Thursday, 30 May 2019


சிரட்டைக்குள் ஒளியும் சின்ன கணவாய்

இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் காணப்படும் ஒரு சிறிய வகை கணவாய் தேங்காய் கணவாய் (Coconut Octopus).
கடலடியில் கிடைக்கும் தேங்காய்ச் சிரட்டை அல்லது சிப்பியைச் சுமந்து கொண்டு திரிவதால் இந்தக் கணவாய்க்கு இப்படியொரு பெயர்.
தேங்காய் கணவாய் ஏறத்தாழ மூன்றங்குல நீளம் கொண்டது. இதன் கால்கள் அரையடி அதாவது ஆறங்குல நீளம் கொண்டவை. தேங்காய் கணவாயின் அறிவியல் பெயர் Amphioctopus Marginatus.
கணவாய் குடும்பத்துக்கே உரித்தான விதத்தில், இந்த சிறுகணவாயும் கூட நிறம் மாறக் கூடியதுதான். எனினும், இதன் இயல்பான நிறம் செம்பழுப்புநிறம். உடல் முழுக்க நரம்புகளைப் போல கருநிறக் கோடுகள் காணப்படுதால், தேங்காய் கணவாயை, நரம்புக் கணவாய் என்றும் சிலர் அழைப்பார்கள்.
பெண்கள் அணியும் குட்டைப்பாவாடையைப் போல இந்தக் கணவாயின் கால்களுக்கு இடையில் ‘ஸ்கர்ட்’ போட்டதுபோல சவ்வுப் பகுதி காணப்படும். மற்ற கணவாய்களுக்கு இல்லாத வகையில் இந்த சவ்வுப்பகுதி கால்நுனியை நோக்கி சற்று நீண்டிருக்கும். அதனால் பார்வைக்குத் தேங்காய் கணவாய், பாராசூட் போலவே தோற்றம் அளிக்கும்.
இந்த கணவாயின் உறிஞ்சுகுழல்கள் மஞ்சள் நிறமாகவும், உறிஞ்சுக் குழாய்களின் அடிப்பகுதிகள் நீலம் கலந்த வெண்மை நிறமாகவும் தோன்றும்.
கணவாய்களில், தேங்காய் ஓடு அல்லது கிழிஞ்சலை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் ஒரே கணவாய் இந்த தேங்காய் கணவாய்தான். தேங்காய் ஓடு அல்லது கிழிஞ்சலை இது தற்காலிக வீடாக கையில் ஏந்திய படி கடலடியில் சுமந்து செல்லும். எட்டுக் கைகள் இருப்பதால், கிளிஞ்சலின் மீது உட்கார்ந்து கொண்டு இரு கைகளால் அதைத் தாங்கிக் கொண்டு, மற்ற கைகளால் கடலடியில் இந்தக் கணவாய் வேகவேகமாக நகரும்.
ஊர்த்திருவிழாக்களில் வித்தை காட்டுபவர்கள் கட்டைக்கால்களில் நடப்பதைப் போல தேங்காய் கணவாய் மிக விரைவாக கடலடியில் தனது உடமையைச் சுமந்தபடி வேகமாக ஓடக் கூடியது.
தேங்காய் கணவாய்களிடம் இப்படி சிரட்டை அல்லது கிழிஞ்சலை தூக்கிச்செல்லும் வழக்கம் இருப்பது உண்மைதான் என்பதை, 500 மணிநேர ஆய்வுக்குப்பின், 20 வெவ்வேறு தேங்காய் கணவாய்களை உற்று நோக்கியபின் கடலியல் அறிஞர்கள் உறுதிசெய்துள்ளனர்.
அஞ்சாளை, சுறா போன்ற எதிரிகளிடம் இருந்து ஆபத்து வந்தால், தேங்காய் கணவாய் தனது தற்காலிக வீட்டுக்குள் நுழைந்து அதை மூடி, ஒரு கோட்டையைப் போலாக்கி எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும். சிலவேளைகளில் தேங்காய் மூடிக்குள் இருந்தபடி அதை உருட்டிக் கொண்டே நகர்ந்து எதிரியை இது ஏமாற்றும். தேங்காய் கணவாயின் எதிரிகள் இந்த மூடியைத் திறந்து தேங்காய் கணவாயை உண்ணும் அளவுக்கு அறிவில்லாதவை. ஆகவே இந்த தந்திரம் செல்லுபடியாகிறது.
அதேப்போல, தேங்காய்க் கணவாய், தனது தற்காலிக வீட்டுக்குள் ஒளிந்திருந்து உருமறைப்பு செய்து கொண்டு அருகில் வரும் நண்டு, இறால், சிறுமீன்களை வேட்டையாடவும் செய்யும்.
மணலில் புதைந்து கிடக்கும் கிழிஞ்சல்களை இது பறித்தெடுத்து அதன்மீது நீர்ப்பாய்ச்சி சுத்தப்படுத்தி தனது கேடயமாக, வீடாகப் பயன்படுத்திக் கொள்ளும். பயன்தராத தேங்காய் ஓடு, சிப்பிகளை இது தூக்கி தூர வீசியெறியவும் செய்யும்.
பெரும்பாலான கணவாய்களைப் போலவே தேங்காய் கணவாயும் நச்சுத்தன்மை உள்ளது. ஆனால், இதன் நச்சு மனிதர்களுக்கு ஆபத்தற்றது. மட்டி போன்ற கடலுயிர்களின் மேல் தோட்டில் துளையிட்டு, தனது நஞ்சை உள்செலுத்தி எதிரியை மயக்கமடையச் செய்து, அதன் உள்ளிருக்கும் சதையைத் திரவமாக்கி தேங்காய் கணவாய் உறிஞ்சி உணவாக்கிக் கொள்ளும்.
600 அடி ஆழ கடல் பகுதிகளில் தேங்காய் கணவாய் காணப்படும். அதிகாலையிலும், அந்தி மாலையிலும் இது இரை தேடும். தேங்காய் கணவாயின் உறிஞ்சுக்குழாய் முனைகள் இருட்டில் தொடர் மின்விளக்குகளைப் போல பளபளக்கக் கூடியவை. கண்ணைப் பறிக்கும் அழகுடன் கடலடியில் இவை பளபளக்கும்.
தேங்காய் கணவாய், இணைசேரும் காலங்கள் தவிர தனது வாழ்நாள் முழுக்க தனித்து வாழக்கூடியது. தேங்காய் ஓடு, சிப்பி கிடைக்காவிட்டால் மணலுக்கு அடியில் கண்கள் மட்டும் தெரிய இது புதைந்து கொள்ளும்.
பெண் கணவாய், அதன் முட்டைகளைக் காக்கும் போது இடையூறு ஏற்படால் மையைக் கக்கி சுற்றுப்புறத்தை ‘இருட்டாக்கும்’.
தேங்காய் கணவாயின்  எடை ஏறத்தாழ கால்கிலோ.
(தேங்காய் கணவாயைப் போலவே சிப்பியை ஏந்திச் செல்லும் மற்றொரு கடலுயிர் தொப்பி நண்டு. தொப்பி நண்டு பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே பதிவு உள்ளது. நவம்பர் 2016)

No comments :

Post a Comment