Sunday, 26 January 2020


சொறிமீன் படையெடுப்பு

கடலின் ஆவி
சொறிமீன்கள் எனப்படும் ஜெல்லி மீன்களைத் தெரியும்தானே? நமது வலைப்பூவைத் தொடர்ச்சியாக வாசித்து வருபவர்களுக்கு சொறிமீன்களைத் தெரிந்திருக்கும்.  500 மில்லியன் ஆண்டுகளாக உலகப்பந்தில் உயிர் வாழும் சொறிமீன்கள், டைனோசர்களைவிட, ஏன்? மரங்களை விட வயதில் மூத்தவை.
அறிவியல் எழுத்தாளரான ஜூலி பெர்வால்ட் என்ற பெண்மணி, இந்த சொறிமீன்களைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்.
‘இவை ஆதாம், ஏவாள் வாழ்ந்த ஏடன் தோட்டத்தில் இருந்து எழுந்த ஆவிகள்’ என்கிறார் ஜூலி. ‘ஏதோ ஒரு வகையான அறிவுதான் இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் சொறிமீன்களை உலகப்பந்தில் வாழ வைத்திருக்கிறது’ என்கிறார் அவர்.
எழுத்தாளர் ஜூலி பெர்வால்ட் சொல்வதைக் கேட்போம்.
‘சொறிமீன்களுக்கு மூளை இல்லை. முதுகெலும்பு இல்லை. கண்கள் இல்லை. ரத்தம் இல்லை. ஆனால், உலகக் கடல்களில் அவ்வப்போது பெரிய அளவில் இவை இனம்பெருகி, ‘பெருவெடிப்பு (Big bang) போல வெடித்துச்சிதறி உலகத்தைப் பயமுறுத்தி வருகின்றன. பெருங்கடல்களின் சுற்றுச்சூழலையே மாற்றி அமைத்துவிடும் மாய உயிர்கள் இந்த சொறிமீன்கள்.
இவற்றின் பெருக்கத்தால் ஏற்படும் எதிர்வினைகள் கடலோடு நின்றுவிடுவதில்லை. சொறிமீன்கள் பெருகினால் ஸ்வீடன், இஸ்ரேல், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மின்சார உற்பத்தி(!) பாதிக்கப்படுகிறது. ஆம். கடலோடு இணைப்புள்ள மின் உற்பத்தி நிலைய கருவிகளுக்குள் இவை புகுந்து மின்உற்பத்தியைத் தடை செய்து விடுகின்றன. விளைவு முழு இருட்டு.
‘நகரம் முழுவதும் இருட்டாகி விட்டதே. ஏதாவது ராணுவப் புரட்சி நடந்து விட்டதோ? என்று பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களுக்கு அடிக்கடி பீதியைக் கிளப்புகின்றன இந்த சொறிமீன்கள்.
எங்கெங்கு காணினும்...
ஜப்பான் நாட்டில், மின் உற்பத்தியைப் பாதிப்பவை இரண்டே அம்சங்கள்தான். ஒன்று நிலநடுக்கம். இரண்டு சொறிமீன் பெருக்கம். எங்கெங்கும் தோன்றும் ஒரு படைப்புடன் நாம் மோதிக் கொண்டிருக்கிறோம்.
புவி உருண்டையின் தட்பவெப்பநிலை மாற்றத்தால் சொறிமீன்களின் பெருக்கம் திடீரென அதிகமாகிறது. வெப்பக் கடல்களில் சொறிமீன்களால் மிக நன்றாக இனப்பெருக்கம் செய்ய முடியும். சூழல்மாசுபாடு உள்ள கடல்களில் மற்ற மீன்களைவிட சொறிமீன்களால் நன்றாக வாழ முடியும். காரணம் சொறி மீன்களுக்கு அதிக அளவில் உயிர்க்காற்று தேவையில்லை. கொன்றுண்ணி மீன்கள் அதிக ஆக்சிஜன் இல்லாத கடல்பகுதிகளில் தலை காட்டத் தயங்கும் என்பதால் அந்தப் பகுதிகளில் தங்களுக்கு எதிரிகளே இல்லாமல் சொறிமீன்கள் சுகமாக வாழ்கின்றன. (சொறிமீன், மீன் அல்ல, ஆனால் மீன் என்றே இவற்றைக் குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது.)
அதுபோல, அதிக மீன்பிடிப்பும் சொறிமீன் பெருக்கத்துக்கு ஒருவகை காரணமாகிறது.
எடுத்துக்காட்டாக தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் கட்டுப்பாடற்ற முறையில் சட்டத்துக்குப் புறம்பாக பல ஆண்டுகளாக மீன்பிடிப்பு நடந்தது. இதனால் கடலின் சூழல் உருக்குலைந்து, அதிக வெப்பம் நிலவி, இருவகை சொறிமீன்களின் இருப்பிடமாக நமீபியா கடல்பகுதி மாறியது. அங்கே மீனவர்கள் வலை இழுத்தால் மீன்களை விட சொறிமீன்களே அதிகம் சிக்கும் நிலை.
பகீர் படையெடுப்பு
உலகில் அதிக மீன்வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்று நமீபியா கடற்பகுதி. அங்கே இனி நிலைமை எப்போது சீராகி, மீண்டும் மீன்கள் எப்போது பெருகும் என்பது யாருக்கும் தெரியவில்லை. இரை மீன்கள் இல்லாமல் போவதால் அவற்றை உண்டு வாழும் மற்ற மீன் இனங்களும் பாதிப்படைகின்றன. போதுமான மீன்கள் இல்லாமல் கடற்பறவைகளும் கூட அங்கே பட்டினி கிடக்கும் நிலை உருவாகி உள்ளது.
சொறிமீன்களில் பெரிய வகை சொறிமீன்களில் ஒன்று நொமுரா (Nomura) சொறி மீன்.  ஜப்பான் நாட்டு கடற்பகுதியில் அதிகம் காணப்படும் இந்த மிகபெரிய சொறிமீன், 200 கிலோ வரை எடையுள்ளது. 2 மீட்டர் நீளத்துக்கு வளரக்கூடியது.
இதற்கு முன் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நொமுரா சொறிமீன்கள் கடலில் தலைகாட்டும். ஜப்பான் மீனவர் ஒருவர் இந்த சொறிமீனை மகனுக்குக் காட்டி. ‘நன்றாகப் பார்த்துக் கொள். இனிமேல் 30 ஆண்டுகளுக்குப்பிறகுதான் இதைப் பார்க்க முடியும்’ எனக் கூறுவது வழக்கம். முப்பது ஆண்டுகளுக்குப்பிறகு அந்த சொறி மீனைப் பார்க்கும் மகன், அப்பா சொல்வதை நினைவுபடுத்திக் கொள்வான்.
ஆனால், இப்போது அப்படியில்லை. ஆண்டுதோறும் நொமுரா சொறிமீன்கள் கடலில் படையெடுத்து காணப்படுகின்றன. இந்த 21ஆம் நூற்றாண்டில் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் அதிக அளவில் நொமுராக்கள் வருகை புரியத் தொடங்கியுள்ளன. 2009ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டு மீனவர் வலை ஒன்றில் அதிக அளவில் நொமுராக்கள் சிக்கியதால், பத்து டன் எடையுள்ள அவரது மீன்பிடிப்படகு கவிழ்ந்தது.
நொமுரா சொறிமீன்
சொறிமீன்கள் நமக்கு சொல்ல வரும் செய்தி என்ன? உலகப்பந்து அதிக வெப்பம் அடைந்து வருகிறது, கடல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மாசுபாடு அடைந்திருக்கின்றன என்று சொறிமீன்கள் சொல்கின்றன.
நிலத்தில் நாம் உருவாக்கும் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி, பூச்சிக்கொல்லிகள் போன்றவை பெருங்கடல்களில் போய் சேர்கின்றன. இந்த கழிவுகள் கடலின் உயிர்க்காற்றைக் குறைத்து சொறிமீன்களின் சொர்க்க பூமியாக அவற்றை மாற்றுகின்றன. கடற்கரையோர அழுக்குகளைத் தேடித்தின்பதற்காக சொறிமீன்கள் கடற்கரையை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.
‘எதையாவது செய்து இந்த புவியைக் காப்பாற்ற வேண்டியது இப்போது காலத்தின் கட்டாயம்’ என்கிறார் எழுத்தாளர் ஜூலி பெர்வால்ட்.

Sunday, 19 January 2020


பிறந்த இடம் தேடி

ஆமைகளை பெரும் கடலோடிகள் என்பார்கள். பரந்து விரிந்த நீலப்பெருங்கடல்களில் பல ஆயிரம் மைல் தொலைவுக்கு ஆமைகள் பயணப்படக் கூடியவை. பெண் ஆமைகள் உலகக் கடல்களின் எந்த ஓரத்தில் இருந்தாலும், முட்டையிடுவதற்காக, தான் பிறந்த கடற்கரைக்கே மீண்டும் வரும் என்பது உங்களில் பலருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்.
ஆமைகளிலும் கூட, பெருந்தலை கடலாமைகளே மிகச்சிறந்த கடலோடிகள். பல ஆயிரம் கடல் மைல்கள் பயணம் செய்து பிறந்த இடம்தேடி வருவதில் பெருந்தலை ஆமைகள் மிகவும் பெயர் பெற்றவை.
எடுத்துக்காட்டாக அடிலிட்டா என்ற பெருந்தலை இனத்துப் பெண் ஆமை ஒன்று, ஆய்வு நடவடிக்கைக்காக மெக்சிகோ நாட்டின் பஜகலிபோர்னியா கடற்பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மைல்களை அயராமல் நீந்திக் கடந்த அடிலிட்டா, இறுதியில், தான் பிறந்த வளர்ந்த ஜப்பான் நாட்டின் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. அடிலிட்டா பயணம் செய்த மொத்த தொலைவு 9 ஆயி
ரம் மைல்கள்!

ஆமைகளால் எப்படி இந்த அரிய சாதனையை நிகழ்த்த முடிகிறது? இதைப்பற்றி விளக்குகிறார் கடலியல் ஆய்வாளர் வாலஸ் ஜே. நிக்கோலஸ்.
நமது கற்பனைக்கெட்டாத அளவுக்கு ஆமைகள் திசை கண்டறிந்து பயணப்படக்கூடிய மிகச்சிறந்த மாலுமிகள்என்கிறார் வாலஸ் நிக்கோலஸ். ‘கடல்மேல் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நீர்தான் தென்படும்.  மனதில் பதிந்து வைத்துக் கொள்வது மாதிரியான நிலஅடையாளங்கள் எதுவும் இருக்காது. கடல் அடிக்கடி கலங்கும். அப்போது கடலில் தெளிவாகப்  பார்க்கக் கூட முடியாது. வலிய நீரோட்டம் இழுக்கும். இதுபோக, ஆமைகளால் தங்கள் தலையை சில அங்குல உயரத்துக்கு மேலே தூக்கிப் பார்க்க முடியாது. இத்தனை குறைபாடுகளுக்கு நடுவில்தான் ஆமைகள் இப்படி வழிதவறாமல் பயணம் செய்வது குறித்த இடத்தை வந்தடைகின்றன. இது கண்டிப்பாக வேறு அளவிலான திறமைஎன்கிறார் நிக்கோலஸ். இந்த திறமை ஆமைகளின் உள்ளுணர்வால் வருவதுஎன ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
கடல் ஆமைக் குஞ்சுகளுக்கு அவை முட்டையில் இருந்து பொரித்து வெளியே வந்து கடலில் கால்வைக்கும் முன்பே, புவிக்கோளத்தின் காந்த வயல்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் வந்து விடுகிறது. எந்தத்  திசையில் கடல் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு ஆமைக் குஞ்சுகள் கடலை நோக்கி கடகடவென நகர்வது இதனால்தான்.
இதுபோக வளர்ந்த கடலாமைகள் புவியின் காந்த வயல்கள் மூலம் கடலின் எந்த பகுதியில் இருக்கிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றன. அதற்கேற்ப தமது பயணத்தை அவை வடிவமைத்துக்  கொண்டு, கடல்நீரோட்டம் அப்பால் பிடித்துத் தள்ளினாலும்கூட, வலசைப் பாதையைத் தொடர்ந்து விடாமல் பிடித்த வண்ணம் பயணத்தைத்  தொடர்கின்றன.
இது போக கடலடியில் உள்ள குன்றுகள், மோப்பத்திறன் போன்றவையும் ஆமைகளின் கடல் பயணத்துக்கு உதவுகின்றனஎன்கிறார் ஆய்வாளர் நிக்கோலஸ்.
இப்படி பிறந்த இடம் தேடி வரும் ஆமைகளுக்கு வழிநெடுகிலும் பல வடிவங்களில் ஆபத்துகள் காத்திருக்கும். பெரிய சுறாக்கள், சீற்றம் மிகுந்த கடல் இவற்றுடன் கப்பல்கள், படகுகளில் அடிபடாமல், மீனவர்கள் விரித்த வலைகள், தூண்டில்களில் சிக்கிக் கொள்ளாமல் ஆமைகள் பயணப்பட வேண்டியிருக்கும்.
ஆமைகள் பிறந்த நாட்டில் பல நூறு கடற்கரைகள் இருக்கின்றன. இருந்தும்கூட அவற்றில் தான் பிறந்த கடற்கரையை மட்டும் ஆமை ஏன் தேர்வு செய்கிறது. ஏன் வேறு கடற்கரைகளைத் தேர்வு செய்வதில்லை? இதற்கும் விளக்கம் சொல்கிறார் நிக்கோலஸ்.
சில குறிப்பிட்ட கடற்கரைகள், பல நூற்றாண்டு காலமாக சரியான தட்பவெப்பம், நில அமைப்பு, எதிரிகள் இல்லாத சூழல் போன்றவற்றுடன் விளங்குகின்றன. இதுபோன்ற கடற்கரை ஒன்றில் பிறந்த ஆமைகளுக்கு அவற்றின் மரபணுக்களில் இந்தத் தகவல் ஒட்டிக் கொள்கிறது. இதனாலேயே குறிப்பிட்ட ஒரு கடற்கரையை ஆமைகள் நாடி வருகின்றனஎன்கிறார் நிக்கோலஸ்.
ஆமைகள் முட்டையிடும் கடற்கரை மனித நடமாட்டமின்றி இருக்கவேண்டும். அந்த கடற்பகுதியில் சுறாக்கள் இல்லாமலும், கரையில் நாய், நரி போன்றவையும் இல்லாமல் இருக்க வேண்டும். அந்தக் கடற்கரை கடலில் இருந்து சற்று உயர்ந்து எழுந்த ஒரு மணல்மேட்டின்மேல் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பு. அத்துடன் சரியான ஈரப்பதம், தட்பவெப்பநிலை கொண்ட கடற்கரையாக அது இருந்தால்தான் ஆமை முட்டையிடும் கடற்கரையாக அது திகழும்.
கடற்கரை சற்று மணல்மேடாக இருந்தால் அங்கு அலைகள் மேலெழுந்து வர வாய்ப்பில்லை. ஆகவே மணலில் பள்ளம் பறித்து இடும் முட்டைகள் அலையால் இழுத்துச் செல்லப்படாமல் பத்திரமாக இருக்கும் என்பது ஆமைகளின் கணிப்பு. ஆமை முட்டைகள் இருக்கும் பகுதி வரை அலைகள் வந்து சென்றால் முட்டைகள் அவற்றின் வெப்பநிலையை இழந்து உருக்குலைந்து விடும். அவற்றில் குஞ்சுகள் பொரிக்காது.
ஆமை முட்டையிடும் மணற்கரை உடைந்து சரிந்து விழ வாய்ப்பிருக்கிறதா என்பதை ஆமை உறுதி செய்து கொள்ளும். அதுபோல ஆமை முட்டையிடப் போகும் கரையில் மணல் தேரிகளும், கடற்கரையோரமாக பவழப்பாறைகளும் இருந்தால் மிகவும் நல்லது.
ஆமை முட்டைகளையிடும்போது கடலுக்கு மிக அருகில் இடாது. அதுபோல கடலுக்கு வெகு தொலைவிலும் இடாது.
கடலருகே முட்டைகள் இட்டால் அலைஅபாயம் இருக்கும். தொலைவில் இட்டால் முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடலுக்கு வந்து சேரும் முன் காக்கை, பருந்து போன்றவற்றுக்கு இரையாகிவிடும். அதுபோல கடலுக்கு தொலைவில் முட்டைகள் இட்டால் கடலோர தாவரங்களின் வேர்கள் ஆமையின் முட்டைகள் இருக்கும் பகுதிக்குள் ஊடுருவி முட்டைகளைப் பாதிக்க வாய்ப்புண்டு.
ஒரு குறிப்பிட்ட கடற்கரையில் பிறக்கும் கடல் ஆமைக்குஞ்சு வளர்ந்து பெரிதானதும், ‘தன் அம்மாவின் தேர்வு எப்போதும் சரியாக இருக்கும்என்று நம்புகிறது. எனவே அதே கடற்கரையைத் தானும் தேடிச்சென்று முட்டையிடுகிறது. பல லட்சம் ஆண்டுகளாக இது தொடர்ந்து நடக்கிறது. மனிதர்கள் என்னும் அறிவுமிக்க உயிர்கள் கடலையும், கடற்கரைகளையும் பாழ்படுத்துகிறார்கள் என்பது ஆமைக்குத் தெரியாது.
இந்த நவீன உலகத்தில் புதுப்புது ஆபத்துகளை எதிர்கொண்டாலும் கூட ஆமை அம்மாக்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் பிறந்த இடம் தேடி நீந்துகின்றன. வருங்காலத்திலும் இந்த பாசப் பயணம் தொடர்கதையாகத் தொட்டுத்தொட்டுத் தொடரும்.

Thursday, 16 January 2020


சுறாவின் கல்லீரல்


சுறா
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்என்பார்கள். அதைப்போல ஆயில் இல்லாத கல்லீரலின்றி சுறாமீன்கள் கடலில் குடியிருக்க முடியாது. ஆம். எண்ணெய் நிறைந்த கல்லீரல்கள் சுறா மீன்களுக்கு மிகமிகத் தேவை.
சுறாக்களுக்கு மற்ற விலங்குகளை விட வேறுபாடான கல்லீரல் உண்டு. சுறா மீனின் உடலுக்குள் இந்த கல்லீரல் அதிக இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும். கடலின் அடியில் கடல்தரையையொட்டி வாழும் சுறாக்களுக்கு கொஞ்சம் சிறிய கல்லீரல், அதாவது அவற்றின் உடல் எடையில் 5 விழுக்காடு அளவு கொண்ட சிறிய கல்லீரல் இருக்கும்.
பெருங்கடல்களின் மேற்பரப்பில் நீந்தித் திரியும் சுறாக்களுக்கு அவற்றின் உடல் எடையில் 25 விழுக்காடு அளவு கொண்ட பெரிய கல்லீரல்கள்  இருக்கும். சுறாவின் உடலுக்குள் உள்ள வெற்றிடத்தில் 90 விழுக்காடு இடத்தை கல்லீரலே பிடித்துக் கொள்ளும்.
கல்லீரலின் வேலை என்ன? வழக்கம் போல தின்ற இரையைச் செரிக்க வைப்பதுதான் கல்லீரலின் வேலை.  சுறாவின் கல்லீரலும் அந்த வேலையைச் செவ்வனே செய்யும். உட்புற வடிகட்டி போல செயல்பட்டு உணவைச் செரிக்கச் செய்வதுடன், ரத்தத்தைச் சுத்திகரிப்பது, கழிவுகளை வடிகட்டி நீக்குவது, சுறாவின் உணவில் உள்ள சத்துக்களைச் சேகரித்து அவற்றை சக்தியாக மாற்றி சுறாவின் உடலில் சேர்த்து வைப்பது போன்ற வழக்கமான வேலைகளை சுறாவின் கல்லீரலும் செய்யும்.
ஆனால், இதைவிட பெரிய அரும்பணி ஒன்று சுறாவின் கல்லீரலுக்கு இருக்கிறது. அது, சுறாவை நீரில் மிதக்க வைப்பது. . சுறாவின் உடல், கடல்நீரை விட கனமானது. மற்ற மீன்களைப் போல சுறாக்களுக்கு நீந்தப் பயன்படும் காற்றுப்பை இல்லை. இதற்கு மாற்றாகத்தான், எண்ணெய் நிரம்பிய கல்லீரலை இயற்கை, சுறாவுக்கு வழங்கியிருக்கிறது.
சுறாவின் பெரிய கல்லீரல், Squalene என்ற எண்ணெய்யால் நிரம்பியிருக்கும். இந்த எண்ணெய், கடல் நீரை விட எடை குறைந்தது. இந்த எண்ணெய் சுறாவின் உடல் எடையை மிதமாக்கி மிதக்கப் பயன்படுகிறது. இதனால், சுறா மூழ்கிப்போகாது.
சுறாக்கள் உயிர் வாழவேண்டுமானால் அவை தொடர்ந்து தொய்வில்லாமல் நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். செவுள் துளைகள் வழியாக கடல்நீரை உள்வாங்கி அவற்றில் இருந்து காற்றைப் பிரித்து மூச்சு விட்டபடி சுறா நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதே வேளையில் மிதப்புத் தன்மையும் சுறாவுக்கு முக்கியம். அதைச் செய்யத்தான் சுறாவின் கல்லீரலில் உள்ள எண்ணெய் பயன்படுகிறது.
மேய்ச்சல் சுறா
சுறாவின் பக்கவாட்டுத் தூவிகள் சுறா நீந்தும்போது அங்குமிங்கும் திரும்ப மட்டுமே பெரிதும் பயன்படும். தூவிகளை மட்டும் பயன்படுத்தி சுறா நீந்த முடியாது. அப்படி நீந்த நினைத்தால் ஏராளமான திறனை சுறா செலவிட வேண்டியிருக்கும். வெறும் உணவு மூலமாக மட்டும் இந்த திறனை சுறா பெற்று உயிர்வாழ்ந்து விட முடியாது. எனவே சுறா உயிர் வாழ கல்லீரலில் உள்ள எண்ணெய் மிகமுக்கியம்.
சுறா இனத்தில் அம்மணி உழுவைக்கு (Whale Shark) அடுத்தபடி, இரண்டாவது பெரிய சுறாவான மேய்ச்சல் சுறாவுக்கும் (Basking Shark), சில ஆழ்கடல் சுறாக்களுக்கும் அவற்றின் கல்லீரல்களில் அதிக அளவு எண்ணெய் இருக்கும். இவை மனிதர்களுக்கு மாமருந்தாகப் பயன்படுகின்றன. புற்றுநோய் தாக்கியவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ஒரு பகுதியாக சுறா எண்ணெய் பயன்படுகிறது. கூடவே, மனிதர்களின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தவும், மனிதர்களின் தோல் கறுப்பாகாமல் காத்து, தோல் என்றும் இளமை பொலிவுடன் பளபளவென விளங்கவும் சுறா எண்ணெய் பயன்படுகிறது.
953 கிலோ எடையுள்ள மேய்ச்சல் சுறாவின் கல்லீரலில் 2,081 லிட்டர் எண்ணெய் கிடைக்க வாய்ப்புள்ளது.

Friday, 10 January 2020


சோவி.. பெண்மையின் சின்னம்

சோவி.. சோழிஇப்படியெல்லாம் தமிழில் ஒரு சிறு கடலுயிர் அழைக்கப்படுகிறது. அழகிய ஓட்டுடன் கூடிய ஒருவகை கடல்நத்தை இது. ஆங்கிலத்தில் இதை காவ்ரி (Cowri) என்று அழைக்கிறார்கள்.
சோவிகள்.. சோழிகள்..
குவிமாடம் போன்ற உருவமும், அடிப்பகுதியில் குறுகலான நீண்ட திறப்பும் கொண்டவை சோவிகள். இதன் ஓடு பளிங்கு, பீங்கான் போல பளபளப்பானது. அழகிய பல வண்ணங்களைக் கொண்டது.
சோவிகள் 75 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களின் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த கண்கவர் கடல்நத்தைக்கூடுகள் நாணயங்களாக, ஆபரணங்களாக, வசியப்பொருளாக, வரும்பொருள் உரைக்க (குறிசொல்ல) பயன்படும் மந்திரப் பொருளாக, பல்லாங்குழி போன்ற பல விளையாட்டுக்களுக்கான பகடைக் காய்களாக, வீட்டு அலங்காரப் பொருள்களாக இன்னும் பலப்பல விதங்களில் மனிதகுலத்துக்குப் பயன்பட்டு வருகின்றன.
குறிப்பாக இந்த சோவிகளை பெண்மையின் சின்னம் எனக் கூறலாம். பிறப்பது, பூப்படைவது, மணம் முடிப்பது, கருவுறுவதுல், குழந்தைப் பேறு என பெண்களின் எல்லா முதன்மை கால கட்டங்களிலும் அவர்களது வாழ்வில் ஒன்றரக் கலந்து இருந்திருக்கின்றன இந்த சோவிகள். ஜப்பான் நாட்டில் எளிதாக வலியின்றி சுகமாக குழந்தையைப் பெற்றெடுக்க பெண்கள் குறிப்பிட்ட ஒரு சோவியை தங்களுடன் வைத்துக் கொள்வார்கள். அந்த சோவியின் பெயரேஎளிதான குழந்தைப்பேறு சோவிஎன்பதுதான். தாயத்து போல சோவிகள் பல்வேறு கட்டங்களில் மகளிருக்கு உதவுகின்றன.
சோவி பழங்காலத்தில் பசிபிக் கடல்தீவுகளின் அரசகுலத்தவர் அணியும் ஆபரணமாக இருந்திருக்கிறது. பழங்கால சீனாவில் பணத்தைக் குறிப்பிடும் சித்திர எழுத்து வடிவம் சோவியின் வடிவத்தில் இருந்தே வந்தது.
பல்வேறு வடிவங்கள்..நிறங்கள்..
அதுபோல ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் செடி (Cedi) என்ற நாணயத்தில் சோவியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அகான் மொழியில் செடி என்பது சோவியைக் குறிக்கும் சொல். மற்றொரு ஆப்பிரிக்க நாடான டோகோவில் இன்றும கூட கணியம் (சோதிடம்) சொல்லப்பயன்படும் பொருளாக சோவி விளங்குகிறது. நைஜீரியா நாட்டின் யோருபா இன மக்கள், ‘ஆவிகளுடன் பேச’ சோவியைப் பயன் படுத்துகிறார்கள்.
சீனாவின் பெங்சுயி (Feng Shui) வாஸ்து கலையின் படி சோவி என்பது வீட்டுக்கு செல்வத்தை கொண்டு வரும் ஒரு பொருள்.
ஆப்பிரிக்க, பசிபிக் கடல் நாடுகள் சீனா, இந்தியா போன்றவற்றிலும்கூட சோவிகள் பெருவாரியான அளவில் நாணயமாகப் பயன்பட்டிருக்கின்றன.  கையாள எளிது, குறைவான எடை, எளிதில் அழியாத்தன்மை, ஒரே அளவு போன்ற காரணிகள் காரணமாக சோவிகள் அதிக அளவில் நாணயங்களாக உதவியிருக்கின்றன.
இந்தியாவில் 3,840 சோவிகள் ஒரு ரூபாய் மதிப்புக்குச் சமமானவை. ஆப்பிரிக்க நாடு ஒன்றில் ஒரு கட்டத்தில் அதிகஅளவில் சோவிகளை ஈட்டிய ஒருவர் அவற்றைச் சுமந்து செல்வதற்கான சுமைகூலி சோவிகளின் மதிப்பைவிட அதிகமாக இருந்ததால் அந்த சோவிகளைக் கைவிட்டதாக வரலாற்று ஆசிரியர் ஒருவர் எழுதி வைத்துள்ளார். ‘சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம்’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது அல்லவா?
எத்தனை வண்ணம்?
சோவிகள் ஏன் இத்தனை வண்ணங்களுடன் பளபளப்பாக இருக்கின்றன? கடலில் வாழும் ஸ்லக் (Slug) என்ற ஒருவகை உயிரினத்தைப் போல தோற்றம் அளிப்பதற்காக சோவிகள் பல வண்ணங்களில் திகழ்கின்றன.
சரி. சோவிகளின் உணவு என்ன? சிறிய சோவிகள் பாசிகளையும், மற்ற உயிர்கள் உணவு உண்ணும்போது சிந்தும் துகள்களையும் உண்ணும். வளர்ந்தபின் சிலவகை கடற்சாமந்திகள், கடற்பஞ்சு உயிர்கள், மென்மையான பவழப்பாறைகளை சோவிகள் உண்ணும்.
சோவி, சிப்பி, ஊத்தி போன்ற கிளிஞ்சல் ரகங்களில் மொத்தம் 12 ஆயிரம் வகைகள் உள்ளன.

Friday, 3 January 2020


எத்தனை மீன்கள்?

கடலில் எத்தனையோ வகை மீன்கள். ஆனால், தமிழ் மொழியில் மீன்களைக் குறிப்பிடும் சில சொற்கள் குறிப்பிட்ட ஒரு மீன் இனத்தைக் குறிக்காமல் சிலவகை மீன்களின் மொத்தத் தொகுப்பைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டாக வம்மீன்கள். இந்த சொல்லுக்கு வன்மையான மீன்கள் என்று பொருள். பாரை, கெழுது, கட்டா போன்ற மீன்களை வம்மீன் என்பார்கள். அதுபோல தேத்து வாளை என்பது தெளிவான கடல்நீரில் இருக்கும் வாளை மீனையும், கலக்கு வாளை என்பது கலங்கிய கடல்நீரில் இருக்கும் வாளை மீனையும் குறிக்கும்.
தாழ்ந்த மீன்கள் எனப்படும் வகையறாவில் மதனம், விளமீன் போன்றவை அடங்கும். கடலடி பார்களில் வாழும் மீன்கள் என்பதால் இவை தாழ்ந்த மீன்கள் என அழைக்கப் படுகின்றன. நெய் (எண்ணெய்) நிறைந்த மீன்களுக்கு நெச்சமீன்கள் என்பது பெயர். குழுவி மீன் என்பது சேனைப் பாம்பைக் குறிக்கும் ஒரு சொல்லாடல்.
மீன் கூட்டங்களில் ஒழுங்கின்றி தாறுமாறாக ஓடும் மீன் கூட்டங்கள் உள்ளன. அவை மாப்பு மீன்கள். ஓர் ஒழுங்கோடு குறிப்பிட்ட இடைவெளியில் அழகாக ஓடும் மீன்கள் கூட்ட மீன்கள். இந்த வகை மீன்கள், ஆங்கிலத்தில் ஸ்கூல் பிஷ் (School Fish) என வழங்கப்படுகின்றன.
தமிழில் ஸ்கூல் (School) என்ற சொல்லுக்கு பள்ளி என்பது பொருள். ஒரே அளவிலான, ஏறத்தாழ ஒரே உருவிலான, ஒரே மாதிரி உடைகளுடன் கூடிய ஒரு கூட்டம் இருந்தால் அது பள்ளி.
கேரள மாநிலத்தில் போர்வீரர்களை கூட்டமாக ஏற்றிச் செல்லும் நீளமான படகுக்கு ‘பள்ளியோடம்’ என்ற பேர் உண்டு. மீன் கூட்டங்களிலும் ஒத்திசைவோடு, ஒரே சீரான தாளத்தப்படியோடு இயங்கும் கூட்ட மீன்களை ‘பள்ளி மீன்கள்’ (School Fish) என அழைக்கலாம். ஒன்றும் தப்பாகிவிடாது.
கடல் பரப்பில் அடிக்கடி புழங்கும் மற்றொரு வகை மீன்கள் ‘மோட்டு மீன்கள்’. இவற்றை உண்மையான மீன்கள் என்று நினைத்தால் ஏமாந்து விடுவீர்கள். மோட்டு மீன்கள் என்பது உயிருள்ள கடல் மீன்களைக் குறிக்காது, வானத்தில் உள்ள விண்மீன்களைக் குறிக்கும் சொல் இது.
வானத்தில் பளபளத்து ஒளிவீசும் வெள்ளிகளை மோட்டு மீன்கள் (முகட்டு மீன்கள்) என அழைப்பது மீனவர்களின் வழக்கம்.