Thursday, 21 February 2019


புதுவகை வண்ணாத்தி மீன்

படம் நன்றி: லூயிஸ் ரோச்சா
கடல்வாழ் பார் மீன்களில், பட்டர்ஃபிளை பிஷ் (Butterfily Fish) எனப்படும் வண்ணாத்தி மீன்களும் அடக்கம். பார் மீன்களுக்கே உரித்தான விதத்தில் கண்ணைப்பறிக்கும் வண்ணங்கள் நிறைந்த மீன்கள் வண்ணாத்தி மீன்கள்.

அறிவியல் உலகத்தால் இவை நன்றாக ஆராயப்பட்ட மீன்கள் என்பதால், இதற்கு மேல் வண்ணாத்தி மீன்களில் புதுவகை மீன்கள் இருப்பது அரிது என்று மீனியல் வல்லுநர்கள் கருதி வந்தார்கள். ஆனால் அந்த கருத்தைப் பொய்யாக்கி புதுவகை வண்ணாத்தி மீன் ஒன்று பிலிப்பின்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரைத் தளமாகக் கொண்ட கலிஃபோர்னியா அறிவியல் கழகம், பசிபிக் கடற்பகுதியில் உள்ள பிலிப்பின்ஸ் நாட்டின் வெர்டி தீவு அருகே 360 அடி ஆழத்தில் புதுவகை ஆழ்கடல் வண்ணாத்தி மீன் ஒன்றை கண்டு பிடித்துள்ளது.

வண்ணாத்தி மீன்களில் ரோவா வகை வண்ணாத்தி மீன்களில் இதுவரை நான்கு வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஐந்தாவது வகை.
இந்த புதியவகை மீனுக்கு, இராக் போரை தலைமை தாங்கி வழிநடத்திய அமெரிக்க ராணுவத் தளபதியான டொனால்டு ரம்ஸ்பெல்டின் நினைவாக ரோவா ரம்ஸ்ஃபெல்டி (Roa rumsfeldi) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்னும் முடிவுறாத இராக் போருக்கு வித்திட்டவரான ஒரு ராணுவத் தளபதியின் பெயரை ஓர் அரிய வகை அழகிய பார் மீனுக்குச் சூட்டுவதா என இதற்குக் கண்டனமும் எழுந்து அடங்கியுள்ளது.
படம் நன்றி: லூயிஸ் ரோச்சா

இந்த புதுவகை ரோவா வண்ணாத்தி மீன், மெசபோடிக் (Mesophotic) பார்ப்பகுதியில் காணப்படுகிறது. வழக்கமான பவழப்பாறைகள் உயிர் வாழ மிதமான சூரிய ஒளி வேண்டும். இந்த வழக்கமான பார்களுக்கும், மையிருட்டாக இருக்கும் ஆழ்கடலுக்கும் இடையே ஒரு தொடர் கோடு போல அமைந்திருக்கும் பார்களை  மெசபோடிக் (Mesophotic) பார்ப்பகுதி என்பார்கள்.

முழுக்க மையிருட்டு இல்லாமல், மிதமான அந்திமாலையின் மந்தமான (Twilight) ஒளி வந்து ஊஞ்சலாடும் மெசபோடிக் (Mesophotic) பார்ப்பகுதியில்தான்  இந்த புதிய வண்ணாத்தி மீன் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையைச் சேர்ந்த 2 மீன்களை அறிவியலாளர்கள் தற்செயலாக பிடித்தனர்.

கலிஃபோர்னியா அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஒளிப்படக்கலைஞர் லூயிஸ் ரோச்சா (Luiz Rocha) இந்த மீன்களைப் படமெடுத்துள்ளார். இந்த புதிய வகை மீன்கள் எப்போதும் இணையாகத் திரியும் பழக்கம் கொண்டவை என்றாலும், 2 மீன்களும் தனித்தனியே பிடிபட்டு ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பழுப்பும், வெள்ளை நிறமும் கொண்ட இந்த புதுவை ரோவா வண்ணாத்தி மீனுக்கு முழுக்க முழுக்க கருநிறமான அடிப்புறத் தூவி இருப்பது அனைவரையும் கவர்கிறது.

Wednesday, 13 February 2019


புதிய வகை சுறா

ஆழமான நீலக்கடலில் இருந்து அவ்வப்போது புதுப்புது உயிர்கள் கண்டுபிடிக்கப் படுவது இயல்புதான். அந்த வகையில் அண்மையில் இந்தியப் பெருங்கடலில் இருந்து புதிய வகை சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய சுறாவின் பக்க, முதுகு, அடிப்புறத் தோற்றம்
26 ஏப்ரல் 2008 அன்று கேரள மாநிலத்தின் கொச்சி மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து, ஆழ்கடல் சுறா பிடிப்புக்காகச் சென்றிருந்த ஒரு மீன்பிடிப் படகில் தற்செயலாக ஒரு சுறா சிக்கியது. முன்பின் பார்த்திராத அந்த சுறாவைப் பற்றி மீனவர்கள் பெரிதாக அக்கறை கொள்ளாத நிலையில், மீனியல் அறிஞர்கள் அது ஒரு புதிய வகை சுறா என்பதைக் கண்டறிந்தனர்.
2018ஆம் ஆண்டு மார்ச் 15ஆம்தேதியன்று இலங்கையின் திரிகோணமலையிலும் இதேப் போன்ற சுறா ஒன்று பிடிபட்டது. இந்த சுறாவின் நீளம் ஏறத்தாழ இரண்டடி. (65 செ.மீ.)  நிறம் கரும்பழுப்பு நிறம்.
இதற்கு முன் தென்மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா அருகில் சகோத்ரா தீவு அருகிலும், இந்தியப் பெருங்கடலின் மாலத்தீவு பகுதியிலும் இதேப்போன்ற ஒரு சுறா கண்டுபிடிக்கப்பட்டதை மீனியல் வல்லுநர்கள் அறிந்தார்கள்.
ஆனால் Planonasus parini என்று பெயரிடப்பட்டிருந்த அந்த சகோத்ரா தீவு சுறாவுக்கும், இந்த புதிய சுறாவுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன.
ஒளிப்படம் நன்றி: எங்கல்பிரட்
புதிய கரும்பழுப்பு நிற சுறாவின் உடலில் புள்ளிகள், குறிகள்,  கோடுகள் எதுவும் இல்லை. முதுகுத்தூவியின் பின்புற முனையில் வெள்ளைக்குறியும் இல்லை. இதுபோல இன்னும் பல வேறுபாடுகள் இருந்ததால் இந்த புதிய வகை சுறாவுக்கு Planonasus Indica என்று மீனியல் வல்லுநர்கள் அறிவியல் பெயரைச் சூட்டியுள்ளனர். Planus என்றால் தட்டை, nasus என்றால் நாசி எனப்படும் மூக்கு.
இந்தியப் பெருங்கடலில் இது கிடைத்திருப்பதால் இண்டிகா என்ற பின்னொட்டுப் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

Tuesday, 5 February 2019


அடுப்பூதி (எக்காள மீன்) எக்காள மீன் (Cornet Fish)

எக்காள மீன் (Cornet Fish) பற்றி ஏற்கெனவே நமது வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறோம். நீளமான குழாய் போன்ற தோற்றமும், குழாய் போன்ற வாயும், வாலடியில் தனித்து தெரியும் சாட்டை போன்ற அமைப்பும், நீள்வட்ட கண்களும் எக்காள மீனின் தனித்துவமான அடையாளங்கள்.
எக்காள மீனின் வாய் குழல்போல இருப்பதால் ‘குழல்வாய்’ என்ற பெயர் இதற்கு மிகப் பொருத்தமானது. ஆனால் இப்படி ஒரு பெயரை யாரும் சூட்டவில்லை.
எக்காள மீன் என தமிழில் அழைக்கப்படும் இந்த மீனுக்கு அடுப்பூதி என்ற பெயரும் உள்ளது. அடுப்பூதப் பயன்படும் குழாய் போல இதன் உருவத்தோற்றம் இருப்பதால் அடுப்பூதி என இந்தமீன் அழைக்கப்படுகிறது.
அடுப்பூதி மீன்களில் 4 வகைகள் உள்ளன. இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் கடல்களில் அடுப்பூதிகள் அதிகம். குறிப்பாக மாலத்தீவு நாட்டின் பார் செறிந்த பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. செங்கடல் வழியாக இவை நடுநிலக்கடல் (மத்தியத் தரைக்கடல்) சென்று அங்கே சைப்பிரஸ் அருகே அதிக அளவில் வாழ்கின்றன.
அடுப்பூதி மீன், பார்களை அடுத்த மணல்பகுதியில் கடல்தரைக்கு மிக அருகில் நீந்தித் திரியும் மீன். பகல்வேளையில் பார்களின் அருகே தனியாகத் திரியும் இந்த மீன்கள், இரவில் சற்று ஆழமான கடல்பகுதிகளில் சிறுகூட்டமாக நீந்தும்.
அடுப்பூதி மீன்கள் சிறிய பார்மீன்களின் அருகே நீந்திச்சென்று அவற்றை இரையாகப் பிடிக்கக் கூடியவை. கணவாய்களைப் போல இந்தவகை மீன்களும் மிக விரைவாக நிறம் மாறக் கூடியவை. இரை மீனைத்தாக்கும் முன் இவை நிறம் மாறும். எதிரிமீன் பயமுறுத்தினால் கூட இவை நிறம் மாறும்.

நீளமான இதன் புல்லாங்குழல் போன்ற அலகு சாய்வான வாயில் போய் முடியும். வாயில் மிகச்சிறிய அரிசிமணி போன்ற பற்கள் உண்டு. இதன் வால்நுனியில் சாட்டை போல நீண்டு நிற்கும் நூலிழை, வாலின் மூன்றாவது பாகம் போலத் தோன்றும்.

அடுப்பூதி மீன்கள் மனிதனுக்குத் தீங்கு செய்யாதவை. ஆனால், சொரி (இழுது) மீன்களை இவை கூட்டமாகச் சூழ்ந்து தாக்கக் கூடியவை.
அடுப்பூதி மீன்களில் நீலப்புள்ளி அடுப்பூதியும் ஒன்று. Fistularia Commersonii என்பது இதன் அறிவியல் பெயர். ஃபிரான்ஸ் நாட்டின் தாவரவியல் வல்லுநரான பிலிப்பெர்ட் காமர்சென்னுக்குப் பெருமையூட்டும் விதமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அடுப்பூதி மீன்கள், கடல்குதிரைகளுக்கு ஒருவகை உறவுக்கார மீன்கள்.