Sunday 4 November 2018


புல் உண்ணும் சுறா!



கொம்பன் சுறாவை நமக்குத் தெரியும். சிலர் Hammerhead Shark என்ற அதன் ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழ்ப்‘படுத்தி‘, ‘சுத்தித் தலைச் சுறா‘ என்று அதைச் சொல்வார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.
கொம்பன் சுறா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய வகை சுறா ‘பில்லைச் சுறா‘. இதை திரவிமூக்கு சுறா, ஆளுபிடியான் என்றும் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதன் பெயர் Bonnethead Shark.
சுறாக்கள் என்றாலே ஊன் உண்ணிகள், இறைச்சித் தின்னிகள் என்றுதான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், விந்தையிலும் விந்தை யாக பில்லைச்சுறாக்கள் கடற்புற்களையும் உண்ணுகின்றன என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. என்னது? சுறாவில் கூட சைவ சுறா உண்டா என்று உலகமே வியந்து போய் நிற்கிறது.
பில்லைச்சுறாக்கள், கடலோர கோரைப்புல்வெளியில் திரிபவை. வளர்ந்த ஆண் சுறா ஓரடி முதல் மூன்றடி நீளம் இருக்கலாம். பெண் சுறா ஐந்தடி வரை வளரக்கூடியது. பில்லைச் சுறாவின் நிறம், பசுஞ்சாம்பல் முதல் கரும்பழுப்பு  வரை. சுறாவின் அடிப்பகுதி வெளிறிய நிறம் கொண்டது. எடை 5.9 கிலோ.
பில்லைச் சுறாவின் தலை, கொம்பன் சுறாவின் தலையைப் போல நீண்டு நிற்காமல், குறுகிய தோற்றம் கொண்டது. தலையின் முன்பகுதி வட்ட மாகத் தோற்றம் தரும். இதனால் Shovel Head Shark என்ற பெயரும் பில்லைச் சுறாவுக்கு உண்டு. கொம்பன் சுறாவின் மூச்சுத்துளை அதன் தலையில் நீளமான ஒரு பள்ளத்தில் காடிவெட்டாக (Groove) அமைந்திருக் கும். ஆனால், பில்லைச் சுறாவுக்கு அப்படி இருக்காது. பில்லைச் சுறாவின் கண்களின் அருகே மூச்சுத்துளைகள் அமைந்திருக்கும்.
பில்லைச்சுறா முழுக்க கடலோர கோரைப்புல் வெளியில் சுற்றித்திரிந்து கண்ணில் படும் நண்டு, இறால், சிறுமீன், கணவாய், மட்டி (Clam) போன்ற வற்றை உணவாக்கும். வரிப்புலியன் உள்பட சிலவகை சுறாக்களுக்கு பில்லைச் சுறாவும் உணவாகும். அதிக பற்கள் நிறைந்த சுறாவாக இருந்தாலும் கூட பில்லைச்சுறா பயந்த குணம் கொண்டது. மனிதர் களுக்கு ஆபத்தற்றது. எந்தத் தீங்கும் செய்யாதது.
இந்த பில்லைச்சுறாதான் புல் உண்ணு கிறது என்ற புதிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இந்த சுறாவின் 56 விழுக்காடு உணவே கடற்புற்கள்தான் என்பதும் தெரிய வந்திருக்கிறது. பாரம் பரிய உணவான இறைச்சியை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு பில்லைச்சுறா எப்படி ஓர் அனைத்துண்ணியாக மாறி யது என்று யாருக்கும் புரியவில்லை. அனைவரையும் இது ஆச்சரியப் படுத்தி வருகிறது.
கடல் ஆமைகளில் பச்சை ஆமைகள் புல்மேய்பவை. சில வகை கடல் ஆமைகளின் குட்டிகள் ஆரம்பத்தில் அனைத்துண்ணிகளாக இருந்து விட்டு, பிறகு முழுக்க முழுக்க புல்மேயும் தாவர உண்ணிகளாக மாறும். ஆனால், பில்லைச் சுறா, எப்படி சுறா இனத்தில் பிறந்து விட்டு அனைத்துண்ணி யாக மாறியது என்று அறிவியலாளர்களுக்கே புரியவில்லை.
பில்லைச்சுறாக்களின் வயிற்றுக் குடலை அறிவியலாளர்கள் ஆராய்ந்த போது உள்ளே புற்கள் இருப்பது தெரியவந்தது. பில்லைச்சுறா, புற்களுக்கு இடையே நண்டு, இறால், சிறுமீன் போன்ற இரைகளை விரட்டும்போது தவறுதலாக ஒரு வாய் புல்லை கவ்வியிருக்கலாம், அது வயிற்றுக்குள் சென்றிருக்கலாம் என்றே ஆரம்பத்தில் கருதப்பட்டது.
ஆனால், கடற்புற்கள், பில்லைச்சுறாவின் 56 விழுக்காடு உணவு என்பதும், இளம் சுறாக்கள்தான் அதிக அளவில் புல்மேய்கின்றன என்பதும் இப்போது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது.
இறைச்சி உணவை சுறாவின் வயிறு செரிப்பது போல புல்லின் சத்துக் களையும் பில்லைச்சுறாவின் வயிறு செரித்துக் கொள்கிறது. சுறாவின் குடலில் உள்ள Microbiome இதற்கு உதவுகிறது.
அருங்காட்சியகத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் ஒரு கணவாயின் மீது 90 விழுக்காடு கடற்புல்லைச் சுற்றி அதை பில்லைச்சுறாவுக்கு கொடுத்த போது சுறா அதை ஆவலுடன் தின்றது. சுறாவின் கழிவை சிறிய கண்ணிகள் கொண்ட நுண்வலையால் சேகரித்து ஆராய்ந்தபோது புல்லை சவைத்து, அதில் உள்ள மாச்சத்து (Starch), நொதி (Enzyme) போன்றவற்றை சுறா உட்கொண்டு தனதாக்கி இருப்பது தெரியவந்தது. தரையில் வாழும் பல்லியின் புல்செரிப்புத் திறன் 30 விழுக்காடுதான் என்ற நிலையில், பில்லைச்சுறாவின் புல்செரிப்புத்திறன் 50 விழுக்காடு என்ற அதிசயத் தகவலும் தெரிய வந்தது. 
இந்த ஆய்வில் இன்னும் ஒரு படி மேலே போய், ஓர் மீன் அருங்காட்சியகத்தில் கடற்புற்களை வளர்ந்தார்கள். சோடியம் பைகார் பனேட்டுடன், குறிப்பிட்ட ஒரு கார்பன் ஐசோடோப்பையும் நீரில் கரைய விட்டார்கள். இவற்றை கடற்புற்கள் உள்வாங்கின. இதன்மூலம் ஒரு வித்தியாசமான வேதியியல் அடையாளத்தை அவை பெற்றன.
இப்போது அதே தொட்டிக்குள் 5 பில்லைச்சுறாக்கள் விடப்பட்டன. மூன்று வாரங்கள் கழித்து அவற்றின் உடலில், ரத்தத்தில் அந்த குறிப்பிட்ட ஐசோ டோப்புக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் பில்லைச் சுறாக்கள் புல் உண்ணுகின்றன என்பது ஐயத்துக்கு இடமின்றி எண்பிக்கப்பட்டது. புல்லின் சத்துக்கள் சுறாவின் ஊனில் கலந்து, அதன்மூலம் சுறா  வளர்கிறது என்பதும் அதன் எடை கூடுகிறது என்பதும் நூறு விழுக்காடு உறுதியாகி விட்டது.
கொம்பன் சுறாக்கள் அழிந்து வரும் அரிய இனமாகிவிட்ட நிலையில், அதன் உறவுக்கார மீனான பில்லைச்சுறா நல்லவேளை அழியும் ஆபத்தில் இல்லை. புல் உண்ணும் பழக்கம் காரணமாக பில்லைச்சுறா நெடுங்கடலில் நீடுவாழும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். அதே வேளையில் கடல்புல்வெளிகள் நாளுக்கு நாள் அழிந்து வருவதால் அவர்கள் கவலை கொள்ளவும் செய்கிறார்கள்.

No comments :

Post a Comment