வலவம் ஓங்கல் (Pilot whale)
கடலில் 32 வகையான
ஓங்கல் இனங்கள் உள்ளன. ஓங்கல்களில் மிகப்பெரியவை ஆர்கா (Orca) என அழைக்கப்படும் ‘கொல்லும்
திமிங்கிலம்‘ (Killer Whale). இந்த கறுப்புநிற ஓங்கல் அதன் பேருருவம் காரணமாக ‘திமிங்கிலம்‘
என அழைக்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடி
ஓங்கல் இனத்தில் பெரியது வலவம் ஓங்கல்தான் (Pilot whale). வலவங்களில் இரண்டு வகைகள்
உள்ளன. ஒன்று பெரிய முதுகுத்தூவியும், மற்றொன்று சிறிய முதுகுத் தூவியும் கொண்டது.
இதில் சிறுதூவி வலவம், வெப்பக்கடல்களில் வாழக்கூடியது. இந்த இரு வகை ஓங்கல்களையும்
முதுகுத்தூவி மூலம் இனம் காண முயல்வது மிகவும் கடினமான வேலை. இவற்றின் முதுகுத்தூவி
உடலின் முன்பாகத்தில் அமைந்திருக்கும்.
வலவம் ஓங்கல் கறுப்பு
அல்லது கருஞ்சாம்பல் நிறம் கொண்டது. ஆண் 25 அடி வரை நீளமும், 3 டன் வரை எடையும் கொண்டது.
வலவத்தில் பெண் வலவம், 16 அடி நீளத்துடன், ஒன்றரை டன் எடையுடன் விளங்கும். ஆழ்கடல்
ஓங்கல்களான வலவத்தை அடிக்கடி காண முடியாது. கடலில் ஆயிரம் மீட்டர் ஆழப்பகுதியில், கண்டச்சுவர்களின்
அருகே இவை வாழும். மற்ற இன ஓங்கல்களைப் போலவே இவை பேரலைகளில் சில்லி எடுத்து சறுக்கி
விளையாடும். நுனிவால் நடனம்ஆடும். கடலை விட்டு முழுவதுமாக துள்ளி விழவும் செய்யும்.

இரையைக் கூண்டதும்
வலவம் ஓங்கல்கள் கூட்டமாக இரையைச் சுற்றி வளைத்து, சீழ்க்கை ஒலி எழுப்பி, இரையை மதிமயங்கச்
செய்து உணவாக்கும். வாயின் இரு தாடைகளிலும் பற்கள் உள்ள ஓங்கல் வலவம் ஓங்கல்.
வலவத்தின் பிறந்த
குட்டி 4.7 அடி வரை நீளமாக இருக்கும். குட்டியை 10 ஆண்டுகள்வரை பொத்திப் பொத்தி பாதுகாப்பது
வலவம் ஓங்கல்களின் வழக்கம். தாய் ஓங்கல் மட்டுமின்றி, பாட்டி ஓங்கல் கூட பிள்ளைகளை
இப்படி பேணி வளர்க்கும் வேலையைச் செய்யும்.
வலவம் ஓங்கல்கள்,
தலைமை ஓங்கலைப் பின்பற்றி அதன் வழிகாட்டலின் கீழ், செம்மறிஆட்டுக்கூட்டம் போல இயங்கும்
எனக்கூறப்பட்டாலும், அது இதுவரை ஆய்வுகள் மூலம் எண்பிக்கப்படவில்லை.
ஓங்கல்களில் அடிக்கடி
கூட்டம் கூட்டமாக கரையேறி தரைதட்டித் தவிக்கும் ஓங்கல் இனம் வலவம் ஓங்கல் இனம்தான்.
நமது மின்னணு கருவிகளில் தூசி அதிகம் படர்ந்தாலோ, வைரஸ் தாக்கினாலோ அது இயங்குவதில்
சிக்கல் ஏற்படுவது போல, வலவம் ஓங்கல்களில் படரும் ஒட்டுண்ணிகள், அதன் மூளையின் இயக்கப்
போக்கை மாற்றி, பாதையை சீர்குலைக்கின்றன. இதனால் திசைமாறி வலவம் ஓங்கல்கள், அடிக்கடி
கரையொதுங்குகின்றன. ஒட்டுண்ணிகள் மட்டுமல்ல,
வானில் பறக்கும் ஜெட் விமான ஒலி கூட, வலவம் ஓங்கல்களின் திசையறியும் திறனைக்
குழப்பி, அவற்றை கரையொதுங்க வைத்துவிடக்கூடியது.

அண்மையில் தமிழகத்தின்
மணப்பாடு கல்லாமொழி கடற்கரையில் வலவம் ஓங்கல்கள் கரையொதுங்கின. இதைப்போல, உலகம் முழுவதும்,
இப்படி காந்தத்திறன் குறைந்த கடற்கரைகளில், குறிப்பிட்ட கால கட்டங்களில், சீரான இடைவேளைகளில்
அவை தரைதட்டி கரையொதுங்குவது குறிப்பிடத்தக்கது.
No comments :
Post a Comment