Friday, 26 August 2016

கொட்டலசு (அலசு) (Barnacle)

புவிப்பந்தில் பல லட்சம் ஆண்டுகள் பழைமையான ஒரு கடல் உயிர் கொட்டலசு. கடல்அலைகள் தாலாட்டும் பாறைப் பகுதிகள், படகுகளின் அடியில் இந்த அரிய வகை கடல் உயிர்க்கூட்டத்தை அடிக்கடி காணலாம்.
அலைகள் வந்து மூழ்கடிக்கும்போது கொட்டலசின் எரிமலை கூம்பு வடிவ உடலின் மேற்கதவு திறந்து கொள்ளும். அதன் உள்ளே இருந்து இறகு போன்ற மென்மயிர்த்தூவல் போன்ற ஓர் உறுப்பு அடிக்கடி வெளியே வந்து உள்ளே செல்லும். இந்த இறகுப் போன்ற காலால், கடல்நீரில் உள்ள உணவுத் துகள்களை சேகரித்து கொட்டலசு உண்கிறது.
கொட்டலசுகளில் ஏறத்தாழ ஆயிரம் வகைகள் உள்ளன. கருவாலிக் கொட்டை போன்ற கொட்டலசே பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படும்.
கொட்டலசு, நத்தை, சிப்பி போன்றவற்றின் இனம் என்று கருதப்பட்டாலும் உண்மையில் இது நண்டு, இறால் போன்ற உயிர்களுடன் நெருங்கிய உறவு உடையது.
கொட்டலசின், லார்வா எனப்படும் நுண்புழு ஏறக்குறைய நண்டின் நுண்புழு போன்றது. கடல்நீரில் கவர்களுடன் மிதந்தபடி திரியும் இந்த நுண்புழு, அங்குமிங்கும் அலைந்து கடல் பாறைகள், படகுகள், மிதக்கும் கட்டைகளில் சரியான இடத்தைத் தேர்வு செய்து தலைகீழாக ஒட்டிக் கொள்ளும்.
பிறகு, சுண்ணாம்பு போன்ற ஒன்றை சுரக்கச் செய்து, தன்னைச்சுற்றி தகடுபோன்ற கனமான பாதுகாப்பு கவசம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும்.
இதன்மூலம் மீன்போன்ற மற்ற கடல் உயிர்களிடம் இருந்து கொட்டலசு தப்பிக்கும். கடல்அலைகளால் அடித்துச் செல்லப்படாமலும் இது காப்பாற்றப்படும்.
கொட்டலசு ஒருமுறை ஓரிடத்தில் ஒட்டிக் கொண்டால், பின்னர் அதன் வாழ்நாள் முழுவதும் அதே இடத்தில்தான் கழியும்.
மிதக்கும் படகுகள், மரத்துண்டுகள், பாறைகளில் மட்டுமில்லாமல் திமிங்கிலம், ஆமை, நண்டு, ஏன் கடல்பாம்புகள் மீது கூட கொட்டலசு ஒட்டிக் கொண்டு உயிர் வாழும்.
கொட்டலசு 6 மாதங்களில் முழுவளர்ச்சி அடையும், 5 முதல் 10 ஆண்டுகள் வாழும். சில கொட்டலசுகள் அதையும் தாண்டி உயிர்வாழக்கூடியவை.
கடல் அலை வந்து நீராட்டிச் செல்லும்போது மேல் திறப்பைத் திறந்து தன் கால்களால் துழாவி இதுகடல்நீரிலுள்ள நுண்சத்துகளைத் திரட்டி வாய்க்குள் நுழைத்து உணவாக்கிக் கொள்ளும்.
இது, ஒரு மனிதன் தலைகீழாக நின்று தன் கால்களால் உணவை சேகரித்து அதை வாய்க்குள் திணிப்பதுபோன்ற வேலை.

கொட்டலசுகளில் ஒன்று வாத்து கொட்டலசு. மனிதர்கள் உண்ணக்கூடிய ஒரே கொட்டலசு இதுதான். வாத்துகள் இந்த வகை கொட்டலசில் இருந்துதான் உருவானதாக பழங்காலத்தில் மனிதர்கள் நம்பியிருக்கிறார்கள். கப்பலின் அடியில் ஒட்டியிருக்கும் வாத்து கொட்டலசு பின்னர் சிறகுகள் முளைத்து வாத்தாக மாறி பறப்பதாகவும் நம்பியிருக்கிறார்கள்.
கப்பல், அல்லது தோணியின் அடியில் படரும் கொட்டலசுகள் நாளடைவில் கப்பல், அல்லது தோணியின் பாரத்தை அதிகமாக்கி, அவற்றின் வேகத்தைக் கணிசமாகக் குறைத்து விடக்கூடியவை.
அதனால், காலம்தோறும் கப்பல்கள், தோணிகள் கரையேற்றப்பட்டு அவற்றின் படர்ந்திருக்கும் கொட்டலசுகள் திட்டிக் கொண்டே அகற்றப்படுவது வழக்கம்.

கொட்டலசு என்ற பெயரே தமிழில் திரிந்து இப்போது ஆங்கில பாணியில் கொட்லாஸ் என அழைக்கப்படுகிறது. விரைவில், கொட்லாஸ் மீண்டும் தமிழில் கொட்டலசாக மாறும் என நம்புவோமாக…

Tuesday, 16 August 2016

கணவாய்கணவாய்.. இந்த கடலுயிர் ஏறத்தாழ 289 வகைகளைக் கொண்டது. முட்டிக் கணவாய், பீலிக் கணவாய், ஓட்டுக் கணவாய், பூங்கணவாய், கூந்தல் கணவாய், தூண்டில் கணவாய், பேய்க் கணவாய் என கணவாய்களின் உலகம் மிகப்பெரியது.
நாம் இங்கே பேசப்போவது எட்டுக்கால்களைக் கொண்ட பேய்க்கணவாயைப் பற்றி..
அக்டோ என்றால் கிரேக்க மொழியில் எட்டு. அக்டோபர் ஒருகாலத்தில் 8ஆவது மாதமாக இருந்ததால்தான் அக்டோபர் என்று பெயர் பெற்றது. அதேப்போல 8 கால்களை கொண்டு விளங்குவதால் பேய்க் கணவாய் அக்டோபஸ் (Octopus) என்ற பெயருடன் திகழ்கிறது. அக்டோபஸ் என்றால் எட்டு கைகளைக் கொண்டது என்று பொருள்.
நீலநிற இரத்தமும், 3 இதயங்களும் கொண்ட விந்தை உயிரினம் கணவாய். இதன் கண் குருடு என்றாலும், தோலின் மூலம் இது வெளிச்சத்தைப் பார்க்கக் கூடியது..10ல் ஒரு நொடிக்குள், இது நீலம், சாம்பல், பழுப்பு, பச்சை என நிறம் மாறக் கூடியது.
பேய்க்கணவாயின் உடலில் எலும்போ, கடினமான தகடோ கிடையாது. இதன் உடலில் உள்ள ஒரே வலிமையான பாகம், இதன் கிளிபோன்ற கூரிய அலகுதான். எலும்பற்ற உடலைக் கொண்டு விளங்குவதால் பேய்க் கணவாய், கடல் பாறைகளின் சிறிய கீக்கிடங்களில் கூட, உடலைப் பிதுக்கி நுழைந்து ஒளிந்து கொள்ளும்.
கூரிய அலகால் இது சிப்பி போன்றவற்றை பிளந்து அதன் உள்ளே நச்சு உமிழ்நீரை செலுத்தி இரையை செயலற்றதாக்கும். பின்னர் அதை இரையாக்கிக் கொள்ளும்.
இதன் 8 கைகளையும் உணரிழைகள் என்று சொல்லாமல் கைகள் என்றே கொள்ளலாம். பேய்க்கணவாயின் நியுரான்களில் மூன்றில் இருபங்கு அதன் கைகளில்தான் உள்ளது.
இந்த 8 கைகளும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யக்கூடியவை. ஒரு கை, பார் இடுக்கில் இரையைத் தேடும்போது, மற்றொரு கை சிப்பியைத் திறக்க முயற்சிக்கும்.
இந்த எட்டுகைகளைப் பயன்படுத்தி, படகுகளில் கூட பேய்க்கணவாய் ஏற வல்லது. பேய்க்கணவாயின் கைகள் துண்டிக்கப்பட்டால் மீண்டும் வளர்ந்து விடும்.
இதன் கைகள் ஒவ்வொன்றிலும் கிண்ண வடிவில் ஏராளமான உறிஞ்சான்கள் உள்ளன. இந்த உறிஞ்சான்கள் மிகச்சிறந்த அளவில் தொடுஉணர்வு கொண்டவை. உறிஞ்சான்கள் மூலம் பேய்க்கணவாயால் தொடும் பொருளின் சுவையை அறிந்து கொள்ள முடியும்.
கணவாயின் இரத்தம் நீலநிறமானது என ஏற்கெனவே பார்த்தோம். Hemocyanin  என்ற தாமிரம் கலந்த புரதச்சத்து காரணமாக கணவாயின் இரத்தம் நீலநிறமாக இருக்கிறது. உயிர்க்காற்றை ஏற்றும்போது கணவாய் அடர் நிறமாகவும், உயிர்க்காற்றை விடும்போது வெளிறவும் செய்யும்.
பேய்க்கணவாயின் 3 இதயங்களுக்கு உள்ள முதன்மை வேலை உடல்பாகங்களுக்கு ரத்தம் பாய்ச்சுவதுதான். ஓர் இதயம், உடல் பாகத்துக்கு உயிரூட்டும்போது, மற்ற இரு இதயங்கள், பூ அல்லது இணாட்டு எனப்படும் கணவாயின் செவுள்களுக்கு ரத்தம் செலுத்துகிறது.
கணவாய் நீந்தும்போது இப்படி ரத்தம் செலுத்தப்படுவது தாற்காலிகமாக நிறத்தப்படும். இதனால் கணவாய் களைப்படையும் என்பதால் பெரும்பாலும் நீந்துவதைத் தவிர்த்து, கடல்தரையில் தத்தி தத்தி தவழ்ந்து செல்வதையே பேய்க்கணவாய் விரும்பும்.
நீந்தும்போது சிபான் (Siphon) என்ற குழாய்க்குள் கடல்நீரை நிரப்பி, அதை வேகமாக வெளியே தள்ளி அதன்மூலமும் கணவாயால் நீந்த முடியும்.
கணவாய்கள் பொதுவாக இரவிலும் சில அந்திமாலை, அதிகாலை வேளைகளிலும் இரை தேடும். மீன், சிப்பி, இறால்களுடன் கடல்பறவைகளும் கூட கணவாய்க்கு இரையாகும். இரையின் மீது விழுந்து எட்டு கால்களால் அதை அமுக்கி தன் வாய்க்கு இழுத்து கணவாய் அதை உணவாக்கும்.
எதிரி மிரட்டினால் மை போன்ற கறுப்புத்திரவத்தை பீய்ச்சியடித்து எதிரியின் கண்பார்வையை கணவாய் மறைக்கும். இந்த மை எதிரியின் பார்வையை மறைப்பதோடு, எதிரியின் மோப்ப உணர்வையும் செயலிழக்கச் செய்து கணவாயை மோப்பம் பிடித்து பின்தொடர விடாமல் செய்து விடும். உலகில் மை வேலை தெரிந்த முதல் மந்திரக்கார உயிர் கணவாய்கள்தான் போலும்.
பேய்க்கணவாய் நம் வீட்டுப்பூனை அளவுக்கு அறிவுள்ளது. தக்கை கொண்டு மூடிவைத்த கண்ணாடி குப்பியை கணவாயால் திறக்க முடியும். மூடியை திருகிதிருகி திறக்கும் அறிவும் கணவாய்க்கு உண்டு.
கணவாய்கள் 2 லட்சம் முதல் 4 லட்சம் முட்டைகள் வரை இடக்கூடியவை. தாய்க் கணவாய் உணவு எதுவும் உண்ணாமல் அதன் முட்டைகளை பாசத்துடன் காக்கும்.
கணவாய்களில் ஆஸ்திரேலியக் கடல்பகுதிகளில் காணப்படும் நீலவளையக் கணவாயின் கடி ஆபத்தானது.

பேய்க்கடம்பன், சிலந்திமீன், நீராளி, சாக்குச் சுருள் போன்றவை கணவாயின் வேறு தமிழ்ப்பெயர்கள்.

Wednesday, 10 August 2016

சொறி மீன் (JellyFish)

ஏறத்தாழ 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கடலில் முன்தோன்றிய மூத்த இனம் சொறி இனம். இழுது மீன் எனவும் அழைக்கப்படும் சொறி மீன் உண்மையில் மீன் இனம் அல்ல. என்றாலும் இவை மீன்கள் என்றே அழைக்கப்படுகின்றன. சொறி

மீன்களில் ஏறத்தாழ 70க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. குடை முதல் குண்டூசித்தலை வரை பல அளவுகளில் சொறிமீன்கள் காணப்படுகின்றன.
ஜெல்லி போன்ற கொழகொழ உருவத்தில் இருப்பதால் இந்த இன மீன்களுக்கு ஜெல்லி மீன் என்பது ஆங்கிலத்தில் பெயர்.
நீரும், புரோட்டினும் கலந்து செய்த கலவையான சொறிமீன்கள், ஒருவகை மிதவை உயிரினங்கள். தன்னிச்சையாக இவற்றால் நீந்தமுடியும் என்றாலும் மிக வேகமாக நீந்தமுடியாது. கடலின் நீரோட்டத்தின்படி வழிந்து செல்லக்கூடிய சொறிமீன்கள், குடைபோன்ற அதன் தலையை அசைத்து அசைத்து நீந்தக் கூடியவை. குடையின் அடியில் உள்ள வாயால் கடல்நீரை வெளியே பீய்ச்சி அதன்மூலமும் சொறி மீனால் நீந்த முடியும்.
கடலில் மிதக்கும் கவர்கள், பாசிகளுடன் கலந்து மிதக்கும் சிறு மீன்முட்டைகள், சிற்றுயிர்கள் சொறி மீனின் உணவுகள். வாயால் உணவு உண்டு, அதே வாயால் வேண்டாதவற்றை இவை வெளியே தள்ளும். வயிற்றுக்குள் இரை இருக்கும்போது சொறிமீனால் மிதக்க முடியாது என்பதால், உண்ட வேகத்தில் உணவை இவை செரித்துவிடும். சிலவகை சொறிமீன்கள் தன் இனத்தையும் கூட உண்ணக்கூடியவை.
பெண்ணின் சேலை முந்தானை போல சொறிமீனைத் தொடர்ந்து கடலில்மிதந்தபடி வரும் அதன் விழுதுபோன்ற உணர்இழைகள், இரையைப் பிடிக்க உதவுகின்றன. இரையின் உடலில் நஞ்சை செலுத்தி அதை செயலிழக்க வைத்து உணவாக்கவும் இந்த உணர்இழைகள் பயன்படுகின்றனசொறிமீனை நாம் தொடும்போது அதன் நஞ்சு நம் தோலுக்குள் ஊடுருவி வேதனையைத் தருகிறது.
சொறிமீன்களில் எல்லா இனங்களும் நஞ்சுள்ளவை அல்ல. இருந்தாலும் எந்த சொறிமீனையும் ஆய்வு நோக்கில் நாம் தொட்டுப்பார்க்காமல் இருப்பதே நல்லது.
சில வேளைகளில் அதிக மீன்பிடிப்பு காரணமாக சொறிமீன்களை இரையாக்கும் மீன்கள், ஆமை போன்றவை குறைந்து போவதாலும், கடலில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றத்தாலும், ஊட்டமிக்க உணவு அதிகம் கிடைப்பதாலும் சொறிமீன்கள் அளவுகடந்து அதிக அளவில் பெருகும். இரு நீரோட்டங்கள் இணையும் இடத்தில் இதுபோன்ற சொறிமீன் கூட்டம் திடீரென பல்கிப் பெருகும். சொறிமீன்கள் பெருகினால் கடலில் கண்ணில் கண்ட இரைகளை எல்லாம் தின்று மீனவளத்தைக் குறையச் செய்யும்,
சில வேளைகளில் கூட்டம் கூட்டமாக சொறிமீன்கள் கரையொதுங்கவும் செய்யும்.
தமிழில் சொறிமீன் இனங்களுக்கு பலப்பல பெயர்கள் உள்ளன. அழுவைச் சொறி, காக்காய்ச் சொறி, வழுப்பினி சொரி, இட்லி சொறி, மணிச்சொறி, தவிட்டுச் சொறி, குவ்வரவுச் சொறி, நுங்குச் சொறி, குடுக்கைச் சொறி, வௌச் சொறி, கூரமா சொறி, வெளிர் சொறி என அடுக்கிக் கொண்டே போகலாம்.
காக்காய்ச் சொறி என்பது நீலநிறமான நீண்ட வால் உள்ள சொறி. நுங்குச் சொறி சதுரவடிவம் கொண்டது. கூரமா சொறி புள்ளிகள் உள்ளது. இது நம்மீது பட்டால் தீப்பட்டது போன்ற வலியுணர்வைத் தரும்.
வௌச்சொறியும், குடுக்கைச் சொறியும் பனை நுங்கைப் போன்றவை. தவிட்டுச் சொறி என்பது குவ்வரவு சொறி போன்றது. அதாவது கேழ்வரகு மாவின் நிறம் கொண்டது.
சொறிகளில் மிகநஞ்சுள்ளவைக்கு 2 புள்ளிகளும் நஞ்சு குறைந்தவற்றுக்கு ஒரு புள்ளியும் நாம் வழங்குவோமானால், வௌச்சொறி, குடுக்கைச் சொறி இரண்டும் ஒரு புள்ளி பெறும். தவிட்டுச் சொரி, குடுக்கச் சொறி போன்றவை தலா 2 புள்ளிகள் பெறும்.
சொறிமீன்களால் இயற்கைக்கு என்னதான் நன்மை. இவை கடல் ஆமைகளுக்கும், சிலவகை மீன்களுக்கும் உணவாகின்றன. சிலவகை மீன்கள் பெரிய கொல்மீன்களிடம் பிடிபடாமல் தப்பிக்க சொறிமீன்கள் காப்பரண்களாகப் பயன்படுகின்றன.
சீனா போன்ற நாடுகளில் சிலவகை சொறிமீன்கள் உணவாகவும் பயன்படுகின்றன.