Wednesday 12 June 2019


பூவாலி (Long finned Herring)

பூவாலி…. இந்தப் பெயரை பூவாலி என்று எழுதுவதா? அல்லது பூவாளி என்று எழுதுவதா என்பதுகூடத் தெரியவில்லை. பூவாலி என்ற பெயர் பூவைப்போன்ற வாலுடைய மீன் என்பதைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.
கடலின் பெருங்கூட்ட மீனினங்களான வெங்கணா, சாளை, நெத்தலி போன்றவை Clupeidae குடும்பத்தைச் சேர்ந்தவை. அந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு மீன் இனம் பூவாலி. Opisthopterus tardoore என்பது பூவாலியின் அறிவியல் பெயர்.
இதில் Opisthe என்ற கிரேக்க மொழிச்சொல், பின்புறத்தையும்,  Pteron என்ற சொல் சிறகு அல்லது தூவியையும் குறிக்கிறது. ‘பின்புறமாக நீண்டதூவி கொண்ட மீன்என்று இதனைப் பொருள்படுத்திக் கொள்ளலாம்.
20 செ.மீ. வரை நீளம் கொண்ட பூவாலி மீன்கள் அவற்றின் பெயருக்கேற்ப, 51 முதல் 63 மென்கதிர்களைக் கொண்ட பின்அடிப்புற தூவியைக் கொண்டவை. இதனால் ஆங்கிலத்தில் இந்த மீன், ‘நீளத்தூவி வெங்கணா’ (Long finned Herring) என வழங்கப்படுகிறது.
பூவாலி மீனின் வயிற்றின் முன்பகுதி நன்கு வீங்கி குவிந்திருக்கும். அதில் 29 முதல் 35 முள்தகடுகள் இருக்கலாம்.
பூவாலியின் கீழ்த்தாடை அதன் மேல்தாடையை ஓவர்டேக் செய்து முன்னேறி வானத்தைப் பார்த்தவண்ணம் மேல்நோக்கியபடி இருக்கும். கன்னத்துத் தூவி தலையின் அளவுக்கு சமமாகவோ அல்லது தலையை விட நீளமாகவோ கூட இருக்கலாம்.
பூவாலியின் முதுகுத்தூவி மிகவும் சிறியது. முதுகின் நடுப்பகுதிக்கும் அப்பால் சற்று பின்புறமாக, இருக்கிறதா அல்லது இல்லையா என்று ஐயப்பாட்டை எழுப்பும் வண்ணம் முதுகுத் தூவி அமைந்திருக்கும்.
பூவாலி மீன் தட்டையான உடலும், பெரிய கண்களும் கொண்டது. செதிள்கள் எளிதாக கழன்று வந்து விடக்கூடியவை. செவுள் திறப்பின் அருகே கருப்புநிறத் திட்டு காணப்படும்.
இந்தியப் பெருங்கடலில் அரபிக்கடலின் தென்பகுதி, ஓமான் வளைகுடா, வங்கக் கடலில் சென்னை கடற்பகுதி, அந்தமான், மியான்மர், தாய்லாந்து, பினாங்கு தீவுப் பகுதிகளில் பூவாலி காணப்படுகிறது.
கரையோர மீனான பூவாலி, மீன் முட்டைகள், சிறுமீன்கள், இறால்கள், லார்வாக்களை உண்டு வாழ்கிறது.
மலையாள மொழியில் இந்த மீன் அம்பட்டா என அழைக்கப்படுகிறது.
பூவாலி மீன், தோட்டா மீனுக்கு மிகவும் நெருங்கிய உறவுக்கார மீன். தோட்டா மீன்களில் கருவாலன் தோட்டா, கருவத்தோட்டா, தாடித் தோட்டா, மீராக்கைத் தோட்டா, சென்னித் தோட்டா (சென்னித்தோட்டா), குணாத் தோட்டா என ஆறு வகைகள் உள்ளன. மென்மையான முதுகு கொண்ட குணாத் தோட்டா ஆங்கிலத்தில் Russel’s smooth back herring என அழைக்கப்படுகிறது.
தோட்டா மீன்கள் மனிதர்களுக்கு சிறிய அளவில் உணவாகவும், பெரிய அளவில் உரமாகவும் பயன்படுகின்றன.
தோட்டா மீன் பற்றி ஒரு சுவையான தகவல். கடற்கரை மணலில் ஆயிரம் வகை கருவாடுகள் காய வைக்கப்பட்டிருந்தாலும், காகம் தோட்டா கருவாட்டை குறிவைத்து தூக்கிச் செல்லும். முள்நிறைந்த தோட்டா கருவாட்டில் சுவையான  வயிற்றுப்பகுதியை  மட்டும் தின்றுவிட்டு மீதத்தை போட்டுவிடும்.

No comments :

Post a Comment