Thursday 2 February 2017

கண்டா ஓங்கல் (Risso Dolphin)

ஓங்கல் இனத்தில் சற்று பெரிய உடல்தடித்த ஓங்கல் இது. ஓங்கல்களுக்கே உரித்தான நீண்ட அலகு இல்லாத ஓங்கலும் இதுதான். பந்து வடிவ செங்குத்துத் தலை, கண்டா ஓங்கலின் முதன்மை அடையாளம். அரிவாள் போன்ற சற்று வளைந்த ஆனால் உயர்ந்து நிமிர்ந்த முதுகுத்தூவியையும் இதன் முதன்மை அடையாளமாகக் கொள்ளலாம்.
கண்டா ஓங்கல் 13 அடி நீளம் வரை வளரக்கூடியது. 500 கிலோ வரை நிறையிருக்கக் கூடியது. குட்டியில் சாம்பல் நிறமாகவும், பின்னர் சாக்லெட் பழுப்பு நிறத்துக்கும் மாறும் கண்டா ஓங்கல், முதிர்ந்ததும் வெள்ளி நிறமாக மாறி பின்னர் கறுநிறம் கலந்த பலப்ப பலகையின் (Slate) நிறத்துக்கு மாறும். கண்டா ஓங்கலின் அடிப்பகுதி வெள்ளை நிறம். இதன் பக்கத்தூவிகளும், வாலும் கறுப்பானவை. பக்கத்தூவிகள் நீளமானவை கூடவே கூர்மையானவை.
கண்டா ஓங்கலின் பக்கத்தூவிகளின் கீழ்ப்பகுதி வெண்மை நிறம் என்பதுடன் இந்த வகை ஓங்கலின் கன்னம் தொடங்கி வயிறுவரை நங்கூரக் குறிகள் காணப்படும்.
இதன் கரிய நிற உடல் முழுவதும் ஏராளமாகவும், தாராளமாகவும் வெள்ளை நிற கிறுக்கல் குறிகளைக் காணலாம்.
இதர கண்டா ஓங்கல்களுடன் விளையாடும்போதோ அல்லது சண்டையிடும் போதோ அவற்றின் பல்பட்ட கீறல்களாக இவை இருக்கலாம். அல்லது கண்டா ஓங்கலின் முதன்மை இரைகளான கணவாய்களால் ஏற்பட்ட கடி காயங்களாகக் கூட இந்த வெள்ளைக்கீறல்கள் இருக்கலாம்.
Grampus இனத்தைச் சேர்ந்த ஒரே உறுப்பினர் கண்டா ஓங்கல்தான்.
கண்டா ஓங்கல்களில் ஆணும், பெண்ணும் ஏறத்தாழ ஒரே அளவு உருவமும் வடிவமும் கொண்டவை. எனினும், ஆண் ஓங்கலின் முதுகுத்தூவி சற்று நீளமாகவும், ஆணை விட பெண் ஓங்கல் சற்று பெரியதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
வெப்பக்கடல் ஓங்கலான கண்டா ஓங்கலுக்கு கீழ்த்தாடையில் 2 முதல் 7 இணைப்பற்கள் உள்ளன. எதிரிகளான சுறாக்களுடன் சண்டையிட, கணவாயை இரை பிடிக்க இந்த பற்கள் பயன்படுகின்றன.
ஆழ்கடல் ஓங்கலான கண்டா ஓங்கலை கரைப்பகுதியில் காணமுடியாது. 1300 முதல் 3300 அடி ஆழத்தில் இது காணப்படும். ஐந்தே மணித்துளிகளில் முக்குளித்து வெகுவிரைவில் ஆயிரம் அடி ஆழத்துக்கு இரைதேடி இது செல்லக்கூடியது. அங்கு அரைமணிநேரம் வரை இது தங்கியிருக்கக் கூடியது.
கண்டா ஓங்கலின் முதன்மை இரை கணவாய்கள்தான். பீலிக்கணவாய் (Squid), ஓட்டுக் கணவாய், பேய்க்கணவாய் போன்ற அனைத்துக் கணவாய்களையும் கண்டா ஓங்கல் வேட்டையாடும். எனினும், இந்தப் பட்டியலில் பீலிக் கணவாய்க்கே முதலிடம். பீலிக்கணவாய்கள் இரவுப்பொழுதில் இரை தேடி கடல்மட்டம் நோக்கி கிளம்பும்போது அவற்றை கண்டா ஓங்கல் வேட்டையாடும். மீன்கள், நண்டுகளையும் இது உண்ணும்.
கண்டா ஓங்கல் திமிங்கிலம் போல தலைமேலுள்ள துளையால் மூச்சுக் காற்றைப் பீய்ச்சியடிக்க கூடியது. சிறிய குக்கரில் இருந்து கிளம்பும் ஆவி போல ஒன்றரை அடி உயரத்துக்கு காற்றை கண்டா ஓங்கல் பீய்ச்சியடிக்கும்.
ஓங்கல்களுக்கே உரித்தான கழைக்கூத்தாடி வித்தைகளில் கண்டா ஓங்கலும் கைதேர்ந்த்து. கடல்நீரைவிட்டு முழுவதுமாக இது துள்ளிவிழக்கூடியது. வாலை வன்மையாக ஆட்டுவதுடன், சீழ்க்கை உள்பட பல்வேறு ஒலிகளை இது எழுப்ப வல்லது.

கண்டா ஓங்கல் 10 முதல் 12 மாதத்தில் ஒரே ஒரு குட்டியை ஈனக்கூடியது. அலைகளில் சறுக்கி சில்லியெடுக்கும் (Surf) பழக்கம் இதற்கு உண்டு. மற்ற இன ஓங்கல்களைப் போலவே கண்டா ஓங்கலும் இதர ஓங்கல்களுடன் நட்பு பாராட்டும். இனப்பெருக்க காலத்தின்போது மட்டும் தன்னின ஓங்கல்களுடன் இது சிறு சண்டைகளில் ஈடுபடும். 10 முதல் 50 ஓங்கல்கள் கொண்ட கூட்டமாகத் திரியும் கண்டா ஓங்கல்கள் சிலவேளை ஆழப்பெருங்கடல்களில் திருவிழாவுக்குத் திரள்வது போல 4 ஆயிரம் வரை திரள்வதும் உண்டு.

கண்டா ஓங்கலின் ஆயுள் ஏறத்தாழ 20 ஆண்டுகள்.

No comments :

Post a Comment