Friday, 7 December 2018


அறிய அரிய துணுக்குகள்

பிகாசோ கிளாத்தி
இந்த புவிப்பந்தின் 72 விழுக்காடு பகுதி கடல். இந்த கடல்களில் மொத்தம் 2 லட்சத்து முப்பதாயிரம் வகை கடலுயிர்கள் உள்ளன. உலகப் பெருங்கடல்களில் வெறும் 5 விழுக்காடு பகுதி மட்டுமே இதுவரை ஆராயப் பட்டுள்ளது.

ஆவுளியாக்கள் சில நிமிடங்களுக்கு ஒருமுறை கடல்மட்டத்துக்கு மேலே வந்து மூச்சிழுக்கக் கூடியவை. ஆனால், கடலடியில் தொடர்ச்சியாக 20 நிமிட நேரம் ஆவுளியாவால் தங்கியிருக்க முடியும். நாள் ஒன்றுக்கு 36 கிலோ கடற்புற்களை ஆவுளியா மேயும்.


கிளாத்தி எனப்படும் டிரிக்கர் (Trigger) மீன்களின் கண்கள் பொதுவாக தலையின் பின்புறம் மிகவும் தள்ளி அமைந்திருக்கும். குறிப்பாக பிகாசோ கிளாத்தி (Picasso Tirgger) மீனின் கண்கள், காதுகள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும். ஏன்? எதற்காக? முள்நிறைந்த மூரையை (Sea Urchin) உண்ணும் போது முட்கள் கண்களில் குத்தி விடக்கூடாது என்பதற்காக கிளாத்தியின் கண்கள் இப்படி தள்ளி அமைந்திருக்கின்றன.

வண்ணாத்தி வகை பார்மீன்களில் ஒன்றான மூரிஸ் ஐடல் (Moorish Idol) மீன்களில் ஆண் மீனும், பெண்மீனும், இறக்கும் வரை இணைபிரியாமல் வாழக் கூடியவை.

மூரிஸ் ஐடல்
உலுக்கு எனப்படும் மின்சாரத் திருக்கை வெளியிடும் மின்சாரத்தை வைத்து 10 மின்விளக்குகளை எரிய வைக்கலாம்.

கடமாடு (Box Fish) மீன்களுக்கு மற்ற என்பு மீன்களுக்கு உள்ளது போல மரபார்ந்த எலும்புக் கூடு (Skeleton) கிடையாது. இந்தவகை எலும்புச்சட்டத்துக்குப் பதிலாக கடமாடு மீன்களுக்கு எலும்புப் பெட்டி மட்டுமே உள்ளது. கண்கள், வாய் தூவி போன்றவை அதில் இருந்து நீட்டிக் கொண்டு இருக்கின்றன.

என்பு மீன்களில் (bony Fish) பல இன மீன்களுக்கு மூச்சுத்துளைகள் எனப்படும் செவுள் துளைகள் இரண்டுக்கும் அதிகமாக உள்ளன. அவற்றின் மூச்சுத்துளைகள் நம்மைப் போல வாயுடன் இணைந்திருப்பதில்லை. அதிக மூச்சுத்துளைகள் உள்ள மீன்களால் அதிக அளவில் மணத்தை முகர முடியும்.

நீலத் திமிங்கிலங்கள் 188 டெசிபல் அளவுக்கு ஒலியெழுப்புகின்றன. இது தரையில் வாழும் யானை, சிங்கம் உள்பட எந்த ஒரு விலங்காலும் எழுப்ப முடியாத அளவுக்கு அதிக ஒலி.

சுவையை அறிய வசதியாக, கெழுது (Cat fish) இன மீன்களுக்கு ஒரு லட்சம் சுவை மொட்டுகள் (Taste buds) உள்ளன.

கடல் பவழப் பஞ்சு உயிரினங்களுக்கு தலை, வாய், கண்கள், எலும்பு, இதயம், நுரையீரல், மூளை என்று எதுவும் இல்லை. இருந்தும்கூட அவை உயிர்வாழ்கின்றன.

Tuesday, 4 December 2018


நிலம்வாழ் திமிங்கிலங்கள்!

திமிங்கிலங்கள் ஒருகாலத்தில் நிலத்தில் வாழ்ந்தவை என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பு வதற்கு கொஞ்சம் கடினமாக இருந் தாலும் இது உண்மை.
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அதாவது ஆறரை கோடி ஆண்டு களுக்கு முன் புவியில் கொடிகட்டிப் பறந்த டைனசோர்கள் மர்மமான ஓர் இயற்கை பேரிடரில் உயிரிழந்தன. டைனசோர்கள் மட்டுமல்ல, கடல் வாழ் பேருயிர்களான பிளெசியோசோர், இக்தியோசோர்களும் பூவுலகை விட்டு மறைந்தன.
இதையடுத்து இந்த பூவுலகம் பாலூட்டிகளின் கைகளில் வந்தது. ‘இனி எங்கள் ஆட்சி‘ என்று பாலூட்டிகள் ஆர்ப்பரித்தன.
டைனசோர்கள், பிளெசியோசோர் போன்ற பேருயிர்கள் நிலத்திலிருந்தும், ‘கடலிலிருந்தும் மறைந்து போனதால் இவ்விரு இடங்களிலும் ஏராளமான இரை உயிர்கள் மிஞ்சின.
இந்த காலகட்டத்தில் விந்தையான பல பாலூட்டிகள் மலை உச்சிகளிலும், கடலோரங்களிலும் பல்கிப் பெருகின. அந்த காலகட்டத்தில்தான் திமிங் கிலங்களும், ஓங்கல்களும் நிலம் வாழ் விலங்குகளாக புவியில் வாழ்ந்தன.
பாகிஸ்தானில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு தொல் திமிங் கிலத்தின் புதைபடிவம் (தொல்எச்சம்) (Fossil) கிடைத்துள்ளது. அதன்படி பார்த்தால் திமிங்கிலங்களில் சில இப்போதுள்ளது போல பெரிய உருவத்துடன் இருக்காமல், சிறிய ஓம்பிலி (Porpoise) அளவில் இருந்தது தெரிய வந்திருக்கிறது. சிலவகை திமிங்கிலங்கள் விலாங்கு வடிவத்தில் ஐம்பதடி நீளம் கொண்ட பெரிய பாலூட்டிகளாக வாழ்ந்திருக்கின்றன.
ஆரம்பத்தில் ஓர் ஆப்பிரிக்க நீர்யானை யைப் போலவே திமிங்கிலங்களும் வாழ்க்கை நடத்தியிருக்கின்றன. நீர் யானை பகல் முழுக்க ஆற்றில் கிடந்து விட்டு இரவில் கரையேறி புல்மேய் வதைப் போல, அந்தக்கால திமிங்கிலங் களும் அவ்வப்போது கடலுக்கும், நிலத் துக்கும் இடையே மாறி மாறி சென்று வாழ்க்கையை நடத்தியிருக்கின்றன. இவற்றுக்கு நான்கு கால்களும் இருந்திருக்கின்றன.
கடலில் கணக்கற்ற இரை உயிர்கள் அப்போது இருந்ததால் ஒரு கட்டத்தில், இந்த திமிங்கிலங்கள், இரைக்காக முழுக்க முழுக்க கடலு யிர்களாகவே ஆகி தங்கி விட்டன. முன் கால்கள் மெல்ல மெல்ல மறைந்து தூவிகளாகி விட்டன. நீண்டுகிடந்த வால், தட்டையாகி நீந்து வதற்கு ஏற்றபடி திமிங்கிலத்தின் வாலாகி விட்டது. உடல், நீச்சலுக்கு ஏற்ற வகையில், பரிணாம வளர்ச்சி கண்டது. முதுகில் புதிதாக ஒரு தூவி முளைத்தது. இது நீருக்குள் திமிங்கிலத்தின் சமநிலையை மாறாமல் காத்தது. தேவையற்ற பின்னங்கால்கள் மெல்ல மெல்ல உடலுக்குள் சென்று மறைந்து விட்டன. முகத்தில் இருந்த மூச்சுத்துளை மெல்ல மெல்ல மேலே ஏறி முதுக்குக்குப் போய் விட்டது.
ஆரம்ப கால திமிங்கிலங்களுக்கு உடல்நிறைய முடி இருந்தது. ஆனால் கடலில் நீந்துவதற்கு முடி ஒரு பெரும் தடை. நீரில் நனைந்து முடி பாரமாகி விடும் என்பதால் நாளடைவில் அவை உதிர்ந்து போயின. முடிக்குப் பதிலாக., கடலில் குளிரைத் தாங்க திமிங்கிலங்களின் உடலைச் சுற்றி கொழுப்பு நிறைந்த பிளப்பர்  (Blubber) என்ற படலம் புதிதாக தோன்றியது.
பழங்கால திமிங்கிலங்களுக்கு நிறைய முடி இருந்த நிலையில், பழைய பாரம்பரியத்தை மறந்து விடக் கூடாது என்பதற்காக இந்த காலத்தைச் சேர்ந்த சில திமிங்கிலங்களுக்கும் முகவாய்க் கட்டையில் சிறிது முடி இப்போதும் உண்டு. அதுபோல, கருமுட்டையில் உள்ள திமிங்கில குட்டிகளுக்கு இப்போதும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிகள் காணப்படும்.
பழங்கால திமிங்கிலத்தின் கைகளே இப்போது தூவிகளாகி விட்ட நிலையில், இப்போதுள்ள திமிங்கிலத்தின் தூவியை ஆராய்ந்தால் அதற்குள்ளே மனிதக் கைகளைப் போல விரல்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆரம்பகால திமிங்கிலம் காலில் விரல்களுடன் இருந்தது என்பதற்கு இது ஓர் ஆதாரம். அதேப்போல திமிங்கிலத்தின் எலும்புக் கூட்டில் இன்னும்கூட இடுப்பெலும்பின் எஞ்சிய ஒரு மீதத் துண்டு உண்டு.
திமிங்கிலம் ஒருகாலத்தில் நிலத்தில் வாழும் போது எப்படி இருந்திருக்கும்? இதற்கு கருவில் உள்ள இன்றைய குட்டி திமிங்கிலங்களே உயிர்ச்சான்று. இன்னும் பிறக்காத திமிங்கிலக்குட்டிகள் கருவில் இருக்கும் போது அவற்றின் ஆதி கால முன்னோர்களைப் போலவே இருக்கும். அத்துடன் அவற்றுக்கு நான்கு சிறு கால்களும்(!) இருக்கும். பிறப்பதற்கு முன் இவை மறைந்துவிடும்.
கருவில் இருக்கும்போது திமிங்கிலக் குட்டியின் மூச்சுத்துளை நம்மைப்போல அதன் முகத்தில்தான் இருக்கும். குட்டி கருவில் வளர வளர இந்த மூச்சுத்துளை மெதுவாக மேலேறி முதுகுக்குப் போய்விடும்.
திமிங்கிலம் தற்போது தரை வாழ் உயிர்களாக உள்ள நீர்யானை, பசு போன்றவற்றுக்கு உறவுக்கார உயிர் என்றால் அது வியப்பான ஒரு செய்திதானே?

Monday, 3 December 2018


கடலடியில் நடைபயணம்

சிங்கி இறால் எனப்படும் லாப்ஸ்டர் களைப் (Lobster)  பற்றி ஏற்கெனவே நமது வலைப்பூவில் கூறியிருக்கிறோம். கடலடியில் பவழப்பாறைகள், பார் இடுக்குகளில் வாழ்வதால் இந்த வகை இறாலுக்கு கல்இறால் என்ற பெயரும் உள்ளது.
வெப்பப் பகுதி கடல்களில் வாழக்கூடிய உயிர்களான  கல் இறால்களில், Spiny Lobster, (Panulirus argus) கல் இறால்கள், கடலில் வெப்பம் அதிகரிக்கும் போது கரையை நோக்கியும், குளிர் காலத்தில் ஆழ்கடலை நோக்கியம் பேரணியாகச் செல்லும் பழக்கம் உள்ளவை.

கடலில் குளிரும், கொந்தளிப்பும், அதிகரித்தால், கல்இறால்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே வரிசையில் ஆழ்கடல் நோக்கி, கடலடியில் நகர்ந்து ஊர்வலமாகச் செல்லும். இந்த ஒற்றை வரிசையைகியூஎன ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
குளிர்காலம் வந்து வானம் இருண்டு, கூதிர் காலத்தின் முதல் புயற்காற்று வீசும்போது ஆயிரக்கணக்கான கல்இறால்கள் ஒன்று கூடி தங்கள் ஆழ் கடல் பயணத்தைத் தொடங்கி விடும். மேலைநாடுகளில் குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவு தொடங்கியதும் கல்இறால்கள் பயணத்தைத் தொடங்குகின்றன.
காற்று அதிகரித்து, வானம் இருண்டு, மழை விழுந்து, வெப்பநிலை வீழ்ச்சியடையும் போது கடலில் பேரலைகள் ஏற்படும். கல்இறால்கள் வாழும் பார்ப்பகுதிகளில் கடல்நீர் அப்போது கலங்கலாகக் காட்சி தரும். இதுதான் கல் இறால்கள் இடம்பெயர்வதற்காக இயற்கை தரும் சமிக்ஞை.
இந்த காலகட்டத்தில் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் திரளும் கல் இறால்கள், முன்னால் இருக்கும் இறாலின் வால்பகுதியில் தனது உணர் கொம்பை வைத்துக் கொள்ளும். சில கல்இறால்கள் முன்னால் உள்ள இறாலின் முதுகு அல்லது வயிற்றுப் பகுதியில் தனது உணர்கொம்பை இருத்திக் கொள்ளும். உணர்கொம்பு இல்லாத, அதை இழந்து விட்ட கல் இறால்கள் தங்களது முன்னங்கால்களை முன்னால் இருக்கும் கல் இறாலின் மீது பதித்துக் கொள்ளும்.
இப்படி, ஒரு வரிசைக்கு ஏறத்தாழ 65 கல்இறால்கள் என்ற அடிப்படை யில் இந்த வலசை ஆரம்பிக்கும். ஒற்றை வரிசையில், கடல்தரை யில், கொந்தளிப்பு இல்லாத ஆழ் கடல் நோக்கி இவை நடைபோடத் தொடங்கும்.
இரு வாரங்களுக்குத் தொடர்ச்சியாக இரவும் பகலும் இந்தப் பயணம் தொடரும். கடல்நீர் கலங்கி, முழுக்க கண் தெரியாவிட்டாலும்கூட கல் இறால்களின் பயணம் தடைபடாது. தொடர்ந்து நீடிக்கும்.
கடல் அருங்காட்சியகங்களில் வாழும் கல்இறால்கள் கூட குளிர்காலத்தில் ஒன்றுகூடி இப்படி ஊர்வலம் செல்ல முயல்வது வியப்பான ஒன்று. அவற்றின் மரபணுக்களில் இந்த வலசை பழக்கம் புதைந்திருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
கல்இறால்கள் ஏன் இப்படி நடைபயணம் மேற்கொள்கின்றன என்பது இது வரை யாருக்கும் புரியாத புதிர். கடந்து போன பனியுகத்தில் (Ice Age) இருந்து இந்த வலசைப் பழக்கத்தை கல்இறால்கள் கடைபிடிப்பதாக கடல் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
கல்இறால்கள் ஏன் ஒற்றை வரிசையில் ஊர்வலம் போகின்றன? இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. போகும் வழியில் இரை கொல்லி மீன்கள் தாக்கினால் கல்இறால்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இப்படி ஒற்றை வரி ஊர்வலம் செல்கின்றன. தனி கல்இறால் ஒன்று கடலடியில் இப்படி நடந்து சென்றால் அது அதிக திறனை செலவிட வேண்டியிருக்கும். ஆனால், இப்படி ஒன்றன்பின் ஒன்றாகச் செல்வதால் ஐம்பது விழுக்காடு வரை திறன் (சக்தி) மீதமாகும். மேலும் குறுகிய நேரத்தில் சற்று அதிக தொலைவு கூட செல்ல முடியும்.
உணர்மீசை கொம்புகளால் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு செல்வதால், கடல் இருண்டாலும் கூட ஒவ்வொரு கல்இறாலும் தான் இருக்கும் இடத்தை மற்ற கல்இறாலுக்கு உணர்த்த முடியும். இதன்மூலம் கண் தெரியாவிட்டாலும் பயணிக்க முடியும். ஓர் இறால் இருக்கும் இடத்தை மற்றொரு இறாலால் புரிந்து கொள்ள இயலும்.
மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் கல் இறால்கள் கடலடியில் ஏன் இப்படி ஆழ்கடலை நோக்கி பயணம் மேற் கொள்கின்றன? இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
குளிர்கால புயல் காற்றில் அடிபடாமல் தப்பிக்க இப்படி குளிர்நிறைந்த ஆழ்கடல் பகுதியை நோக்கி கல்இறால்கள் நகர்வ தாகக் கருதப்படுகிறது. குளிர்காலத்தில் உணவு கொஞ்சமாகவே கிடைக்கும். அந்த காலகட்டத்தில் குளிர்நிறைந்த சூழலில் இருந்தால் அதன்மூலம் பசியைத் தாங்கிக் கொள்ள முடியும். மேலும், அதிகத் திறனை பயன்படுத்தாமல் குறைந்த திறனைப் பயன்படுத்தி உயிர் வாழவும் முடியும். இவை போன்ற காரணங்களை கருதித்தான் கல் இறால்கள் இப்படி குளிர்கால பயணம் செய்வதாக நம்பப்படுகிறது. குளிர்ந்த சூழலில் கருமுட்டைகள் வேகமாக முதிர்ச்சியடையும் என்பதால் பெண் கல்இறால்களுக்கும் ஒருவகையில் இந்த நடைபயணம் உதவு கிறது. 
கல்இறால்களைப் பற்றி இன்னும் பல சுவையான தகவல்கள் உள்ளன. ஈரமும், குளிர்ச்சியும் இருந்தால் கல்இறால்களால் நீருக்கு வெளியிலும் வாழ முடியும். குறிப்பாக செவுள் பகுதியில் ஈரம் இருக்கும் வரை வெளி காற்றை உறிஞ்சி மூச்சுவிட்டு கல்இறால் உயிருடன் இருக்கும். செவுளில் ஈரம் காய்ந்து போனால் கல்இறால் நிலைகுலைந்து இறந்து போகும்.
அதுபோல, கல்இறால்களால் வலியை உணர முடியாது. இவற்றுக்கு மூளை இல்லை எனவும், சரிவர வளராத மூளை கொண்டவை என்றும், கல்இறாலின் மூளை கரைந்து அவ்வப்போது புதிய மூளை உருவாகும் எனவும் பலப்பல கருத்துகள் உள்ளன.
கடலடியில் ஒரு சதுர அங்குலத்துக்கு 100 பவுண்ட் அழுத்தம் நிலவும் இடத்தில் கூட, அந்த அழுத்தத்தை கல்இறால் தாங்கிக் கொண்டு உயிர்வாழும் என்பது இன்னும் புதுமையான தகவல்.

Sunday, 2 December 2018


தேங்காய் நண்டு துணுக்குகள்

·         புகழ்பெற்ற உயிரியலாளர் சார்லஸ் டார்வினையே திகைக்க வைத்த நண்டு தேங்காய் நண்டு. இந்த பெரிய அளவுள்ள நண்டை முதன்முதலில் பார்த்தபோது டார்வின் திகைத்துப் போயிருக்கிறார்.
·         ஆரம்பத்தில் கடல்நத்தைக் கூடுகளில் வாழும் தேங்காய் நண்டின் குஞ்சுகள், வளர வளர நத்தைக்கூட்டைவிட பெரிதாக வளரத்தொடங்கி விடும். நாம் வளரும் போது காலணிகள் ‘சிறிதாகி‘ விட்டால் அதை நாம் கைவிட்டு விடுவதைப்போல, இந்த நத்தைக்கூடுகளை தேங்காய் நண்டு குஞ்சுகள் கைவிட்டுவிட்டு புதிய கூடுகளைத் தேடும்.
·         வளரும் நண்டுகளின் அளவுக்கேற்ப கூடுகள் இனி கிடைக்காது என்பதாலும், கிடைக்கும் கூடுகள் கனமானவை என்பதாலும் தன் உடல்கூட்டை நண்டுகள் கடினமாக்கிக் கொள்ளத் தொடங்கிவிடும்.
·         கனத்த, பலமான ஓடு காரணமாக பகை உயிர்களிடம் இருந்து இனி தப்பிக்க முடியும் என்று தெரிந்ததும் தேங்காய் நண்டுகள் கடலைவிட்டு தரையேறி, நிலத்தில் குடியேறி வாழத் தொடங்கும்.
·         தேங்காய் நண்டுகள் தேங்காயை உடைத்துத் தின்பதில்லை. தேங்காய் மீதுள்ள நாரை உரித்து, அதன் மேல்தோலை இவை மெல்ல மெல்ல சுரண்டும். இந்தப் பணி பல மணிநேரங்களாக நடக்கும். அதன்பின் தேங்காய் ஓட்டில் உள்ள பலம் குன்றிய பகுதியைக் கண்டுபிடித்து அந்த இடத்தில் துளையிட்டு, தேங்காயைப் பிளந்து, உள்ளிருக்கும் பருப்பை தேங்காய் நண்டு தின்னும்.
·         தேங்காய்ப் பருப்பில் உள்ள சத்துகள் காரணமாக தேங்காய் நண்டு இன்னும் பெரிதாக இருமடங்கு வளர்கிறது.
·         தேங்காய் நண்டுகள் தன் இனத்தை கொன்று தின்னக் கூடியவை. இதர நண்டினங்களையும் இது உணவாகக் கொள்ளும். நண்டு வளரும்போது அதன் மேல்தோட்டை கழற்றிக் கொள்ளும். கழற்றிய தனது மேல்தோட்டையும் தேங்காய் நண்டு உணவாக்கிக் கொள்ளும்.
·         தேங்காய் நண்டு இரவில் நடமாடும் உயிரினம் என்பதால், கரிய இருட்டில் கூட கூரிய வாசனை அறியும் திறன்மூலம் இரையைக் கண்டுபிடிக்கும்.
·         உணவின் வாசனையற்ற எந்தப் பொருளும் தேங்காய் நண்டுகளைக் கவராது. தேங்காய் நண்டு அவற்றை உண்ணாது. தேங்காயை மட்டுமின்றி கடலோரம் வாழும் மக்களின் பாத்திரம் போன்ற உடைமைகளையும் தேங்காய் நண்டு சிலவேளைகளில் தூக்கிச் செல்வதுண்டு.
·         தேங்காய் நண்டு ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட ஓர் ஆட்சிப்பரப்பு உண்டு. அதற்குள் மற்றொரு நண்டு வந்தால் தன் கடிகாலைத் தூக்கி தேங்காய் நண்டு, ஊடுருவல் செய்யும் நண்டை எச்சரிக்கும். ஒவ்வொரு நண்டும் தங்கள் தங்கள் பரப்புக்குள்ளேயே இரை தேடும்.
·         ஒரு தேங்காய் நண்டின் வளைக்குள் மற்றொரு தேங்காய் நண்டு அத்துமீறி நுழைந்தால் இரண்டில் ஒரு நண்டு மற்ற நண்டுக்கு இரையாக வாய்ப்புள்ளது.
·         தேங்காய் நண்டுகள் நாற்பது ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை. ஆனால், இளம்நண்டுகள் பல்வேறு ஆபத்துகளில் இருந்து தப்பி, பெரிதாக மாறும் வாய்ப்பு மிகவும் குறைவு.

தேங்காய் நண்டு (Giant Robber Crab) 



ஆர்த்ரோபாட்ஸ் (Arthropods) என்ற கணுக்காலிகள் கூட்டம் பலவகைப் பட்டது. கால்பகுதிகள் தனித் தனியாக இணைந்திருக்கும் முதுகெலும்பில்லாத உயிரினக் கூட்டம் இது. அனைத்துவகை பூச்சிகள், நண்டுகள், தேள்கள்.. ஏன் சிலந்திகள் கூட இந்த கூட்டத்தில் அடங்கும்.
இந்த கணுக்காலிகள் கூட்டத்தைச் சேர்ந்த ஒர் உயிரினம்தான் தேங்காய் நண்டு. Birgus latro என்பது இதன் அறிவியல் பெயர். நிலத்தில் வாழும் கணுக்காலி உயிர்களில் மிகப்பெரியது தேஙகாய் நண்டுதான்.
தேங்காய் நண்டு இரண்டு முதல் மூன்றடி வரை நீளம் கொண்டது. ஒருவகையில் இது முனிவன் நண்டு அல்லது துறவி நண்டின் (Hermit crab) வகையைச் சேர்ந்தது.
முனிவன் நண்டை உங்களுக்குத் தெரியும்தானே? கைவிடப்பட்ட நத்தைக் கூடு ஒன்றை தனது வீடாக்கிக் கொண்டு, கூட்டை சுமந்தபடி வேகவேகமாக எட்டுவைத்து நடக்கும் ஒரு நண்டு, முனிவன் நண்டு.
தேங்காய் நண்டு, முனிவன் நண்டுக்கு உறவுக்கார நண்டு என்றாலும் மூன்றடி வரை நீளமும், மூன்று முதல் நான்கு கிலோ வரை எடையும் கொண்டது. இவ்வளவு பெரிய நண்டாக இருப்பதால் இதற்கேற்ற அளவில் பெரிய நத்தைக்கூடு எதுவும் வாடகைக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஆகவே, கூடு எதையும் இரவல் பெறாமல் தேங்காய் நண்டு தனித்து இயங்குகிறது. என்றாலும் முதிர்ச்சி அடையாத இளம்பருவத்தில் இதுபோன்ற சிறு ஓட்டுக்கூடு ஒன்றை பாதுகாப்பு கேடயமாகக் கொண்டு தேங்காய் நண்டு வாழ்வதுண்டு.
தேங்காய் நண்டின் ஓடு கடினமானது. மேலும் நம்மைப்போல காற்றை நேரடியாக தேங்காய் நண்டால் உள்ளிழுத்து மூச்சுவிட முடியும். நன்னீரைக் குடித்து உயிர் வாழவும் முடியும். இந்தத் திறமைகள் காரணமாக கடலை விட்டு குறிப்பிட்ட தொலைவு வரை நிலத்தில் தேங்காய் நண்டால் அலைந்து திரிய முடியும். முட்டையிட மட்டும் இது மீண்டும் கடலைத்தேடி வந்துவிடும்.
நிலத்தில் வாழப்பழகிய நண்டு என்பதால் கடலில் தேங்காய் நண்டு நீண்டநேரம் முக்குளித்தபடி இருக்க முடியாது. அப்படி இருந்தால் சில மணிநேரங்களில் அது நீரில் மூழ்கிப் போக வாய்ப்புள்ளது. தேங்காய் நண்டை நீண்டநேரம் நாம் கடல்நீரில் அமிழ்த்திப் பிடித்தாலும் அது இறந்து விடும்.
மற்ற நண்டுகளைப் போல தேங்காய் நண்டுக்கும் பத்து கால்கள். இதன் கால்கள், குறிப்பாக கடிகால்கள் வலிமையானவை. இதன்மூலம் தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களைப் பறித்துப் போட தேங்காய் நண்டால் முடியும். தேங்காய் நாரை உரித்து, அதைத் துளையிட்டு உள்ளிருக்கும் பருப்பை தின்னவும் தேங்காய் நண்டால் முடியும். இந்தவகை நண்டுக்கு திருட்டு நண்டு (Robber crab) என்ற பெயர் வர இதுதான் காரணம். (அது சரி, மனிதர்களுக்கு உடைமையான  பொருட்களை இதர உயிர்கள் எடுத்துக் கொண்டால் அது திருட்டுதானே? தேனீயின் தேன், பசுவின் பால் போன்ற மற்ற உயிர்களின் உடைமைகளை மனிதர்கள் எடுத்துக் கொண்டால் அது திருட்டு ஆகாது).
தேங்காய் நண்டு, தேங்காய்களை மட்டுமின்றி, அழுகிய எலி, நண்டு போன்ற உயிரினங்கள், சிலவகை பூச்சிகள், கடலின் கழிவுகள், பழங்கள், உதிர்ந்த இலைகள், சிலவகை தாவரங்களையும் உணவாக உண்ணும். இரவில் மட்டுமே தேங்காய் நண்டு வெளியே வரும். ஏனைய பொழுதுகளில் மரப்பொந்துகளில் அல்லது மணலில் குழிதோண்டி அதனுள் தங்கி இது ஓய்வெடுக்கும். குழிக்குள் தேங்காய் நார்களைப் பரப்பி மென்மையான மெத்தையாக்கிக் கொள்ளும்.
தேங்காய் நண்டுகள் கடலில் முட்டையிடும் என்பதை முன்பே பார்த்தோம். முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் (Zoea larvae), தொடக்கத்தில், தன்னிச்சையாக கடலில் நீந்தித் திரியும். அதன்பின் சிப்பி அல்லது சங்குகளுக்கு நுழைந்து கொண்டு இவை உயிர் வாழும். ஓரளவு வளர்ந்து பெரிதான பிறகு, நிலத்தில் இவை குடியேறி வாழத் தொடங்கும்.
தேங்காய் நண்டுகள் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள குருசடைத் தீவு, அப்பாத் தீவு, முயல்தீவு, நல்ல தண்ணீர்த் தீவு போன்ற பல தீவுகளில் வாழ்கின்றன. அந்தமான் நிகோபார் தீவுக் கூட்டங்களிலும் இவை உள்ளன.
தென்னை மரங்களில் ஏறி காய்பறித்துப்போடும் தேங்காய் நண்டுகள் மரத்தில் இருந்து இறங்கும்போது தரை தென்பட்டதும் குறிப்பிட்ட அளவு உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் பழக்கம் கொண்டவை. இதனால், அந்தமான் தீவுகளில் உள்ள தென்னை விவசாயிகள், தென்னை மரங்களில் பாதி உயரத்தில் ஓலைகளை விரித்துக் கட்டி அதில் மணல் பரப்பி வைத்து விடுவார்கள். தேங்காய் நண்டு மரத்தில் இருந்து இறங்கும்போது, இருட்டில், இந்த ஓலையில் உள்ள மணலை பார்த்துவிட்டு, குறிப்பிட்ட தூரத்தில் தரை இருப்பதாக தப்புக் கணக்குப் போட்டு குதித்துவிடும். அப்படி குதித்து அதிக உயரத்தில் இருந்து விழுந்த அதிர்ச்சியில் அவை திக்குமுக்காடி தவிக்கும்போது சத்தம் கேட்டு ஓடிவரும் விவசாயிகள் நண்டை அடித்துக் கொன்று விடுவது வழக்கம்.

நிகோபார் தீவுகளில் உள்ள ஒருவகை நண்டுதின்னி குரங்கு (Macaca fusicularis), தேங்காய் நண்டுகளை கொன்றுதின்னும் என அங்குள்ள பழங்குடி மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இது உறுதியான தகவல் இல்லை.
தேங்காய் நண்டுக்கு மனிதர்களால் மட்டுமின்றி காட்டுப்பன்றி, சிலவகை எலிகளாலும் ஆபத்து உண்டு.
தேங்காய்களைப் பறித்து உண்பதாலும், தேங்காய் நண்டுகளின் இறைச்சி மருத்துவக்குணம் கொண்டது என்ற நம்பிக்கையாலும் இந்த வகை நண்டுகள் அதிக அளவில் கொல்லப்படுகின்றன. அரிய இந்த உயிரினம் தற்போது அழியத் தொடங்கி உள்ளது.
தேங்காய் நண்டு இதன் இறைச்சிக்காக மட்டுமின்றி அதன் உடலில் இருந்த எடுக்கப்படும் எண்ணெய்க்காகவும் கொல்லப்படுகிறது. தேங்காய் நண்டின் சதையில் உள்ள எண்ணெய் உண்ணத்தகுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேங்காய் நண்டின் இறைச்சி உண்ணத்தகுந்தது என்றாலும், கடற்கழிவுகள், அழுகிய  உயிர்கள், நச்சேறிய தாவரங்களை இது உண்ணுவதால் சிலவேளைகளில் தேங்காய் நண்டின் இறைச்சி நஞ்சாக மாறவும் வாய்ப்புள்ளது.

Saturday, 1 December 2018


மூன்று புள்ளி நண்டு (Three spot crab)


மூன்று புள்ளிக்கோலம் தெரியும்.. அது என்ன மூன்று புள்ளி நண்டு? கடலில் வாழும் நீந்தும் நண்டினங் களில் ஒன்று ‘மூன்று புள்ளி நண்டு‘. ‘முக்கண்ணன் நண்டு‘, ‘கண் நண்டு‘ என்றும் இதை அழைப்பார்கள். வெட்டுக்காவாலி என்ற பெயரும் இதற்கு உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
மூன்று புள்ளி நண்டின் அறிவியல் பெயர் Portunus sanguinolentus. இதன்
குவிந்த பசுஞ்சாம்பல் நிற ஓடு சற்று பெரியது. 15 முதல் 20 சென்டி மீட்டர் நீளம் கொண்டது. புவியியல் சூழ்நிலைக்கேற்றபடி சிலஇடங்களில் மூன்று புள்ளி நண்டுகளின் ஓடுகள், ஆலிவ் (Olive) நிறம் முதல் அடர்பழுப்பு நிறமாகவும் கூட காணப்படும்.
இந்த ஓட்டில் ரத்தச்சிவப்பு நிறத்தில் வெள்ளைநிற விளிம்புகளுடன் மூன்று புள்ளிகள் காணப்படும். பார்த்த உடன் இந்த நண்டை அடையாளம் கண்டுகொள்ள இந்த மூன்று புள்ளிகளே உதவுகின்றன. ரத்தச் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் இருப்பதால், இந்த வகை நண்டுக்கு ரத்தப்புள்ளி நண்டு (Blood spotted crab) என்ற பெயரும் உண்டு.
மூன்று புள்ளி நண்டின் நீந்த உதவும் கால்கள் தட்டையானவை. நண்டின் நகங்கள் நீளமானவை. மூன்று புள்ளி நண்டு ஆபத்தற்றது. ஆனால், இதன் கடி சற்று வலியை ஏற்படுத்தும்.
மூன்று புள்ளி நண்டு ஒரு கொன்றுண்ணி. சிறிய ஒட்டுண்ணிகளையும், சிறு கடல்வாழ் உயிர்களையும் இது கொன்று தின்னும். இரவில் கடல்மேற் பரப்புக்கு வந்து நீந்தும். பகலில் கடலடி மணல் சகதிகளில் இது காணப்படும்.
கருவுற்ற மூன்று புள்ளி பெண் நண்டுகளை ஆண்டு முழுவதும் பார்க்க முடியும். மூன்று புள்ளி நண்டு மனிதர்கள் உண்ணத்தகுந்த நண்டு.

Thursday, 29 November 2018


மிக நீ….ளமான உயிரினம்

Lion mane Jelly fish
முருக பெருமான். ஔவை மூதாட்டியின் முன்னிலையில் தோன்றி, ‘உலகில் பெரியது எதுவோ? உலகில் அரியது எதுவோ‘ என்று கேட்டது போல, உங்களிடம் யாராவது, “பெருங் கடல்களில் வாழும் உயிரினங் களில் மிக நீ…..ளமான உயிரினம் எது?“ என்று கேட்டால் என்ன செய்வீர்கள்?
ஏதாவது ஒருவகை திமிங்கிலமாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நினைக்கக் கூடும். அப்படி நினைத்தால் அது தவறான விடை.
உண்மையில், உலகின் மிக நீளமான கடலுயிர், Lion mane Jelly fish எனப்படும் ஒரு வகை சொறியினம்தான். இந்த சிங்கப் பிடரி சொறி (இழுது) 36.6 மீட்டர் நீளத்துக்கு அதாவது 120 அடி நீளத்துக்கு (!) விழுது போன்ற நீளமான உணர்விழைகளைக் கொண்டது. மெடூசாவின் கூந்தல் போன்ற இந்த உயிரினமே கடலின் மிகநீளமான உயிரினம்.
இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பெறும் மிகநீளமான கடலுயிரினம் நீலத் திமிங்கிலம் (Blue Whale). இதன் நீளம் 33 மீட்டர். அதாவது 108 அடி. இந்தப் பட்டியலில் மூன்றாவதாக இடம்பெறத்தக்கது விந்து திமிங்கிலம் எனப்படும் ஸ்பெர்ம் திமிங்கிலம் (Sperm Whale). இதன் நீளம் 24 மீட்டர் (78.7 அடி).
நீலக்கடல்களின் நீளமான நான்காவது உயிரினம் எது என்று கேட்டால் அது 18.8 மீட்டர், அதாவது 61.68 அடிவரை நீளமுள்ள அம்மணி உழுவை (Whale Shark). ஐந்தாவது நீளமான உயிரினம் மேய்ச்சல் சுறா (Basking Shark). மேய்ச்சல் சுறாவின்  நீளம் ஏறத்தாழ 12.27 மீட்டர் (40.2 அடி).
நீளமான உயிரினப்பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெறுவது பெரும்பீலிக் கணவாய். இதன் நீளம் ஏறத்தாழ 12 மீட்டர் (39 அடி).
இதற்கு அடுத்தபடியாக ஏழாவது இடத்தை பசிபிக் கடல் பெருங்கணவாய் பெறுகிறது. இதன் நீளம் 9.8 மீட்டர் (32 அடி). எட்டாவது இடத்துக்கு சொந்தம் கொண்டாடுவது மிகப்பெரிய Giant Oarfish. இதன் நீளம் 8 மீட்டர் (26 அடி).
நீலத் திமிங்கிலம்
நீளமான கடலுயிரினங்களில் 9ஆவது இடத்தைப் பெறுவது Great white Shark எனப்படும் பெருஞ்சுறா அல்லது பெரு வஞ்சுறா. இதன் நீளம் 7 மீட்டர். அல்லது 22.96 அடி.
பத்தாவது இடத்தை யானைத் திருக்கை என தமிழில் வழங்கப்படும் மண்டா ரே (Manta Ray) பெறுகிறது. வளர்ந்த யானைத்திருக்கையின் நீளம் பெருஞ் சுறாவின் அதே நீளம்தான். அதாவது 7 மீட்டர். அல்லது 22.96 அடி.
இவற்றில் அம்மணித்திருக்கை, பெருஞ்சுறா, பெருங்கணவாய், மேய்ச்சல் சுறா, ஆனைத்திருக்கை போன்ற கடலுயிர்கள் பற்றிய தகவல்களை நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில் காண முடியும்.
(அம்மணித்திருக்கை Oct, 2015, July 4, 2018, ஆனைத்திருக்கை Ap.28, 2016. மேய்ச்சல் சுறா Feb 25, 2017, பெருஞ்சுறா May 10, 2017, பெருங்கணவாய் May 29, 2017)