Thursday 26 March 2020


வலைகடியன் கடல் பாம்பு (beak/Hook nosed Sea Snake)
சிறப்பான நீச்சல்
கடல் பாம்புகளில் 22 வகை பாம்புகள் இருக்கலாம். ஆனால், அத்தனை கடல் பாம்புகளிலும் அதிக பரவலாகக் காணப்படும் கடல் பாம்பு, வலைகடியன் பாம்புதான். அதிக அளவில் மீனவர்களின் கண்களில் தட்டுப்படுவதால் சாதாரண கடல்பாம்பு என்ற பெயரும் இவருக்கு உண்டு. வலைகடியனின் அறிவியல் பெயர் Enhydrina Schistosa.
வலைகடியனின் நீளம் வெறும் 4 அடிகள்தான். இதன் மூக்கு பறவையின் அலகு போல சற்று துருத்தியபடி, வாயைநோக்கி கவிழ்ந்திருப்பதால் ஆங்கிலத்தில் இதற்கு அலகுமூக்கு பாம்பு என்று பெயர் வந்துவிட்டது. வலைகடியன் என்ற இதன் பெயர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இருந்து வந்த சொல். அதிக அளவில் மீனவர்களின் வலைகளில் சிக்கி இந்த வகை பாம்பு வந்துவிடும் என்பதால் ‘வலையைக் கடிக்கும் பாம்பு’ என்ற பொருளில் வலைகடியன் என்று இது அழைக்கப் படுகிறது.
கடல் பாம்புகளில் அதிக நஞ்சுள்ள பாம்பு வலைகடியன்தான். கடலில் ஏற்படும் பாம்பு கடிகளில் 50 விழுக்காடு கடிகள் வலைகடியனின் கைவண்ணங்கள்தான். கடலில் கடல்பாம்பு கடிகளால் ஏற்படும் மரணங்களில் 90 விழுக்காடு கடிகள் வலைகடியனின் கைங்கரியமே. அதாவது கடல்பாம்பு கடி  இறப்புகளில் பத்தில் ஒன்பது இறப்பு வலை கடியனாலேயே ஏற்படுகிறது.
வலைகடியன் ஒரு கடியில் 7.9 முதல் 9.0 மில்லிகிராம் நஞ்சை வெளிப்படுத்தக் கூடியது. ஆனால் மனிதர்களைக் கொல்ல இதன் 1.5 மில்லிகிராம் நஞ்சே போதும். இந்த 1.5 மில்லிகிராம் அளவுள்ள நஞ்சு மட்டுமே, நல்ல பாம்பின் நஞ்சைவிட 4 முதல் 8 மடங்கு வீரியம் மிக்கது என்றால் வலைகடியனின் திறமையை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
தரையிலும் ஊரும்
வலைகடியன் தடித்த உடலும், சிறிய தடிவாலும் கொண்ட கடல்பாம்பு. இதன் வால்நுனி நீந்துவதற்குத் துடுப்புப் போலப் பயன்படுகிறது. வலைகடியனின் உடல் பக்கவாட்டுவாக்கில் தட்டையாகக் காணப்படும். பாம்பின் மேற்புறம், மங்கலான ஒலிவப் பச்சை அல்லது சாம்பல் பச்சை நிறத்தில் தடித்த கோடுகள், பட்டைகளுடன் காணப்படும். பாம்பின் வயிற்றுப்பகுதி வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக விளங்கும். இதன் தலை உடலைவிட சற்றுப் பெரியது. ஆனால் மற்ற பாம்புகளின் தலையைவிட சிறியது.
வலைகடியன் பாம்பு மண்டியும், சகதியும் கலந்த கலங்கலான கடற்பகுதிகளில் விரும்பி வாழும். குறிப்பாக ஆழம்குறைந்த கழிமுகப்பகுதி, மாங்குரோவ் காடுகளை அடுத்த திறந்த கடற்பகுதிகளில் இது அதிகம் காணப்படும். துறைமுகப் பகுதிகள், ஆழம் குறைவான வளைகுடா பகுதிகளிலும்கூட இது தென்படும்.
வலைகடியன் பாம்பு இரவிலும், பகலிலும் நடமாடும். இரவில் அதிக சுறுசுறுப்பாக இது இரையை வேட்டையாடக் கூடியது. இது 330 அடி ஆழம் வரை முக்குளித்துச் செல்லக்கூடிய கடல்பாம்பு. கடலின் அடியாழத்தில் 5 மணிநேரம் வரை இந்த பாம்பால் தங்கியிருக்க முடியும். அதன்பின்னரே இது மூச்செடுக்க கடல்மட்டத்துக்கு வரும்.
வலைகடியன் பாம்பு கலங்கலான கடல்நீரில் விரும்பி வசிப்பதால் இரை தேடும்போது கண்பார்வையை நம்பாது. பிளவுபட்ட நாக்கை வெளியே நீட்டி மோப்பத்தின் மூலம் இது இரைதேடும். தொடு உணர்வாலும் இரையை அறியும்.
இந்த வகை பாம்பு, கெழுது மீன் (Cat Fish), பேத்தாமீன், விலாங்கு மீன் இவற்றுடன் இறால், கணவாய் போன்றவற்றை இரையாக்கும். ஆனாலும், வலைகடியனின் முதன்மையான இரை கெழுது மீன்கள்தான். மற்ற கடல் பாம்புகளைப் போல கிடைத்த மீன்களை உண்ணாமல் கெழுது மீன்களை இந்தப் பாம்பு தேடி வேட்டையாடும். மீனவர்களின் வலையில் கெழுது மீன்கள் அதிகம் பட்டிருந்தால் அந்த வலையுடன் சேர்த்து வலைகடியன் பாம்பும் சிலவேளைகளில் வந்துவிடும். மீனவர்கள் கவனமாக இந்த பாம்பின் வாலைப்பிடித்து கடலில் வீசியெறிவார்கள்.
வலைகடியனின் பற்கள் 4 மில்லிமீட்டர் நீளத்துக்கும் குறைவானவை. ஆனால் வாய் இந்த பாம்பின் கழுத்தை விட இருமடங்கு விரியக் கூடியது. மிக வேகமாக நீந்தக்கூடிய பாம்பான வலைகடியன், இரைமீனை கடித்து அதை ஓடவிடாமல் செய்யும். நிலைகுலைந்து இனிமேல் போராட முடியாது என்ற நிலைக்கு மீன் வந்ததும், அதை சுழற்றி விட்டு மீனை முழுதாக விழுங்கத் தொடங்கும். மீனின் தலையில் இருந்து விழுங்குதலைத் தொடங்கி வாலில் முடிக்கும்.
வலைகடியனின் உடலில் ஒருவகை நொதிப்பொருள் (Enzyme) உண்டு. இரையை விழுங்கிய உடன் இந்த நொதிப்பொருள் அதன் செரிமான வேலையத் தொடங்கி விடக்கூடியது. ஆனாலும்கூட, தின்ற இரை முழுக்க செரிக்க சற்று நேரமாகும். கடல்நீரின் தட்பவெப்பநிலையைப் பொறுத்து இந்த செரிமான நேரம் மாறக் கூடியது.
அதிக நஞ்சுள்ள அரவம்
வலைகடியன் 30 குட்டிகள் வரை போடக்கூடியது. ஆழம்குறைந்த கழிமுகப்பகுதி, மாங்குரோவ் காடுகளையொட்டிய கடற்பகுதிகளில் வாழும் குட்டிகள் பெரிதாக வளர்ந்தவுடன் திறந்த கடற்பகுதிகளுக்குச் செல்லும். ஆனால் வலைகடியனின் குட்டிகளில் ஒருசில குட்டிகளே உயிர்பிழைத்து முழு வளர்ச்சியை எட்ட வாய்ப்புண்டு. பெரிய வலைகடியன்கள் மிக நஞ்சுள்ள பாம்புகள் என்றாலும் சிலவகை மீன்கள், கழிமுகப்பகுதி சதுப்புநில முதலைகளுக்கு இவை இரையாக வாய்ப்புண்டு.
வலைகடியன் பாம்பு எளிதில் சினமடையக்கூடியது. உடலில் ஒட்டுண்ணிகள் அதிகரித்து உடல் பாரம் அதிகமாகி, நீந்துவதில் சிரமம் ஏற்பட்டால் இது தோலை உரித்துக் கொள்ளும். வலைகடியன் பாம்பு அரிதாக நிலத்துக்கும் வந்து செல்லும். ஆனால் வந்த வேகத்தில் மீண்டும் கடலுக்குத் திரும்பிவிடும்.

No comments :

Post a Comment