Friday 27 May 2016

திருக்கை மீன்கள் (Ray and Skate)

திருக்கையில் மிகவும் சிறியது செந்திருக்கை. இரு உள்ளங்கை அகலமுள்ள மீன் இது. இதன் நச்சுமுள்ளின் முனை பச்சை நிறத்தில் ஒருவித மாவுடன் இருக்கும்.
மஞ்சளும் சாணி நிறமும் உள்ள மணத்திருக்கை 3 நஞ்சுமுள்கள் கொண்டது. வலைகளில் அதிகம் சிக்கும் திருக்கை, மணத்திருக்கைதான்.
கழக்குத் திருக்கையும் கட்டித்திருக்கையும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை. கழக்குத் திருக்கை பெரிதானால் கட்டித்திருக்கை என்றும் சொல்வார்கள்.  கருஞ்சாம்பல் நிறம் கொண்ட திருக்கை இது.
மணிவாலன் திருக்கையின் வாலில் அரை அங்குல நீளத்துக்கு மாறிமாறி கறுப்பு, வெள்ளை நிறங்கள் காணப்படும்.
சங்குவாயன் திருக்கையின் வாய் ஊசியாக இருக்கும். வவ்வால் போன்ற முகத்தோற்றம் கொண்ட மீன் இது. வால் நீளமாக,மெல்லியதாக இருக்கும்.
சங்குவாயன் திருக்கையின் வால்தான் திருக்கை வால்களில் மிக நீளமானது.
புள்ளித்திருக்கையின் வால்முழுக்க புள்ளிபுள்ளியாக முட்கள் காணப்படும். பெரிய அளவில் ஆபத்தில்லாத முட்கள் இவை. வலுவாடி என்பது புள்ளித் திருக்கையின் இன்னொரு பெயர்.
செம்மண் திருக்கை சற்று பெரியது. வலைக் கண்ணிகளை அறுத்து விடக்கூடியது.
அட்டணைத் திருக்கை சாணி நிறமான வண்ணத்துப்பூச்சி போன்ற மீன். அகலம் அதிகம். நீளம் குறைவு. திருக்கை மீன்களில் மிகமிக சுவையான உண்ணத்தக்க மீன் அட்டணைத் திருக்கைதான்.
சுண்ணாம்புத் திருக்கையின் இறைச்சி குழம்பில் இட்டபின் வெள்ளைநிறமாகத் தோன்றும்.
ஓலைவாலன் திருக்கையின் வால் அகலமாக, ஓலைபோன்றது. இதன் நச்சு முட்கள் மற்ற திருக்கைகளை விட வாலின்பின்பகுதியில் சற்று தள்ளி காணப்படும். இது நன்னீரிலும் வாழக்கூடிய திருக்கைகளில் ஒன்று.

புள்ளித்திருக்கை, ஒலைவாலன் திருக்கை, போன்ற திருக்கைகள் நீளவால் திருக்கை (Ray) என்ற வகைப்பாட்டில் அடங்கக் கூடியவை. கழக்குத் திருக்கை, கட்டித்திருக்கை, அட்டணைத் திருக்கை போன்றவை குட்டையான பருமனான வால் கொண்ட SKATE என்ற வகைப்பாட்டில் இடம்பெறத் தகுந்தவை.

நீளவால் திருக்கைகளுக்கும், குட்டை வால் திருக்கைகளுக்கும் இடையே வெவ்வேறு விதமான இயல்புகள் உள்ளன. ரே (Ray) என்ற நீளவால் திருக்கைகளுக்கு நச்சுமுள்ளோ அல்லது முட்களோ அமைந்திருக்கும். வால் சாட்டைபோல நீண்டு காணப்படும். கடல்நீரில் மட்டுமின்றி நல்ல தண்ணீரிலும் இவை வாழக்கூடியவை.  மிகப் பெரிதாக வளரக்கூடிய இந்த வகை திருக்கைகள், உடலுக்கு உள்ளேயே குஞ்சு பொரிக்கக் கூடியவை.
SKATE எனப்படும் குட்டைவால் திருக்கைகளுக்கு கொடுக்குமுள் கிடையாது. சதைப்பற்றுள்ள கனமான வால் கொண்ட இவை வட்டம் அல்லது முக்கோண வடிவுடையவை. நீள மூக்குள்ள இவற்றால் கடலில் மட்டுமே வாழமுடியும். வால்நுனியில் தூவிகள் கொண்ட குட்டைவால் திருக்கைகள், மிஞ்சிமிஞ்சிப் போனால் ஐந்தடி வரை வளரலாம்.
படத்தில் இருப்பது ஓலைவாலன் திருக்கை.



Monday 23 May 2016

சாவாளை (RibbonFish)


பார்வைக்கு பயமுறுத்தக் கூடிய தலை, வாயெல்லாம் கூரிய வலுவான பற்கள், வட்டக்கண்கள், ரிப்பன் மாதிரியான நீளமான பட்டை உடல், கூர்மையாக ஊசி போல முடியும் வால்.
சாவாளை மீனின் பொதுவான தோற்றம் இதுதான். Lepturacanthus savala என்பது இந்த மீனின் அறிவியல் பெயர். மெல்லிய வாலுடைய மீன் என்ற பொருளில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சாவாளை கடலடி மீன். ஆனால், கடலுக்கு அடியில் இரையுண்ணும் மீன் அல்ல இது. இரவில் கடல்மட்டத்துக்கு மேல் வரும் சாவாளை மீன்கள், நெத்தலி போன்ற சிறுமீன்களையும், இறால் போன்ற உயிர்களையும் உணவாகக் கொள்ளும். சாவாளைக் குஞ்சுகளையும் பெரிய சாவாளைகள் இரையாக்கும்.
நீலம் கலந்த வெள்ளிநிறமான சாவாளை மீனுக்கு செதிள்கள் எதுவும் கிடையாது, மாங்கு (Guanine) மட்டுமே உண்டு. (இந்த மாங்கு அலங்கார நகப்பூச்சுக்கும், செயற்கை முத்து செய்யவும் பயன்படுகிறது)
சாவாளை மீன் ஏறத்தாழ 3 அடி நீளம் (39.4 அங்குலம் நீளம் வரைகூட) வளரக்கூடியது.
முதுகில் மிக நீளமான ஏறத்தாழ 130 கதிர்தூவிகள் கொண்ட சாவாளைக்கு வயிற்றில் பள்ளை என்ற காற்றுப்பை உண்டு. வயிற்றில் கல் இருப்பது சாவாளை மீனின் தனித்துவமான பண்பு. இதன் முதுகுத்தூவி வால்பக்கம் இருந்து தலைநோக்கி பிடித்து இழுக்கும்பட்சத்தில் கழன்று உரிந்து வந்துவிடக் கூடியது.
உலர்மீனாக அதிக அளவில் பயன்படும் மீன் இது. கடல்நீரில் இருந்து எடுத்தபின் சாவாளையை உயிருடன் பார்ப்பது மிகவும் அரிது. தூண்டில்  இரையாக இது அதிக அளவில் பயன்படக்கூடியது.
இந்தியப் பெருங்கடலுக்கு உரித்தான தனித்துவமான மீனான சாவாளையில் பெரிய தலை கொண்ட சாவாளை மீன், கறுப்பன் (Trichiurus Lepturus) என அழைக்கப்படுகிறது. கூட்டமாகத் திரியும் இந்த இனத்தின் பெரியமீன்கள் பகலில் கடல்மட்டத்துக்கு மேல்வந்து மேயக்கூடியவை. சிறுமீன்கள் இரவில் கடல்மட்டத்தை நாடக்கூடியவை.

தலையை உயர்த்தியபடி நீந்திக் கொண்டே தலைக்கு மேல்வரும் இரையைக் குறிவைத்து காத்திருப்பது இந்த வகை சாவாளையின் தனிப்பண்பு.

Friday 13 May 2016

ஒரண்டை (Powder blueSurgeon) 


Acanthuridae குடும்பத்தைச் சேர்ந்த மீன்இனம் இது. சர்ஜன் (Surgeon)  அல்லது டேங் (Tang) என அழைக்கப்படும் இந்த இன மீன்கள் பார்வைக்கு நீள்வட்ட வடிவம் கொண்டவை. முதுகு மற்றும் அடிப்பகுதி வால் தூவிகள் வட்ட வடிவில் இருப்பதால் இந்த வகை மீன்கள் நீள்வட்டவடிவில் தெரிகின்றன.
ஒற்றை முதுகுத் தூவி கொண்ட இந்த இன மீன்களின், வாலடிப்பக்கத்தின் இருபுறமும் கூரிய கத்திபோன்ற முட்கள் மறைந்திருக்கும்.
சாதாரணமாக கண்களில் படாத இந்த கத்திகள், மீனை யாரும் சீண்டினாலோ, அல்லது மீனைத் திடுக்கிட செய்தாலோ வெளிவரும். இதன் கத்திகள் பலத்த காயத்தை ஏற்படுத்தக்கூடியவை. இதில் சிலவகை மீன்கள், வாலை ஒரு குலுக்கு குலுக்கி, அதன்மூலம் கத்தியை விரிக்கக் கூடியவை. Acanthuridae என்ற இதன் குடும்ப பெயர், வாலில் முள் கொண்ட மீன் என்ற பொருளில் சூட்டப்பட்ட பெயர்.
ஒரண்டை உள்பட இதன் குடும்பத்தைச் சேர்ந்த பலவகை மீன்கள் கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்டவை. நன்கு சூரிய ஒளிபடரும் பார்க்கடலில் கூட்டமாக ஒழுங்கின்றி திரியும் மாப்பு மீன்கள் இவை. அதோடு பாசியை மட்டுமே உண்ணும் சைவ மீன்கள் இவை.
பவழப்பாறைகள் செழித்து வளர சூரிய ஒளியும், உயிர்க்காற்றும் தேவை. பவழப்பாறைகளில் பாசி படர்ந்தால் சூரியஒளி படாமலும், உயிர்க்காற்று கிடைக்காமலும் பவழப்பாறைகள் அழிய நேரலாம்.
இந்த நிலையில், ஒரண்டை இன மீன்கள், கத்தரி போன்ற சிறுபற்கள் கொண்ட வாயால் பவழப்பாறைகளில் படர்ந்திருக்கும் பாசிகளை பக்குவமாக உண்ணக் கூடியவை. எனவே இந்த இன மீன்களால் பவழப்பாறைகள் அழியாமல் தழைக்கின்றன. செழித்து வளர்கின்றன.
ஒரண்டை உள்பட சர்ஜன் இன மீன்கள் பொதுவாக பகலில் இரை உண்டு இரவில் குகைகளில் தங்க கூடியவை. இந்த வகை மீன்கள் வாழ தெளிந்த நீரும், பார்களும் தேவை.
சர்ஜன் (Surgeon) இன மீன்களில் ஒரண்டை போன்ற மற்றொரு மீன் குரிசில் (Convict tang)  கோழிமீன் எனவும் தமிழில் இது அழைக்கப்படுகிறது.
வரிக்குதிரை போன்ற வரிகள் கொண்ட மீன் இது. ஆப்பிரிக்க புல்வெளிகளில் வரிக்குதிரைகள் கூட்டமாகத் திரிவது போல கூட்டமாகத் திரியும் குரிசில்களில் ஒரு தனிமீனை இனம் கண்டு பெரியமீன் ஒன்று இரையாக்குவது கடினம். அந்த அளவுக்கு குரிசில்களின் கூட்டம், பெரிய கொல் மீன் ஒன்றின் கண்களைக் குழப்பி விடக் கூடியவை.
சர்ஜன் (Surgeon) என மீன்கள் பொதுவாக முக்கால் அடி நீளம் இருக்கலாம். சில ஓரடி நீளம் வரை இருக்கலாம்.

இந்த இனமீன்களில் இன்னொன்று வண்ணாத்தி மீன் (Mooris Idol).
மஞ்சளும் கறுப்புநிற வரிகளும் கலந்த மீன் இது. முகத்திலும் உடலின் நடுப்பகுதியிலும் வாலிலும் 3 கரும்பட்டைகள் கொண்ட மீன் வண்ணாத்தி. இதன் கரும் பட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் வெள்ளையும் மஞ்சளுமாகத் திகழும். வண்ணாத்தியின் வாய் குழாய் போன்று முன்புறம் துருத்திக் கொண்டிருக்கும். கண்களுக்கு மேலே கொம்பு போன்ற ஒன்று நீட்டிக் கொண்டிருக்கும். கீழ்த்தாடை கறுப்பாகவும், மேல்தாடையும் முகத்தின் பெரும்பாகமும் வெள்ளையாகக் காணப்படும். முதுகுத் தூவியும், கீழ்ப்புற வால்பக்கத் தூவியும் பின்னோக்கி சரிந்திருக்கும்.


சர்ஜன் (Surgeon) என மீன்களில் இன்னொரு வகை மீன் ஒருகோட்டு மீன் எனப்படும் ஒற்றைக்கொம்பு மீன். (Unicorn (Naso) தலையில் ஒரு
 கொம்பு உள்ள இந்த மீனுக்கும் கத்திகள் உண்டு. ஆனால் கத்திகளை இந்த மீனால் அசைக்க முடியாது.

Friday 6 May 2016

மாப்பு மீன்களும் கூட்ட மீன்களும்

கடலில் 200க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் கூட்டமாகத் திரியும் பண்புள்ளவை. இப்படி கூட்டம் கூட்டமாக மீன்கள் கூடித்திரிவதில் இரு வகைகள் உள்ளன. ஒன்று மாப்பு மீன்கள். இன்னொன்று கூட்ட மீன்கள்.
ஒரே இனத்தைச் சேர்ந்த மீன்கள் ஒன்றாகத் திரண்டு ஓர் ஒழுங்கின்றி திரிந்தால் அவை மாப்பு மீன்கள் (Shoal).
அதுவே ஒருங்கிணைப்புடன், ஒத்திசைவுடன் ஒரே திசையில் ஒற்றுமையாக மீன்கூட்டம் நகர்ந்தால் அவை கூட்டமீன்கள். (Scholl Fish)
மீன்கள் இப்படி கும்பலாகவோ அல்லது கூட்டமாகவோ திரிய முதன்மை காரணம், பெரிய இரைதின்னி மீன்களிடம் இருந்து தப்புவதற்காகவே.
மீன்கள் மாப்பு மீன்களாகத் திரிவதைவிட ஒழுங்குமிக்க கூட்டமீனாகத் திரியும்போது அவை வேறு பெரிய மீன்களுக்கு இரையாகும் வாய்ப்பு மிகமிக குறைகிறது.


அதிக பாதுகாப்புடன் இருக்கும் கூட்டமீன்களுக்கு இரை தேடுவதும், தனக்கான இணையைத் தேடுவதும் எளிதான வேலை. அதுமட்டுமின்றி தனியாக நீந்தும்மீனை விட கூட்டமீன்கள் குறைந்த அளவு சக்தியை செலவிட்டு மிகவேகமாக நீந்த முடியும்.
கூட்டமீன்கள் நீந்தும்போது ஒவ்வொரு மீனும் குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட தொலைவில் குறிப்பிட்ட வேகத்தில் நீந்தும். நிற்கும்போதும் திரும்பும்போது இதே துல்லியம் காக்கப்படும். ஒத்திசைவுடன் நீந்தும் கூட்டமீன்கள் ஓர் ஒற்றை உயிர்போலத் தோன்றும். ஒவ்வொரு மீனையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மாயக்கயிறு பிணைத்து வைத்திருப்பது போல ஒரு மாயத்தோற்றம் உருவாகும்.
சுறா, சூரை போன்ற பெரிய கொல்மீன்கள் நெருங்கினால், கூட்டமீன்கள் இரு பிரிவாகப் பிரிந்து கொல்மீனைத் தாண்டிச் சென்று மீண்டும் இணைந்து கொள்ளும். இதுபோன்ற கூட்ட மீன்கள் பெரிய இரைகொல்லி மீன்களின் மூளையில் பளுவை ஏற்படுத்தி அவற்றை இரைபிடிக்க விடாமல் தடுப்பது ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
ஓர் ஆப்பு வடிவில், ஒரே திசையில் நகரும் கூட்டமீன்கள் பொதுவாக சீலாக்களிடம் இருந்து தப்ப, சுறா ஒன்றின் உதவியை நாடி சுறாவை பக்கத் துணையாக கொண்டு முன்னேறும். கூட்டமீன் நெத்தலி போன்ற சிறிய மீனாக இருக்கும் நிலையில் சுறா அதை இரையாக எண்ணும் வாய்ப்பு குறைவு.
மாப்பு மீன்களைப் பொறுத்தவரை அதில் உள்ள ஒவ்வொரு மீனும் தன்னிச்சையாக நீந்தக்கூடியவை. சிலஇன மீன்கள் சிலவேளைகளில் மாப்பு மீன்களாகவும், சில வேளைகளில் கூட்ட மீன்களாகவும் திரிவது உண்டு.
அவை மாப்பு மீன்களோ, கூட்ட மீன்களோ எதுவாக இருந்தாலும் மீன்கள் கூட்டமாக ஒன்றுகூடும் போது அவற்றின் கண்கள் அதிகரிக்கின்றன. இப்படி அதிக கண்களைக் கொண்ட மீன் கூட்டத்தால் இரையைக் கண்டுபிடிப்பதும், பெரிய மீன்களின் மேல் கண்வைத்துக் கொண்டு அதிகநேரம் எடுத்து இரை உண்ணவோ முடியும். மீன்கள் கூட்டமாகத் திரிய இதுவும் ஒரு முதன்மை காரணம்.

Monday 2 May 2016

உருவுமீன் (Echeneis naucrates) 

கட்டற்ற பெருங்கடல்களில் திரியும் திமிங்கிலம், சுறா, யானைத்திருக்கை, ஆமை போன்ற பெரியகடல் உயிர்களுடன் ஒட்டி உறவாடும் ஒரு மீன் உருவு.
ரிமோரா (Remora) என்பது இதன் இன்னொரு பெயர்.
உடலின் அகலத்தை விட 11 அல்லது 12 மடங்கு நீளமான மீன் இது. தலையைவிட இதன் உடல்நீளம் ஐந்தரை மடங்கு இருக்கலாம். உடலின் இருபுறமும் ஒரு நீளமாக கரிய பட்டை வாலில் போய் சிறிதாகி முடியும். இதன் கீழ்த்தாடை மேல்தாடையை விட சற்று முன்னோக்கித் துருத்திக் கொண்டிருக்கும். வயிற்றின் அடிப்புறம் கரும்பழுப்பு நிறமாக இருக்கும்.
உருவுமீனின் உடல்அமைப்பு, தூவிகள், நிறம், தாடை ஆகியவை இந்த மீன் ஏதோ தலைகீழாக நீந்திக்கொண்டிருக்கிறதோ என்பதுபோன்ற எண்ணத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும்.
உருவுமீனின் மிக முதன்மையான பாகம், அதன் தலைப் பகுதியில் உள்ள நீள்வட்ட வடிவ ஒட்டு உறுப்புதான். இதை வைத்தே இந்த மீனை எளிதாக அடையாளம் காண முடியும்
இதன் மென் மயிர்கள் கொண்ட முதுகுத்தூவியே நாளடைவில் வளர்ச்சியடைந்து ஒட்டு உறுப்பாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த ஒட்டுறுப்பு மூலம் பலம்வாய்ந்த ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உருவு மீன், தன்னைவிட வேறு பெரிய மீன்கள் மீதோ, படகின் அடிப்புறத்திலோ ஒட்டிக் கொள்ளமுடியும்.
மீன் பின்புறம் நகர்ந்தால் இந்த ஒட்டு இன்னும் இறுகும். ஒட்டுவதை கழற்ற விரும்பினால், உருவு மீன் இருந்தநிலையில் இருந்து வேகமாக முன்னோக்கி நகர்ந்து கழன்று கொள்ள முடியும்.

தன்னைவிட பெரியமீனின் மேல் ஒட்டிக் கொண்டு இலக்கின்றி, சோர்வின்றி, நீந்த தேவையின்றி பயணம் செய்வது உருவு மீனின் பழக்கம். தான் ஒட்டிக் கொண்டிருக்கும் மீன் உணவு உண்ணும்போது, ஒட்டை விலக்கிக்கொண்டு அந்த உணவுச்சிதறல்களை உருவுமீன் உணவாக்கி கொள்ளும். நீந்த சோம்பல்படும் மீன்போல உருவு தெரிந்தாலும், தன்னந்தனியே, தானாகவே இது வேகமாக நீந்தவும் கூடியது.
கடலில் அசையும் பொருள் எதனுடன் உருவுமீன் ஒட்டிக்கொள்ளும். Echeneis naucrates என்ற இதன் அறிவியல் பெயர் கப்பலில் ஒட்டிக் கொள்ளும்மீன் என்ற பொருளில் சூட்டப்பட்டது.
பழங்கால பாய்மரக்கப்பல்களின் அடியில் உருவுமீன் ஒட்டிக் கொண்டால் பெருங்காற்றில் கூட கப்பல் நகராது என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. உருவுமீன்களில் கயிற்றைக் கட்டி அவற்றை உயிருள்ள தூண்டில் போல பயன்படுத்தி கடல்ஆமைகள் மீது ஒட்டச் செய்து ஆமைகளைப் பிடிக்கும் பழங்காலம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது.

உருவுமீன்கள், ஒன்றரை அடி முதல் 3 அடி வரை நீளம்வரை வளரக்கூடியவை. இவை உண்ணத்தகுந்த மீன்கள்.