Monday, 17 September 2018

புதிய 3 மீன்கள் கண்டுபிடிப்பு
கடலின் அடியாழப் பகுதி ஒரு விந்தையான உலகம். கடலில் 160 அடி ஆழம் வரைதான் கதிரவனின் ஒளி மெல்ல தலைகாட்டும். அதையடுத்து 650 அடி ஆழம் வரை உள்ள பகுதி அந்திமாலையின் மனதை மயக்கும் இருள்கலந்த ஒளி (Twilight). கடலின் அதையும் தாண்டி 3 ஆயிரத்து 300 ஆழம் வரையிலான பகுதி நள்ளிரவு நேரம் போலவே எப்போதும் இருண்டு கிடக்கும். அதற்கும் அப்பால் 13 ஆயிரத்து 100 அடி வரையிலான பகுதி அபிஸ் (Abyss) எனப்படும் பாதாளப் பகுதி. இதோடு கடல்தரை முடிந்து, கடல்தரையில் அங்கங்கே டிரெஞ்ச் (Trench) எனப்படும் கடல்குழிகள் காணப்படும். அந்த கடற்குழிகளில் பல மிகமிக ஆழமானவை. பசிபிக் கடலில் பிலிப்பின்ஸ் நாட்டின் அருகில் உள்ள மரியானா கடற்குழி உலகின் மிக ஆழமான கடற்குழி.
நமது புவிக்கோளத்தின் பெரும்பகுதியை கடல் சூழ்ந்து நிற்கிறது. கடல்களில் ஐந்தில் ஒரு பகுதியை மட்டும்தான் மனிதர்கள் இதுவரை ஆராய்ந்திருக்கிறார்கள். இன்னும் நமக்குத் தெரியாத எண்ணிறந்த உயிரினங்கள் கடல்களில் இன்றும் வாழ்கின்றன.
தென் அமெரிக்காவின் மேற்குக் கரையில் ஆண்டெஸ் மலைத் தொடருக்கு இணையாக, பசிபிக் கடலில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு அடகாமா கடல்குழி பகுதி பரந்து விரிந்து கிடக்கிறது. 8 ஆயிரம் மீட்டர் வரை ஆழமுள்ள பகுதி இது. இந்த அடகாமா (Atacama) கடல்குழி பகுதியில் 24 ஆயிரத்து 600 அடி (7,500 மீட்டர்) ஆழத்துக்கு இரையுடன் கூடியை ஒரு காமிராவை அறிவியலாளர்கள் அனுப்பி ஆய்வு செய்தனர்.
இந்த ஏழரை கிலோ மீட்டர் ஆழத்தில் ஏதாவது கிடைக்குமா என்று ஆராய்ந்த போது, நீலம், பிங்க், பர்ப்பிள் ஆகிய மூன்று நிறங்களில் கண்ணாடி போல, நமது கண்ணால் ஊடுருவிப் பார்க்கக் கூடிய ஜெல் போன்ற உடல்கொண்ட மூன்று புதிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு இந்த மீன்கள் அதிக அளவில் செறிந்து வாழ்வதும் தெரிய வந்திருக்கிறது.
நத்தை மீன் என அழைக்கப்படும் இந்த வகை மீன்களில் ஏற்கெனவே 400 வகை மீன்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவ்வளவு அடியாழத்தில் இப்போது மேலும் 3 புதுவகை மீன்கள் கிடைத்திருப்பது அறிவியலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டியுள்ளது.
அதிலும் மரியானா கடல்குழியில் 26 ஆயிரத்து 600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு நத்தை மீன்தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மீன்களில் மிக அடியாழத்தில் வாழும் மீன் என்றநிலையில் தற்போது அடகாமா (Atacama) கடல்குழியில் புதிய மூன்று நத்தை மீன் இனங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அடகாமா நத்தைமீன்கள் என்று தாற்காலிகமாக இவற்றுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவ்வளவு ஆழத்தில் வாழ்வதால் இந்த புதுவகை மீனுக்கு எதிரிமீன் என்று எதுவும் இல்லை. எந்த மீனும் உணவுக்காக 5 மைல் ஆழத்துக்கு கீழ் முக்குளித்து வருவதில்லை. எதிரி மீன்களிடம் இருந்து தப்புவதற்காகவே இப்படி கடலின் மிகஆழத்துக்கு வந்து இந்த நத்தை மீன்கள் நாளடைவில் சூழ்நிலைக்கேற்றபடி தங்களைத் தகவமைத்து இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
26 ஆயிரம்அடி கடல் ஆழத்தில், கண்ணைக் கட்டும் கும்மிருட்டில் 2 டிகிரி சென்டி கிரேடு குளிர் நிறைந்த தட்பவெப்ப நிலையில் இந்த மீன்கள் உயிர் வாழ்வது அதிசயம்தான்.
ஆவி வடிவ தலைப்பிரட்டை (Tadpole) போலவே இருக்கும் இந்த மீன்களுக்கு மிகச்சில எலும்புகளே உள்ளன. செதிள்கள் இல்லை. இந்த அதிசய நத்தை மீன்களில் கடினமான பகுதி என்பது அவற்றின் உட்புற காதுகளுக்கு உள்ளே உள்ள எலும்புகள்தான். இவற்றைத் தவிர, பற்களும் கடினமானவை. கடலில் ஆழத்தில் சமநிலையைக் காக்க இந்த எலும்புகள் நத்தை மீனுக்குப் பயன்படுகின்றன.
இந்த அளவு ஆழத்தில் உள்ள கடல்நீரின் அழுத்தம் நாம் வாழும் நிலத்தில் இருக்கும் அழுத்தத்தை விட 2 ஆயிரத்து 500 மடங்கு அதிகம். இந்த அழுத்தம், நமது சுண்டுவிரல் மீது 800 கிலோ எடையை வைப்பதற்கு சமமானது. இந்நிலையில் மென்மையான கூழ்பசை போன்ற இந்த மீனின் உடல், கடலின் அதிக அழுத்தத்தைத் தாங்கி வாழ இந்த மீனுக்கு உதவுகிறது. கடலின் அதிக அழுத்தம்தான், இந்த மீனின் உடல் துண்டுதுண்டாகப் பிரிந்து விடாமல், ஒன்றர ஒட்டிவைத்து காப்பாற்றுகிறது.
பரிணாம வளர்ச்சியின் பரிசாகக் கிடைத்த இந்த அழகிய உடலால், நத்தை மீன்களால் இந்த குறிப்பிட்ட அளவு அழுத்தமுள்ள கடல் ஆழத்தில் மட்டுமே வாழ முடியும். மாறாக, இந்த மீனை கடல் மட்டத்துக்கு மேலே எடுத்து வந்தால், மறுகணமே அது உருகிக் கரைந்துவிடும் என்பது தெரிய வந்திருக்கிறது

Saturday, 8 September 2018


குட்டிகளைக் காக்கும் கெழுது 

‘புலி தனது குட்டிகளைக் காப்பது போல சோழ மன்னன் கிள்ளி வளவன் சோழ நாட்டைக் காத்தான்‘ என்று சங்க கால புலவர் ஒருவர் கிள்ளி வளவனை புகழ்ந்தேற்றியிருக்கிறார். ஆண் கெழுது (கெளிறு) (Cat Fish) மீன் தனது முட்டைகளை அல்லது குட்டி களைக் காப்பது போல சோழ மன்னன் கிள்ளிவளவன் சோழ நாட்டைக் காத்தான் என்று அந்தப் புலவர் பாடியிருந்தாலும் கூட அதில் தவறு ஏதும் இருந்திருக்காது. பொருத்தமாகவே இருந்திருக்கும்.
கெழுது (கெளிறு) (Cat Fish) மீன்களில் பெண் மீன் எப்போதும் 4 ஆயிரம் முதல் ஒரு லட்சம் முட்டைகளை இடக்கூடியது. இவையே கடல் கெழுது மீனாக இருந்தால் ஒவ்வொரு முட்டையும் ஒரு கோலிக்குண்டு அளவுக்கு பெரியதாக இருக்கும்.
எண்ணற்ற முட்டைகளை இப்படி இட்டுத் தள்ளுவது மட்டும்தான் பெண் கெழுது மீனின் வேலை. மற்றபடி அவற்றை கருவுறச் செய்து காத்து, குட்டிகள் பொரித்த பின்னும் அவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிப்பது அனைத்தும் ஆண் கெழுது மீனின் வேலை.
கெழுது முட்டைகளில் கருவுறாத முட்டைகள் வெள்ளை நிறத்தில், ஒருவித பூஞ்சை படர்ந்து காணப்படும். அதுவே கருவுற்ற முட்டை என்றால் அடர் பழுப்பு நிறத்துக்கு முட்டைகள் மாறும். அவற்றின் உள்ளே கருப்புநிற உடல்கள் தென்படும்.
முட்டைகள் இட்டபின் பெண் கெழுது மீன் அதன் முட்டைகளைத் தின்றுவிட அதிக வாய்ப்புள்ளதால், முட்டைகளின் அருகில் பெண் மீனை ஆண் மீன் அண்ட விடாது. அது மட்டுமல்ல, ஆண் கெழுது, வால் மற்றும் தூவிகளை அவ்வப் போது விசிறி போல வீசி, முட்டை களைத் தூய்மையாக்கும். முட்டை களுக்கு உயிர்க்காற்று கிடைக்கவும் வழிவகுக்கும்.
முட்டைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பது போலத் தெரிந்தால் முட்டை களை வாயால் அள்ளியெடுத்து வாய்க்குள் வைத்து ஆண் கெழுது காப்பாற்றும். முட்டைகள் தட்பவெப்பநிலைக்கேற்ற 3 அல்லது 5 நாள் களில் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும். அதன்பிறகும் குஞ்சுகளை தனது வாயில் மறைத்து கெழுது மீன் பேணிக் காப்பாற்றும்.
குஞ்சுகள் அவ்வப்போது வெளியே வந்து உலவும் நிலையில், சிறுஆபத்து ஏற்பட்டாலும் தந்தையின் திறந்த வாயே குஞ்சுகளின் ஆபத்து கால புகலிடமாகும்.
குஞ்சுகள் வளர்ந்து பெரிதாகும் வரை தந்தை கெழுது உணவு எதுவும் உண்ணாது. கடும் பசியைத் தாங்கும். ஒரு மாத காலத்தில் குஞ்சுகள் இரண்டு அங்குல நீளம் வரை வளர்ந்து பெரியதானதும், தந்தையை விட்டு அவை நீங்கும். அதன்பின் தந்தை கெழுது அரசுப் பசியுடன் இரை தேடிச் செல்லும்.
அதன்பிறகு கெழுதின் குட்டிகள் தந்தையின் அருகே வரவே -கூடாது. அப்படித் தெரியாத்தனமாக தந்தை மீனின் அருகே அவை வந்தால் தவறாமல் அவையும் தந்தை கெழுதுக்கு உணவாகும்.