அங்குல நீளம் கொண்டது. மேல் தாடையில் 6 வரிசைப் பற்களும், கீழ்த்தாடையில் 9 வரிசை பற்களும் மேய்ச்சல் சுறாவுக்கு உண்டு. மொத்தம் 1500 பற்கள்.
 

இந்த பற்களால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
மேய்ச்சல் சுறாவின் நீளம் ஏறத்தாழ 30 முதல் 35 அடிகள்.
3 ஆயிரம் கிலோ முதல் 6 ஆயிரம் கிலோ வரை நிறைகொண்ட மேய்ச்சல்சுறாவுக்கு ரப்பர் போன்ற எண்ணெய் நிறைந்த நுரையீரல் உண்டு. Squalene என அழைக்கப்படும் இந்த பாலை என்ற உடலுறுப்பு, மேய்ச்சல் சுறாவின் மொத்த எடையில் 25 விழுக்காடு ஆகும். இந்த எண்ணெய்ப் பையின் துணை கொண்டே, மேய்ச்சல் சுறா, எளிதாக நீரின்மேல் மிதக்கிறது.

மேய்ச்சல் சுறாவின் இந்த எண்ணெய் உயவு எண்ணெய்யாகவும், அழகு கலைப்பொருள்கள் தயாரிக்கவும் உதவுகிறது. மேய்ச்சல் சுறாவின் தூவி சூப் தயாரிக்கப் பயன்படுகிறது
மேய்ச்சல் சுறா, எப்போதும் தனித்து திரியும் பழக்கம் உள்ளது. கடலில் இடம் விட்டு இடம் வலசை போகும் தருணங்களில் மட்டும் 700 வரை மேய்ச்சல் சுறாக்கள் ஒன்றுகூட வாய்ப்புண்டு.

மேய்ச்சல் சுறா வெப்பக்கடல் மீன். இருப்பினும் இந்தியப் பெருங்கடலில் இந்த மீனினம் சற்று குறைவுதான். அரிதாக அதிக குளிரில்லாத கடல்களிலும் மேய்ச்சல் சுறா காணப்படும். ஆங்கில கடல்களைப் பொறுத்த வரை அங்குள்ள மிகப்பெரிய மீன் மேய்ச்சல் சுறாதான்.

Wednesday, 22 February 2017

வரிப்புலியன் சுறா (Tiger shark) (Galeo cerdo)

காட்டுக்கு வேங்கைப்புலி எப்படியோ? அப்படியே கடலுக்கு வரிப்புலியன் சுறா.. கடலின் புலி என்ற பெயரும் இதற்கு உண்டு. வரிப்புலியனின் இன்னொரு பெயர் வல்லுலன் சுறா.
சுறாக்களில் பெரியண்ணன்கள் யார் யார் என ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் உலகின் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவைக்கே முதல் இடம் கிடைக்கும். அந்தப் பெருஞ்சுறாக்களின் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பெறக்கூடியது வரிப்புலியன் சுறா.
நீலமும் பச்சையும் கலந்த, மாழை (Metal) போன்ற மிளிரக்கூடிய உடல் பின்னணியும், அதன்மேல் அடர் மற்றும் வெளிர்சிவப்பு கோடுகளும் உள்ள சுறா இது. சில வரிப்புலியன்களின் உடல் சாம்பல் நிறமாகவும், அதன்மேல் வெளிர்சிவப்பு நிறக் கோடுகளும் காணப்படலாம். வயிறுப்பகுதி வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக விளங்கலாம்.
வரிப்புலியன் சுறாவின் குட்டிகள் பிறக்கும்போது புள்ளிகளுடன் பிறகும். வளர வளர வரிகள் உருவாகும். முதிர்ந்த வயதுடைய வரிப்புலியனின் வரிகள் மங்கத் தொடங்கும். புலிகளின் வெள்ளைப்புலிகள் இருப்பது போல வரிப் புலியன்களில் வெண்புலியன்களும் உண்டு என்று சிலர் கூறுவார்கள். ஆனால், முதிர்ந்த வரிப்புலியனின் வரிகள் வெளிரத் தொடங்குவதால் அவை வெண்புலியன்களாக ஒருவேளை கருதப்பட்டிருக்கலாம்.
வரிப்புலியன், ஏழரை மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இதன் பொதுவான நீளம் 3 முதல் 4.2 மீட்டர். தாடையில் இந்த சுறாவுக்கு கூரிய பலஅடுக்குப் பல்வரிசை உண்டு. கன்னத்தின் இருபுறங்களிலும் ஐந்தைந்து செவுள்கள் இருக்கும். முதுகுத்தூவி சற்றுப்பெரியது. வரிப்புலியனின் நிறை 385 முதல் 635 கிலோ வரை.
வரிப்புலியனின் இரு, வால்தூவிகளில் மேல்தூவி சற்று பெரியது. கூரிய கண் பார்வையுடன், அதிக அளவு மோப்பத்
திறமையும் வரிப் புலியனுக்கு உண்டு.
காட்டில் புலி எப்படி புதர்களில் மறைந்திருந்து இரையைப் பிடிக்கிறதோ அதுபோல வரிப்புலியன் சுறா, கடல்
புற்களின் நடுவே மறைந்திருந்து உருமறைப்பு (Camouflage) செய்து, அங்கே புல்மேய வரும் ஆவுளியாவை (கடல்பசுவை) இரையாக்கும். கூரிய பற்களால் கடல்ஆமைகள், சிப்பிகளை பிளந்து இது இரைகொள்ளும். ஓங்கல், கணவாய், கடல்பாம்பு, சிறுசுறாக்கள் ஏன்? செத்த திமிங்கிலம் கூட வரிப்புலியனுக்கு இரையாகும். காயமடைந்து நகர முடியாமல் தவிக்கும் திமிங்கிலங்களை வரிப்புலியன் குறிவைத்து தாக்கி உணவாக்கும்.
காட்டுப்புலியைப் போலவே, வரிப்புலியனும் இரவில்தான் வேட்டையாடும். வரிப்புலியன் தனித்து வாழும். அடிக்கடி இடம்மாறும். ஒரிடத்தில் நிலையாகத் தங்காது. இனப்பெருக்கக் காலத்தில் மட்டுமே, புலியைப் போலவே இணையுடன் சேர்ந்து திரியும்.
இதன் உடல்கோடுகள், கலங்கிய கடலில் வேட்டையாட மிகவும் உதவும். வரிப்புலியன் மிக வேகமாக நீந்தாது. புலியைப் போலவே இதுவும் இரையை முடிந்த அளவு மிகவும் அருகில் நெருங்கி திடீர் வேகத்தில் பாய்ந்து கொல்லும். புலியைப் போலவே, தப்பியோடும் இரையை இது துரத்திக் கொண்டு ஓடாது. அந்தப் பழக்கம் வரிப்புலியனுக்கும் இல்லை. மிக வேகமாக நீண்டநேரம் நீந்த வரிப்புலியனால் முடியாது.
கடலின் குப்பைக்கூடை என்ற வித்தியாசமான பெயரும் வரிப்புலியனுக்கு உண்டு. எந்த ஒரு பொருளையும், அது உண்ணத் தகுந்ததா என்றுகூட ஆராய்ந்து பார்க்காமல் அதை இரையாக்குவது வரிப்புலியனின் வழக்கம். இறந்த வரிப்புலியனின் வயிற்றில் மிதவைகள், படகுகளின் துண்டுகள், மீன்பிடி கருவிகள் ஏதாவது இருந்தால் அதற்காக நாம் வியப்படையக்கூடாது.
வரிப்புலியன் 10 அடி முதல் 3 ஆயிரம் அடி ஆழம் வரை காணப்படும். திடுதிப்பென ஆழம் குறைந்த கடலோரங்கள், பவழப்பாறைகள், துறைமுகம், கடற்கழிப் பகுதிகளில் வரிபுலியன் வந்து நின்றால் நீங்கள் ஆச்சரியப் படக்கூடாது.
மனிதர்களைத் தாக்கி கொல்லக்கூடிய மீன் வரிப்புலியன். சீண்டாமல் கூட இது மனிதர்களைத் தாக்கும். மனிதர்களை உணவாகவும் உண்ணும். இரை கிடைக்காவிட்டால் பல வாரங்களுக்கு இது பட்டினி கிடக்கவும் செய்யும்.
வரிப்புலியன்கள் சிலவேளைகளில் கூட்டமாக கூடும். அப்போது பெறப்படும் இரையை பெரிய வரிப்புலியன்கள் முதலில் உண்ணும். அவை வயிறாற உண்டு முடிக்கும் வரை சிறிய வரிப்புலியன்கள் இரையை நெருங்க முடியாது. நெருங்கவும் கூடாது. இதனால் வரிப்புலியன் கூட்டங்களில் சண்டை வர வாய்ப்பில்லை.
வரிப்புலியன் சுறா 12 முதல் 27 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஒரே இணையுடன் வாழாமல் இவை இணையை மாற்றிக் கொள்ளும். பெண் வரிப்புலியன் 8 வயதில், அதாவது ஏறத்தாழ எட்டடி நீளம் வளர்ந்த பிறகு பருவமடையும். ஆண்வரிப்புலியன் 7 வயதில், அதாவது ஏழடி நீளம் வளர்ந்ததும் பருவம் எய்தும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரிப்புலியன்கள் உறவுகொள்ளும் என்று உறுதிசெய்யப்படாத ஒரு தகவலும் உள்ளது.
வரிப்புலியனின் கர்ப்பம், காட்டின் புலி, சிங்கம், சிறுத்தைகளைப் போலவே ரத்தக்கர்ப்பம். அதாவது உறவின்போது பெண் வரிப்புலியனுக்கு சிறுகாயங்கள் ஏற்படும். ஆனால், அந்த காயங்கள் விரைவில் ஆறிவிடும். வரிப்புலியனின் கர்ப்பக் காலம் 14 முதல் 16 மாதங்கள்.
சிலவகை சுறாக்களின் குட்டிகள், தாயின் வயிற்றில் இருக்கும்போதே, கூரிய பற்களுடன் ஒன்றுக்கொன்று சண்டையிடுவது உண்டு. எளியதை வலியது இரையாக்குவதும் உண்டு. வரிப்புலியனும் இதற்கு விதிவிலக்கல்ல.
பெண் வரிப்புலியனின் வயிற்றில் உள்ள குட்டிகள் இப்படி கூரிய பற்களுடன் சண்டையிட்டுக் கொள்ளும். ஒன்றையொன்று இரையாக்கவும் செய்யும். 7 முதல் 85 குட்டிகள் வரை வரிப்புலியன் ஈனும்.
புள்ளிகளுடன் பிறக்கும் வரிப்புலியன் குட்டிகள் மெலிந்த தோற்றத்துடன் இருக்கும். தாயின் அரவணைப்பு எதுவும் தேவையின்றி பிறந்தவுடனேயே இவை தங்கள் வாழ்க்கையை தாங்களே  நடத்தக்கூடிய சிறப்பு கொண்டவை.

வரிப்புலியன் போலவே உள்ள இன்னொரு சுறா, சிறுத்தை சுறா (Leopard Shark). Triakis Semifasciata என அறிவியல் பெயரில் அழைக்கப்படும் திருவாளியன் சுறா. இந்த சிறுத்தை சுறா வேறு, வரிப்புலியன் வேறு. இரண்டையும் ஒப்பிட்டு நாம் குழப்பிக் கொள்ள கூடாது.

Sunday, 19 February 2017

பன்மீன் கூட்டம் (தொடர்ச்சி)


1143. வத்தைக்காய் குறிமீன் (புள்ளிக்குறி மீனின் இன்னொரு பெயர்), 1144. பாரையில் பொட்டுப்பாரை, 1145. சூரையில் பொள்ளல் சூரை, 1146. விளமீனில் தீனவிளமீன், 1147. தாழ விளமீன், 1148. ஊளாவில் தடி ஊளா, 1149. வெள்ளை ஊளா, 1150. வரி ஊளா, 1151. பல்வக்கை ஊளா, 1152. கெழுதில் வண்ணக் கெழுது, 1153. தேடு மீனில் சீலாத்தேடு, 1154. அடலில் நங்கடல் (ஓலை அளவு தடிமன் உள்ள மீன்), 1155. ஊடனில் மஞ்சள் ஊடன், 1156. செம்மண் நிற செம்ப ஊடன், 1157. ரோஸ் ஊடன் (தொடரும்)
Friday, 17 February 2017

கீரிப்பல்லன் சுறா (Thresher Shark) (Alopias Vulpinus)


சுறாக்களில் மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் சுறா கீரிப்பல்லன் சுறா. பார்த்த மாத்திரத்தில் இதை அடையாளம் கண்டு கொள்ளலாம். உபயம்: இதன் மிக நீண்ட சாட்டை போன்ற வால்.
மீன்களின் வாலில் உள்ள கீழ்த்தூவிக்கு சுக்கான் தூவி என்பது பெயர். சுறாக்களைப் பொறுத்தவரை இந்த சுக்கான் தூவி, திசை திரும்ப உதவும். வாலின் மேல்தூவி நீந்தப்பயன்படும்.
கீரிப்பல்லன் சுறாவின் வால்மேல்தூவி (Caudal fin upper lobe) மிக நீளமானது. கீரிப்பல்லன் ஏறத்தாழ 14 அடி நீளம் என்றால், வளர்ந்த பெரிய சுறாவின் வால், அதன் உடலில் மூன்றில் இருபங்கு இருக்கும். அதுவே இளம் கீரிப்பல்லனாக இருந்தால், சுறாவின் உடலைக்காட்டிலும் வாலின் நீளம் மிக அதிகமாக இருக்கும்.
1.6 மீட்டர் முதல் 6 மீட்டர் வரை கீரிப்பல்லன் வளரக்கூடும். இதன் மொத்த நீளத்தில் சரிபாதி வாலாக அமையும். 350 முதல் 500 கிலோ வரை நிறையுள்ள சுறா இது.
வாலைக்குழைத்து வரும் நாய்தான் அது மனிதருக்குத் தோழனடி பாப்பா என்றார் பாரதி. ஆனால், வாலைக்குழைத்து வரும் கீரிப்பல்லன் மனிதனுக்கு நண்பனும் இல்லை. எதிரியாகவும் இதைக் கருதுவற்கில்லை. சுறாவின் முன்பக்கம் பெரும்பாலான கடலுயிர்களுக்கு ஆபத்தானது. ஆனால், கீரிப்பல்லனைப் பொறுத்தவரை அதன் முன் பக்கம் மட்டுமல்ல, பின் பக்கமும் கடலுயிர்களுக்கு ஆபத்தானது. காரணம், வாலை வலிமை மிக்க ஆயுதமாக கீரிப்பல்லன் சுறா பயன்படுத்தக்கூடியது.
மீன்கூட்டத்தை அதிலும் சாளை கூட்டத்தைக் கண்டால் கீரிப்பல்லன் சுறா, அந்தக்கூட்டத்தை நோக்கி விரையும். மீன்கூட்டத்தை நெருங்கியதும், முதுகுத் தூவியை ஒரு திருகு திருகி, ஒரு நெளிப்பு நெளித்து அதன்மூலம் திடீரென தன் ஓட்டத்தை நிறுத்தும். இப்படித் திடீரென நிற்கும் போது சுறாவின் தாடை கீழ்நோக்கி சாய்ந்து தலைகீழாக அது கவிழும். அப்படி கவிழும் வேகத்தில் வாலால் மீன் கூட்டத்தை அது அடிக்கும். இந்த அடியால் மீன்கூட்டத்தின் பலமீன்களுக்கு முள் முறியலாம். காற்றுப்பை சிதைந்து பல மீன்கள் கடல்மேல் மிதக்க நேரிடலாம். இந்த தடாலடி தாக்குதலுக்குப்பின் கீரிப்பல்லன் மெதுவாக கடல்மட்டத்துக்கு வந்து அங்கு மிதக்கும் மீன்களை மேய்ந்து உணவாகக் கொள்ளும்.
கீரிப்பல்லனின் இந்த சாட்டையடி மீன்வேட்டை பொதுவாக இரவில்தான் நடைபெறும். மூன்றில் ஒரு தாக்குதலே வெற்றியைத் தரும். மற்ற இரு தாக்குதல்களும் தோல்வியில் முடியும்.
கீரிப்பல்லனில் மொத்தம் மூன்று வகை. ஒன்று பெரிய கண்ட கொண்ட கீரிப்பல்லன்சுறா (Alopias superciliosus). கீரிப்பல்லனில் மிகப்பெரிய சுறா இதுதான். இதைத்தவிர சாதாரண ஒரு கீரிப்பல்லன், ஆழ்கடலில் திரியும் ஒரு கீரிப்பல்லன் ஆகியவை உண்டு. ஆழ்கடல் கீரிப்பல்லன் (Pelagic thresher)தான் இந்த மூன்றுவகை சுறாக்களில் சிறியது.
கீரிப்பல்லனின் உடல் கருநீலம் கலந்த கருஞ்சாம்பல் நிறம், அடிவயிறு வெள்ளை நிறம். சிறுகீரிப்பல்லனின் தாடை சிறியது. கண்களும் சிறியது. முழுக்க முழுக்க இது வெப்பக்கடல் மீன். ஆனால், கடலில் ஆழம் காண முடியாத கசம் பகுதியில் குளிர்நிறைந்த நீரோட்ட இடங்களிலும் கீரிப்பல்லன் காணப்படும். இதன் உடலில் சிவப்பு சிற சதையும், சிறுசிறு ரத்தக்குழாய்களும் இருக்கும். அதன்மூலம் குளிர்க்கடலில் தனது உடலை இது சூடுபடுத்திக் கொள்ளும். உண்ட இரையை செரிக்கவும் இந்த உடல்சூடு உதவுகிறது.
கீரிப்பல்லன்சுறா மீன்கூட்டத்தை, தனித்தும் வேட்டையாடும். இணை சேர்ந்தும் வேட்டையாடும். சிறு கூட்டமாகவும் இவை திரியும். கீரிப்பல்லனின் பற்கள் பெயருக்கேற்ப கூர்மையானவை. மரம் அறுக்கும் ரம்பத்தைப் போல கீரிப்பல்லனின் பற்கள் எதிரும்புதிருமான தெற்றுப்பற்கள். அதனால் பிடித்த இரை இதன் வாயில் இருந்து அவ்வளவு எளிதாக நழுவிப் போய்விட முடியாது.
பெரிய கண் கீரிப்பல்லன்
பெரிய கண்கொண்ட கீரிப்பல்லன் சுறாக்கள் மிகக்குறைந்த ஒளியில் மீன் வேட்டையாடக் கூடியவை. அதனாலேயே இவை பெரிய கண்கள் கொண்டவை. பெரிய கண் கீரிப்பல்லனின் விழிகள் ஒரு குழிக்குள் அமைந்திருக்கும். கண்ணை மேல்நோக்கி உருட்ட கீரிப்பல்லனால் முடியும்.
சுறாக்களில் சில இனச் சுறாக்கள் மட்டுமே செங்குத்தாக கடல்அடி ஆழத்துக்கும், மேல்மட்டத்துக்கும் சென்றுவரக்கூடியவை. பெரிய கீரிப்பல்லன் அந்த வகையான சுறா. பகலில் கடல்அடி ஆழத்தில் இருக்கும் பெரியகண் கீரிப்பல்லன், இரவில் இரைக்காக கடல்மட்டத்துக்கு வரும். இந்த செங்குத்துப் பயணம் நாள்தோறும் நடக்கும். இந்த வகை சுறாவின் தலைமேல் ஆழமான இரு வரிப்பள்ளங்களும் அமைந்திருக்கும்.
கீரிப்பல்லன் சுறாக்கள் கடல்நீருக்கு மேல் முழுவதுமாக துள்ளிக்குதிக்கும் பழக்கம் உள்ளவை. அதுபோல அடிக்கடி பவழப்பார்களைத்தேடி வரும் வழக்கமும் கீரிப்பல்லன்களுக்கு உண்டு. பார்களில் வாழும் கிளிஞ்சான் (Wrasse) இன மீன்களை கீரிப்பல்லன் தேடி வரும். கீரிப்பல்லனின் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளையும், செத்த செதிள்களையும் கிளிஞ்சான் மீன் நீக்கி அவற்றை இரையாக்கும். இத்தகைய பேருதவி புரியும் கிளிஞ்சான் மீன்களை கீரிப்பல்லன் சுறாக்கள் ஒருநாளும் இரையாக்காது.
கீரிப்பல்லன் சுறாக்களைப் பற்றி உறுதி செய்ய முடியாத இரண்டு தகவல்கள் இருக்கின்றன. ஒன்று இந்தவகை சுறா, அம்மணி உழுவையின் மீது அமர்ந்து அதை வால் என்னும் சாட்டையால் அடித்தபடி குதிரையேற்றம் செய்யும் என்ற தகவல்.

அடுத்ததாக, கீரிப்பல்லன் சுறாவைப் பிடித்து வந்து கரையில் போட்டு வெய்யிலில் காய விட்டால், அதன் தசை, அம்மணி உழுவையைப் போலவே உருகி ஓடி, தோல் மட்டுமே மிஞ்சும் என்ற தகவல். உறுதி செய்யப்படாத இந்த இரு தகவல்களும் கீரிப்பல்லன் சுறா பற்றிய நமது அறியும் ஆர்வத்தை  மேலும் அதிகப்படுத்துகின்றன

Wednesday, 15 February 2017

மூச்சையடக்க வாரீகளா? (ஓங்கல் போல)

முக்கடலில் மூச்சடக்கி முத்தெடுக்கும் வீரன்…
தமிழ்த்திரைப்படப் பாடல் ஒன்றில் வரும் வரி இது. முக்கடலில் மூச்சடக்கி மூழ்கக் கூடியவர்கள் நாம் மட்டுமல்ல, கடல்வாழ் ஓங்கல்களும், திமிங்கிலங்களும் கூட மூச்சடக்கி மூழ்கக் கூடிய வீரர்கள்தான். என்ன ஓங்கல்களுக்கும், திமிங்கிலங்களுக்கும் எழுதப்படிக்க, இலக்கியம் படைக்கத் தெரியாது. ஆகவே இதையெல்லாம் ஒரு பெருமையாக அவை வெளியே சொல்லிக் கொள்வதில்லை.
ஓங்கல், ஓவாய் என்றெல்லாம் அழைக்கப்படும் டால்பின், நம்மைப் போலவே ஒரு பாலூட்டி (Mammal)…
பாலூட்டிக்கான இலக்கணம் என்ன? உயிருள்ள ஒரு குட்டியை ஈன்றெடுக்க வேண்டும். பெண் விலங்கு குட்டிக்குப் பால்தர வேண்டும், வெப்ப ரத்தம் உடையதாக இருக்க வேண்டும், காற்றை உள்ளிழுத்து வெளியேவிட்டு சுவாசிக்க வேண்டும். இன்றியமையாத இந்த 4 இலக்கண விதிகளும் ஓங்கல்களுக்கும் இருக்கின்றன.
கடல்வாழ் பாலூட்டியான ஓங்கலுக்கு கடல்மீன்களைப் போல கடல்நீரில் உள்ள உயிர்க்காற்றைப் பிரித்தெடுக்கக் கூடிய செவுள் (Gill) இல்லை. இதனால் ஓங்கல் மூச்செடுத்து உயிர்வாழ கடல் மட்டத்துக்கு மேலே அடிக்கடி வந்தாக வேண்டும்.
நமது வாயால் நாம் இரண்டு வேலைகளைச் செய்ய முடியும். ஒன்று உணவு அருந்துவது, இன்னொன்று மூச்செடுப்பது. ஆனால், ஓங்கல்களால் நம்மைப்போல வாயால் மூச்சுவிட முடியாது. மூச்செடுப்பதற்காகவே முதுகின் மேலே ஓங்கலுக்கு மூச்சுத்துளை (Blowhole) உண்டு. அதற்கும் நுரையீரலுக்கும் இடையே ஒரு பாதை உண்டு. இந்த காற்றுக்குழாய் வழியாகவே ஓங்கல் மூச்சுவிடும்.
அதுபோல ஓங்கலின் வாயையும், இரைப்பையையும் இன்னொரு குழாய் வழி இணைக்கிறது. என் வழி தனி வழி என்பதுபோல இந்த உணவுக்குழாய் வழிக்கும், மூச்சுவிட பயன்படும் காற்றுக்குழாய் வழிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரேவழியாக இருந்தால், ஓங்கல் ஒருவேளை உணவு உண்ணும்போது வாய்க்குள் கடல்நீர் புகுந்து, நுரையீல் நிறைந்து, ஓங்கல் ஒருவேளை கடலில் மூழ்கிவிடலாம். அப்படி, மூழ்கிவிடக்கூடாது என்பதற்காக இயற்கை செய்த சிறப்பு ஏற்பாடு இது.
மூச்சுவிடும் ஒவ்வொரு முறையும் இறைவா உன்னை நான் நினைக்கிறேன் என்பது மனிதர்களின் பிரார்த்தனை வரி. இப்படி நாம் வெளியே சொல்லிக் கொண்டாலும் மூச்சுவிடும் ஒவ்வொரு முறையும் மனிதர்கள் அதே நினைப்பாகவே இருப்பதில்லை. நம்மை அறியாமலேயே நாம் மூச்சுவிட்டு உயிர் வாழ்கிறோம். அயர்ந்து தூங்குகிறோம்.
ஆனால் ஓங்கலின் கதை அப்படியல்ல. மூச்சுவிடும் வேலையை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது ஓங்கலின் கடமை. அந்தக் கடமை தவறினால் நுரையீரலில் நீர்நிரம்பி, கடலடியில் மூழ்கி ஓங்கல் இறக்க வேண்டியதுதான். இதனால் ஓங்கல்கள், ஓய்வெடுக்கும் போதும் கூட அரை விழிப்பு நிலையிலேயே இருந்து மூச்சுவிடுவதை தவறாமல் செய்யும். இந்த அரைவிழிப்பு நிலை, மூச்சுவிட்டு உயிர் வாழ மட்டுமின்றி, சுறா போன்ற எதிரிகள் மேல் ஒரு கண்ணாக இருந்து உயிர் தப்பவும் உதவுகிறது.
ஓங்கல், அதன் முதுகில் உள்ள ஊதுதுளை (Blowhole) வழியாக மூச்சுவிடுகிறது என்பதை முன்பே பார்த்தோம். இந்த ஊதுதுளை பிறை போன்ற அரைவட்ட வடிவிலான சிறுபள்ளமாக ஓங்கலின் முதுகில் அமைந்திருக்கும். தசைகளை அசைத்து அதன் மூலம் இந்த ஊது துளையை நீர்புகா வண்ணம் இறுக்கமாக அடைக்கவோ, திறக்கவோ ஓங்கலால் முடியும்.
கடல்மட்டத்துக்கு ஓங்கல் வரும்போது இந்த ஊதுதுளையின் சிறுபள்ளத்தில் சிறிதளவு கடல்நீர் தேங்கிநிற்கும். அந்த கடல்நீரை டப்பென்ற ஓசையுடன் ஓங்கல் வெளியேற்றும். இந்த டப் ஓசையை கடல்மேல் நாம் கேட்கலாம்.
பின்னர், நுரையீரலில் தேங்கியிருந்த மூச்சுக்காற்றை வெளியே விட்டுவிட்டு, புதிய காற்றை ஓங்கல் உள்ளிழுத்துக் கொள்ளும். 0.3 நொடியில் இந்த மூச்செடுப்பு வேலை முடிந்து விடும்.  
அதேப்போல ஓங்கல்களால் 3 முதல் 7 நிமிடங்கள் வரை மூச்சடக்க முடியும். தம் கட்டி 20 நிமிடங்கள் வரை மூச்சடக்கக் கூடிய ஓங்கல் இனமும் உண்டு. ஓங்கலின் இனமும், கடலின் ஆழமும், நீரின் அழுத்தமும் இப்படி மூச்சடக்கும் கால அளவை முடிவு செய்கின்றன. கடலில் 10 அடி ஆழம் முதல் 2 ஆயிரம் அடி ஆழம் வரை ஓங்கல் முக்குளிக்கக் கூடியது.
மனித உடலின் மொத்த எடையில் 7 விழுக்காடுதான் ரத்தம். ஆனால், ஓங்கல்களைப் பொறுத்தவரை அவற்றின் உடல்எடையில் 10 முதல் 15 விழுக்காடு ரத்தம் உண்டு. ஓங்கலின் குருதியில் நம்மைவிட அதிக அளவு சிவப்பணுக்கள் இருக்கும். குருதி மற்றும் தசையில் தேங்கியிருக்கும் அதிக அளவு உயிர்க்காற்று காரணமாக ஓங்கலால் மனிதர்களை விட அதிக ஆழத்தில் முக்குளித்து மூச்சுப்பிடிக்க முடிகிறது.
கடல்மேல் வந்து மூச்செடுப்பதும், இரைக்காக கடலடியில் மூழ்குவதும் ஓங்கல்களின் வாழ்க்கையில் ஓயாமல் நடக்கும் நிகழ்வுகள். ஓங்கல்களுக்கு கண்பார்வை குறைவு. கலங்கிய கடலடியில் நிற்கும் வலையில் மீன்கள் சிக்கியிருப்பதை, இயற்கை தந்தை இரையாக கருதி ஓங்கல்கள் உண்ண வந்து வலையில் சிக்கிக் கொள்ளலாம். அதனால் உரியநேரத்தில் கடல்மேற்பரப்புக்கு வந்து மூச்செடுக்க முடியாமல் அவை இறக்கவும் நேரிடலாம்.
ஓங்கல்கள் தொடர்பான வியப்புகளில் ஒன்று அவை எழுப்பும் விந்தையான ஒலிகள். (இதை ஒலி என்றே சொல்லலாமா என்று தெரியவில்லை. தமிழ் இலக்கணப்படி குரல்வளை வழியாக வெளியே வருபவை மட்டுமே ஓலிகள். மற்றவை எல்லாம் ஓசைகள்)
ஓங்கல்களுக்கு குரல் நாண் (Vocal Cord) என்று எதுவும் கிடையாது. நாம் ஏற்கெனவே பார்த்த ஓங்கலின் மூச்சுத்துளை, நுரையீரல் இடையிலான காற்றுக்குழாயில், காற்றுப்பைகள் இருக்கும். இந்தக் காற்றுப்பைகளில் காற்றை ஓங்கல்கள் செலுத்தும்போது அவை அதிருகின்றன. (சும்மா அதிருதுல்ல.) இந்தக் காற்றுப்பைகளில் காற்றை உருட்டிவிளையாடுவதன் மூலம், சீட்டி (சீழ்க்கை) ஒலி, பறவை, சுண்டெலியின் கிரீச் சத்தம், தாழ்ப்பாள் போடும் ஓசை, உறுமுல், செல்லச் சிணுங்கல், அழுகை போன்ற  ஏராளமான ஒலிகளை ஓங்கலால் எழுப்ப முடியும்.
ஓங்கல், ஒன்று வலையில் சிக்கித்தவித்தால் காக்கைக் கூட்டம் போல அதை காக்க வரும் ஓங்கல்கூட்டம் அப்போது மதலை அழுவதைப்போல வேதனைக்குரல் எழுப்பும். குறிப்பாக சீங்கண்ணி ஓங்கல்களிடம் இந்த அழுகைச் சத்தத்தை நாம் சற்று அதிகமாகவே கேட்கலாம்.

(படத்தில் இருப்பது சீனி ஓங்கல் எனப்படும் வெள்ளை ஓங்கல். கலங்கிய கடல்நீரில் ஆழமற்ற கரைப்பகுதிகளில் காணப்படும் ஓங்கல் இனம் இது.)

Thursday, 9 February 2017

சூரை (Tuna) குடும்பம்

சூரை மீன்களின் குடும்பம் மிகப்பெரியது. இந்தக் குடும்பத்தில் ஏறத்தாழ 75 வகை மீன்கள் தேறும். நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில் ஏலவே (ஏற்கெனவே) குறிப்பிட்டதுபோல பார்த்தால் சூரை குடும்பத்தில் மொத்தம் 15 உருப்படிகள்தான். ஆனால் மேலை நாட்டவரின் கணக்குப்படி கானாங்கெழுத்தி எனப்படும் Mackeral மீன்கள் சிறிய ரக சூரை இன மீன்களாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அந்தக் கணக்குப்படி பார்த்தால் சூரை குடும்பத்தின் மொத்த தலைக்கட்டுகளின் எண்ணிக்கை 75.
சூரையைப் பற்றி சிறுகுறிப்பு வரையச் சொன்னால், சூரை ஓர் ஆழ்கடல் மீன், வேகத்துக்குப் பேர் பெற்ற மீன், நீந்துவதற்கு வசதியாக உடலை மிகவும் அழகாக தகவமைத்துக் கொண்ட மீன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
சூரைகள் பெரும்பாலும் செதிள்கள் அற்றவை. அல்லது பொடிச் செதிள்கள் உள்ளவை. இந்த பொடிச் செதிள்கள் கூட மீன் துள்ளித்துடிக்கும்போது கழன்று விடக்கூடியவை. அல்லது கையோடு வந்து விடக்கூடியவை.

சூரைகளில் நீலச்சூரைக்கு எட்டவாளை என்ற பெயரும், மஞ்சள் சூரைக்கு கௌவாலை என்ற பெயரும் உண்டு. சூரைக்கு செதிள் கிடையாது மாங்கு மட்டுமே உண்டு. ஆனால், நீலச்சூரைக்கு லேசான செவுள்கள் இருக்கும். கௌவாலை என்ற மஞ்சள் சூரை சிறிய கண்கள் உள்ளது. தரையில் உருட்டி விட்டால் உருளையைப் போல இது உருளக்கூடியது.
சூரைகளில் இன்னொரு ரகம் பீப்பாய் கௌவாலை. கறுப்புத் தூவிகள் கொண்ட மீன் இது. பெயருக்கேற்ற உருளை உடல். இதன் வாலின் சுக்கான் வால்பகுதியின் முனை மஞ்சள் நிறம்.
மிகவும் பலமிக்க மீன் பீப்பாய் கௌவாலை. இரண்டரை அங்குல பலகையை இது அடித்து உடைக்க கூடியது. வாலால் அடித்து மனிதர்களின் கையையும் முறிக்கக் கூடியது. பிடிபடும் பீப்பாய் கௌவாலையை கைக்கொள்ள எளிய வழி அதன் பெரிய கண்களைப் பொத்துவதுதான். கண்களைப் பொத்தினால் பீப்பாய் கௌவாலை துடித்து அடங்கும். கண்ணில் மண்ணைப் போட்டும் இதை அடக்குவார்கள்.
சூரைகளில் இன்னொரு வகை கேரை. இருண்ட ரத்தச் சிவப்பு நிற தசையுள்ள மீன் இது. கீரை என்ற பெயரும் இதற்கு உண்டு. இந்தமீனின் உடல்மேல் பகுதி அடர்நீலம். கீழ்ப்பகுதி சாம்பல் கலந்த நிறம்.
சூரையின் பிறிதொரு வகை வரிச்சூரை. பெயருக்கேற்றபடி வரிகள் கொண்ட சூரை இது. நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில் வரிச்சூரையைப் பற்றிய பதிவு ஏற்கெனவே உண்டு.
மீன்களில் மிகவும் பெயர் பெற்ற வஞ்சிரம் அல்லது வஞ்சூரன் மீனும் கூட சூரைகுடும்பத்தில் அடங்கக் கூடிய மீன்தான்.
Spanish Mackeral என ஆங்கிலத்திலும் கட்டையன்சீலா, மாவுலாசி, அறுக்குளா என்றெல்லாம் அழைக்கப்படுகிறது வஞ்சிரம்.
சூரைகளில் அல்பக்கோர் (Albacore) குளிர்க்கடல் மீன். வெள்ளைச்சூரை என்று அழைக்கப்படும் இது வெண்மை நிற சதையும் கொண்டது. அதேப்போல பொனிட்டோ (Bonito) என்ற மற்றொரு சூரை இன மீன், சிறியது, எண்ணெய்ப் பசையுள்ள சதையை உடையது. ஆகவே இந்த மீனை விரும்பி உண்ண மாட்டார்கள்.
பீலிக்கணவாய் (Squid), நெத்தலி, சாளை மீன்களை உண்ணக்கூடிய மீன் இது. இதை பல்லுள்ள மேக்கரல் மீன் என்றும் விளிப்பார்கள்.
சூரைகளில் இன்னொரு வகை சூரை, சீலா சூரை என்று அழைக்கப்படும் பல்லன் சூரை (Dog Toothed Tuna) . கூரிய பற்கள் காரணமாக சீலா சூரை என்பது இதன் செல்லப் பெயர்.
ஆழ்கடல் பவளப்பாறைகள், கேணிப் பார்கள் எனப்படும் ஆழக்குழிகள், கடல் மேடுகளில் இது காணப்படும். சுறாக்களின் முக்கிய இரை பல்லன் சூரைதான்.
சூரைகளில் இன்னும் பொள்ளல் சூரை, போத்தல் சூரை, எலிச்சூரை (Frigate tuna) போன்ற வகைகளும் உள்ளன.
பொள்ளல், போத்தல், எலிச்சூரைகள் வலைகளில் கூட்டம் கூட்டமாக சிக்கக் கூடிய சிறிய ரக சூரைகள். எலிச்சூரையில் இன்னொரு தனி ரகம் குத்தெலிச் சூரை.
எலிச்சூரைக்கு அயலைச்சூரை, உருளன்சூரை என்ற பெயர்களும் உள்ளன. ஒரு பருவத்தில் மிகவும் அதிகமாக காணப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் காணாமல் போவது எலிச்சூரையின் தனித்தன்மை.
மாசிக் கருவாட்டுக்குப் பயன்படும் மீன் இனமும் சூரைதான்.  இதன்முள்நீக்கி சதைகளை அரைவேக்காட்டாக அவித்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி, சணல் சாக்கில் இட்டு முறுக்கி சொட்டுநீர் இல்லாமல் பிழிந்து, பின்னர் வெய்யிலில் காயவைத்து, பூட்டிய தனிஅறையில் புகை அடுப்புகளுக்கு மேல் இதை தொங்கவிட்டு மாசிக் கருவாடாக மாற்றுவார்கள்.

இப்படி அவித்து வெய்யிலில் உலர வைத்து புகையூட்டினால், இது கறுப்பு மரக்கட்டை போல ஆகும். நீண்டநாள் தாங்கும்.

Thursday, 2 February 2017

கண்டா ஓங்கல் (Risso Dolphin)

ஓங்கல் இனத்தில் சற்று பெரிய உடல்தடித்த ஓங்கல் இது. ஓங்கல்களுக்கே உரித்தான நீண்ட அலகு இல்லாத ஓங்கலும் இதுதான். பந்து வடிவ செங்குத்துத் தலை, கண்டா ஓங்கலின் முதன்மை அடையாளம். அரிவாள் போன்ற சற்று வளைந்த ஆனால் உயர்ந்து நிமிர்ந்த முதுகுத்தூவியையும் இதன் முதன்மை அடையாளமாகக் கொள்ளலாம்.
கண்டா ஓங்கல் 13 அடி நீளம் வரை வளரக்கூடியது. 500 கிலோ வரை நிறையிருக்கக் கூடியது. குட்டியில் சாம்பல் நிறமாகவும், பின்னர் சாக்லெட் பழுப்பு நிறத்துக்கும் மாறும் கண்டா ஓங்கல், முதிர்ந்ததும் வெள்ளி நிறமாக மாறி பின்னர் கறுநிறம் கலந்த பலப்ப பலகையின் (Slate) நிறத்துக்கு மாறும். கண்டா ஓங்கலின் அடிப்பகுதி வெள்ளை நிறம். இதன் பக்கத்தூவிகளும், வாலும் கறுப்பானவை. பக்கத்தூவிகள் நீளமானவை கூடவே கூர்மையானவை.
கண்டா ஓங்கலின் பக்கத்தூவிகளின் கீழ்ப்பகுதி வெண்மை நிறம் என்பதுடன் இந்த வகை ஓங்கலின் கன்னம் தொடங்கி வயிறுவரை நங்கூரக் குறிகள் காணப்படும்.
இதன் கரிய நிற உடல் முழுவதும் ஏராளமாகவும், தாராளமாகவும் வெள்ளை நிற கிறுக்கல் குறிகளைக் காணலாம்.
இதர கண்டா ஓங்கல்களுடன் விளையாடும்போதோ அல்லது சண்டையிடும் போதோ அவற்றின் பல்பட்ட கீறல்களாக இவை இருக்கலாம். அல்லது கண்டா ஓங்கலின் முதன்மை இரைகளான கணவாய்களால் ஏற்பட்ட கடி காயங்களாகக் கூட இந்த வெள்ளைக்கீறல்கள் இருக்கலாம்.
Grampus இனத்தைச் சேர்ந்த ஒரே உறுப்பினர் கண்டா ஓங்கல்தான்.
கண்டா ஓங்கல்களில் ஆணும், பெண்ணும் ஏறத்தாழ ஒரே அளவு உருவமும் வடிவமும் கொண்டவை. எனினும், ஆண் ஓங்கலின் முதுகுத்தூவி சற்று நீளமாகவும், ஆணை விட பெண் ஓங்கல் சற்று பெரியதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
வெப்பக்கடல் ஓங்கலான கண்டா ஓங்கலுக்கு கீழ்த்தாடையில் 2 முதல் 7 இணைப்பற்கள் உள்ளன. எதிரிகளான சுறாக்களுடன் சண்டையிட, கணவாயை இரை பிடிக்க இந்த பற்கள் பயன்படுகின்றன.
ஆழ்கடல் ஓங்கலான கண்டா ஓங்கலை கரைப்பகுதியில் காணமுடியாது. 1300 முதல் 3300 அடி ஆழத்தில் இது காணப்படும். ஐந்தே மணித்துளிகளில் முக்குளித்து வெகுவிரைவில் ஆயிரம் அடி ஆழத்துக்கு இரைதேடி இது செல்லக்கூடியது. அங்கு அரைமணிநேரம் வரை இது தங்கியிருக்கக் கூடியது.
கண்டா ஓங்கலின் முதன்மை இரை கணவாய்கள்தான். பீலிக்கணவாய் (Squid), ஓட்டுக் கணவாய், பேய்க்கணவாய் போன்ற அனைத்துக் கணவாய்களையும் கண்டா ஓங்கல் வேட்டையாடும். எனினும், இந்தப் பட்டியலில் பீலிக் கணவாய்க்கே முதலிடம். பீலிக்கணவாய்கள் இரவுப்பொழுதில் இரை தேடி கடல்மட்டம் நோக்கி கிளம்பும்போது அவற்றை கண்டா ஓங்கல் வேட்டையாடும். மீன்கள், நண்டுகளையும் இது உண்ணும்.
கண்டா ஓங்கல் திமிங்கிலம் போல தலைமேலுள்ள துளையால் மூச்சுக் காற்றைப் பீய்ச்சியடிக்க கூடியது. சிறிய குக்கரில் இருந்து கிளம்பும் ஆவி போல ஒன்றரை அடி உயரத்துக்கு காற்றை கண்டா ஓங்கல் பீய்ச்சியடிக்கும்.
ஓங்கல்களுக்கே உரித்தான கழைக்கூத்தாடி வித்தைகளில் கண்டா ஓங்கலும் கைதேர்ந்த்து. கடல்நீரைவிட்டு முழுவதுமாக இது துள்ளிவிழக்கூடியது. வாலை வன்மையாக ஆட்டுவதுடன், சீழ்க்கை உள்பட பல்வேறு ஒலிகளை இது எழுப்ப வல்லது.

கண்டா ஓங்கல் 10 முதல் 12 மாதத்தில் ஒரே ஒரு குட்டியை ஈனக்கூடியது. அலைகளில் சறுக்கி சில்லியெடுக்கும் (Surf) பழக்கம் இதற்கு உண்டு. மற்ற இன ஓங்கல்களைப் போலவே கண்டா ஓங்கலும் இதர ஓங்கல்களுடன் நட்பு பாராட்டும். இனப்பெருக்க காலத்தின்போது மட்டும் தன்னின ஓங்கல்களுடன் இது சிறு சண்டைகளில் ஈடுபடும். 10 முதல் 50 ஓங்கல்கள் கொண்ட கூட்டமாகத் திரியும் கண்டா ஓங்கல்கள் சிலவேளை ஆழப்பெருங்கடல்களில் திருவிழாவுக்குத் திரள்வது போல 4 ஆயிரம் வரை திரள்வதும் உண்டு.

கண்டா ஓங்கலின் ஆயுள் ஏறத்தாழ 20 ஆண்டுகள்.