Thursday, 12 July 2018


ஓடு கழற்றும் நண்டு

பாம்பு அதன் மேல்தோலை உரிப்பதை சட்டை உரிப்பது என்பார்கள். பாம்பு மட்டுமல்ல, வெட்டுக்கிளி, கரப்பான், சிலவகை வண்டுகளிடம் கூட சட்டை உரிக்கும் வழக்கம் உண்டு.
அதுபோல நண்டுகளும் காலத்துக்கு காலம் தங்கள் மேல்தோடுகளை கழற்றிக் கொள்ளும். புதிய மேல்தோட்டை தங்கள் மீது உருவாக்கிக் கொள்ளும். இப்படி நண்டு அதன் ஓட்டைக் கழற்றுவது அதன் வளர்ச்சியில் ஓர் அங்கம்.
நண்டு வளரும்போது கூடவே அதன் ஓடும் வளராது என்பதால், ஓடு மிகவும் இறுகிவிடும்போது, மேற்கொண்டு வளர்ச்சியடைய அந்த ஓடை கழற்றி விடுவது காலத்தின் தேவையாகிறது. நாம் வளரும் போது பழைய சட்டை இறுக்கமானால் அதை கைவிட்டுவிட்டு புதிய சட்டை அணிந்து கொள்கிறோம் இல்லையா? அதைப்போல.
நண்டுக்கு அதன் எலும்புக்கூடு (Skeleton) உடலுக்கு வெளிப்புறத்தில் இருக்கிறது. வளரும் நண்டுக்கு இந்த ஓடு, ஒரு கட்டத்தில் இடைஞ்சலாக உருவெடுக்கும். தகுந்த கால இடைவெளியில் இந்த ஓட்டை அகற்றினால் தான் நண்டு மேற்கொண்டு வளர முடியும். அதனால் நண்டு அதன் மேற்கூட்டை கழற்றுகிறது.
நண்டின் ஓடு கால்சியம் கார்பனேட்டால் ஆனது. பழைய சட்டையைத் தூக்கி எறியும் முன் அதில் உள்ள பொத்தான்கள், சட்டைப்பையில் உள்ள பணம் போன்றவற்றை நாம் எடுத்துக்கு கொள்வது போல, நண்டு அதன் ஓட்டை கழற்றும் முன் ஓட்டிலுள்ள சில சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும்.
அதன்பின் ஒருவகை நொதியை (Enzyme) நண்டு சுரக்கச் செய்யும். இந்த நொதி மூலம் ஓட்டின் அடியில் புதிதாக காகிதம் போன்ற மென்மையான புதிய ஓடு தோன்றும்.
இப்போது ஓடு கழற்றும் படலம். நண்டு கடல்நீரை குடித்து உடலை பலூன் போல வீங்கச் செய்யும். இதன்மூலம் நண்டின் மேல் ஓடு கழன்று கொள்ளும். இப்படி நண்டு அதன் ஓட்டை கழற்ற வெறும் 15 நிமிட நேரம் போதும். நண்டின் புதிய உடற்கூடு ஆரம்பத்தில் மென்மையாக இருக்கும். போகப்போக அது கடினமாகும்.
நண்டு இப்படி ஓட்டைக் கழற்றும்போது அதன் எதிரிகள் நண்டைத் தாக்கி உணவாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே, பத்திரமான ஒரு மறைவிடத்தில் வைத்துதான் நண்டு ஓடைக் கழற்றும். இப்படி ஓடு கழற்றிய நண்டு உண்பதற்கு சுவையானது அல்ல. ஓடு கழற்றிய நண்டு, அந்த காலகட்டத்தில், உடலில் அதிக நீருடன் சுவைகுன்றி காணப்படும்.
நண்டுகள் புதிய ஓடு மாற்றிக் கொள்வதன் மூலம் அவற்றுக்கு வேறு சில நன்மைகளும் இருக்கின்றன. பழைய ஓட்டில் இருந்த நுண்ணுயிர் பாதிப்பு, கொட்டலசு போன்ற ஒட்டுண்ணிகளின் தொல்லை ஒட்டைக் கழற்றி விடுவதால் நீங்குகிறது. கழற்றப்பட்ட ஓடு. அச்சு அசலாக நண்டு போலவே தோற்றம் தரும்.
கால் உடைந்த நண்டுகளும் கூட பழைய ஓட்டைக் கழற்றி புத்தாடை போடும்போது அவற்றின் கால்கள் புதிதாக முளைத்துவிடும். மிக முதிய வயது நண்டுகளுக்கு உடைந்த கால் மீண்டும் வளரத் தொடங்கினாலும், ஓடு மாற்றும் பழக்கத்தை அவை விட்டுவிடுவதால் உடைந்த கால் ஒரு கட்டத்தில் வளர்ச்சியை நிறுத்தி, குட்டைக் காலாகி விடும்.
நண்டு அதன் வாழ்நாளில் ஏறத்தாழ 20 முறை ஓடு கழற்றும். 2 வயது நண்டாக இருந்தால் ஆண்டுக்கு 3 முறையும், 3 வயது நண்டாக இருந்தால் ஆண்டுக்கு 2 முறையும், 4 வயது நண்டாக இருந்தால் ஆண்டுக்கு ஒரு முறையும் ஓடு கழற்ற வாய்ப்புண்டு. ஆண் நண்டுகள் வயதாக வயதாக ஓடு கழற்றுவதைக் குறைத்துக் கொள்ளும்.
ஆனால், பெண் நண்டுகள் அப்படியல்ல. ஓடு கழற்றினால்தான் பாலுறவு கொள்ள முடியும் என்பதால் வாழ்நாள் முழுவதும் அவை ஓடு கழற்றியே ஆக வேண்டும்.

Wednesday, 4 July 2018


அம்மணி உழுவை (Whale Shark)

நமது புவிக்கோளத்தின் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவையைப் பற்றி ஏற்கெனவே நமது வலைப் பதிவில் பதிவு செய்திருக்கிறோம். இருப்பினும் உலகின் மிகப்பெரிய மீனாயிற்றே? அதுபற்றி புதிய தரவுகளுடன் மீண்டும் பதிவிடுவது தானே சரி? அதன்படி இந்த புதிய பதிவு.
வடதமிழக கடற்கரையில் பெட்டிச்சுறா எனவும், ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழ்ப்‘படுத்தி‘ திமிங்கிலச்சுறா எனவும் தமிழில் அழைக்கப் படும் ஒரு மீன் அம்மணி உழுவை. 
அம்மணி உழுவை 46 அடி நீளம் வரை வளரக் கூடியது. ஆனால், சராசரியாக ஒரு அம்மணி உழுவை 18 முதல் 32 அடி நீளம் வரை வளரும். அம்மணி உழுவையின் எடை ஏறத்தாழ 12 டன் (அதாவது 12 ஆயிரம் கிலோ!)
அம்மணி உழுவையின் தலை தட்டையானது. மூக்கு மொண்ணையானது. கெழுது (கெளிறு) மீனுக்கு இருப்பதைப் போல அம்மணி உழுவைக்கும் மீசை கள் (Barbell) துருத்திக் கொண்டு நிற்கும்.
அம்மணி உழுவையின் உடல் முழுவதும் வெள்ளைநிறப் புள்ளிகளும், மங்கலான கோடுகளும், பட்டைகளும் காணப்படும். நமது கைரேகை ஆளுக்கு ஆள் வேறுபடுவது போல, ஒர் அம்மணி உழுவையின் உடலில் இருப்பது போன்ற புள்ளிகள், வரிகள் இன்னொரு அம்மணி உழுவையின் உடலில் இருக்காது.
அம்மணி உழுவையின் வாய் ஐந்தடி அகலம் கொண்டது. ஒரு வரிசையில் 300 பற்கள் வீதம், அம்மணி உழுவைக்கு மொத்தம் மூவாயிரம் பற்கள். அரிசிமணி போன்ற இந்த சிறுபற்கள் வெறும் 6 மில்லி மீட்டர் நீளமானவை. இந்தப் பற்களைக் கொண்டு அம்மணி உழுவை கடிக்கவோ, சவைக்கவோ செய்யாது.
அம்மணி உழுவை அதன் செவுள்கள் (Gills) மூலம், கடலில் உள்ள கவுர்களை (பிளாங்டன்களை) (சிறு மிதவை நுண்ணுயிர்களை) வடிகட்டி உண்ணும். கடல் நீரை செவுள்களுக்குள் பாய்ச்சி, இரையை மட்டும் வடிகட்டி, எஞ்சிய நீரை வெளியே விடும். கவுர்கள் குறைவாகும் காலத்தில் பாசி, கூனிப்பொடி, இறால், நெத்தலி, சாளை, கணவாய் ஏன் சிறிய சூரை மீன்களைக் கூட இது உணவாக விழுங்கும்.
பார்க்கடல்களில் மீன்கள் முட்டையிடும் காலத்தைத் தெரிந்து கடலில் பரவும் மீன் முட்டைகளை 14 மணிநேரம் வரை காத்திருந்து அம்மணி உழுவை இரை யாக்கும். கடலில் அருகில் நீந்திவரும் மனிதர்களைக்கூட இது தாக்குவதோ, கடிப்பதோ இல்லை.
அம்மணி உழுவை, பெருஞ்சுறாவைப் (White Shark) வாலைப் பயன்படுத்தி நீந்தாமல், உடலை இருபுறமும் அசைத்து அசைத்து நீந்தும்.
பெண் அம்மணி உழுவை 300 குட்டிகள் வரை போடும். ஆனால், இவற்றில் சில குட்டிகள்தான் கடைசிவரை உயிர்பிழைத்திருக்கும். அம்மணி உழுவை 25 வயதில் பருவமடையும். ஒரு நூற்றாண்டு முதல் ஒன்றரை நூற்றாண்டு காலம் உயிர்வாழும்.

Thursday, 7 June 2018கண்களை அள்ளும் கடல்பகுதி
பவழப்பாறைகள்.. பலவண்ண மீன்கள்
உள்ளம் அள்ளும் ஆவணப்படம்

இன்று உலக கடல்கள் நாள்….

கடல் என்றாலே கொள்ளை அழகுதான். அந்தக் கடல்களில் மிக அழகானவை பவழப்பாறைகள் நிறைந்த பார்க்கடல்கள். உலகின் மிகப்பெரிய பார்க்கடல் ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் (Great Barrier) பார்க்கடல்தான்.
விண்வெளியில் இருந்து பார்த்தால், பூமியில் தெரியும் உயிருள்ள ஒரே பொருள் இதுதான். இந்த விந்தையான கிரேட் பேரியர் (Great Barrier) பார்க்கடலைப் பற்றி டேவிட் அட்டன்பரோ என்பவர் அழகான ஆவணப் படத்தை எடுத்திருக்கிறார்.

சிறிய ரக நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள், சூப்பர் ஹைடெக் காமிராக்கள், மேக்ரோ லென்ஸ்கள், செயற்கைக் கோள் ஸ்கேனர்களின் உதவியுடன் வளைத்த வளைத்து இந்த ஆவணப் படத்தைத் தயாரித்திருக்கிறார் டேவிட் அட்டன்பரோ. இதன் மூலம் அவரது 60 ஆண்டுகால கனவு நனவாகி யிருக்கிறது.
பச்சை ஆமை, பல வண்ண மீன்கள், சுறாக்கள், கடல்பாம்பு, யானைத்திருக்கை எனப்படும் மிகப்பெரிய மண்டா (Manta) திருக்கை, திமிங்கிலம் என பலவகை கடல் உயிரினங்கள் இந்த ஆவணப்படத்தில் தோன்றி அசத்தியிருக்கின்றன.
கிரேட் பேரியரில் உள்ள ரிப்பன், ஆஸ்பிரே, லேடி எலியட், மேக்னெடிக் ஆர்பியஸ், லிஸார், ஹெரான் தீவுகள் மாயஜாலம் போல மனதை மயக்கக் கூடியவை. 
2 ஆயிரத்து 500 கடலடிப் பாறைகளும், ஆயிரத்து 50 தீவுகளும் கொண்ட கிரேட் பேரியர் பவழப்பாறைகளைக் காண ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாப்பயணிகள் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தருகிறார்களாம்.

Wednesday, 16 May 2018


திமிங்கிலக் குட்டி

கடலில் வாழும் மிகப்பெரிய உயிர்களான திமிங்கிலங்கள் வெப்ப பகுதி கடல்களில்தான் குட்டி ஈனுவது வழக்கம். குளிர்காலங்களில் வெப்ப கடல்பகுதிகளை நாடி வந்து தாய்த்திமிங்கிலங்கள் அங்கே குட்டி ஈனும்.
திமிங்கிலங்களின் உடலைச் சுற்றி ஓரடி அகலம் வரை  பிளப்பர் (Blubber)  எனப்படும் கொழுப்பு படலம் இருக்கும். உறைய வைக்கும் பனிநிறைந்த குளிர்கடல்களில், குளிரில் இறந்து விடாமல் திமிங்கிலத்தை வாழவைப்பது இந்த பிளப்பர்தான். புதிதாகப் பிறக்கும் திமிங்கிலக் குட்டியின் உடலில் பிளப்பர் எனப்படும் கொழுப்புப் படலம் இருக்காது. எனவே திமிங்கிலக் குட்டி பிறக்க தோதான இடம் குளிர்க்கடல் அல்ல. வெப்பக் கடல்தான். எனவே வெப்பக் கடல்களில் திமிங்கிலங்கள் குட்டி ஈனுகின்றன.
மனிதர்களின் கர்ப்ப காலம் 10 மாதங்கள். ஆனால், திமிங்கிலங்களின் கர்ப்ப காலம் 10 முதல் 13 மாதங்கள். பல்லுள்ள திமிங்கில இனமான ஸ்பெர்ம் (Sperm)  திமிங்கில இனத்தின் கர்ப்ப காலம் 19 மாதங்கள்.
மனிதக்குழந்தை ஒன்று தாய் வயிற்றில் 8 பவுண்ட் எடையை எட்ட 9 மாதங்கள் வரை ஆகும். ஆனால் திமிங்கிலங்களில் மிகப்பெரிய இனமான நீலத்திமிங்கிலத்தின் குட்டி வெறும் 11 மாதங்களில் 25 அடி நீளம், 25 ஆயிரம் பவுண்ட் எடையை எட்டிவிடும். உலகப் பாலூட்டிகளில் மிகப்பெரிய குட்டி, நீலத் திமிங்கிலத்தின் குட்டிதான்.
நாம் தாய் வயிற்றில் பிறக்கும் போது தலைகீழாகப் பிறந்தோம். மூச்செடுக்க வசதியாக நமது தலை முதலில் வெளிவந்தது. ஆனால் திமிங்கிலக் குட்டிகள் கடலுக்கு அடியில் பிறப்பதால், முதலில் வால்தான்தலையை நீட்டும். பிறகுதான் முழு உடலும் வெளிவரும். திமிங்கிலக்குட்டியின் தலை முதலில் வெளிவந்தால் அதன் மூச்சுத் துளைக்குள் நீர் புகுந்து அது இறந்து விட வாய்ப்புள்ளது.
திமிங்கிலக் குட்டி பிறந்தவுடன் செய்ய வேண்டிய முதல்அரும்பணி மூச்செடுப்பது. திமிங்கிலக் குட்டியை கடலின் மேற்பரப்புக்கு கொண்டு வந்து அதை மூச்செடுக்க வைக்கும் பணியை தாய்த் திமிங்கிலமோ அல்லது பேறு காலத்தின் போது அதன் உடனிருந்து உதவிய அத்தை அல்லது பெரியம்மா திமிங்கிலமோ செய்யும். இவற்றின் உதவியுடன் திமிங்கிலக்குட்டி கடல்மேல் வந்து உயிர்க்காற்றை முதன்முறையாக இழுத்து மூச்சுவிடும்.
அதன்பிறகு பாலருந்தும் பணி. தாய்த் திமிங்கிலம் அதன் பால் சுரப்பிகளில் உள்ள தசைகளை இயக்கி, குட்டியின் வாயை தனது பால்காம்பில் பொருந்த வைத்து, பாலைப்பொழியும். ஒரு நாளைக்கு 40 முறை திமிங்கிலக் குட்டி பாலருந்தும்.
திமிங்கிலப் பால் மிகச்செழுமையானது. 50 விழுக்காடு வரை கொழுப்புச்சத்து நிறைந்தது. (பசும்பாலில் வெறும் 4 விழுக்காடு கொழுப்புதான்) திமிங்கில பாலை சுவை பார்த்த சில மனிதர்கள் அது, மெக்னீசியம், மீன் சதை, கல்லீரல், ஆமணக்கெண்ணெய் கலந்த கலவை போல இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். திமிங்கிலப் பால் நமக்கு ஒருவேளை குமட்டலாம். ஆனால், திமிங்கிலக் குட்டிக்கு அது சுவை நிறைந்த பேரமுதம்.
இந்த செறிவான கொழுப்புப் பால் மூலம் திமிங்கிலக் குட்டி ஒரே நாளில் 200 பவுண்ட் வரை, அதாவது ஒரே நாளில் 4 மனிதக்குழந்தைகளுக்கு இணையாக வளரும். நாள் ஒன்றுக்கு திமிங்கிலக் குட்டி 130 கேலன் பால் குடிக்கும். பொதுவாக திமிங்கிலக் குட்டிகள் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை பால் அருந்துவது வழக்கம். ஸ்பெர்ம் திமிங்கிலக் குட்டிகள் 10 ஆண்டுகள் வரை அவ்வப்போது தாய்ப்பால் குடிக்கும் பழக்கம் உள்ளவை.
திமிங்கிலக் குட்டிகள் பிறந்த சில  நாள்களில்பேசகற்றுக் கொள்கின்றன. திமிங்கிலங்களின் மொழியில், அம்மா, உணவு, ஆபத்து, விளையாட்டு என்ற ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு விதமான ஓசை இருக்கிறது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது போலபேசத்தெரிந்த திமிங்கிலக் குட்டிதான் பிழைக்கும் என்பதால் திமிங்கிலக் குட்டிகள் ஒவ்வொன்றும் தாயிடம் இருந்து பேசக்கற்றுக்கொள்கின்றன. சிறப்பு சீழ்க்கை அதிர்வொலிகள், சுண்டெலி போன்ற கிறீச் அதிர்வொலிகளை திமிங்கிலத் தாய் கற்றுக் கொடுக்கிறது. குட்டி கற்றுக்கொள்கிறது.
திமிங்கிலங்கள் நன்றாகப்பேசத் தெரிந்தவை. கடலில் 2 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு திமிங்கிலத்துடன் இங்கிருக்கும் ஒரு திமிங்கிலம் பேச முடியும். உணவு இருக்கும் இடத்தை மற்ற திமிங்கிலத்துக்குத் தெரியப்படுத்தவும், நெருங்கி வரும் ஆபத்தை உணர வைக்கவும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று உரையாடுகின்றன.
திமிங்கிலத்துக்கு நம்மைப் போல குரல்வளை இல்லை. எனவே அதிர்வுகள் மூலம் அவை பேசுகின்றன. கதவைத் திறக்கும் ஒலிகள், கீச்சொலிகள், சீழ்க்கை ஒலிகள், பலவித முக்கல், முனகல்கள் போன்ற அதிர்வுகளை திமிங்கிலத்தால் ஏற்படுத்த முடியும். மனிதக் காதுகளுக்கு கேட்காத இந்த கேளா ஒலியை மற்ற திமிங்கிலங்களால் உணர முடியும். புரிந்து கொள்ளவும் முடியும்.
திமிங்கிலங்கள் ஒலியலைகளால் பேச மட்டுமல்ல,பார்க்கவும்செய்கின்றன என்பது இன்னொரு வியப்பான விடயம். திமிங்கிலம் அதன் மூச்சுத்துளை வழியே, ஒலியலையை வெளியிட விட முடியும். இந்த ஒலியலை எதிரே வரும் பொருள்களின்மீது மோதி எதிரொலி போல மீண்டும் திமிங்கிலத்தின் செவிகளுக்குத் திரும்புகின்றன. இதன்மூலம் எதிரே வருவது படகா, மீன்கூட்டமா, பாறையா, மணல்கரையா என்பதை திமிங்கிலம் உணர்ந்து கொள்கிறது. எதிரே உள்ள உருவத்தின் நீளம் அகலம் உயரத்தையும் இந்த ஒலியலை மூலம் திமிங்கிலம் தனது மூளையில் ஒரு படமாக உணர்கிறது. எதிரே வரும் பொருள் அருகில் மிக நெருங்க நெருங்க திமிங்கிலத்தின் ஒலியலை செல்லும் வேகமும், திரும்பும் வேகமும் அதிகரிக்கும். பல்லுள்ள ஸ்பெர்ம் போன்ற திமிங்கிலங்களால் இந்த ஒலியலை மூலம் எதிரே வரும் எதிரியைத் தாக்கி சற்று திக்குமுக்காட வைக்கவும் முடியும்.
கடலில் ஒரு மைல் தொலைவில் வரும் மீன்கூட்டத்தை 2 நொடிகளில் திமிங்கிலத்தால்பார்க்கமுடியும். ஒலியலைகள் போக ஒரு நொடி, வர ஒரு நொடி, அவ்வளவுதான். திமிங்கிலத்தின் இந்த திறன்எக்கோலொக்கேசன்‘ (Echolocation) என அழைக்கப்படுகிறது. இந்த எக்கோலொக்கேசன் பழுதாகி, செயல்படாத போதுதான் திமிங்கிலங்கள் கடலோரம் ஒதுங்கி தரை தட்டுகின்றன.
கடலில் தாயைப் பிரிந்த திமிங்கிலக் குட்டி ஒன்று இந்த எக்கோலொக்கேசன் மூலம் உதவி கேட்டு அழுகுரல் எழுப்ப, ஒரே வேளையில் 25 ஸ்பெர்ம் பெண் திமிங்கிலங்கள் அதைக் காக்க ஓடிவந்ததை ஒருவர் பதிவு செய்திருக்கிறார்.
திமிங்கிலங்களின் இந்த எக்கோலொக்கேசனுக்கு இன்னொரு விதமான பயன்பாடும் இருக்கிறது. ஒரு திமிங்கில குட்டியின் வயிற்றில் காற்றுக் குமிழ் இருப்பதைக் கூட தாய்த்திமிங்கிலத்தால் இந்த எக்கோலொக்கேசன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். தட்ட வேண்டிய இடத்தில் குட்டியைத் தட்டி அந்த காற்றுக் குமிழை ஏப்பமாக தாய்த் திமிங்கிலம் வெளியேறச் செய்யும்.
திமிங்கிலக் குட்டி உணவு, பாதுகாப்பு, கல்விக்காக எப்போதும் அதன் தாயை அண்டியே வாழும். தாயின் அடிவயிற்றையோ வாலை ஒட்டியோ குட்டி நீந்திவரும். சில வேளைகளில் தாய்க்கு இணையாக பக்கம் பக்கமாக குட்டி நீந்தி வருவதும் உண்டு. தாய்த் திமிங்கிலம் இரைதேடச் சென்றால் அதன் இடத்தில் இன்னொரு பெண் திமிங்கிலம் இருந்து குட்டியை சொந்த பிள்ளை போல பார்த்துக் கொள்ளும். தாய்த் திமிங்கிலம் இறந்து போனால், குட்டியை மற்றொரு பெண் திமிங்கிலம் தத்தெடுத்து வளர்க்கும்.
பெரிய திமிங்கிலங்கள் குட்டிகளுடன் அவ்வப்போது விளையாடுவதும் உண்டு. சாம்பல் திமிங்கிலங்கள் குட்டியை தனக்கு மேல்பக்கம் நீந்த வைத்து ஊதுதுளையால் திடீரென காற்றுவளையங்களை ஏற்படுத்தி குட்டியை சுழல வைத்து வேடிக்கை காட்டும். குட்டியை தன் முகத்தால் தட்டி தட்டி தூக்கி எறிந்து விளையாடும் பழக்கமும் சாம்பல் திமிங்கிலங்களுக்கு உண்டு. ஸ்பெர்ம் திமிங்கிலம் பலம் வாய்ந்த தாடைகளால் குட்டியை முத்தமிடும். பக்கத் தூவிகளால் குட்டியை அணைத்துக் கொள்ளும் பழக்கமும் திமிங்கிலங்களுக்கு உள்ளது.
திமிங்கிலக் குட்டிகளும் மனிதக் குழந்தைகளைப் போலத்தான். சிலவேளைகளில் தாய் சொல்லைக் கேட்காமல் அவை குறும்புகளில் ஈடுபடும். அப்போது தாய்த் திமிங்கிலம் சிறு தண்டனைகளைத் தரத் தவறாது. திமிங்கிலத்தில் சிறிய வகையான ஓங்கல், அதன் குட்டியை சிறிது நேரம் தண்ணீருக்குள் அமிழ்த்திப் பிடித்து, மூச்செடுக்க விடாமல் செய்து தண்டிக்கும்.
திமிங்கிலங்கள், யானையைப் போல ஒரே ஒரு குட்டியை ஈனுவதுதான் வழக்கம். 2 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் திமிங்கிலம் மீண்டும் குட்டி ஈனும். இதனால், பிறந்த ஒரே ஒரு குட்டியைப் பேணிக் காக்க திமிங்கிலத்துக்குப் போதிய நேரம் இருக்கிறது. திமிங்கில குட்டிகள் பால்குடியை மறந்து விட்டு இரை தின்னத் தொடங்கிவிட்டால், அதிலும் இரையைத் தானாக தேடும் அளவுக்கு முன்னேறி விட்டால், தாய், குட்டியைப் பிரிந்தவிடும். திமிங்கிலக் குட்டிக்கு 4 முதல் 6 வயது ஆகிவிட்டால், அதனால் தனித்து வாழ முடியும். அதோடு தனக்கென ஒரு குட்டியை அதனால் உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.
-Della Rowland எழுதிய Whales and Dolphins புத்தகத்தில் இருந்து
………………