Thursday, 27 October 2016

கடல்பாம்பு (Yellow sea snake) (Pelamis platurus)

கடல்பாம்புகளில் ஏறத்தாழ 47 இனங்கள் இருக்கலாம். ஆனால் இந்தியப் பெருங்கடலில் இருப்பவை 20 வகை கடல்பாம்புகளே. அட்லாண்டிக் பெருங்கடல், நடுநிலக்கடலில் (Mediterranean) கடல்பாம்புகளே கிடையாது என்பது சற்று வியப்பூட்டும் செய்தி.
தமிழக கடல்பாம்புகளில் நமக்கு மிகவும் பரிச்சயமான பாம்புகளில் ஒன்று மஞ்சள் கடல்பாம்பு. ஒன்றரை மீட்டர் நீளத்துக்கு மேல் இது வளரக்கூடியது. ஆண் பாம்பைவிட பெண் பாம்பே நீளம் அதிகமானது.
தட்டையான இதன் உடலின் மேற்பகுதி கறுப்பு கலந்த கருநீல பழுப்பு நிறமாகவும், அடிப்பகுதி மஞ்சள் நிறமாகவும் காணப்படும். சற்று நீண்ட தலை , உடலில் இருந்து

தன்னை வேறுபடுத்திக் காட்டும். துடுப்பு போன்ற தட்டையான இதன் வால்பகுதியில் மஞ்சள், கறுப்புநிற பட்டைகள் காணப்படும். கடல்பாம்புகள் நீந்துவதற்கு அவற்றின் வாலே உதவுகிறது.
கடல்பாம்புகளுக்கு செதிள்கள் இருக்காது என்று ஒரு கருத்து உண்டு. ஆனால், மஞ்சள் கடல்பாம்புக்கு சிறிய அறுகோண வடிவிலான மென்மையான செதிகள் உண்டு. பெரிய கண்களில் இந்த வகை பாம்புக்கு கருநீல கண்மணிகள் காணப்படும்.
முழுக்க முழுக்க திறந்தகடற்பரப்புகளில் காணப்படும் பழக்கம் கொண்டது மஞ்சள் கடல்பாம்பு. தலையைத் தூக்கியபடி இது நீந்தும். இந்தவகை பாம்பு முன்னால் மட்டுமல்ல, பின்னாலும் நீந்த வல்லது. மஞ்சள் கடல்பாம்புக்கு மீன்களே முதன்மை உணவு.
கடல்பரப்பின்மேல் அசையாமல் மிதந்து, தன் அடிநிழலில் ஒதுங்க வரும் மீனை இது ஏமாற்றி இரையாக்கும். சட்டென்று பின்னால் திரும்பி இரையைப் பிடிக்கவும், திடுக்கிட வைக்கும் வேகத்தில் வேகமாக நீந்தவும் மஞ்சள் கடல்பாம்பால் முடியும். தனது வண்ண உடலைக்காட்டி எதிரியை மிரட்டி இது நெருங்கவிடாமலும் செய்யும்.
கடலில் உள்ள கொட்டலசுகள் கடல்பாம்பையும் விட்டுவைப்பதில்லை. மிகப்பெரிய தோணிகளின் அடியில் படர்ந்து அவற்றின் வேகத்தைக் குறைக்கும் கொட்டலசுகள் மஞ்சள் கடல்பாம்புகளின் மீதும் படர்வதுண்டு. இதனால், ஒருகட்டத்தில் பாரமேறி, வேகம் குறையும் மஞ்சள் கடல்பாம்பு கொட்டலசுகளை அகற்ற, தன் உடலில் முடிச்சு போட்டுக் கொண்டு, அந்த முடிச்சை தலைமுதல் வால்வரை நகர வைத்து கொட்டலசுகளை நீக்கும்.
(உடலில் முடிச்சுப் போட்டுக் கொண்டு அதன் வழியே உராய்ந்தபடி இது ஊடுருவிச் சென்று கொட்டலசை அகற்றும் என்றாலும் அது தப்பில்லை) இதே முறையில் மஞ்சள் கடல்பாம்பு தோலுரிக்கவும் செய்யும்.
கடல்மேற்பரப்பில் நீந்தும் பழக்கம் உள்ளதால் மஞ்சள் கடல்பாம்பு அடிக்கடி வலைஞர்களின் வலையில் சிக்கிக் கொள்ளும்.
மிக கொடிய நஞ்சுள்ள இந்த கடல்பாம்பை மீனவர்கள் மிக கவனமாக வலையில் இருந்து அகற்றி கடலில் எறிவார்கள். கடல்நீரை விட்டு மஞ்சள் கடல்பாம்பை சற்றுநேரம் தூக்கிப்பிடித்தால் ரத்தஅழுத்தம் ஏற்பட்டு அது இறந்துவிடக்கூடியது.
கடல்பாம்புகள் அனைத்துமே நுரையீரல் மூலம் சுவாசிக்கக் கூடியவை. மூச்சுவிட அவ்வப்போது இவை கடல்மட்டத்துக்கு மேல் வந்தே ஆகவேண்டும். மஞ்சள் கடல்பாம்பும் இதற்கு விதிவிலக்கில்லை. கடலின் உள்ளே 3 மணிநேரம் வரை மூச்சுப்பிடிக்கக் கூடிய இந்த பாம்பு, கடல் அமைதியாகும் போது கடல்மட்டத்துக்கு வந்து நீந்திக்களிப்பதை விரும்பும். இதன் ஆயுளில் 87 விழுக்காடு கடல்நீருக்குள்ளேயே கழியும்.
தரையில் வாழும் நல்லபாம்பை விட மஞ்சள் கடல்பாம்பு 10 மடங்கு அதிக நஞ்சு உள்ளது. சீண்டாமல் இது கடிக்காது என்பதாலும், கடிக்கும்போது பெரும்பாலும் நஞ்சை செலுத்தாது என்பதாலும் இது ஆபத்தற்ற கடல்பாம்பாக கருதப்படுகிறது. இரைமீன்களை கடித்து அவற்றை மயக்கமடையச் செய்து இது உணவாக்கும்.

புயல் காற்றில் தப்பித்தவறி மஞ்சள் கடல்பாம்பு கரையொதுங்கினால் அவ்வளவுதான். மீண்டும் அது கடல்நீருக்குள் செல்ல முடியாமல் உயிரிழக்க நேரிடும்.

Monday, 24 October 2016

பெருந்தலை ஆமை (Logger head turtle)

பெயருக்கேற்ற பெரிய தலை கொண்ட ஆமை இது. Caretta caretta என்பது இதன் அறிவியல் பெயர். தடித்த ஓடுடைய ஆமைகளில் மிகப்பெரியது பெருந்தலை ஆமையே. அதுபோல பெருங்கடல்களைத் தாண்டி மிக பெரும் பரப்பில் நீந்தித் திரியும் ஆமை இனமும் இதுவே.
வளர்ந்த பெருந்தலை ஆமையின் நீளம் ஏறத்தாழ 1.20 மீட்டர். எடை 250 கிலோ வரை. இதன் ஓடு செம்பழுப்பு நிறமானது. வயிற்றுப்பக்கம் வெளிர் மஞ்சள் நிறம் கொண்டது.
பெருந்தலை ஆமையின் முன்னங்கால்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு நகங்கள் இருக்கும்.
மிகவும் பலமான தாடை கொண்ட இந்த ஆமை, நண்டுகள், ராணி சங்கு, மட்டி, கிளிஞ்சல் வகைகளை அலகால் உடைத்து உண்ணும். சொறிமீன்கள், கடற்பஞ்சு, பாசி. கணவாய், பறக்கும் கோலா மீன் போன்றவையும் இதன் இரைகள். பெருந்தலை ஆமைக்கு மீன் தின்னும் பழக்கம் இருந்தாலும் அதை முழுக்க முழுக்க மீன் தின்னியாக கொள்ள முடியாது.
பெருந்தலை ஆமையின் இறைச்சி மிகவும் சுவைமிகுந்தது. பஞ்சலை ஆமையின் கறியில் உள்ள ஒருவகை வெறி இதில் இருக்காது. அதுபோல, Plastron என்ற வயிற்று ஓட்டைக் கழற்றியதும், பெருந்தலை ஆமையின் உடலில் உள்ள ஒட்டுமொத்த இறைச்சியையும் ஒருவர் கைக்கொள்ள முடியும்.
இறைச்சியை நீக்கியபின் பெருந்தலை ஆமையின் ஓட்டின் உள்ளே உள்ள கொழுப்பை வாட்டினால் அது எண்ணெய்யாகவும், மணல்போலவும் திரியும்.
இதன் எண்ணெய் தீய சக்திகளை ஓட்டும் என்ற நம்பிக்கையில் வீட்டு முன் வாயில்களில் கண்ணாடிக் குப்பிகளில் அடைத்து தொங்கவிடப்படுவது வழக்கம்.
பெருந்தலை ஆமைகள் 35 வயதில் பருவம் எய்தும். பெண் ஆமை, தான் குஞ்சாக தோன்றிய அதே கடற்கரையைத் தேடி வந்து 100 முட்டைகள் வரை இடும். மற்ற கடலாமை குஞ்சுகளைப் போலவே பெருந்தலை ஆமையிலும் ஆயிரத்தில் ஒரு குஞ்சே உயிர்பிழைக்க வாய்ப்புண்டு.


Wednesday, 12 October 2016

பெரியதோர் திமிங்கிலம் (Bryde Whale)

இந்தியப் பெருங்கடல் போன்ற உலகின் வெப்பக் கடல்களுக்கே உரித்தான ஒரு திமிங்கிலம் பிருதெஸ் (Bryde) திமிங்கிலம். (இதன் சரியான உச்சரிப்பு இதுதான்). தமிழில் பணைமீன் என அழைக்கப்படும் திமிங்கிலம் ஏறத்தாழ இதுவாகவே இருக்கலாம்.
கறுப்பு அல்லது கருஞ்சாம்பல் மேற்பகுதியும், வெண்மஞ்சள் நிற அடிப்பகுதியும் கொண்ட திமிங்கிலம் இது.
இது கடலில் மிதக்கும் கவர்களை உண்ணக்கூடிய பலீன் (Baleen) வகை திமிங்கிலம் என்றாலும்,

நெத்தலி, சாளை போன்ற அசையும் மீன்கூட்டங்களை விரட்டி வேட்டையாடுவதிலேயே இது அதிக விருப்பம் காட்டும்.
இந்த வகை திமிங்கிலத்தின் அடித்தாடையில் வரிவரியான பள்ளம் மேடுகள் அடிவயிறு வரை ஓடும்.
மீன்கூட்டத்தை சுற்றிவளைத்து பந்தாகத் திரட்டியபின், கடல்அடியில் இருந்து வாயை அகலத் திறந்தபடி, தொண்டை பை நிறைய இது மீன்பந்தையும், கூடவே கடல்நீரையும் விழுங்கும். வரி வடிவம் கொண்ட இந்த அடித்தாடை அப்போது பலூன்போல விரிந்து அதிக அளவில் மீன்கூட்டத்தை அள்ளிக் கொள்ள உதவுகிறது.
அதன்பின் குமிழ்கள் வெடிக்க இதன் வாய் அலிபாபா குகை போல மூடிக் கொள்ளும்.
இந்த வகை திமிங்கிலத்தின் மேல்தாடையில் இரு வரிசையாக அரிப்பு போன்ற பல்குச்சங்கள் காணப்படும். பலீன் என அழைக்கப்படும் இந்த உறுப்பின் மூலம் கடல் நீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு முரட்டு நாக்கால் இரையை இது வயிற்றுக்குள் தள்ளும்.
மிதக்கும் கடல் நுண்ணுயிர்கள், நண்டு, இறால், போன்றவையும் இந்தவகை திமிங்கிலத்துக்கு இரையாகும். நெத்தலிகளை அதிக அளவில் உண்பதால் ஜப்பானில் இது நெத்தலி சுறா என்ற பொருள்பட அழைக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு இது ஆயிரத்து 450 பவுண்ட் இரைகளை உண்ணும்.
திறந்த வாயால் மீன்கூட்டத்தை மட்டுமல்ல, ஒரு காரைக்கூட இது விழுங்கக் கூடியது.
இந்த வகை திமிங்கிலங்களில் ஆண் மீன் 13.7 மீட்டர் நீளமும், பெண் 14.5 மீட்டர் நீளமும் இருக்கலாம். இதன் எடை 16 முதல் 18.5 டன். இதன் பேருடலுடன் ஒப்பிடும்போது பக்கத்தூவிகள் சிறியவை. முதுகின் பின்புறம் வாலையொட்டி அமைந்துள்ள முதுகுத்தூவியும் சிறியதே., இது அரிவாள் போல பின்னோக்கி வளைந்திருக்கும். இந்த வகை திமிங்கிலத்தின் உடல் முழுவதும் வெண்புள்ளிகளும் காணப்படலாம். அவை சுறாக்களால் பெற்ற விழுப்புண்களாக இருக்கலாம்.
பணைமீன் என்று கருதப்படும் இந்த வகை திமிங்கிலம் எந்த நேரத்தில் எந்த திசையில் நகரும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த திமிங்கிலத்துடன் கடலில் நீந்துவது மூடுபனி கவிந்திருக்கும் நேரத்தில் இருப்புப் பாதையில் நிற்பதற்கு சமம் என வெள்ளையர் ஒருவர் வர்ணித்திருக்கிறார். காரணம், ஓசை எதுவுமின்றி ரயில் என்ஜின் போல இது நீந்துபவர் மீது வந்து மோத வாய்ப்பிருக்கிறது. மணிக்கு 19 கிலோமீட்டர் வேகத்தில் இது நீந்த வல்லது.
பணை மீன் எனக் கருதப்படும் இந்த வகை திமிங்கிலத்திடம் 2 ஊதுதுளைகள் உள்ளன.  4 அல்லது 7 முறை ஊதுதுளை வழியாக நீராவியைப் பீய்ச்சியடித்து பூமழை தூவியபின், இது நீரில் மூழ்கும்., ஆயிரம் அடிகள் வரை இந்தத் திமிங்கிலம் முக்குளிக்கக் கூடியது. இதன் பீய்ச்சியடிப்பு ஒழுங்கற்றது. தாறுமாறானது.
இந்த வகை திமிங்கிலத்துக்கு விலை உயர்ந்த எண்ணெய் வளமிக்க பிளப்பர் (Blubber) எனப்படும் கனத்த தோல் இல்லை. இதனால் திமிங்கில வேட்டைக்காரர்கள் இதை சீந்துவதில்லை. வெப்பக்கடல் திமிங்கிலம் என்பதால் மேலைநாட்டு ஆய்வாளர்களும், இந்த திமிங்கிலம் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டதில்லை.
இந்தவகை திமிங்கிலத்தில் பெரிய ஆழ்கடல் வகை திமிங்கிலம் ஒன்றும், இடம்விட்டு இடம்பெயராத சற்று கரைக்கப்பால் வாழும் சிறிய திமிங்கிலமும் உண்டு. போதாக்குறைக்கு இது சே (Sei) திமிங்கிலம் போன்ற உருவ அமைப்புடன் திகழ்வது இன்னொரு குழப்பம்.
இருப்பினும் இது சே திமிங்கிலத்தைவிட சற்று உருவம் சிறியதாக விளங்கும். கேளா ஒலியலைகள் மூலம் தன்னின திமிங்கிலங்களுடன் இந்த திமிங்கிலம் உறவாடி வாழும்.

ஓராண்டு கர்ப்பத்துடன் ஒரே ஒரு குட்டியை ஈனக்கூடிய இந்த திமிங்கிலம் 50 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.

Tuesday, 4 October 2016

உழுவை (Guitar fish)

சுறாவுக்கும், திருக்கைக்கும் இடையிலான உறவுப்பாலங்களில் ஒன்று வேளா மீன். அதுபோல அந்த உறவுப்பாலத்தின் மற்றொரு தூண் உழுவை மீன்.
கிதார் இசைக்கருவி போல முக்கோண வடிவ உருவம் கொண்ட உழுவை மீன், திருக்கை மீன்களைப் போலவே கடலடித் தரையில் வாழக்கூடியது. திருக்கைகளுக்கு இருப்பதுபோலவே இதன் மூச்சுத்துளைகள் உடலின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கும்.
உழுவைகள் பலவகையானவை. இவற்றில் கச்சுழுவை தவிர மற்ற உழுவைகள் அனைத்தும் உடலில் சிறுபுள்ளிகளுடன் காணப்படும்.
உடலின் மேற்பாகம் கருஞ்சாம்பல் அல்லது ஒலிவ பச்சை (Olive Green) நிறமாகவும், அடிப்பகுதி வெண்மை நிறமாகவும் திகழும்.
உழுவைகள் கூச்சம் மிகுந்தவை. மனிதர்களுக்கு தீங்கு இழைக்காதவை. உடலினுள் முட்டைகளைப் பொரித்து 10 குட்டிகள் வரை உழுவைகள் போடக்கூடியவை. உழுவை இறைச்சி சுவைமிகுந்த ஒன்று.
மீன், நண்டு, கணவாய் போன்றவை உழுவையின் முக்கிய இரை.
உழுவைகளில் பெரிய பேருழுவை, மணல்நிறைந்த கடலடிப் பகுதியில் ஒற்றையாகத் திரியக்கூடியது. சுறா போல இதுவும் விழியுருட்டக்கூடியது. தளவரிசை போன்ற பற்களால் இரையை தின்னக்கூடியது.
பேருழுவையால் 10 அடி வரை வளரமுடியும். இதன் நிறை ஏறத்தாழ
227 கிலோ.
உழுவை இனத்தில் கூன் உழுவைக்கு முக்கோண வடிவமாக முகம் இருக்காமல் அரைவட்ட வடிவில் முகம் இருக்கும். அதுபோல மட்டி உழுவை, அதன் தலையின் மீது கூரிய பலமான முள்வரிசைகளைக் கொண்டது. மற்ற உழுவைகளைப் போலவே சுறா போன்ற எடுப்பான முதுகுத்தூவிகள் இதன் தனிச்சிறப்பு.

உழுவை மீன்களுக்கு வீணை மீன், படங்கன், பண்டகள் போன்ற பெயர்களும் தமிழர்களின் கடலோரங்களில் புழக்கத்தில் உள்ளன.