Monday, 28 October 2019


முத்தான முத்து!முத்தான முத்தல்லவோ..
கடல்தரும் சிறந்த செல்வங்களில் ஒன்று முத்து (Pearl). தென்பாண்டி கடல் முத்துக்கு ஆங்கிலத்தில் பியர்ல் (Pearl) என்று பெயர். ஆனால், இந்த பியர்ல் என்ற சொல்கூட தமிழின் பரல் என்ற சொல்லில் இருந்து வந்ததுதான். அதுபோல வடமொழியான சமஸ்கிருதத்தில் முத்துக்குப் பெயர் முக்தா. சொல்லவே தேவையில்லை. இந்த வட மொழிச் சொல்லும் முத்து என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து முகிழ்த்ததே. தமிழில் முத்துக்குத் தரளம், நித்திலம் என்ற வேறு வேறு பெயர்களும் உள்ளன.
முத்துக்களில் மொத்தம் பத்து வகைகள். அவற்றில் ஒன்று ஆணிமுத்து எனப்படும் கட்டாணி முத்து. அதுதவிர மக்கை முத்து, மடக்கு முத்து, கனதாரி முத்து, குறல் முத்து, குறவில் முத்து, பீசல் முத்து, களிப்பு முத்து, தூள் முத்து, ஒட்டுமுத்து என முத்துகளில் பத்து வகை.
அம்பு முத்து, புஞ்சமுத்து, பழமுத்து, பருமுத்து, சப்பத்தி, வட்டமுத்து, ஏப்புமுத்து எனவும் முத்துகளை வகை பிரிப்பார்கள்.
சிப்பிக்குள் சிலவேளைகளில் திராட்சைக் கொத்து போன்ற கொத்து முத்துகள் இருக்கும். கடுகு அளவில் இருந்து காட்டு இலந்தை, புறா முட்டை அளவு வரை பல அளவுகளில் முத்துக்கள் இருக்கும்.
முத்துக்களில் குற்றங்களும் காணப்படும். சங்க கால நூல்களின்படி முத்துகளில் 12 விதமான குற்றங்கள் பட்டியலிடப்படுகின்றன.
அந்த குற்றங்களில் ஒன்று ‘காகபாதம்’. காகத்தின் கால்பட்டு நகம் பிறாண்டியதைப் போல முத்தின் மேல் வடு இருந்தால் அது காகபாதம். இதர குற்றங்களில் களங்கம், ஓரை, விந்து போன்றவை சில.
ஆலங்கட்டி போல அதாவது பனிக்கட்டி போல முத்து ஒளிவீசும். வெண்ணீர்மை கொண்ட அந்த நல்முத்து மிகவும் விலை உயர்ந்தது.

Saturday, 19 October 2019


குமரிச்சுறா (zebra Shark)

குமரிச் சுறா
கடலடியில் கம்பளம் விரித்ததுபோல, அழகிய வண்ணம் மற்றும் வனப்புடன் கூடிய தரை விரிப் பைப் போல சில சுறாக்கள் காட்சி தரும். கடலடியில் அதிகம் நகராமல் தரையோடு தரையாய் படுத் திருக்கும் அந்த சுறாக்களை கம்பளச் சுறாக்கள் (Carpet Sharks) என்று அழைப்பார்கள். குமரிச்சுறாவும் ஒரு வகை கம்பளச் சுறாவே.
சுறாக்கள் பொதுவாக நீந்திக் கொண்டே இருந்தால் தான் உயிர்வாழ முடியும். எப்போதும் இயங்கிக் கொண்டே இருந்தால்தான் செவுள் துளைகள் வழியாக கடல்நீரை உட்கொண்டு அதில் உள்ள காற்றைச் சேகரித்து மூச்சுவாங்கி சுறாக்கள் உயிர்வாழ முடியும்.
ஆனால் குமரிச்சுறா போன்ற கம்பளச் சுறாக்கள் இதற்கு விதிவிலக்கு. கடலடியில் தரையோடு தரையாக படுத்திருந்தாலும்கூட இந்த வகை சுறாக்களால் செவுள் துளைகள் மூலம் மூச்சுவிட முடியும்.
குமரிச்சுறா, இந்தியப்பெருங்கடல் போன்ற வெப்பக் கடல்களில் வாழும் சிறிய சுறா. Stegostoma fesciatum என்பது இந்த சுறாவின் அறிவியல் பெயர். குமராசி எனவும் இது அழைக்கப்படுகிறது.
கடலடியில் 62 மீட்டர் (200 அடி) ஆழத்தில் பவழப்பாறைகள், மணல்வெளிகளில் குமரிச்சுறா காணப்படும்.
குமரிச்சுறா குட்டியாக இருக்கும் போது கரும்பழுப்பு நிறத்தில் மஞ்சள் கலந்த வெள்ளை வரிகளுடன் காணப்படும். இந்த சுறா இனத்துக்கு ஆங்கிலத்தில் சீப்ரா (வரிக்குதிரை) சுறா (zebra Shark) என பெயர் வர இதுவே காரணம்.
குட்டியின் உடலில் வரிகள்
குமரிச்சுறா வளர்ந்தபின் கரும்பழுப்பு, அடர் சாம்பல் நிறமாக மாறும். அப்போது உடலில் சிறுத்தைப் புலிக்கு இருப்பதைப் போல அடர்நிறத்தில் புள்ளிகள் தோன்றும்.
குமரிச்சுறா ஆறடி முதல் 11 அடிவரை வளரக் கூடியது  20 முதல் 30 கிலோ எடைகொண்டது.
பெரிய தலையும், சிறிய கண்களும், ஐந்து செவுள் கீறல்களும் கொண்ட குமரிச்சுறாவுக்கு சிறிய மீசை போன்ற உணர்வு இழைகளும் உண்டு. பவழப்பாறைகளின் இண்டு இடுக்குகளில் இரை தேட இந்த உணர்விழைகள் பயன்படுகின்றன.
குமரிச்சுறாவின் உடல் நெளிவு சுழிவானது. பாறை இடுக்குகளில் இதன் உடல் எளிதாக நுழைந்து செல்லும். குமரிச்சுறாவின் வால் அதன் உடல்அளவுக்கு நீளமானது.  இந்த நீளவால்
இரை மீனை விரட்டி வேட்டையாடவும், விரைவாக நீந்தவும் பயன்படுகிறது. அதுபோல பாறை களுக்குள் நுழைந்து நீந்தும்போது பின்னால் திரும்பிவரவும் இதன் வால் பயன்படும்.
பவழப் பாறைகளில் வாழும் கடல்பாம்புகளை குமரிச் சுறா அதிக அளவில் வேட்டையாடும்.. சிறுமீன்கள், நண்டு, சிப்பிகளும் இதன் இரைப்பட்டியலில் இடம்பெறுகின்றன. குமரிச்சுறாவின் தாடையும், பற்களும் சிப்பிகளை உடைத்துத் தின்ன உதவுகின்றன. குமரிச்சுறாவின் மேல் தாடையில் 28 முதல் 33 பற்களும், கீழ்த்தாடையில் 22 முதல் 34 பற்களும் காணப்படும். குமரிச் சுறாவின் முதன்மை எதிரி வரிப்புலியன் சுறா. இதர சில சுறா இனங்களும் குமரிச் சுறாவை வேட்டையாடும். சுறாக்களைத் தவிர்த்து வேறு இயற்கையான எதிரிகள் யாரும் குமரிச் சுறாவுக்கு இல்லை.
வால் மிக நீளம்...
பகல் வேளைகளில் குமரிச்சுறா பார்வெளிகளில் படுத்திருக்கும். இரவில்தான் இவை இரை தேடித் திரியும். உடலுறவின் போது ஆண் சுறா, பெண் சுறாவின் கன்னத்தூவி, வால் போன்றவற்றை ஆர்வ மிகுதியால் கடிக்கும்.
குமரிச்சுறா மனிதர்களுக்கு ஆபத்தற்ற சுறா. சீண்டினால் மட்டுமே இது கடிக்கும். இதன் கடி அதிக ஆபத்தற்றது. ஒருமுறை சீண்டப்படாமல் கூட இது நீர்மூழ்கி வீரர் ஒருவரைக் கடித்த நிகழ்வும் உண்டு.
குமரிச்சுறாக்களில் பெண் சுறாக்கள் முட்டையிட்டு அவற்றை பாறைகளில் கொழுவிவிடக் கூடியவை. முட்டைகள் தானாகப் பொரித்து அதில் இருந்து குஞ்சுகள் வெளிவரும். குமரிச் சுறா 30 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது.

Wednesday, 2 October 2019


உடும்பன் சுறா (Coral Catshark) (Atelomycterus marmoratus)

பூனை போன்ற கண்
சுறாக்களில் பூனை போல கண்கள் உள்ள சுறாக்களில் எண்பது வகைகள் உள்ளன.  மூன்றடிக்கும் குறைவான நீளம்  கொண்ட இந்த சுறாக்களுக்கு, ‘பூனைச்சுறாக்கள்’ (Catsharks) என்று யாரோ ஒரு புண்ணியவான் பெயர் சூட்டிவிட்டார்.
இந்த வகை பூனைச்சுறாக்கள் ஒருவகையில் கடலடி தரையில் வாழும் சுறாக்கள். குறிப்பாக பவழப்பாறை களில் இவை வாழக்கூடியவை.
அதுபோன்ற பூனைச் சுறாக்களில் ஒன்றுதான் உடும்பன் சுறா (Coral Catshark). முதல் பார்வைக்கு இது பூனைபோலவும் இல்லை, சுறா போலவும் இல்லையே என்று தோன்றலாம். உண்மைதான். பார்வைக்கு இது அழகிய பாம்பு போலவும் விலாங்கு போலத் தான் தோன்றும். ஆனால் இது சுறா இனம்தான்.
உடும்பன் சுறாக்கள் திருவாளியன் எனப்படும் Leopard Sharkகுகளின் சிறிய சந்ததிகள் போல பார்வைக்குத் தோன்றும். இதன் குழாய் போல நீண்ட வெளிர்சாம்பல் நிற உடலில் வெள்ளை நிற புள்ளிகளும், கருப்புநிற புள்ளிகளும் காணப்படும். உடும்பன் சுறாவுக்கு இரண்டு முதுகுத் தூவிகளும், இரண்டு பக்கத் தூவிகளும் உள்ளன. முதுகுத்தூவிகள் பின்பக்கமாக வளைந்திருக்கும்.
உடும்பன் சுறா
குறுகிய வாலும், தலையும் கொண்ட இந்த சுறா, பார் இடுக்குகளிலும், பொந்துகளிலும் மறைந்து வாழக் கூடியது. இதன் நீண்ட உடல் இண்டு இடுக்குகளில் மறைந்து வாழ உதவுகிறது. உடலின் வண்ணம், பார்களில் உருமறைப்பு செய்து கொள்ள உதவுகிறது.
உடும்பன் சுறாவின் அறிவியல் பெயர் Atelomycterus marmoratus. கிரேக்க மொழியில், இந்தப் பெயருக்கு ‘சரி வர அமையாத மூக்கு’ என்பது பொருள்.
உடும்பன் சுறா, ஒன்றரை அடி முதல் இரண்டரை அடி வரை நீளம்  கொண்டவை. மனிதர்களுக்கு தீங்கு செய்யாத சுறா இது. மட்டிகள், கிளிஞ்சல்கள், இறால்கள், சிறு மீன்கள் உடும்பன் சுறாவின் உணவு.
மீனவர்களின் வலையில் தவறுதலாக உடும்பன் சுறா சிக்குவதுண்டு. உப்பிட்ட உணவாகவும், எண்ணெய் எடுக்கவும் இது பயன்படக்கூடியது. கடலில் வெடிவெடித்து மீன் பிடிப்பதால் அதிக அளவில் பாதிக்கப்படும் மீன் இனங்களில் உடும்பன் சுறாவும் ஒன்று.