Sunday, 17 September 2017

ஓலைவாலன் திருக்கை (இலைத்திருக்கை) (Cowtail Stingray) (Pastinachus Sephen)

வாலில் ஓலையைக் கட்டிவிட்டது போல கடலில் உலாவரும் ஒரு திருக்கை ஓலைவாலன் திருக்கை. வடதமிழக கடலோரங்களில் இதற்கு ‘இலைத் திருக்கை என்ற பெயரும் உண்டு. தட்டு போன்ற பெரிய உடலும், தடித்த வாலும் கொண்ட ஒலைவாலன் திருக்கை, வால்முனையில் கூரிய முள் அல்லது முட்கள் கொண்டது. அதன் மூலம் எதிரிகளைக் குத்தவும் கூடியது.
ஓலைவாலன் திருக்கையின் உடல்தட்டு, கரும்பழுப்பு நிறத்தில் வட்டம் சேர்ந்த சற்று முக்கோண வடிவம் கொண்டது. கட்டித்திருக்கை, சங்குவாயன் திருக்கைகளைப் போல இதன் முதுகு மிக மேடானதும் அல்ல, அட்டணைத் திருக்கையையைப் போல மிக சமமானதும் அல்ல.

விரிந்த சிறகுகளைப் போன்ற உடலைப் பயன்படுத்தி, கடலடியில் மண்ணை விசிறி, உள்ளிருக்கும் நண்டு, மூரைகளை ஓலைவாலன் திருக்கை உணவாக்கும். 
ஓலைவாலனின் கண்கள் சிறியவை. இடைவெளி கொண்டவை. மணலில் ஓலைவாலன் புதைந்திருந்தால் கண்கள் மட்டும் வெளியே துருத்தியபடி இருக்கும். ஓலைவாலனின் கண்களுக்கு மிக அருகிலேயே மூச்சுத்துளை அமைந்திருக்கும். உடலின் மேற்புறத்தில் மூச்சுத்துளை இருப்பதால் அதற்குள் தப்பித்தவறிக்கூட கடல்மணல் புக வாய்ப்பில்லை. கண்களால் இரையைக் காண முடியாது என்பதால், ஏனைய திருக்கைகளைப் போல, ஓலைவாலன் திருக்கையும் மோப்பத் திறனைப் பயன்படுத்தி இரையைப் பிடிக்கும்.
ஓலைவாலன் திருக்கை 3 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இதன் உடல் அகலம், நீளத்தை விட அதிகமானது. உடலின் குறுக்களவு 1.8 மீட்டர் வரை இருக்கலாம். மற்ற திருக்கை களின் முட்களைப் போலவே ஓலைவாலனின் முள்ளும் மெல்லிய சவ்வுத்தோல், பசை மற்றும் நச்சுத்திரவத்தால் போர்த்தப்பட்டி ருக்கும். எந்த திருக்கையும் எதிர்படும் மனிதர் களை வேண்டி விரும்பி முள்ளால் குத்துவ தில்லை. இது ஓலைவாலன் திருக்கைக்கும் பொருந்தும். ஆழம் குறைந்த கடல்பகுதியில் நடந்து வரும் மனிதர்கள் தப்பித்தவறி எதிர்ப்பட்டு, போதிய நேரம் தந்தால், ஓலைவாலன் திருக்கை வழியை விட்டு விலகிச் சென்றுவிடும் மாறாக, தெரியாமல் அதன் உடலை மிதித்தால், வாலை வளைத்து முள்ளால் குத்தும். வாலை மிதித்தால் காலடியில் இருந்து நழுவி விலகி, முள்ளால் இது தாக்கும். வாலை வளைத்து ஓலைவாலன் திருக்கை குத்தும் குத்து, மனிதர்களின் முழங்காலுக்கு மேலே  தொடை வரை பாயக்கூடியது. சில திருக்கை முள் குத்துகளை விட ஓலைவாலனின் நச்சுமுள் குத்து, அதிக கடுகடுப்பை அளிக்கக் கூடியது. இதன் முள்ளில் நுண்கிருமிகள் நிறைந்திருப்பதால் தொற்று ஏற்படவும் வாய்ப்புண்டு. முட்கள் முறிந்தால் 5 அல்லது 6 மாதங்களில் புதிய முட்கள் வளர்ந்து விடும்.

ஓலைவாலன் திருக்கைகள் கடலை விட்டு வெளியேறி சிற்றாறுகள், நன்னீர் ஓடைகளுக்கும் அவ்வப்போது செல்வ துண்டு. நன்னீரில் கூட ஓலைவாலன் திருக்கையால் வாழ முடியும். நன்னீர் நிலைகளுக்குச் செல்வதன்மூலம் உடலில் பதிந்திருக்கும் ஒட்டுண்ணிகளை ஓலைவாலன் திருக்கையால் நீக்கிக் கொள்ள முடியும். இந்த குறிப்பிட்ட கால சிறிய சுற்றுலாவுக்குப் பிறகு ஓலைவாலன் திருக்கை மீண்டும் கடலுக்குத் திரும்பிவிடும். 
கூனிப்பொடி (Krill)

மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிதுஎன்பார்கள். (அட, நமக்கு எதற்கு மூர்த்தி, கீர்த்தி என்ற வடமொழிச் சொற்கள் என்று நினைப்பவர்கள், ‘உடல்சிறிது, புகழ்பெரிதுஎன மாற்றிப் படிக்கவும்)
இந்த  ‘உடல்சிறிதுபுகழ்பெரிது‘ பழமொழிக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு கூனிப்பொடி. (Krill). நீந்தக் கூடிய மிகச்சிறிய இறால் இனம் இது. கால் அங்குலம் முதல் இரண்டங்குல நீளம் கொண்ட இந்த சிற்றுயிர்களில் மொத்தம் 82 முதல் 85 வகைகள் உள்ளன.
பெருங்கடலின் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியின் ஒரு முதன்மைப் பெருங்கண்ணி இந்த கூனிப்பொடிகள்தான். நீலத்திமிங்கிலங்கள் உள்பட பல்லற்ற பலீன் வகை திமிங்கிலங்களின் முதன்மைப் பேருணவும் கூனிப்பொடிதான்.
திறந்த கடல்களில், ஆறாயிரத்து 600 அடி ஆழம் முதல், கடல்பரப்பு வரை காணப்படும் இந்த சிற்றுயிர்கள், ஒரு கனமீட்டருக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை காணப்படலாம். ஒரு கனமீட்டர் நீரில் 20 கிலோ வரை கூனிப்பொடிகள் ஒன்றுகூடி மொய்க்கலாம். உருவில் சிறிதானாலும் இதன் திரட்சி காரணமாக கூனிப்பொடி கூட்டத்தால் சிறு கப்பல்களைக்கூட வழிமறித்து நிறுத்த முடியும். மறபுறம் கடலோரத்தில் சிறிய கொசுவலையை வீசும் சிறுவர் கூட்டத்திடம் சிக்கி அவர்களுக்கு உணவாகவும் கூனிப்பொடிக் கூட்டத்தால் மாற முடியும்.

கூனிப்பொடிகள் இரவில் ஒளிரக்கூடியவை. 9 பருவங்களாக வளர்ந்து இறுதியில் முழு அளவை இவை எட்டக்கூடியவை.  

Friday, 1 September 2017

தண்ணீர்ப் பன்னா (தண்டிப்பன்னா) நாக்கண்டம் (Inshore lizardfish)

பார்வைக்கு பல்லிக்கும், மீனுக்கும் பிறந்த உயிர் போல தோன்றும் ஒரு மீன் இனம் தண்ணீர்ப் பன்னா. இதன் தலை பல்லியைப் போலவே இருக்கும். இதன் மாறுகண்கள், அலிகேட்டர் முதலையைப் போல நம்மைக் கண்டு முறைக்கும். தண்ணீர்ப் பன்னாவின் வாயில் மட்டு மல்ல, வாயின் மேல் அண்ணத்திலும், ஏன் நாக்கிலும் கூட பற்கள் இருக்கும்.
 தண்ணீர்ப் பன்னாக்களில் 36 வகை மீன்கள் இருந்தாலும், இருவகை மீன்களே குறிப்பிடத்தகுந்தவை. அதில் ஒன்று கரையோரம் கடல்தரையில் காணப்படும் சிறிய தண்ணீர்ப் பன்னா. கடலின் 15 பாவம் (Fathom) அதாவது 90 அடி ஆழத்தில் இந்த மீன் காணப்படும். தனி மீனாக, பார்களை விட அதிகமாக மணல் வெளிகளிலேயே இது தென்படும்.
பழுப்பு நிறத்துடன் அவ்வப்போது நிமிரும் முதுகுத் தூவிகளுடன் இது காணப்படும். பாதி உடலை மணலில் புதைத்து உருமறைப்பு செய்து, இருந்த இடத்தில் இருந்தே இரையை இது வேட்டையாடுவதுடன், இந்த நிமிர்ந்த முதுகுத் தூவியால் எதிரிகளிடம் இருந்து தப்பவும் செய்யும்.
தண்ணீர்ப் பன்னாக்களில் ஆண் மீனைவிட பெண்மீனே பெரியது. ஏறத்தாழ ஒன்றரை அடி நீளம் வரை வளரக்கூடிய மீன் இது. அடிப்புற முன்தூவியால் அவ்வப்போது இது மணலைக் கிளறியபடி இருக்கும். இரை அருகே வந்தால் மின்னல் வேகத்தில் தண்ணீர்ப் பன்னா, இரையைத் தாக்கும். இப்படி திடீரென முன்னோக்கிப் பாய்ந்து இரையைக் கவ்வ, இதன் வாலும், பக்கத் தூவிகளும் சிறகுகள் போல இந்த மீனுக்கு உதவுகின்றன. பெரிய வாயால் தண்ணீர்ப் பன்னா, இரையை முழுதாக விழுங்கவும் செய்யும். நெத்தலி, மீன், கணவாய், கடல்புழுக்கள் இந்த மீனின் முதன்மை உணவு.
கடலில் நீந்தாமல் மணல் தரையில் தத்தித்தவழ்ந்து செல்லக்கூடிய மீன் தண்ணீர்ப் பன்னா. இதன் அடிப்புற முன்தூவிகள் கால்கள் போல பயன்படுகின்றன.
தண்ணீர்ப் பன்னாவின் சதை மாவு போன்றது. சென்னையில் இந்த வகை மீன், கிழங்கான் மீன் என்றுகூறி விற்கப்படுவதுண்டு.
தண்ணீர்ப் பன்னாக்களில் சற்று ஆழ்கடல் வாழ் தண்ணீர்ப் பன்னாக்களும் உள்ளன. உழுவாக்கரை என தமிழிலும், (Snake fish) பாம்புமீன் என ஆங்கிலத்திலும் இவை அழைக்கப்படுகின்றன. பாம்பு போன்ற மூக்கு இருப்பதால் பாம்பு மீன் என்ற பெயர், இவற்றுக்கு வழங்குகிறது.

வாய் முழுக்க ஆணி போன்ற பற்கள் கொண்ட இவை, இரண்டடி நீளம் வரை வளரக் கூடியவை. கன்னப் பொருத்துகளில் இவற்றுக்கு சதைப்பற்றான ஒரு குமிழ் உண்டு. உழுவாக்கரை உண்பதற்கு ஏற்ற மீனல்ல. அதனால், மீனவர்கள் இதைப் பிடித்தால் பெரும்பாலும் இரை மீனாகப் பயன்படுத்துவார்கள்.