Thursday, 9 February 2017

சூரை (Tuna) குடும்பம்

சூரை மீன்களின் குடும்பம் மிகப்பெரியது. இந்தக் குடும்பத்தில் ஏறத்தாழ 75 வகை மீன்கள் தேறும். நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில் ஏலவே (ஏற்கெனவே) குறிப்பிட்டதுபோல பார்த்தால் சூரை குடும்பத்தில் மொத்தம் 15 உருப்படிகள்தான். ஆனால் மேலை நாட்டவரின் கணக்குப்படி கானாங்கெழுத்தி எனப்படும் Mackeral மீன்கள் சிறிய ரக சூரை இன மீன்களாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அந்தக் கணக்குப்படி பார்த்தால் சூரை குடும்பத்தின் மொத்த தலைக்கட்டுகளின் எண்ணிக்கை 75.
சூரையைப் பற்றி சிறுகுறிப்பு வரையச் சொன்னால், சூரை ஓர் ஆழ்கடல் மீன், வேகத்துக்குப் பேர் பெற்ற மீன், நீந்துவதற்கு வசதியாக உடலை மிகவும் அழகாக தகவமைத்துக் கொண்ட மீன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
சூரைகள் பெரும்பாலும் செதிள்கள் அற்றவை. அல்லது பொடிச் செதிள்கள் உள்ளவை. இந்த பொடிச் செதிள்கள் கூட மீன் துள்ளித்துடிக்கும்போது கழன்று விடக்கூடியவை. அல்லது கையோடு வந்து விடக்கூடியவை.

சூரைகளில் நீலச்சூரைக்கு எட்டவாளை என்ற பெயரும், மஞ்சள் சூரைக்கு கௌவாலை என்ற பெயரும் உண்டு. சூரைக்கு செதிள் கிடையாது மாங்கு மட்டுமே உண்டு. ஆனால், நீலச்சூரைக்கு லேசான செவுள்கள் இருக்கும். கௌவாலை என்ற மஞ்சள் சூரை சிறிய கண்கள் உள்ளது. தரையில் உருட்டி விட்டால் உருளையைப் போல இது உருளக்கூடியது.
சூரைகளில் இன்னொரு ரகம் பீப்பாய் கௌவாலை. கறுப்புத் தூவிகள் கொண்ட மீன் இது. பெயருக்கேற்ற உருளை உடல். இதன் வாலின் சுக்கான் வால்பகுதியின் முனை மஞ்சள் நிறம்.
மிகவும் பலமிக்க மீன் பீப்பாய் கௌவாலை. இரண்டரை அங்குல பலகையை இது அடித்து உடைக்க கூடியது. வாலால் அடித்து மனிதர்களின் கையையும் முறிக்கக் கூடியது. பிடிபடும் பீப்பாய் கௌவாலையை கைக்கொள்ள எளிய வழி அதன் பெரிய கண்களைப் பொத்துவதுதான். கண்களைப் பொத்தினால் பீப்பாய் கௌவாலை துடித்து அடங்கும். கண்ணில் மண்ணைப் போட்டும் இதை அடக்குவார்கள்.
சூரைகளில் இன்னொரு வகை கேரை. இருண்ட ரத்தச் சிவப்பு நிற தசையுள்ள மீன் இது. கீரை என்ற பெயரும் இதற்கு உண்டு. இந்தமீனின் உடல்மேல் பகுதி அடர்நீலம். கீழ்ப்பகுதி சாம்பல் கலந்த நிறம்.
சூரையின் பிறிதொரு வகை வரிச்சூரை. பெயருக்கேற்றபடி வரிகள் கொண்ட சூரை இது. நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில் வரிச்சூரையைப் பற்றிய பதிவு ஏற்கெனவே உண்டு.
மீன்களில் மிகவும் பெயர் பெற்ற வஞ்சிரம் அல்லது வஞ்சூரன் மீனும் கூட சூரைகுடும்பத்தில் அடங்கக் கூடிய மீன்தான்.
Spanish Mackeral என ஆங்கிலத்திலும் கட்டையன்சீலா, மாவுலாசி, அறுக்குளா என்றெல்லாம் அழைக்கப்படுகிறது வஞ்சிரம்.
சூரைகளில் அல்பக்கோர் (Albacore) குளிர்க்கடல் மீன். வெள்ளைச்சூரை என்று அழைக்கப்படும் இது வெண்மை நிற சதையும் கொண்டது. அதேப்போல பொனிட்டோ (Bonito) என்ற மற்றொரு சூரை இன மீன், சிறியது, எண்ணெய்ப் பசையுள்ள சதையை உடையது. ஆகவே இந்த மீனை விரும்பி உண்ண மாட்டார்கள்.
பீலிக்கணவாய் (Squid), நெத்தலி, சாளை மீன்களை உண்ணக்கூடிய மீன் இது. இதை பல்லுள்ள மேக்கரல் மீன் என்றும் விளிப்பார்கள்.
சூரைகளில் இன்னொரு வகை சூரை, சீலா சூரை என்று அழைக்கப்படும் பல்லன் சூரை (Dog Toothed Tuna) . கூரிய பற்கள் காரணமாக சீலா சூரை என்பது இதன் செல்லப் பெயர்.
ஆழ்கடல் பவளப்பாறைகள், கேணிப் பார்கள் எனப்படும் ஆழக்குழிகள், கடல் மேடுகளில் இது காணப்படும். சுறாக்களின் முக்கிய இரை பல்லன் சூரைதான்.
சூரைகளில் இன்னும் பொள்ளல் சூரை, போத்தல் சூரை, எலிச்சூரை (Frigate tuna) போன்ற வகைகளும் உள்ளன.
பொள்ளல், போத்தல், எலிச்சூரைகள் வலைகளில் கூட்டம் கூட்டமாக சிக்கக் கூடிய சிறிய ரக சூரைகள். எலிச்சூரையில் இன்னொரு தனி ரகம் குத்தெலிச் சூரை.
எலிச்சூரைக்கு அயலைச்சூரை, உருளன்சூரை என்ற பெயர்களும் உள்ளன. ஒரு பருவத்தில் மிகவும் அதிகமாக காணப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் காணாமல் போவது எலிச்சூரையின் தனித்தன்மை.
மாசிக் கருவாட்டுக்குப் பயன்படும் மீன் இனமும் சூரைதான்.  இதன்முள்நீக்கி சதைகளை அரைவேக்காட்டாக அவித்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி, சணல் சாக்கில் இட்டு முறுக்கி சொட்டுநீர் இல்லாமல் பிழிந்து, பின்னர் வெய்யிலில் காயவைத்து, பூட்டிய தனிஅறையில் புகை அடுப்புகளுக்கு மேல் இதை தொங்கவிட்டு மாசிக் கருவாடாக மாற்றுவார்கள்.

இப்படி அவித்து வெய்யிலில் உலர வைத்து புகையூட்டினால், இது கறுப்பு மரக்கட்டை போல ஆகும். நீண்டநாள் தாங்கும்.

No comments :

Post a Comment