Saturday 2 May 2020


முதிர்வயது முனிவன் நண்டு
ஒரு கூட்டுக்குள்ளே என் குடியிருப்பு..
முனிவன் நண்டை உங்களுக்குத் தெரியும்தான்.  நமது வலைப்பூவைத் தொடர்ந்து படிப்பவர் என்றால் தெரிந்திருக்கும். 2019 டிசம்பர் மாதம் முனிவன் நண்டு பற்றி ஒரு பதிவு இருக்கிறது.

துறவி நண்டு, தவசி நண்டு, முனிவன் நண்டு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நண்டினத்தில் மொத்தம் 1,110 இனங்கள் உள்ளன. பத்துகாலி (Decopod) எனப்படும் பத்து கால்களையுடை உயிரினப் பிரிவைச் சேர்ந்தது முனிவன் நண்டு. போகட்டும்.

முனிவன் நண்டின் அடிவயிறு மிகவும் மென்மையானது. கணவாய் போன்ற கொல்லுயிர்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் முனிவன் நண்டுக்கு ஒரு பாதுகாப்புக் கூடு தேவை.
அதற்காக தனக்கு தகுந்த அளவில் ஏதாவது ஒரு மெல்லுடலி (Mollusk) வசிக்கும் ஓட்டுக்காக முனிவன் நண்டு காத்திருக்கும். அந்த மெல்லுடலியைக் கொல்லாமல் அது இறந்து போகும் வரை பொறுமையாகக் காத்திருக்கும். கிட்டத்தட்ட ஒரு தவம் மாதிரியான செயல்பாடு இதுதான்.
அந்த மெல்லுடலி இயற்கை மரணம் அடைந்தபிறகும்கூட அதை வேறுஓர் உயிர் வந்து உண்டுமுடிக்கும்வரை முனிவன் நண்டு காத்திருக்கும். பிறகு முனிவன் நண்டுக்கு முன்பணம், வாடகைப் பிரச்சினை எதுவுமில்லாமல் அழகான ஒரு கூடு தயார்.
பொறுமை கடலினும் பெரிது என்பார்களே அப்போல இந்த விடயத்தில் முனிவன் நண்டின் பொறுமையும் மிகப்பெரியது. இந்த பொறுமை தந்த பரிசோ என்னவோ முனிவன் நண்டுகள் 15 முதல் 20 ஆண்டுகள் வாழக்கூடியவை என்றாலும் சில நண்டுகள் அதைவிட நீண்டகாலம் வாழக்கூடியவை.
முனிவன் நண்டு
ஜோனாதன் லிவிங்ஸ்டன், கேட்டி என்ற இரு வளர்ப்பு முனிவன் நண்டுகள் 29 ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கின்றன. ஜான் என்ற வளர்ப்பு முனிவன் நண்டு 40 ஆண்டுகாலம் வாழ்ந்தது. தின்ஃபோயில்செப் என்ற நண்டு 57 ஆண்டுகள்(!) வாழ்ந்து சாதனை புரிந்திருக்கிறது.
சரி! அது ஒருபுறம் இருக்கட்டும். இந்த பூவுலகில் புதைபடிவமாக கண்டெடுக்கப்பட்ட மிகமிக பழைய முனிவன் நண்டு எது தெரியுமா? இங்கிலாந்தின் யார்க் ஷயர் பகுதியில் உள்ள ஸ்டீப்டின் என்ற ஊரில் புதைபடிவமாக கிடைத்த முனிவன் நண்டே மிகமிகப் பழமையானவர்.
அதாவது அவர் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த, கிரேட்டாசியஸ் காலத்தைச் சேர்ந்தவர். அவர் பழமையிலும் பழமையாக அந்தக் காலத்தில் வாழ்ந்த அமோனைட் என்ற மெல்லுடலி இறந்தபின் அதன் கூட்டில் வாழ்ந்தார் என்பது சிறப்புச் செய்தி.