Wednesday, 16 May 2018


திமிங்கிலக் குட்டி

கடலில் வாழும் மிகப்பெரிய உயிர்களான திமிங்கிலங்கள் வெப்ப பகுதி கடல்களில்தான் குட்டி ஈனுவது வழக்கம். குளிர்காலங்களில் வெப்ப கடல்பகுதிகளை நாடி வந்து தாய்த்திமிங்கிலங்கள் அங்கே குட்டி ஈனும்.
திமிங்கிலங்களின் உடலைச் சுற்றி ஓரடி அகலம் வரை  பிளப்பர் (Blubber)  எனப்படும் கொழுப்பு படலம் இருக்கும். உறைய வைக்கும் பனிநிறைந்த குளிர்கடல்களில், குளிரில் இறந்து விடாமல் திமிங்கிலத்தை வாழவைப்பது இந்த பிளப்பர்தான். புதிதாகப் பிறக்கும் திமிங்கிலக் குட்டியின் உடலில் பிளப்பர் எனப்படும் கொழுப்புப் படலம் இருக்காது. எனவே திமிங்கிலக் குட்டி பிறக்க தோதான இடம் குளிர்க்கடல் அல்ல. வெப்பக் கடல்தான். எனவே வெப்பக் கடல்களில் திமிங்கிலங்கள் குட்டி ஈனுகின்றன.
மனிதர்களின் கர்ப்ப காலம் 10 மாதங்கள். ஆனால், திமிங்கிலங்களின் கர்ப்ப காலம் 10 முதல் 13 மாதங்கள். பல்லுள்ள திமிங்கில இனமான ஸ்பெர்ம் (Sperm)  திமிங்கில இனத்தின் கர்ப்ப காலம் 19 மாதங்கள்.
மனிதக்குழந்தை ஒன்று தாய் வயிற்றில் 8 பவுண்ட் எடையை எட்ட 9 மாதங்கள் வரை ஆகும். ஆனால் திமிங்கிலங்களில் மிகப்பெரிய இனமான நீலத்திமிங்கிலத்தின் குட்டி வெறும் 11 மாதங்களில் 25 அடி நீளம், 25 ஆயிரம் பவுண்ட் எடையை எட்டிவிடும். உலகப் பாலூட்டிகளில் மிகப்பெரிய குட்டி, நீலத் திமிங்கிலத்தின் குட்டிதான்.
நாம் தாய் வயிற்றில் பிறக்கும் போது தலைகீழாகப் பிறந்தோம். மூச்செடுக்க வசதியாக நமது தலை முதலில் வெளிவந்தது. ஆனால் திமிங்கிலக் குட்டிகள் கடலுக்கு அடியில் பிறப்பதால், முதலில் வால்தான்தலையை நீட்டும். பிறகுதான் முழு உடலும் வெளிவரும். திமிங்கிலக்குட்டியின் தலை முதலில் வெளிவந்தால் அதன் மூச்சுத் துளைக்குள் நீர் புகுந்து அது இறந்து விட வாய்ப்புள்ளது.
திமிங்கிலக் குட்டி பிறந்தவுடன் செய்ய வேண்டிய முதல்அரும்பணி மூச்செடுப்பது. திமிங்கிலக் குட்டியை கடலின் மேற்பரப்புக்கு கொண்டு வந்து அதை மூச்செடுக்க வைக்கும் பணியை தாய்த் திமிங்கிலமோ அல்லது பேறு காலத்தின் போது அதன் உடனிருந்து உதவிய அத்தை அல்லது பெரியம்மா திமிங்கிலமோ செய்யும். இவற்றின் உதவியுடன் திமிங்கிலக்குட்டி கடல்மேல் வந்து உயிர்க்காற்றை முதன்முறையாக இழுத்து மூச்சுவிடும்.
அதன்பிறகு பாலருந்தும் பணி. தாய்த் திமிங்கிலம் அதன் பால் சுரப்பிகளில் உள்ள தசைகளை இயக்கி, குட்டியின் வாயை தனது பால்காம்பில் பொருந்த வைத்து, பாலைப்பொழியும். ஒரு நாளைக்கு 40 முறை திமிங்கிலக் குட்டி பாலருந்தும்.
திமிங்கிலப் பால் மிகச்செழுமையானது. 50 விழுக்காடு வரை கொழுப்புச்சத்து நிறைந்தது. (பசும்பாலில் வெறும் 4 விழுக்காடு கொழுப்புதான்) திமிங்கில பாலை சுவை பார்த்த சில மனிதர்கள் அது, மெக்னீசியம், மீன் சதை, கல்லீரல், ஆமணக்கெண்ணெய் கலந்த கலவை போல இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். திமிங்கிலப் பால் நமக்கு ஒருவேளை குமட்டலாம். ஆனால், திமிங்கிலக் குட்டிக்கு அது சுவை நிறைந்த பேரமுதம்.
இந்த செறிவான கொழுப்புப் பால் மூலம் திமிங்கிலக் குட்டி ஒரே நாளில் 200 பவுண்ட் வரை, அதாவது ஒரே நாளில் 4 மனிதக்குழந்தைகளுக்கு இணையாக வளரும். நாள் ஒன்றுக்கு திமிங்கிலக் குட்டி 130 கேலன் பால் குடிக்கும். பொதுவாக திமிங்கிலக் குட்டிகள் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை பால் அருந்துவது வழக்கம். ஸ்பெர்ம் திமிங்கிலக் குட்டிகள் 10 ஆண்டுகள் வரை அவ்வப்போது தாய்ப்பால் குடிக்கும் பழக்கம் உள்ளவை.
திமிங்கிலக் குட்டிகள் பிறந்த சில  நாள்களில்பேசகற்றுக் கொள்கின்றன. திமிங்கிலங்களின் மொழியில், அம்மா, உணவு, ஆபத்து, விளையாட்டு என்ற ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு விதமான ஓசை இருக்கிறது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது போலபேசத்தெரிந்த திமிங்கிலக் குட்டிதான் பிழைக்கும் என்பதால் திமிங்கிலக் குட்டிகள் ஒவ்வொன்றும் தாயிடம் இருந்து பேசக்கற்றுக்கொள்கின்றன. சிறப்பு சீழ்க்கை அதிர்வொலிகள், சுண்டெலி போன்ற கிறீச் அதிர்வொலிகளை திமிங்கிலத் தாய் கற்றுக் கொடுக்கிறது. குட்டி கற்றுக்கொள்கிறது.
திமிங்கிலங்கள் நன்றாகப்பேசத் தெரிந்தவை. கடலில் 2 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு திமிங்கிலத்துடன் இங்கிருக்கும் ஒரு திமிங்கிலம் பேச முடியும். உணவு இருக்கும் இடத்தை மற்ற திமிங்கிலத்துக்குத் தெரியப்படுத்தவும், நெருங்கி வரும் ஆபத்தை உணர வைக்கவும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று உரையாடுகின்றன.
திமிங்கிலத்துக்கு நம்மைப் போல குரல்வளை இல்லை. எனவே அதிர்வுகள் மூலம் அவை பேசுகின்றன. கதவைத் திறக்கும் ஒலிகள், கீச்சொலிகள், சீழ்க்கை ஒலிகள், பலவித முக்கல், முனகல்கள் போன்ற அதிர்வுகளை திமிங்கிலத்தால் ஏற்படுத்த முடியும். மனிதக் காதுகளுக்கு கேட்காத இந்த கேளா ஒலியை மற்ற திமிங்கிலங்களால் உணர முடியும். புரிந்து கொள்ளவும் முடியும்.
திமிங்கிலங்கள் ஒலியலைகளால் பேச மட்டுமல்ல,பார்க்கவும்செய்கின்றன என்பது இன்னொரு வியப்பான விடயம். திமிங்கிலம் அதன் மூச்சுத்துளை வழியே, ஒலியலையை வெளியிட விட முடியும். இந்த ஒலியலை எதிரே வரும் பொருள்களின்மீது மோதி எதிரொலி போல மீண்டும் திமிங்கிலத்தின் செவிகளுக்குத் திரும்புகின்றன. இதன்மூலம் எதிரே வருவது படகா, மீன்கூட்டமா, பாறையா, மணல்கரையா என்பதை திமிங்கிலம் உணர்ந்து கொள்கிறது. எதிரே உள்ள உருவத்தின் நீளம் அகலம் உயரத்தையும் இந்த ஒலியலை மூலம் திமிங்கிலம் தனது மூளையில் ஒரு படமாக உணர்கிறது. எதிரே வரும் பொருள் அருகில் மிக நெருங்க நெருங்க திமிங்கிலத்தின் ஒலியலை செல்லும் வேகமும், திரும்பும் வேகமும் அதிகரிக்கும். பல்லுள்ள ஸ்பெர்ம் போன்ற திமிங்கிலங்களால் இந்த ஒலியலை மூலம் எதிரே வரும் எதிரியைத் தாக்கி சற்று திக்குமுக்காட வைக்கவும் முடியும்.
கடலில் ஒரு மைல் தொலைவில் வரும் மீன்கூட்டத்தை 2 நொடிகளில் திமிங்கிலத்தால்பார்க்கமுடியும். ஒலியலைகள் போக ஒரு நொடி, வர ஒரு நொடி, அவ்வளவுதான். திமிங்கிலத்தின் இந்த திறன்எக்கோலொக்கேசன்‘ (Echolocation) என அழைக்கப்படுகிறது. இந்த எக்கோலொக்கேசன் பழுதாகி, செயல்படாத போதுதான் திமிங்கிலங்கள் கடலோரம் ஒதுங்கி தரை தட்டுகின்றன.
கடலில் தாயைப் பிரிந்த திமிங்கிலக் குட்டி ஒன்று இந்த எக்கோலொக்கேசன் மூலம் உதவி கேட்டு அழுகுரல் எழுப்ப, ஒரே வேளையில் 25 ஸ்பெர்ம் பெண் திமிங்கிலங்கள் அதைக் காக்க ஓடிவந்ததை ஒருவர் பதிவு செய்திருக்கிறார்.
திமிங்கிலங்களின் இந்த எக்கோலொக்கேசனுக்கு இன்னொரு விதமான பயன்பாடும் இருக்கிறது. ஒரு திமிங்கில குட்டியின் வயிற்றில் காற்றுக் குமிழ் இருப்பதைக் கூட தாய்த்திமிங்கிலத்தால் இந்த எக்கோலொக்கேசன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். தட்ட வேண்டிய இடத்தில் குட்டியைத் தட்டி அந்த காற்றுக் குமிழை ஏப்பமாக தாய்த் திமிங்கிலம் வெளியேறச் செய்யும்.
திமிங்கிலக் குட்டி உணவு, பாதுகாப்பு, கல்விக்காக எப்போதும் அதன் தாயை அண்டியே வாழும். தாயின் அடிவயிற்றையோ வாலை ஒட்டியோ குட்டி நீந்திவரும். சில வேளைகளில் தாய்க்கு இணையாக பக்கம் பக்கமாக குட்டி நீந்தி வருவதும் உண்டு. தாய்த் திமிங்கிலம் இரைதேடச் சென்றால் அதன் இடத்தில் இன்னொரு பெண் திமிங்கிலம் இருந்து குட்டியை சொந்த பிள்ளை போல பார்த்துக் கொள்ளும். தாய்த் திமிங்கிலம் இறந்து போனால், குட்டியை மற்றொரு பெண் திமிங்கிலம் தத்தெடுத்து வளர்க்கும்.
பெரிய திமிங்கிலங்கள் குட்டிகளுடன் அவ்வப்போது விளையாடுவதும் உண்டு. சாம்பல் திமிங்கிலங்கள் குட்டியை தனக்கு மேல்பக்கம் நீந்த வைத்து ஊதுதுளையால் திடீரென காற்றுவளையங்களை ஏற்படுத்தி குட்டியை சுழல வைத்து வேடிக்கை காட்டும். குட்டியை தன் முகத்தால் தட்டி தட்டி தூக்கி எறிந்து விளையாடும் பழக்கமும் சாம்பல் திமிங்கிலங்களுக்கு உண்டு. ஸ்பெர்ம் திமிங்கிலம் பலம் வாய்ந்த தாடைகளால் குட்டியை முத்தமிடும். பக்கத் தூவிகளால் குட்டியை அணைத்துக் கொள்ளும் பழக்கமும் திமிங்கிலங்களுக்கு உள்ளது.
திமிங்கிலக் குட்டிகளும் மனிதக் குழந்தைகளைப் போலத்தான். சிலவேளைகளில் தாய் சொல்லைக் கேட்காமல் அவை குறும்புகளில் ஈடுபடும். அப்போது தாய்த் திமிங்கிலம் சிறு தண்டனைகளைத் தரத் தவறாது. திமிங்கிலத்தில் சிறிய வகையான ஓங்கல், அதன் குட்டியை சிறிது நேரம் தண்ணீருக்குள் அமிழ்த்திப் பிடித்து, மூச்செடுக்க விடாமல் செய்து தண்டிக்கும்.
திமிங்கிலங்கள், யானையைப் போல ஒரே ஒரு குட்டியை ஈனுவதுதான் வழக்கம். 2 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் திமிங்கிலம் மீண்டும் குட்டி ஈனும். இதனால், பிறந்த ஒரே ஒரு குட்டியைப் பேணிக் காக்க திமிங்கிலத்துக்குப் போதிய நேரம் இருக்கிறது. திமிங்கில குட்டிகள் பால்குடியை மறந்து விட்டு இரை தின்னத் தொடங்கிவிட்டால், அதிலும் இரையைத் தானாக தேடும் அளவுக்கு முன்னேறி விட்டால், தாய், குட்டியைப் பிரிந்தவிடும். திமிங்கிலக் குட்டிக்கு 4 முதல் 6 வயது ஆகிவிட்டால், அதனால் தனித்து வாழ முடியும். அதோடு தனக்கென ஒரு குட்டியை அதனால் உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.
-Della Rowland எழுதிய Whales and Dolphins புத்தகத்தில் இருந்து
………………

Wednesday, 9 May 2018


அறிவார்ந்த மொழி

உயர்தனிச் செம்மொழி, உலகின் முன்தோன்றிய மூத்த மொழி என்றெல்லாம் புகழப்படும் நம் தமிழ்மொழி, ஓர் அறிவார்ந்த மொழி.
தன்னைச் சூழ உள்ள உயிர்களுக்கும், இயற்கைக்கும் தமிழர்கள் சூட்டியுள்ள பெயர்களே நம் தமிழ் மொழி, அறிவார்ந்த மொழி என்பதற்கான ஆதாரங்கள்.

எடுத்துக்காட்டாக Basking Shark எனப்படும் மேய்ச்சல் சுறாவை எடுத்துக் கொள்ளுங்கள்.

உலகின் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவைக்கு அடுத்தபடி மீன்களில் மிகப்பெரிய மீன் மேய்ச்சல் சுறா. இது எப்போதும் கடல் மேற்பரப்பிலேயே, அலைந்து திரிந்து சூரிய ஒளியில் குளிப்பதாக நினைத்து, ஆங்கிலத்தில் இதற்கு Basking shark என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
ஆனால் அறிவார்ந்த நம் மொழியில் அப்படி எந்த பெயரும் சூட்டப்படவில்லை. மேய்ச்சல் சுறா, கடல்மேற்பரப்பில் வாய்விரித்தபடி கவுர்களை மேய்ந்து திரிந்து உணவாகக் கொள்வதால் அதற்கு ‘மேய்ச்சல் சுறா‘ என்று மிகப்பொருத்தமாகப் பெயர் சூட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். அந்த வகையில் பார்த்தால் ஆங்கிலத்தைவிட நம் தமிழே அறிவியல் மொழி.
அடுத்தபடியாக பெருஞ்சுறா எனப்படும் White shark. பெருஞ்சுறாவின் மேற்பகுதி பழுப்பு கலந்த கரும்பலகை நிறம். சில சுறாக்கள் ஈயச்சாம்பல் நிறம். பெருஞ்சுறாவின் வயிற்றுப்பகுதி மட்டுமே அழுக்கு கலந்த வெள்ளை நிறமாகத் திகழும். ஆனால், ஆங்கிலத்தில் ஒரு சிறிதும் பொருத்தம் இல்லாமல் இந்த சுறாவுக்கு ‘வெள்ளைச் சுறா‘ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழிலோ இது ‘பெருஞ்சுறா’ என மிகப்பொருத்தமாக பெயர் பெற்றுள்ளது. கொன்றுண்ணி சுறாக்களில் மிகப்பெரியது என்பதுடன், கடலில், இரையைக் கொல்லும் வேட்டை மீன்களில் மிகப்பெரியதும் பெருஞ்சுறாதான் என்பதால் பெருஞ்சுறா என்ற பெயரே இதற்கு சாலப்பொருத்தமானது.

அடுத்ததாக மோட்டுமீன் எனப்படும் வானத்து விண்மீன் ஒன்றுக்கு வருவோம்.
வடமீன் எனப்படும் துருவ விண்மீன் (Polaris) நமது பூவுலக உருண்டையில் வட துருவத்துக்கு நேர் மேலே உள்ளது. இந்த விண்மீன் இடம்விட்டு இடம் மாறுவதில்லை. இது உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை.
இரவு முழுவதும் இந்த விண்மீனை அதன் இடத்திலேயே பார்க்கலாம்.
வடவிண்மீன், ஆணியடித்தது போல அசையாமல் நிற்க, அதைச்சுற்றியுள்ள  மற்ற விண்மீன்கள் வடவிண்மீனைச் சுற்றிச் சுழல்வது போல தோன்றும்.
புவிக்கோளம் அதன் அச்சில் சுழல்வதால் இந்த நிலை.
மத்திய ஆசியாவில் வாழும், கசாக் (Kazakh) இன மக்கள், வடவிண்மீனை ஒரு கம்பமாகவும், அதைச் சூழ உள்ள சிறுகரடி, பெருங்கரடி கூட்ட விண்மீன்களை அந்த கம்பத்தில் கட்டப்பட்ட ஆடுகளாகவும் கருதுகிறார்கள். வானத்தில் புல் மேய்ந்தபடி இந்த ஆடுகள், வடமீன் என்னும் கம்பத்தைச் சுற்றி வருவதாக கசாக்கிய கதைகள் கூறுகின்றன.

இந்த வடமீன் எனப்படும் துருவத் தாரகைக்கு உலகம் முழுக்க பலப்பல பெயர்கள். பழங்கால பினிசிய மாலுமிகள், இதை கப்பல் வெள்ளி, வழிகாட்டி வெள்ளி, கடலின் வெள்ளி (Stella Maris) என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள். பினிசிய வெள்ளி என்ற பெயர் கூட இதற்கு உண்டு.
ஆனால், இந்த வடவிண்மீனுக்கு தென்தமிழகத்தின் பரதவர்கள் சூட்டியிருக்கும் பெயர் ‘இருப்பு வெள்ளி‘ இருந்த இடத்தில் இருந்து அசையாமல் நிற்கும் ஒருவிண்மீனுக்கு இதைவிட பொருத்தமாக வேறு என்ன பெயர் சூட்டிவிட முடியும்? இதனால்தான் சொல்கிறேன் தமிழ் அறிவார்ந்த மொழி என்று.


கணவாய்த் தோடு

பளிங்கினால் ஒரு மாளிகை, பருவத்தால் மணிமண்டபம்என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ‘எலும்பினால் ஒரு பலூன்கேள்விப்பட்டிருப்போமா? எலும்பில் எப்படி பலூன் (Bony balloon) என்கிறீர்களா? எலும்பில் கூட பலூன் இருக்கிறது, கடல் உயிரான கணவாய்க்கு இருக்கிறது. அந்த எலும்பு பலூனின் பெயர் கணவாய்த் தோடு (Cuttle bone).
கணவாய்த்தோடு என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன், கணவாய் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது நல்லது இல்லையா? (கணவாய் பற்றிய பதிவுகள் நமது வலைப்பூவில் ஏற்கெனவே உண்டு.)
கணவாய் என்பது மீன் இனத்தைச் சேராத, முதுகுத்தண்டற்ற ஒரு கடலுயிர். கணவாய், தலைக்காலி (Cephalopod) வகையைச் சேர்ந்தது.
கணவாயில் ஒரு வகையான தோட்டுக் கணவாயில் இருக்கும் தோடுதான் கணவாய்த் தோடு. கடற்புரத்துக் குழந்தைகள் எல்லோருக்குமே ஏதோ ஒரு காலத்தில் இந்த கணவாய்த்தோடு விளையாட்டுப் பொருளாக இருந்திருக்கும்.
கணவாய்த் தோடு இரண்டரை சென்டிமீட்டர் நீளம் முதல் 10 அங்குல நீளம் வரை காணப்படும். மாட்டின் கொம்புகள் கெரட்டின் என்ற பொருளால் ஆக்கப்பட்டவை. அதுபோல கணவாய்த் தோடு அரகனைட் (Aragonite) என்ற பொருளால் ஆனது.
கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் நிறைந்த இந்த கணவாய்த்தோடு, காற்று நிறைந்த பலநூறு நுண்ணறைகளைக் கொண்டது. கணவாய், கடலின் அடி ஆழம் செல்லவும், மேலே எழவும் நீர்மூழ்கிக் கப்பலின் பாலாஸ்ட் (Ballast) தொட்டி போல இந்தத் தோடு பயன்படுகிறது.
மீன்களுக்கு, அதாவது என்பு வகை (Bony) மீன்களுக்கு, பள்ளை என்ற காற்றுப்பை எப்படி மேலும்கீழும் பல்வேறு கடல்ஆழங்களில் மாறிமாறி நீந்த உதவுகிறதோ, அதுபோல கணவாய்த்தோடு கணவாய் கடலில் மேலும், கீழும் பல்வேறு ஆழங்களுக்கு மாறிமாறி நீந்த உதவுகிறது.
மீனின் காற்றுப்பை போல கணவாய்த்தோடு கடலின் ஆழத்துக்கேற்ப விரியவோ, சுருங்கவோ செய்யாது. இந்நிலையில், கணவாய் நீரில் மூழ்க விரும்பினால், அதன் தோட்டு நுண்ணறைகளில் உள்ள காற்றுக்குப்பதில் நீரை பரிமாற்றம் செய்யும். அப்போது கணவாய் கனமாகி நீரில் மூழ்கும். அதுவே மேல்நோக்கி எழவேண்டும் என்றால், நீரை நீக்கி தோட்டில் காற்றை நிரப்பி கணவாய் மேலெழும்.
கணவாய்த்தோடு கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் கொண்டிருப்பதால், கிளி போன்ற கூண்டுபறவைகள் கொறிக்க வசதியாக பறவைக்கூண்டுகளில் இது தொங்க விடப்படுகிறது. கணவாய்த் தோட்டில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், பறவைகளின் எலும்பு, மற்றும் சிறகு வளர்ச்சிக்கு உதவுகிறது. சித்த மருத்துவப் பொருளாகவும், நகை தயாரிப்பு தொழிலுக்கும், பாலீஷ் எனப்படும் மினுக்கப் பொருளாகவும் கூட கணவாய்த்தோடு பலவிதங்களில் பயன்படுகிறது. 

Tuesday, 17 April 2018


காரச்சங்கு (DogWhelk) (Nucella lapillus)

துளையிடும் இயந்திரங்கள் தோன்றி, உலகம் தொழில்வளர்ச்சி அடையாத காலத்திலேயே, முதன்முதலாக துளையிடும் வித்தை தெரிந்த, அதற்காக ‘காப்புரிமை‘ பெற்ற ஒரு கடலுயிர் என்றால் அது காரச்சங்குதான்.
சங்குகளில் சிறியசங்கு காரச்சங்கு. இதன் அளவே இரண்டங்குலம்தான். ஆனால், சிறிய சங்கானாலும், சுத்தியலால் கூ

ட அடித்து உடைக்க முடியாத அளவுக்கு வலிமையான சங்கு இது.
‘நகரும் நத்தை‘ போல கடல் பாறைகள், மணல்வெளிகளில் நகர்ந்து வரும் காரச்சங்குக்கு அங்குமிங்கும் நகர முடியாத கடற்காய்களும் (Mussel), கொட்டலசுகளும்தான் (Barnacles) முதன்மை இரை.
காரச்சங்குகளில் சில, கடல்நீரை செவுள்பைகளில் செலுத்தி, கடல்நீரை சுவை பார்த்து, அதன்மூலம் இரையைத் தேடி வரும். சதைப்பற்றுள்ள இரு உணர்கொம்புகளும்கூட பாறைகளில் ஒட்டியிருக்கும் இரையை உணர காரச் சங்குக்குப் பயன்படும்.
இரையைப் பார்த்தாகி விட்டதா? இனி, துளையிடும் வேலை ஆரம்பமாகி விடும். ரம்ப முட்கள் கொண்ட நாக்கை நீட்டி கடற்காய் அல்லது கொட்டலசை காரச்சங்கு துளையிடும். துளையிடும் வேலை முடிந்து விட்டதா? இனி, தன் உடலில் உள்ள செரிக்கவைக்கும் திரவத்தை காரச் சங்கு அதன் இரையின் உடலுக்கு உள்ளே செலுத்தும். இந்த திரவம் இரையின் மெல்லுறுப்புகளைக் கரைக்க, அந்த சூப்பை உறிஞ்சி காரச்சங்கு உணவாக்கும்.
சிலவேளைகளில் அடம்பிடிக்கும் இரையை அடக்க அதற்கு மயக்க மருந்து செலுத்தி உணர்விழக்க வைக்கும் பழக்கமும் காரச்சங்குக்கு உண்டு.
ஒரு பருவம் முழுவதும் கடற்காய்களை விருந்தாக்கும் காரச்சங்கு, மற்றொரு பருவத்தில் கொட்டலசுகளை விருந்துண்ணும். இதனால் கடற்பாறைகளில் கொட்டலசுகள் அளவுக்கு அதிகமாக பெருக்கி கொட்டமடிக்க முடியாது. கடற்காய்கள் பெருகி கலாட்டா செய்யவும் முடியாது. இவற்றின் இனம் அளவுக்கு அதிகமாகப் பெருகி விடாமல் சமநிலையைக் காரச்சங்கு காக்கிறது. கடற்காய்கள், கொட்டலசுகளை மட்டுமின்றி பெரிய வலுவான பிற சங்கு களையும் கூட காரச்சங்கு இரையாக்க வல்லது.
காரச்சங்கு பொதுவாக வெண்மை நிறமானது. ஆனால், சாம்பல், பழுப்பு, மஞ்சள், ஆரஞ்சு, கிரீம் நிற காரச்சங்குகளும் உள. வரிகள், வடிவங்கள் கொண்ட காரச் சங்குகளும் உள்ளன.
பாசிகளை உண்ணும் பிளமிங்கோ (Flanmingo) எனப்படும் பூநாரை அல்லது கிளிமூக்கு நாரையின் சிறகுகளில் அந்த பாசியில் உள்ள நிறமி, எப்படி இளஞ்சிவப்பு (Pink) வண்ணத்தையும் வனப்பையும் ஏற்றுகிறதோ, அதேப்போல காரச் சங்கு அது உண்ணும் இரைகளின் அடிப்படையில் அடிக்கடி நிறம் மாறக்கூடியது.
கடற்காய்களை அதிகம் உண்ணும் காலத்தில் கரும்பழுப்பு நிறமாகவும், கொட்டலசுகளை அதிகம் உண்ணும் காலத்தில் வெள்ளை நிறமாகவும் தோன்றுவது காரச்சங்கின் பழக்கம்.
கடலடி பாறைகளின் கீழ் தொங்கியபடி வாழும் காரச்சங்குக்கு, எதிரிகள் என்று யாரும் இல்லை. ஆனால், இளம் காரச் சங்குகளை, அவற்றின் தோடு முரடாக இருப்பதால், கடலோரப் பறவைகள் சில அப்படியே விழுங்க விடக் கூடும்.
ஒரு கடலோரப் பகுதியின் சூழல் நலத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு கருவி காரச்சங்கு. இவற்றின் பெருக்கம், கடல் நலமாக இருப்பதை கண்ணாடி போல காட்டுகிறது.