Friday, 30 June 2017

கறுக்காடி (வற்றல் இறால்) (Pandalus borealis)

இறால்களில் (Shrimp) மொத்தம் 2 ஆயிரம் வகைகள். இதில் சிவப்பு நிற மிளகாய் வற்றல் போல உள்ள ஒரு சிறிய ரக இறாலுக்குப் பெயர் கறுக்காடி. சிறிதாக சிவப்பு வண்ணத்தில் இருப்பதால் வத்தல் இறால் என்றும் இதைச் சொல்வார்கள்.
குளிர்நிறைந்த ஆழக் கடல்களில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 364 அடி அல்லது 1330 மீட்டர் ஆழத்தில் சகதிகளில் இந்த இறால் காணப்படும். மைனஸ் 8 டிகிரி சென்டிகிரேடு குளிரிலும் இந்த இறால் இனம் வாழும்.
ஆண் இறால்கள் நாலரை அங்குல நீளத்திலும், பெண் இறால்கள் ஆறரை அங்குல நீளத்திலும் விளங்கும். பிறக்கும்போது ஆணாகப் பிறக்கும் இந்த இறால்கள், முதிரும்போது பெண்ணாக மாறி இறக்கும். 8 ஆண்டுகள் உயிர் வாழும் கறுக்காடிகள், ஒன்று அல்லது இரண்டு வயதில் பெண்ணாக மாறும். இறுதியில் இறக்கும்வரை பெண்ணாகவே இருக்கும்.
மனிதர்களின் உணவாகக் கூடிய இந்த கறுக்காடியின் தோட்டில், சிட்டோசன் (Chitosan) என்ற வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள், கறுக்காடி இறாலை, கைவிரலால் தொடும்போது, விரல்களைக் கன்றிப்போக செய்யக்கூடியது. இந்த வேதிப்பொருள், காயங்களுக்கு மருந்தாகவும், திராட்சைச் சாறை வடிகட்டவும், இயற்கை வேளாண்மையில் மண்ணுக்கு வளமூட்டவும் பயன்படுகிறது.
கறுக்காடியின் மெல்லிய தோடு, தொட்டவுடன் உடைந்து விடக் கூடியது.

சீனர்களால் மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படும் கறுக்காடிக்கு கடல் அடி ஆழத்தில் கவுர் நுண்ணுயிர்களே இரை. இந்த கறுக்காடிகளோ பன்னா மீன்களுக்கு அதிக அளவில் இரையாகக் கூடியவை. 

Saturday, 24 June 2017

முட்டாள் கிளாத்தி (File fish)

கிளாத்தி மீன்கள் (Trigger Fish) துணிச்சல் மிகுந்தவை, ஓசை எழுப்பக்கூடியவை. தன் ஆளுமைப் பகுதிக்குள் வரும் பிற கடல் உயிர்களை துணிந்து விரட்டக்கூடியவை. (பெரிய கொல்மீன்கள் மிரட்டினால் பதுங்கவும் கூடியவை)
ஆனால், இதே கிளாத்தி இனத்தோடு தொடர்புடைய, ஆனால் Monacanthidae என்ற குடும்பத்தைச் சேர்ந்த கிளாத்திகளும் உள்ளன. Monacanthidae என்றால் ‘ஒரு முள் கொண்ட‘ என்று பொருள். முதுகில் ‘அரம்‘ போன்ற ஒரு முள் கொண்ட இந்த வகை கிளாத்திகளில் மொத்தம் 18 வகைகள் தேறும்.
ஆரவாரம் இன்றி அமைதியின் திருஉருவங்களாக, ஓசையின்றி வாழ்வதால் இந்த வகை கிளாத்திகள் ‘முட்டாள் கிளாத்திகள்(?) என்ற பெயரோடு விளங்குகின்றன. ஆங்கிலத்தில் Fool Fish என்று இவற்றை அழைக்கிறார்கள்.
தகடு போன்ற உடலும், குழாய் போன்ற நீண்ட மூக்கும், முரமுரப்பு தடித்தோலும் முட்டாள்கிளாத்திகளின் பொதுவான தோற்றம். மிக மெதுவாக நீந்துவதும், நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்படுவதும் இந்த வகை மீன்களின் பண்பு. பவழப்பாறைகளைக் கொறித்து உண்ணும் பழக்கம் உள்ளவை இந்த மீன்கள். நீள குழாய் மூக்கு, பார்களைக் கொறிக்கப் பயன்படுகிறது.
இந்த முட்டாள் கிளாத்தி இன மீன்களில் ஒன்று ஆரஞ்சு நிறப்புள்ளிகள் கொண்ட முட்டாள் கிளாத்தி. (oxymonacanthus longirostris)
வெளிர்நீல உடலில், பளிச்சிடும் ஆரஞ்சு நிறப்புள்ளிகளுடன் இந்த மீன் இனம் பொலியும். ‘கடலின் காதல் பறவைகள்‘ என்ற பெயர் இந்த மீன் இனத்துக்கு சிறப்பாகப் பொருந்தும். உயிருள்ள வரை இந்த மீன்கள் இணை பிரியாது வாழும். பார்களுக்குள் ஒன்றையொன்று துரத்தி இவை காதல் கண்ணாமூச்சி ஆடும்.
மிகவும் அமைதியான மீன் இனம் இது. பிறஇன மீன்களோடு இது சண்டையிடாமல் கூடிவாழும். தன் இனமீன்களுடன் பெருங் கூட்டமாகக் கூடினால் மட்டுமே இது சண்டையிடும்.
கணவாயைப் போல இந்த மீனும் எதிரிகளிடம் இருந்து தப்ப நிறம் மாறும். எதிரிக்குப் பயந்து பார்ப்பொந்துகளுக்குள் பல மணிநேரம் வரை இது பதுங்கி இருக்கவும் செய்யும். இந்த மீனின் உடல்புள்ளிகள் அழகுக்கும் அலங்காரத்துக்கும் ஆனவை அல்ல. உருமறைப்புக்கு உதவக்கூடியவை.
ஆரஞ்சு புள்ளி முட்டாள் கிளாத்தி மீன்கள், பார்களை அண்டி வாழ்பவை. 4 முதல் 30 மீட்டர் ஆழத்தில் இவை காணப்படும்.
ஆரஞ்சு புள்ளி முட்டாள் கிளாத்தி மீன்கள் மிக மெதுவாக நீந்தக்கூடிய மீன்கள் என்பதால் எதிரி மீன்களுக்கு குறிப்பாக விலாங்குகளுக்கு இவை இரையாவது வழக்கம்.
முட்டாள் கிளாத்தி மீன்களுக்கு பவழப் பாறைகளே உணவு என்ற நிலையில், எதிரி மீன்களிடம் இருந்து தப்ப, ‘அக்ரோபோரா மோன்டிபோரா‘ (Acropora Montipora) என்ற குறிப்பிட்ட ஒரு பவழப்பாறையை முட்டாள் கிளாத்திகள் விரும்பி உண்ணும். (இந்த வகை பவழப்பாறை கிடைக்காவிட்டால் முட்டாள்கிளாத்தி மீன் இறந்து விடும் என்றும்கூட சொல்வார்கள்)

இந்த குறிப்பிட்ட வகை பவழப்பாறையை உண்பதால் கிளாத்தி மீனின் உடல் மணம் மாறுகிறது. அதன்மூலம் எதிரிமீன்களின் மோப்பத்தில் இருந்து இவை எளிதாகத் தப்பி விடுகின்றன.  (இவ்வளவு அறிவுள்ள ஒரு மீனை ஏன் முட்டாள் மீன் என்று அழைக்கிறார்கள் என்பது புரிய வில்லை?)

Wednesday, 14 June 2017

சுறாப்பற்கள்

சுறா, உழுவை, திருக்கை போன்றவை குருத்தெலும்பு (Cartilage) மீன்கள். தமிழில் குருத்தெலும்பை ‘கசியிழையம்‘ என்றும் அழைப்பார்கள்.
இந்த குருத்தெலும்புகள் உறுதியானவை. அதேவேளையில் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்டவை. அம்மணி உழுவை, மேய்ச்சல் சுறா, பெருஞ்சுறா போன்ற சுறா இனமீன்களும், ஆனைத்திருக்கை போன்ற திருக்கை வகை மீன்களும் மிகப்பெரிய அளவில் வளர அவற்றின் குருத்தெலும்புகளும் ஒருவகையில் காரணம்.
நமது பற்கள், தாடை எலும்பில் உள்ள பற்குழிகளுக்குள் (Soket) புதைத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சுறாக்கள் குருத்தெலும்பு மீன்கள் என்பதால், அவற்றுக்கு நம்மைப்போல பற்குழிகளோ அல்லது பற்கூடுகளோ கிடையாது. பற்குழிக்குள் பல்லைப் பதித்துவைத்திருக்கும் உயிர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு பல் விழுந்தால் மீண்டும் முளைக்காது.
ஆனால், குருத்தெலும்பு மீன்களான சுறாவுக்கும், திருக்கைக்கும், வாழ்நாள் முழுவதும் பற்கள் விழுந்து விழுந்து முளைத்துக் கொண்டே இருக்கும். இன்னும் சொல்லப்போனால், சில சுறாக்கள் அவற்றின் வாழ்நாளில் முப்பதாயிரம் பற்களை இழந்து மீண்டும் அவற்றைப் பெறக்கூடியவை.
சுறாப் பற்கள் வெள்ளை நிறமானவை அல்ல. இவற்றை ஒருவித வண்டல் போன்ற படிவு சூழ்ந்திருக்கும். உயிர்க்காற்றையும், பாக்டீரியா எனப்படும் நுண்கிருமிகளையும் இந்த படிவு, பற்களுக்குள் அண்ட விடாது. போதாக்குறைக்கு ஃபுளோரைடு வேறு சுறா பற்களைச் சூழ்ந்திருப்பதால் பல் சொத்தை என்ற பேச்சுக்கே சுறாக்களிடம் இடமில்லை.
சுறாக்கள் பொதுவாக வாரத்துக்கு ஒரு பல்லை இழக்கக் கூடியவை. இப்படி பற்கள் விழுவதால் சுறா பொக்கைவாயாக மாற எந்த வாய்ப்பும் இல்லை. காரணம், சுறா வாயில் 15 முதல் 50 அடுக்குகள் வரை பற்கள் இருப்பதால், ஒரு பல்லை சுறா இழந்தால்கூட, ஒரே நாளில் மற்றொரு பல் ஓடி வந்து அதன் இடத்தில் உட்கார்ந்து இழப்பை ஈடுகட்டி விடும்.

பழைய பல்லின் இடத்தைப் புதிய பல் பிடித்து விடும். ஆகவே எப்போதும் வாய் நிறைய பற்களாக ‘புன்னகை மன்னனாகவே‘  சுறா காணப்படும். பலநூற்றாண்டு காலமாக சுறாக்கள் இப்படி பற்களை இழந்து வருவதால், கடலடியில் கணக்கற்ற சுறாப் பற்கள் குவிந்து கிடக்கும்.
சொறிமீன் (Jellyfish)

சொறிமீன், இழுதுமீன் என்றெல்லாம் அழைக்கப்படும் சொறிமீன்களில் மொத்தம் 3 ஆயிரம் வகைகள். சொறி மீனின் உடல்முழுக்க 90 விழுக்காடு தண்ணீர்தான். மூளை, இதயம், கண்கள், எலும்பு.. இப்படி எதுவுமே இல்லாத இந்த விந்தை உயிரினம், 650 மில்லியன் ஆண்டுகளாகக் உலகக்கடல்களில் உலா வருகிறது.
பெருங்கடல்களின் வளத்தைச் சுட்டிக்காட்டும் ஒர் அரிய குறியீடு இந்த சொறிமீன்கள். கடலின் இவற்றின் பெருக்கம், சூழல் சீர்கேட்டைச் சுட்டிக் காட்டுகிறது.
கடலில் வந்து சேரும் ஆலைக்கழிவு நீரால் வகைதொகையின்றி சொறிமீன்கள் பெருகுகின்றன. அதிக மீன்பிடிப்பும், சொறிமீன்களின் திடீர் பெருக்கத்துக்குக் காரணமாகிறது.
ஒரு சொறிமீனுக்கு ஏறத்தாழ 800 சிறுசுணை முட்கள் இருக்கலாம். நஞ்சுள்ள சிறு ஈட்டிகள் போன்றவை இந்த சுணைமுட்கள். சொறி இனங்கள் மொத்தம் 3 ஆயிரம் என்றாலும், அதில் 70 வகை சொறிமீன்களே கொட்டக்கூடியவை.
‘கடலில் நீந்தி வரும் ஆவிகள்‘ என்ற பெயர் சொறிமீன்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியவை. காரணம். இறந்து கரையொதுங்கிய பிறகும், சொறிமீன்களின் சுணைமுட்கள் மனிதர்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடியவை.
சொறிமீன் தாக்குதலுக்கு உட்பட்ட ஒருவர் உடனே செய்ய வேண்டியதென்ன? சொறிமீனால் ஏற்பட்ட காயப் பகுதியை கடல்நீரில் அலசுவது சரியாகாது. இதனால் சொறிமீன் கொட்டிய பகுதி இன்னும் பரவி பெரிதாகலாம். காயப்பகுதி மீது மண்ணைத் தேய்ப்பதும் சரியாகாது. இதனால்,சுணைமுட்களில் உள்ள நஞ்சு இன்னும் ஆழமாக உடலுக்குள் செலுத்தப்படலாம்.
சொறிமீன் தாக்கிய இடத்தில் சிறுநீர் பெய்வது தொன்று தொட்டுள்ள பழக்கம். சிறுநீர், சொறிமீனின் சுணை முட்களை அகற்ற பயன்படும். சிறுநீரில் உள்ள அமோனியா ஒருவகை மருந்தாகப் பயன்படுகிறது.

ஆனால், சிறுநீரைக் காட்டிலும் நல்லது, புளிக்காடி எனப்படும் வினிகரில் 
சொறிமீனால் ஏற்பட்ட காயத்தை அலசுவதுதான். இதன்மூலம்
சுணைமுட்களைச் செயல்இழக்கச் செய்யலாம். பிறகு சிறிய முள்வாங்கியால் முட்களை அகற்றலாம். காயம்பட்ட இடத்தில் சூடுகாட்டுவதும் நல்லதே.

Wednesday, 7 June 2017

சங்கு

சங்குகளில் பலவகை..அவற்றில் சில அதிகம் அறியப்படாத சங்குகள்..
1.ஊதி சங்கு, 2 கரை சங்கு அல்லது சிறிய சங்கு, 3. கோழிச்சங்கு, 4. நத்தைச் சங்கு, 5. பகடைச் சங்கு, 6. மேலா சங்கு அல்லது பெரிய சங்கு, 7. புறா முட்டைச் சங்கு (நன்மை வாய்க்க வீட்டின் தலைவாசலில் இந்த வகை சங்கை புதைப்பார்கள்), 8. கொட்டைக்கா சங்கு, 9. பஞ்சு சங்கு, 10. திருவோடு சங்கு, 11. தேள்சங்கு (நட்டு வாக்காலி போன்ற தோற்றமுள்ள சங்கு), 12. காரச்சங்கு ( மற்ற சங்குகளை துளையிடக் கூடிய சங்கு இது).
விலைமதிப்பின்படி பார்த்தால் சங்குகளில் விலை உயர்ந்தது வலம்புரி சங்கு. அதற்கு அடுத்த படிவரிசைப்படி பால்வெள்ளை நிறமான வெள்ளை வாயன் சங்கு, இளஞ்சிவப்பு நிறமான ரோஸ்வாயன் சங்கு, எளிதில் உடையாத தடியன் சங்கு, வெற்றிலைச் சாற்றின் நிறமுள்ள செவ்வாயன் சங்கு, கையால் நெரித்து உடைத்துவிடக்கூடிய ஓலை வாயன் சங்கு போன்றவை விலைமதிப்புள்ளவை.
சங்குகளின் வகைகள் இவ்வளவுதானா என நினைத்துவிடக்கூடாது.
ராக்கெட் சங்கு, இராவணன் சங்கு, எழுத்தாணிச் சங்கு, கிளாச்சங்கு எனப்படும் குழாய்ச்சங்கு, குருவிச் சங்கு, செவ்வாயன் சங்கு, சொறி சங்கு, பலகறைச் சங்கு, பால் சங்கு, முள்ளிச் சங்கு, (இதில் யானை முள்ளி, குதிரை முள்ளி உண்டு), வாழைப்பூச் சங்கு, வெள்ளைப்பூண்டுச் சங்கு, முண்டஞ்சங்கு, பேய்ச் சங்கு, முள்ளஞ்சங்கு, பூவேப்பு சங்கு, கோபுரச் சங்கு, நரித்தலைச் சங்கு, ஈட்டிச் சங்கு (ஈட்டி போன்ற இதன் முனையில் நஞ்சு உண்டு. குத்தினால் ஆபத்து).

இன்னும் கட்டச் சங்கு, தாழஞ்சங்கு, ஆறுவிரல் சங்கு, சிலந்தி சங்கு, மாட்டுத்தலைச்சங்கு என சங்குப்பட்டியல் நீளமானது. அழகானது.