Wednesday, 15 February 2017

மூச்சையடக்க வாரீகளா? (ஓங்கல் போல)

முக்கடலில் மூச்சடக்கி முத்தெடுக்கும் வீரன்…
தமிழ்த்திரைப்படப் பாடல் ஒன்றில் வரும் வரி இது. முக்கடலில் மூச்சடக்கி மூழ்கக் கூடியவர்கள் நாம் மட்டுமல்ல, கடல்வாழ் ஓங்கல்களும், திமிங்கிலங்களும் கூட மூச்சடக்கி மூழ்கக் கூடிய வீரர்கள்தான். என்ன ஓங்கல்களுக்கும், திமிங்கிலங்களுக்கும் எழுதப்படிக்க, இலக்கியம் படைக்கத் தெரியாது. ஆகவே இதையெல்லாம் ஒரு பெருமையாக அவை வெளியே சொல்லிக் கொள்வதில்லை.
ஓங்கல், ஓவாய் என்றெல்லாம் அழைக்கப்படும் டால்பின், நம்மைப் போலவே ஒரு பாலூட்டி (Mammal)…
பாலூட்டிக்கான இலக்கணம் என்ன? உயிருள்ள ஒரு குட்டியை ஈன்றெடுக்க வேண்டும். பெண் விலங்கு குட்டிக்குப் பால்தர வேண்டும், வெப்ப ரத்தம் உடையதாக இருக்க வேண்டும், காற்றை உள்ளிழுத்து வெளியேவிட்டு சுவாசிக்க வேண்டும். இன்றியமையாத இந்த 4 இலக்கண விதிகளும் ஓங்கல்களுக்கும் இருக்கின்றன.
கடல்வாழ் பாலூட்டியான ஓங்கலுக்கு கடல்மீன்களைப் போல கடல்நீரில் உள்ள உயிர்க்காற்றைப் பிரித்தெடுக்கக் கூடிய செவுள் (Gill) இல்லை. இதனால் ஓங்கல் மூச்செடுத்து உயிர்வாழ கடல் மட்டத்துக்கு மேலே அடிக்கடி வந்தாக வேண்டும்.
நமது வாயால் நாம் இரண்டு வேலைகளைச் செய்ய முடியும். ஒன்று உணவு அருந்துவது, இன்னொன்று மூச்செடுப்பது. ஆனால், ஓங்கல்களால் நம்மைப்போல வாயால் மூச்சுவிட முடியாது. மூச்செடுப்பதற்காகவே முதுகின் மேலே ஓங்கலுக்கு மூச்சுத்துளை (Blowhole) உண்டு. அதற்கும் நுரையீரலுக்கும் இடையே ஒரு பாதை உண்டு. இந்த காற்றுக்குழாய் வழியாகவே ஓங்கல் மூச்சுவிடும்.
அதுபோல ஓங்கலின் வாயையும், இரைப்பையையும் இன்னொரு குழாய் வழி இணைக்கிறது. என் வழி தனி வழி என்பதுபோல இந்த உணவுக்குழாய் வழிக்கும், மூச்சுவிட பயன்படும் காற்றுக்குழாய் வழிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரேவழியாக இருந்தால், ஓங்கல் ஒருவேளை உணவு உண்ணும்போது வாய்க்குள் கடல்நீர் புகுந்து, நுரையீல் நிறைந்து, ஓங்கல் ஒருவேளை கடலில் மூழ்கிவிடலாம். அப்படி, மூழ்கிவிடக்கூடாது என்பதற்காக இயற்கை செய்த சிறப்பு ஏற்பாடு இது.
மூச்சுவிடும் ஒவ்வொரு முறையும் இறைவா உன்னை நான் நினைக்கிறேன் என்பது மனிதர்களின் பிரார்த்தனை வரி. இப்படி நாம் வெளியே சொல்லிக் கொண்டாலும் மூச்சுவிடும் ஒவ்வொரு முறையும் மனிதர்கள் அதே நினைப்பாகவே இருப்பதில்லை. நம்மை அறியாமலேயே நாம் மூச்சுவிட்டு உயிர் வாழ்கிறோம். அயர்ந்து தூங்குகிறோம்.
ஆனால் ஓங்கலின் கதை அப்படியல்ல. மூச்சுவிடும் வேலையை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது ஓங்கலின் கடமை. அந்தக் கடமை தவறினால் நுரையீரலில் நீர்நிரம்பி, கடலடியில் மூழ்கி ஓங்கல் இறக்க வேண்டியதுதான். இதனால் ஓங்கல்கள், ஓய்வெடுக்கும் போதும் கூட அரை விழிப்பு நிலையிலேயே இருந்து மூச்சுவிடுவதை தவறாமல் செய்யும். இந்த அரைவிழிப்பு நிலை, மூச்சுவிட்டு உயிர் வாழ மட்டுமின்றி, சுறா போன்ற எதிரிகள் மேல் ஒரு கண்ணாக இருந்து உயிர் தப்பவும் உதவுகிறது.
ஓங்கல், அதன் முதுகில் உள்ள ஊதுதுளை (Blowhole) வழியாக மூச்சுவிடுகிறது என்பதை முன்பே பார்த்தோம். இந்த ஊதுதுளை பிறை போன்ற அரைவட்ட வடிவிலான சிறுபள்ளமாக ஓங்கலின் முதுகில் அமைந்திருக்கும். தசைகளை அசைத்து அதன் மூலம் இந்த ஊது துளையை நீர்புகா வண்ணம் இறுக்கமாக அடைக்கவோ, திறக்கவோ ஓங்கலால் முடியும்.
கடல்மட்டத்துக்கு ஓங்கல் வரும்போது இந்த ஊதுதுளையின் சிறுபள்ளத்தில் சிறிதளவு கடல்நீர் தேங்கிநிற்கும். அந்த கடல்நீரை டப்பென்ற ஓசையுடன் ஓங்கல் வெளியேற்றும். இந்த டப் ஓசையை கடல்மேல் நாம் கேட்கலாம்.
பின்னர், நுரையீரலில் தேங்கியிருந்த மூச்சுக்காற்றை வெளியே விட்டுவிட்டு, புதிய காற்றை ஓங்கல் உள்ளிழுத்துக் கொள்ளும். 0.3 நொடியில் இந்த மூச்செடுப்பு வேலை முடிந்து விடும்.  
அதேப்போல ஓங்கல்களால் 3 முதல் 7 நிமிடங்கள் வரை மூச்சடக்க முடியும். தம் கட்டி 20 நிமிடங்கள் வரை மூச்சடக்கக் கூடிய ஓங்கல் இனமும் உண்டு. ஓங்கலின் இனமும், கடலின் ஆழமும், நீரின் அழுத்தமும் இப்படி மூச்சடக்கும் கால அளவை முடிவு செய்கின்றன. கடலில் 10 அடி ஆழம் முதல் 2 ஆயிரம் அடி ஆழம் வரை ஓங்கல் முக்குளிக்கக் கூடியது.
மனித உடலின் மொத்த எடையில் 7 விழுக்காடுதான் ரத்தம். ஆனால், ஓங்கல்களைப் பொறுத்தவரை அவற்றின் உடல்எடையில் 10 முதல் 15 விழுக்காடு ரத்தம் உண்டு. ஓங்கலின் குருதியில் நம்மைவிட அதிக அளவு சிவப்பணுக்கள் இருக்கும். குருதி மற்றும் தசையில் தேங்கியிருக்கும் அதிக அளவு உயிர்க்காற்று காரணமாக ஓங்கலால் மனிதர்களை விட அதிக ஆழத்தில் முக்குளித்து மூச்சுப்பிடிக்க முடிகிறது.
கடல்மேல் வந்து மூச்செடுப்பதும், இரைக்காக கடலடியில் மூழ்குவதும் ஓங்கல்களின் வாழ்க்கையில் ஓயாமல் நடக்கும் நிகழ்வுகள். ஓங்கல்களுக்கு கண்பார்வை குறைவு. கலங்கிய கடலடியில் நிற்கும் வலையில் மீன்கள் சிக்கியிருப்பதை, இயற்கை தந்தை இரையாக கருதி ஓங்கல்கள் உண்ண வந்து வலையில் சிக்கிக் கொள்ளலாம். அதனால் உரியநேரத்தில் கடல்மேற்பரப்புக்கு வந்து மூச்செடுக்க முடியாமல் அவை இறக்கவும் நேரிடலாம்.
ஓங்கல்கள் தொடர்பான வியப்புகளில் ஒன்று அவை எழுப்பும் விந்தையான ஒலிகள். (இதை ஒலி என்றே சொல்லலாமா என்று தெரியவில்லை. தமிழ் இலக்கணப்படி குரல்வளை வழியாக வெளியே வருபவை மட்டுமே ஓலிகள். மற்றவை எல்லாம் ஓசைகள்)
ஓங்கல்களுக்கு குரல் நாண் (Vocal Cord) என்று எதுவும் கிடையாது. நாம் ஏற்கெனவே பார்த்த ஓங்கலின் மூச்சுத்துளை, நுரையீரல் இடையிலான காற்றுக்குழாயில், காற்றுப்பைகள் இருக்கும். இந்தக் காற்றுப்பைகளில் காற்றை ஓங்கல்கள் செலுத்தும்போது அவை அதிருகின்றன. (சும்மா அதிருதுல்ல.) இந்தக் காற்றுப்பைகளில் காற்றை உருட்டிவிளையாடுவதன் மூலம், சீட்டி (சீழ்க்கை) ஒலி, பறவை, சுண்டெலியின் கிரீச் சத்தம், தாழ்ப்பாள் போடும் ஓசை, உறுமுல், செல்லச் சிணுங்கல், அழுகை போன்ற  ஏராளமான ஒலிகளை ஓங்கலால் எழுப்ப முடியும்.
ஓங்கல், ஒன்று வலையில் சிக்கித்தவித்தால் காக்கைக் கூட்டம் போல அதை காக்க வரும் ஓங்கல்கூட்டம் அப்போது மதலை அழுவதைப்போல வேதனைக்குரல் எழுப்பும். குறிப்பாக சீங்கண்ணி ஓங்கல்களிடம் இந்த அழுகைச் சத்தத்தை நாம் சற்று அதிகமாகவே கேட்கலாம்.

(படத்தில் இருப்பது சீனி ஓங்கல் எனப்படும் வெள்ளை ஓங்கல். கலங்கிய கடல்நீரில் ஆழமற்ற கரைப்பகுதிகளில் காணப்படும் ஓங்கல் இனம் இது.)

No comments :

Post a Comment