Thursday 27 February 2020


ஈயூஜினி கிளார்க் (Eugenie Clark).
கடலையும், கடல்வாழ் உயிர்களை மட்டுமல்ல, கடலியல் சார்ந்த ஆய்வாளர்கள், அறிஞர்களையும் தெரிந்து கொள்வது நல்லதல்லவா? அந்த வரிசையில் இரண்டாவதாக அமெரிக்க நாட்டு கடலியல் ஆய்வாளர் ஈயூஜினி கிளார்க் (Eugenie Clark).
இந்தப் பெண்மணி அமெரிக்காவின் கடற்கரை மாநிலங்களில் ஒன்றான ஃபுளோரிடாவில் பிறந்தவர். (மே 4, 1922). அப்பா அமெரிக்கர். அம்மா ஜப்பானியர். சிறுவயதில் அப்பா இறந்துவிட, அம்மா மற்றும் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் இவர் வளர்ந்தவர்.
சிறுமியாக இருந்தபோது, நியு யார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள கடலுயிர் காட்சியகத்தைப் பார்த்தார் ஈயூஜினி கிளார்க். அந்தக்கணம் முதல் மீன்கள் மீது இவர் காதலாகி விட்டார். மீன்களைப் பற்றி படிப்பதில் ஆர்வமான இவர், ஹண்டர் கல்லூரியில் உயிரியல் படிப்பை முடித்தார்.
பிறகு கடலில் முக்குளிப்புப் பயிற்சி. அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கி கருவிகளின் உதவியுடன் கலிபோர்னியா பகுதியில் நீர்மூழ்கும் பயிற்சிப்பெற்றார். 1947ல் அமெரிக்க மீன்கள் மற்றும் காட்டுயிர்த்துறையினர், பிலிப்பின்ஸ் பகுதியில் உள்ள மீன்களை ஆராயும்படி இவரைப் பணித்தனர். ஆனால், ஈயூஜினியின் தாயார் ஜப்பானியர் என்பதால் அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறை இவருக்கு ஒப்புதல் தரவில்லை.
ஈயூஜினி, எகிப்து நாட்டின் அல்கார்தாகாக் பகுதியில் தங்கியிருந்து செங்கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பிளாட்டி, ஸ்வார்ட்டெயில் மீன்கள் உயிருள்ள குட்டிகளை ஈனுவது பற்றிய இவரது ஆய்வுக்கு நியு யார்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் கிடைத்தது. மீன்களிடத்தில் செயற்கைமுறை கருத்தரிப்பு முறையைச் செய்து காட்டிய முதல் அமெரிக்கர் இவர்தான்.
கடலியல் ஆய்வகம் ஒன்றை நிறுவிய ஈயூஜினி கிளார்க், ஃபுளோரிடா கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான மீன் இனங்களை ஆராய்ந்தார். சுறாக்களைப் பற்றி ஆய்வு நடத்தும்படி அமெரிக்கப் புற்றுநோய் ஆய்வாளர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் கடலில் தடுப்புவேலிகள் அமைத்து உயிருள்ள சுறாக்களை ஆய்வுக்காக இவர் வளர்க்கத் தொடங்கினார்.
1958ல் சுறாக்களின் நடவடிக்கை, போக்கு அவற்றின் மனஇயல்புகளை இவர் ஆராய்ந்தார். குறிப்பாக லெமன் சுறாக்களை ஆராய்ந்தார். சுறாக்கள் அறிவற்றவை என்ற மூடநம்பிக்கையை உடைத்தெறிந்தார்.
கடலில் அடிக்கடி முக்குளித்தவரான ஈயூஜினி, சுறாக்களுக்கான பாதுகாவலராக மாறினார். சுறா மனிதர்களுக்கு எதிரி, சுறா ஓர் ஆட்கொல்லிகள் என்பன போன்ற கருத்துகளை மாற்ற உதவினார். சுறா பெண்மணி எனப் பெயர் பெற்றார்.
கல்லூரி பேராசிரியையாகவும் பணியாற்றிய ஈயூஜினி, பேத்தாமீன் (Pufferfish), கிளாத்திமீன் (Triggerfish), கிளாத்தி இனத்தைச் சேர்ந்த File fish போன்ற மீன்வகைகளைப் பற்றி சிறப்பான ஆய்வுகளைச் செய்தார். 1972ஆம் ஆண்டு, ‘செங்கடல் மோசஸ்எனப்படும் ஒருவகை அடல்மீனை  (Sole fish) கண்டுபிடித்து  அது தொடர்பாக இவர் நடத்திய ஆய்வு சிறப்பானது. இந்த அடல்மீன் சுரக்கும் ஒருவகையான பொருள் சுறாக்களைத் தடுத்து நிறுத்தக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
1973ஆம் ஆண்டு, மெக்சிகோ பகுதியில் உள்ள கடல்குகைகளில் இவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த குகைகளில் சுறாக்கள் வந்து நீண்டநேரம் அசைவின்றி சிலை போல காணப்படும்.  இதற்கான காரணத்தை இவர் ஆராய்ந்தார். அந்த குகையில் வழியும் ஒருவகை நன்னீர், சுறாக்களின் மீதுள்ள ஒட்டுண்ணிகளை நீக்கக் கூடியது என்பதையும் கண்டறிந்தார். ஒட்டுண்ணிகளை உண்ணும் ஒட்டுமீன்கள் (Remoras) அந்தக் குகைகளில் அதிகம் இருந்தது இதை உறுதிப்படுத்தியது.
சுறா பெண்மணி
1995ல் இவரது குழு, அம்மணி உழுவை எனப்படும் பெட்டிச்சுறா (Whale Shark) முட்டையிடாமல், உயிருடன் குட்டியைத்தான் ஈனும் என்பதைக் கண்டுபிடித்தது. இவை தவிர செங்கடல் விலாங்குமீன்கள், இதர மீன்களைப் பற்றியும் இவர் விரிவாக ஆய்வு நடத்தியிருக்கிறார்.
ஈயூஜினி கிளார்க், நேஷனல் ஜியாக்ரபி இதழில் அடிக்கடி கட்டுரைகள் வரைந்தவர். ‘ஈட்டியுடன் பெண்மணி’ (Lady with a Spear), ‘தி லேடி அண்ட் த ஷார்க்ஸ்’ (The lady and the Sharks) போன்றவை அவரது நினைவு தன்வரலாற்றுக்குறிப்புகள். குழந்தைகளுக்காக, ‘கடலடியில் ஒரு பாலைவனம்’ (The Desert Beneath the Sea) என்ற புத்தகத்தையும் ஈயூஜினி எழுதியிருக்கிறார். செங்கடலின் மணல்நிறைந்த அடிப்பகுதியை இந்தப் புத்தகம் விவரித்தது. 1999ல் ஈயூஜினி கிளார்க் ஓய்வு பெற்றார்.

Wednesday 26 February 2020


திமிங்கிலங்களை ‘குருடாக்கும்’ சூரியப்புயல்
அண்டவெளியில் ஆரஞ்சுநிறப் பழம்போல தகதகக்கும் சூரியனுக்கும், நீலக்கடல்சூழ்ந்த நம் பூவுலகின்  திமிங்கிலங்களுக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா?
சாம்பல் திமிங்கிலம்
ஏன் இருக்கலாமே என்கிறார்கள் அறிவியலாளர்கள். சூரியன் அவ்வப்போது அதிகத்திறன் கொண்ட துணுக்குகளை உமிழ்வது வழக்கம். அவற்றை சோலார் புயல் என்பார்கள். அதிக அளவில் மின்காந்த கதிரியக்கம் கொண்ட அவை அடிக்கடி நமது புவியை வந்து தாக்குவதுண்டு.
ஆனால், நமது புவிப்பந்தை காந்தக்கோளம் ஒரு குமிழ் போல, ஒரு கவசம் போல நின்று சூழ்ந்து நின்று, இந்த சூரியப்புயல் தாக்குதல்களைத் தடுத்து விடுவதால் புவிவாழ் மனிதர்களுக்கு இந்த புயலால் கேடு எதுவும் விளைவதில்லை. மனிதர்களால் ஏவப்பட்டு விண்வெளியில் உலா வரும் செயற்கைக்கோள்கள் மட்டும் அவ்வப்போது சிறிய அளவில் பாதிப்பை சந்திப்பதுண்டு.
இந்த சூரிய மின்காந்தப்புயல்கள் நமது கடல்களில் உள்ள சாம்பல் திமிங்கிலங்கள் அதிக அளவில் தரைதட்டி, கரையேறி உயிரிழக்க காரணம் என அறிவியலாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
சாம்பல் திமிங்கிலங்கள் பெருங்கடல்களில் பத்தாயிரம் மைல் தொலைவுக்கும் மேல் வலசை போகக்கூடியவை. கோடையில் வடக்கு நோக்கிப் புறப்பட்டு அலாஸ்காவின் அலியுசன் தீவுகள் வரை பயணப்படும் இவை குளிர்காலத்தில் தெற்கு நோக்கித் திரும்பி வந்து விடும்.
தரை தட்டிய பேருடல்
சாம்பல் திமிங்கிலங்கள், கடலில் வழிகண்டுபிடித்து பயணிக்க புவியின் மின்காந்த வயல்களைப் பயன்படுத்துகின்றன. இந்நிலையில் சூரிய மின்காந்தப்புயல்கள், சாம்பல் திமிங்கிலங்களின் திசையறியும் திறனைக் குழப்பி அவற்றைகுருடாக்கிகடற்கரைகளில் தரைதட்டச் செய்து விடுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அண்மைகாலமாக சாம்பல் திமிங்கிலங்கள் தரைத்தட்டி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 215 சாம்பல் திமிங்கிலங்கள் இதுபோல உயிரிழந்து உள்ளன. ஜெசி கிராங்கர் என்ற பெண் ஆய்வாளர் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் தரைதட்டிய அனைத்து சாம்பல் திமிங்கிலங்களைப் பற்றியும் ஆய்வு நடத்தினார். அதில், தரைதட்டிய பெரும்பாலான திமிங்கிலங்கள் உணவுப் பற்றாக்குறையாலோ, அல்லது உடல்நலம் குறைந்தோ, கப்பல்களில் மோதி காயமடைந்தோ கரையேறவில்லை என்பதை அவர் கண்டறிந்தார்.
சிலவேளைகளில் மனிதர்கள் கடலில் பயன்படுத்தும் சோனர் கருவிகள், கடலடியில் எண்ணெய் வளத்தைக் கண்டறியப் பயன்படுத்தும் ஏர்கன்கள், போன்றவையும் திமிங்கிலங்களைக் குழப்பலாம்.  ஆனால், பெருமெடுப்பில் திமிங்கிலங்கள் தரைதட்டிய விடயத்தில் சூரிய மின்காந்தப்புயல்கள்தான் உண்மைக் குற்றவாளிகள் என்பதை ஒருவாறு அவர் உறுதி செய்திருக்கிறார்.
ஏற்கெனவே கூறியதுபோல சாம்பல் திமிங்கிலங்கள் நெடுங்கடல்களில் திசையறிந்து பயணப்பட புவியின் மின்காந்த வயல்களையே நம்பியிருக்கின்றன. கடல்களின் ஆழத்தில் மூழ்கியபடி அவை பயணம் செய்வதால் திமிங்கிலங்களால் கண்களைப் பயன்படுத்த முடியாது. மின்காந்த வயல்களையே பயன்படுத்துவதன்மூலம் எங்கே இருக்கிறோம், போக வேண்டிய இடம் எது என்பதை அவை முடிவு செய்து கொள்கின்றன.
இந்தநிலையில் சூரிய மின்காந்தப்புயல்கள் அவற்றைக் குழப்பிவிட்டால், ஆறாவது தெருவில் இருக்கும் அவை தவறுதலாக நாலாவது தெருவில் இருப்பதாக நினைத்து விடுகின்றன. இந்த தவறு அவற்றைத் தரைதட்ட வைத்துவிடுகிறது.
திமிங்கிலங்கள் தவறுதலாக பெரிய மீன்பிடிக் கப்பல்களின் வலையில் சிக்கி மூச்சுத்திணறி இறக்க வாய்ப்புண்டு. கப்பல்களில் மோதி காயமடைவதுண்டு. உடல்நலக்குறைவு, கடலின் சூழல் சீர்கேடு, வரிப்புலியன் சுறா போன்ற எதிரிகளின் தாக்குதல் போன்றவற்றாலும் அவை இறப்பைத் தழுவுவதுண்டு. புவி வெப்பமடைவதால் கடல்சூடாகி திமிங்கலத்தின் வழமையான உணவுப் பற்றாக்குறையாகியும்கூட அவை தவிப்பதுண்டு.
கரையொதுக்கம்
ஆனால், இப்போது சூரிய மின்காந்தப்புயல் என்ற புதிய வில்லன் திமிங்கிலங்களுக்கு எமன் எனத்தெரிய வந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
இதை உறுதிப்படுத்துவது போல, சூரியன் அதிகமாக மின்காந்த புயல்களை உமிழும் நாள்களிலேயே சாம்பல் திமிங்கிலங்கள் தரைதட்டுவது அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.
இருந்தும்கூட, ‘சாம்பல் திமிங்கிலங்கள் தரைதட்டுவதற்கு சூரிய மின்காந்தப் புயல்கள் மட்டுமே முதன்மை காரணம் என கூறிவிட முடியாது’ என்கிறார் ஜெசி கிராங்கர்.
உலக அளவில் சாம்பல் திமிங்கிலங்களைப் பொறுத்த அளவில் ஆசியக்கடல்களில் 200 திமிங்கிலங்களும், மேற்குக் கடல்களில் 27 ஆயிரம் திமிங்கிலங்களும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவை அழியும் நிலையில் இல்லை என்பது ஒருவகையில் ஆறுதல்.

Tuesday 4 February 2020


நொமுரா (Nomura) சொறி மீன்
நொமுரா இந்தப் பேரைக் கேட்டாலே ஜப்பான் நாட்டு மீனவர்கள் முகம் சுளிப்பார்கள். ஜப்பான் நாட்டு கடற்கரைப்பகுதிகளில் வாழும் மக்களின் முகம் எட்டுகோணலாகும். அந்த அளவுக்கு அவர்கள் அனைவரையும் மிரட்டி வைத்திருக்கும் பெயர் நொமுரா.
மிதக்கும் ‘மணி’
நொமுரா (Nomura) என்பது ஒருவகை சொறி மீன் (Jellyfish). கொஞ்சம் பெரிய அளவிலான சொறி மீன் இது. பெருங்கடல்களில் நொமுராவுடன் போட்டிபோடக்கூடிய, நொமுராவை விட பெரிய சொறி மீன் என்றால் அது லயன்மேன் எனப்படும் சிங்கப்பிடரி சொறிமீன்தான். ஆனால் சிங்கப்பிடரி சொறிமீன்கள் குளிர்க்கடல் உயிர்கள். நொமுராவோ வெப்பக்கடல் உயிர்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மீனியல் வல்லுநர் கனிச்சி நொமுரா (Kanichi Nomura) என்பவர்தான் 1921ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த மாபெரும் சொறிமீனை அடையாளம் கண்டுபிடித்தார். 72 லிட்டர் கடல்நீர் கொள்ளும் மரப்பீப்பாயில் அதை உயிருடன் பிடித்து ஆய்வு நடத்தினார். அதனால் இந்த மெகா சொறிமீனுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.
நொமுரா சொறிமீன் சிறுதானிய மணி போல இருந்து ஆறே மாதங்களில் ஆறடி குறுக்களவுக்கு வளரக்கூடியது. சின்னஞ்சிறிதாக இருக்கும் போது நொமுரா, கடலில் மிதக்கும் கவுர் (பிளாங்டன்) எனப்படும் மிதக்கும் நுண்ணுயிர்களை உணவாகக் கொள்ளும். இந்த சொறிமீன்களை இரை தின்னும் இயந்திரங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலநூறு மைக்ரோபோபிக் வாய்களால் இவை நுண்ணுயிர்களை அதிக அளவில் உண்ணும். பிளாங்டன்களை இவை வகை தொகை இல்லாமல் தின்று தீர்ப்பதால், பிளாங்டன்களை உண்டுவாழும் அம்மணி உழுவை, மேய்ச்சல் சுறா உள்பட பல சிறிய பெரிய மீன்களுக்கு கடலில் இரை இல்லாமல் போய்விடும்.
எவ்வளவு பெரியது...
இப்படி அசுரத்தீனி தின்று நொமுராக்கள், விரைவில் 6.6 அடி (2 மீட்டர்) முதல் 7 அடி குறுக்களவுள்ள பெரிய மணியைப் போல வளர்ந்து விடும். இவற்றின் எடையும் 200 கிலோவாகி விடும். நொமுரா சொறிமீன்களில் சில 450 கிலோ வரை கூட  வளர்வதுண்டு. இது வளர்ந்த பெரிய ஒரு சிங்கத்தின் எடை என்பது குறிப்பிடத்தக்கது.
கடலில் நொமுரா சொறிமீன்கள், சிறு மீன்களை இரையாகக் கொள்ளும் அதே நேரத்தில் வாள்மீன் (Sword fish), சூரை மீன்  (Tuna), மோளா (Sun fish), தோணி ஆமை அல்லது ஓங்கல் ஆமை (Leatherback Turtle) போன்றவை நொமுரா சொறிமீன்களின் எதிரிகள் ஆகும். இது போல நொமுராவை இரையாகக் கொள்ளும் மீன்கள் கடலில் குறைந்தால் நொமுராக்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பில்லியன் கணக்கில் இவை முட்டைகளை இட்டுத்தள்ளும். யாராவது தாக்கும்போது கூட(!) முட்டையிடுவது நொமுராக்களின் வழக்கம்.
மஞ்சள் கடல், தென்சீனக் கடல் போன்றவற்றில் காணப்படும் நொமுரா சொறிமீன்கள் கோடை காலம் வந்து விட்டால் ஜப்பான் நாட்டு கடற்கரைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிடும். இதனால் மீனவர்களின் வலைகள் கிழியும். நொமுராக்கள் சிக்கிய வலைகளை இழுக்கும்போது படகுகள் கவிழும்
சொறிமீன்களைப் பொதுவாக மூளையற்ற பைகள் (Brainless bags) என்பார்கள். ஆம். மற்ற சொறிமீன்களைப் போலவே நொமுரா சொறிமீன்களுக்கும் கண்கள் கிடையாது. மூளையும் கிடையாது.
நொமுராக்களின் உடல் மென்மையானது. அதனால் சூரை, மோளா போன்ற மீன்களிடம் இருந்து தப்பிக்க இவற்றின் உடல்முழுவதும்  Nematocysts என்ற நஞ்சுள்ள கொக்கிகள் (கொடுக்குகள்) காணப்படும். நொமுரா சொறிமீன்களின் நஞ்சு நிறைந்த இந்த கொளுக்கிகளுக்கு இடையே வாழ்ந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ளும் சிறுமீன்களும் உள்ளன.
நொமுராக்கள் மனிதர்களைக் கொட்டினால் அவர்களுக்கு கடும்வேதனை உண்டாகும். அரிப்பு, கொப்பளம், தோல் வெடிப்புடன் மூச்சுவிடுவதில் சிக்கல், இதயத்துடிப்பு குறைவது போன்ற இன்னல்களும் உருவாகும். இருந்தாலும்கூட நொமுரா சொறிமீன்களால் ஏற்படும் உயிரிழப்பு குறைவே. உலக அளவில் இதுவரை 8 பேர் மட்டுமே நொமுரா சொறிமீன்களால் உயிரிழந்து இருக்கிறார்கள்.
பயணம் எங்கே?
நொமுரா சொறிமீன்களால் ஜப்பான் நாட்டுக்கு அடிக்கடி தொல்லை ஏற்பட்டு வரும் நிலையில் இந்த பிரச்சினையைச் சமாளிக்க ஓர் அழகான திட்டத்தை கடலியல் வல்லுநர்கள் கண்டுபிடித்தார்கள். அதுதான் நொமுரா சொறிமீன்களை உணவாக்கும் திட்டம். நொமுராவின் சதை உண்ணக் கூடியதுதான். அதன் காரணமாக நொமுராவில் இருந்து ஐஸ்கிரீம் எனப்படும் பனிக்கூழ் உள்பட சிலவகை உணவுகள் உருவாக்கப்படுகின்றன.
நொமுராவில் இருந்து பாலில் போடக்கூடிய படிகங்களையும் ஒரு நிறுவம் தயாரித்து வருகிறது. ஆனால், நொமுரா சொறிமீனை மிகச் சுவையான உணவு என்று சொல்ல முடியாது.