Tuesday 20 November 2018


பெலிஸ் நீலத்துளை (Belize Blue Hole)

கடலில் பவழப்பாறைகள் மிகுந்திருக்கும் பகுதிகளில் உள்ள ஆழக்குழிகளை தாவு என அழைப்பார்கள். உலகக் கடல்களில் பல்வேறு இடங்களில் பெரிய அளவு தாவுகள் காணப்படு கின்றன. விண்வெளியில் இருப்பதாகக் கருதப் படும் கருந்துளைகள் (Black Holes) போல, கடல் களில் காணப்படும் இவை நீலத்துளைகள்  (Blue Holes) என அழைக்கப்படுகின்றன.
மத்திய அமெரிக்காவின் வடகிழக்கு மூலை யில் உள்ள பெலிஸ் (Belize) நாட்டில், கரிபியன் கடற்பகுதியில் இதுபோன்ற அழகிய நீலத்துளை ஒன்று காணப்படுகிறது. பெலிஸ் (Belize) நாட்டு கடற் கரையில் இருந்து அறுபது மைல் தொலைவில், அங்குள்ள கலங்கரை விளக்க பார்க்கடல் பகுதியின் நட்ட நடுவில் உள்ள பவழப்பாறையில் இந்த துளை அமைந்துள்ளது.
இந்த நீலத்துளையின் குறுக்களவு 318 மீட்டர் (1,043 அடி). ஆழம் 124 மீட்டர் (407 அடி). கடைசி பனியுகத்தின் (Ice Age) இறுதிக்கட்டத்தில், ஏறத்தாழ 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கடல்நீர் மட்டம் மிகவும் தாழ்ந்திருந்த காலத்தில், இந்த நீலத்துளை உருவாகியதாகக் கருதப்படுகிறது.  
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கடல்ஆய்வாளரான ஜாக்கிவ் குஸ்தோ (Jacques Cousteau), 70களில், இந்த நீலத்துளையின் அருமை பெருமைகளை வெளி யுலகுக்குக் கொணர்ந்தார்.
களவா மீன்
பெலிஸ் நீலத்துளைக்கு அப்படி என்னதான் சிறப்பு? இந்த நீலத் துளைக்குள் முக்குளித்தால் 200 அடி வரை கடல்நீர் தெளிவாகக் கண்ணாடி போலிருக்கும். அதன் பின் மெல்ல மெல்ல ஒளி மங்கும். பனிக்குகைகளின் கூரை களில் பனி படர்ந்து தொங்கி அப்படியே உறைந்து பனிச்சிற்பம் போல மாறி நிற்கும் அல்லவா? அதுபோல பெலிஸ் நீலத்துளையின் உட்புறம், தூண் போன்ற நீளமான கல் துளிப் படிவங்கள், கசிதுளிவீழ்ச்சிகளைப் பார்க்கலாம். அவற்றில் சில 40 அடி நீளமானவை.
பெலிஸ் நீலத்துளைக்குள் கடலுயிர்களுக்கும் பஞ்சமில்லை. பவழப்பாறை பகுதிகளில் சுற்றித்திரியும் பலவகை சுறாக்கள், பெரிய பெரிய களவா மீன்கள் (Groupers), பார்க்கடலுக்கே உரித்தான பலவகை வண்ண மீன்கள் இங்கே வாழ்கின்றன.
Neon goby
மான்கொம்பு பவழம் எனப்படும் Elk horn பவழச்செடி, மனிதமூளை போன்ற Brain பவழச்செடி போன்றவையும் இங்கு செழித்து வளர்கின்றன. நீலத்துளையின் அடிப்புறத்தில் சிறுமணற்குன்றுகளும், கல்படுக்கைகளும் உள்ளன. யுனெஸ் கோவின், உலக பாரம்பரிய களங் களுக்கான பட்டியலில், பெலிஸ் நீலத் துளையும் இடம்பிடித்துள்ளது.

No comments :

Post a Comment