Friday 9 November 2018


கருங்குழவி ஓங்கல் (Killer Whale)

சென்னை உள்பட வடதமிழக கடலோரங்களில் டால்பின் (Dolphin) எனப்படும் ஓங்கலுக்கு, குழவி வேடன் என்றொரு பெயர் உண்டு. ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கப் பயன்படும் குழவியைப் பார்த்திருப்பீர்கள்தானே? அந்த குழவியைப் போலவே உருண்டு திரண்ட உடலமைப்புடன், இதர மீன்களை வேட்டை யாடுவதால் குழவி வேடன் என்ற பெயர் ஓங்கலுக்குப் பொருத்தமான பெயர்தான்.
ஓங்கல்களில் மொத்தம் 35 இனங்கள் தேறும். அந்த 35 இனங்களில் மிகப் பெரிய ஓங்கல் இனம் என்று பார்த்தால் அது கருங்குழவி எனப்படும் கில்லர் வேல் ஓங்கல்தான். பெருங்கடல்களின் மிகப்பெரிய வேட்டைக்கார பாலூட்டி இதுதான். உலகில் தற்போது உயிர்வாழும் பாலூட்டிகளில் மிகப்பெரிய அளவு மூளையுள்ள இரண்டாவது உயிரும் கருங்குழவி ஓங்கல்தான்.
கருங்குழவி ஓங்கலின் ஆங்கிலப் பெயரான கில்லர் வேல் என்ற சொல் இதை திமிங்கிலம் என்று குறிப்பிடுகிறது. ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல கருங்குழவி திமிங்கிலம் அல்ல. இது ஓங்கல் இனத்தைச் சேர்ந்த பாலூட்டி.  பல்லுள்ள பெரிய வகை ஓங்கலான கருங்குழவி, பார்க்க திமிங்கிலம் போன்று பெரிதாக இருப்பதால் இது ‘கொல்லும் திமிங்கிலம்‘ எனப் பெயர் எடுத்துள்ளது.
இன்னொருபுறம் இந்தப் பெயரின் பின்னால் வேறொரு சுவையான தகவல் உள்ளது. கருங்குழவி ஓங்கல், பலீன் வகையைச் சேர்ந்த திமிங்கிலங்களை யும் வேட்டையாடக் கூடியது. ஸ்பெயின் நாட்டின் பாஸ்க் (Basque) இன திமிங்கில வேட்டைக்காரர்கள், இது திமிங்கில வேட்டையாடுவதைப் பார்த்து, அவர்கள் மொழியில் ‘அசசின் பாலனோ‘ (Asesin balleno) (திமிங்கிலக் கொல்லி) என்று பெயரிட, ‘வேல் கில்லர்‘ என பொருள்படும் இந்தப் பெயர் நாளடைவில் தலைகீழாக மாறி ‘கில்லர் வேல்‘ என்றாகி விட்டது.
கருங்குழவி ஓங்கலின் இன்னொரு பெயர் ஓர்கா (Orca). இந்தப் பெயரும் ஒரு வியப்பூட்டும் பெயர். இது தீமை செய்பவர்களைத் தண்டிக்கும், பாதாள உலகத்தில் வாழும் ரோமானியக் கடவுள் ஒருவரின் பெயர்! பீப்பாய் வடிவத்தில் இருப்பதால் ஓர்கா என்ற பெயர் வந்ததாகவும் கூட சொல்வார்கள்.
கருங்குழவி ஓங்கல் மிளிரும் கருப்பு வண்ண உடலில் வெள்ளை வடிவங்கள் வரைந்தது போலத் தோற்றம் தரும். மிக அழகான இந்த ஓங்கல் இனம் அழகுடன் ஆபத்தும் நிறைந்தது.
கருங்குழவி ஓங்கல்களில் ஆண், 6 முதல் 8 மீட்டர் நீளம் வரை இருக்கும். (20 முதல் 26 அடி). ஏன் 32 அடி நீள ஓங்கல்கூட உண்டு. ஆண் கருங்குழவி ஓங்கல்களின் எடை 3,600 முதல் 5,400 கிலோ எடை. பெண் ஓங்கல்கள் 5 முதல் 7 மீட்டர் நீளமும், ஆயிரத்து 400 முதல் 2 ஆயிரத்து 700 கிலோ எடையும் கொண்டவை.
கருங்குழவி ஓங்கல்களில் சில, சிறிய பள்ளி பேருந்து அளவுக்குப் பெரியவை. பிறந்த குட்டிகள் பிறக்கும்போதே மூன்று மனிதர்களின் மொத்த எடையைக் கொண்டவை.
கருங்குழவி ஓங்கலின் வாழ்நாள் 29 ஆண்டுகள். ஆனால் மீன்காட்சியகம் ஒன்றில் ஒரு கருங்குழவி ஓங்கல், 109 வயது வரை வாழ்ந்து சாதனை படைத்திருக்கிறது.
கடலின் மிகப்பெரிய வேட்டை விலங்கு கருங்குழவி ஓங்கல்தான். கூட்டமாக வேட்டையாடும் கருங்குழவி ஓங்கல்கள், சுறாக்களில் மிகப்பெரிய சுறாவான, பெருஞ்சுறா என்படும் பெருவஞ்சுறாவைக் கூட (Great White Shark) உண்டு இல்லை என்று ஆக்கிவிடும். (இதுபற்றிய பதிவு பெருஞ்சுறா என்ற தலைப்பில் நமது வலைப்பூவில் ஏற்கெனவே உண்டு.)
திமிங்கிலங்களும் கூட, கருங்குழவி ஓங்கல்களிடம் இருந்து தப்ப முடியாது. ஆவுளியா, திருக்கை, ஆமை, கணவாய், கடற்பறவைகள் என 140 வகை கடல் உயிர்களை கருங்குழவி ஓங்கல் இரையாக்கக் கூடியது.
கருங்குழவி ஓங்கல் கூட்டத்தை பாட் (Pod) என்பார்கள். இதில் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒவ்வொரு வகையான உணவுப்பழக்கம் உண்டு. கருங்குழவி ஓங்கல் கூட்டம், தாய்வழி சமூகமாகச் செயல்படும். ஒரு கூட்டத்தில் ஐம்பது ஓங்கல்கள் வரை இருக்கும். தனது வாழ்நாள் முழுவதையும் ஒரே கூட்டத்திலேயே இவை கழிக்கும். கட்சி மாறாது.
குடும்ப பாடல் போல ஒவ்வொரு கூட்டத்துக்கும் என்று குறிப்பிட்ட தனித் தனி குரலொலி உண்டு. கடலில் பிரிந்து திரியும் கூட்டம் ஒன்று இந்த குரலொலி மூலம் மீண்டும் ஒன்றுசேர்ந்து கொள்ளும். இந்த குறிப்பிட்ட குரலொலி, தலைமுறை தலைமுறையாக, பாரம்பரியமாகத் தொடரும். புதிதாகப் பிறந்த குட்டி, தாயிடம் இருந்து இந்த தனித்துவமான குரலொலி யைக் கற்றுக் கொள்ளும். . தன் கூட்டத்துடன் தகவல் பரிமாற கருங்குழவி ஓங்கல் சீழ்க்கை (விசில்) உள்பட பல்வேறு ஒலிகளைக் கையாளும். தாடைகளை ஒன்றுடன் ஒன்று தட்டியும் ஓசை எழுப்பும்.
கருங்குழவி ஓங்கல்களின் ஆண்கள், வளர்ந்து பெரிதான பிறகும்கூட ‘அம்மா பிள்ளைகளாக‘ தாயுடன் நெருக்கமாக வாழும். கூட்டமாக திட்டமிட்டு இவை இரையை வேட்டையாடும். காயமடைந்த, நோயுற்ற, முதிர்ந்த ஓங்கல்களை கூட்டத்தின் மற்ற ஓங்கல்கள் உணவூட்டி காப்பாற்றும்.
கருங்குழவி ஓங்கல்கள், கருங்கடல், பால்டிக் கடல், ஆர்ட்டிக் கடலின் ஒரு சில பகுதிகள் தவிர, உலகக் கடல்கள் அனைத்திலும் காணப் படுகின்றன. திமிங்கிலங்களைப் போல கருங்குழவி ஓங்கலின் தோலுக்கு அடியிலும் பிளப்பர் (Blubber) எனப்படும் கொழுப்புப் படலம் உண்டு. இதனால் குளிர்க்கடல்களில் கூட கம்பளிக் கோட்டு போட்டது போல இதனால் குளிர்தாங்க முடிகிறது. மேலும், இரையைத் தின்ற உடனே அதை உடல்சக்தியாக மாற்றிவிடும் ஆற்றல் இந்த வகை ஓங்கலுக்கு உண்டு. அதன்மூலம் ஏற்படும் உடல் வெப்பத்தால் குளிரைத் தாங்க முடிகிறது.
பிறஇன ஓங்கல்களைப் போலவே கருங்குழவி ஓங்கலாலும் கடலில் முழுத்தூக்கம் தூங்க முடியாது. அவ்வப்போது கடல்மட்டத்துக்கு வந்து மூச்செடுக்க வேண்டியிருப்பதால் ஓங்கல்கள் அரைத்தூக்கம் மட்டுமே தூங்கும். அந்த வகையில், கருங்குழவி ஓங்கலும் ஒரு கண்ணைத் திறந்து கொண்டு லேசான பூனைத்தூக்கம் போடும். அப்போது ஓங்கலின் பாதி மூளை மட்டுமே வேலை செய்யும். ஓங்கல் இடது கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கினால், அதன் வலதுபக்க மூளை வேலை செய்கிறது என்று பொருள்.
கருங்குழவி ஓங்கல்களின் முதுகுத் தூவி ஆறடி உயரம் (!) கொண்டது. முதுகுத்தூவி எலும்பற்றது. அடர்த்தியான இணைப்புத் திசுக்களால் ஆனது. ஆண் ஓங்கல்களின் தூவி செங்குத்தாக நேர் எழுந்து நிமிர்ந்து நிற்கும். பெண் ஓங்கலின் தூவி, சற்று சிறியதாக அரிவாள் போல வளைந் திருக்கும். இந்த நீண்ட முதுகுத்தூவி மூலம் மணிக்கு 29 மைல் வேகத்தில் கருங்குழவி ஓங்கலால் வேகமாக நீந்த முடியும். சோர்வும், மனஅழுத்தமும் ஏற்பட்டால் இந்த முதுகுத்தூவி, சற்று தளர்ந்து, குலைந்து காணப்படும்.
மணிக்கு 29 முதல் 30 மைல்வேகத்தில் நீந்துவதால் கடலில் எந்த ஓர் உயிரையும் கருங்குழவி ஓங்கலால் விரட்டிப்பிடிக்க முடியும். துள்ளிப் பாயவும், பாய்ந்த நிலையில் அப்படியே திரும்பவும் இந்தவகை ஓங்கலால் முடியும். கூம்பு வடிவிலான 50 கூர்ப்பற்களால், பெரிய சுறாவைக் கூட ஒரே கடியில் இரண்டாக்க கருங்குழவி ஓங்கலால் முடியும். கடலில், பாலூட்டிகளை வேட்டையாடி உண்ணும், ஒரே ஓங்கலினம் இதுதான். பிற இன ஓங்கல்களையும் கருங்குழவி ஓங்கல் கொன்று தின்னக் கூடியது.
கருங்குழவி ஓங்கலுக்கு முகர்திறன் இல்லை. கண்பார்வை மற்றும் ஒலிமூலம் பார்க்கும் ஈக்கோ லொக்கேஷன் திறமை மூலம் இது இயங்கு கிறது. இதன் கண்பார்வை நாயின் பார்வையை விட கூர்மையானது. இதன் ஈக்கோ லொக்கேஷன் திறமை வவ்வாலை விட அதிகமானது.
கருங்குழவி ஓங்கல் அரிதாக மனிதர்களைத் தாக்கும். கடலில் மனிதர்கள் உள்பட எந்த ஓர் உயிருக்கும் கருங்குழவி ஓங்கல் அஞ்சாது.  மீன் காட்சியகங்களில் இவை அதிக அளவில் வளர்க்கப்பட்டு வித்தை காட்டப் பயன் படுத்தப்படுகின்றன. அறிவுக்கூர்மை மிகுந்த கருங்குழவி ஓங்கல்கள், எளிதாக எதையும் கற்றுக்கொள்ளும் திறமை கொண்டவை. மனிதர் ஒருவரை முதுகில் சுமந்து கொண்டு குறிப்பிட்ட உயரத்துக்கு கருங்குழவி ஓங்கலால் துள்ள முடியும்.
முன்பே கூறியது போல, கருங்குழவி ஓங்கல் கூட்டம், கடலில் பெருஞ் சுறாவைக் கூட பிரித்து மேய்ந்துவிடும். கடலில் இந்த மாபெரும் பாலூட்டிக்கு இயற்கையான எதிரி என்று யாரும் இல்லை. கருங்குழவி ஓங்கல்கள் வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்து போனால்தான் உண்டு. மற்றபடி இவை நீண்டகாலம் இனிதே வாழக்கூடியவை.

No comments :

Post a Comment