Tuesday 15 January 2019


கடல்குதிரை (Sea Horse)

வண்ணமிகு கடல் உலகத்தில் வாழும் சின்னஞ்சிறிய உயிர்க்கூட்டங்களில் ஒன்று கடல் குதிரை. செவுள் மூலம் மூச்செடுக்கும் கடல்குதிரையும் கூட ஒருவகை மீன்தான். ஆனால், வழக்கமான மீனின் தோற்றத்தில் இருந்து கடல்குதிரை பெரிதும் வேறுபட்டிருப்பதால் இதை மீன் என நம்புவது கடினம்.
பார்வைக்கு சிறிய குட்டிக்குதிரை போலவே இருக்கும் கடல்குதிரைகளில் எத்தனை வகை என்று கேட்டால் அது கொஞ்சம் சிக்கலான கேள்வி. சிலர் உலகம் முழுவதும் 25 வகை கடல்குதிரைகள் இருப்பதாகக் கூறுவார்கள். சிலர் 36 வகை என்பார்கள். சிலர் 54 என்று கூறுவார்கள். புதிது புதிதாக கடல்குதிரை வகைகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுவதால் இவற்றில் எத்தனை வகை என்பதை இதுவரை யாராலும் உறுதியாகக் கூறமுடிய வில்லை.
கடலில் கடற்புற்கள், பவழப்பாறைகள் செறிந்திருக்கும் பகுதிகளில் கடல்குதிரை காணப்படும். கடற்புற்களின் நடுவே தலையை நிமிர்த்திய நிலையில் இது மெதுவாக நீந்தும். 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பசிபிக் கடலில் கடற்புற்கள் பரந்து விரிந்த காலக்கட்டத்தில்தான் இப்படி நிமிர்ந்த நிலையில் நீந்தும் பழக்கம் கடல்குதிரைக்கு வந்திருக்கும் என கடலியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கடல்குதிரைகளில் 2 செ.மீ. முதல் ஓரடி வரை (36 செ.மீ.) நீளமுள்ள கடல்குதிரைகள் இருக்கின்றன. கடல்குதிரைகளில் மிகச்சிறியது டெனிஸ் பிக்மி கடல்குதிரை.  மிகப்பெரியது பானை வயிற்று கடல்குதிரை. (இது ஆஸ்திரேலிய, நியுசிலாந்து கடல்பகுதிகளில் காணப்படுகிறது).
கடல்குதிரை அதன் முதுகுத்தூவியை ஒரு நொடிக்கு 30 முதல் 70 முறை அடித்து மெதுவாக நீந்தும். தலையின் இருபுறமும் உள்ள கன்னத்தூவிகள், கடல்குதிரை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் சரிந்து விடாமல் நிமிர்ந்த நிலையில் முன்னேற உதவுகின்றன. சிலவகை மீன்களுக்கு இருப்பது போல கடல்குதிரைக்கும் வயிற்றில் காற்றுப்பை உண்டு. அதைப் பயன்படுத்தி கடல்குதிரையால் மேலும், கீழும் போய் வர முடியும்.
கடல்குதிரையின் இருகண்களும் கூர்மையானவை. தனித்தனியாக இயங்கக் கூடியவை. அதாவது இரண்டு கண்களால் இரண்டு காட்சிகளை கடல்குதிரையால் பார்க்க முடியும். ஒரேவேளையில் முன்னும், பின்னும் கூட கடல்குதிரையால் பார்க்க முடியும்.
கடல்குதிரையின் உடலில் செதிள்கள் கிடையாது. அதற்குப் பதிலாக இதன் உடல், தலை முதல் வால் வரை சிறிய கவசம் போன்ற ஓடுகளால் மூடப்பட்டிருக்கும். இந்த கவசங்களை சிறிய சதைமூடி ஒன்று இணைக்கிறது. கடல்குதிரையின் வாலும் விந்தையானது. சுருளும் தன்மை உடைய இந்த வால் மூலம் கடல்குதிரை, கடற்புற்களை சுற்றிப்பிடித்து நங்கூரமிட்டு தங்குகிறது. கடல்நீரோட்டம் அதிகம் இருந்து அதிலிருந்து அடித்துச் செல்லப்படாமல் தப்பிக்க, கடல்குதிரை அதன் வாலை கடல் தாவரங்களில் சுருட்டிப்பிடித்துக் கொண்டு அங்கே தங்கிக் கொள்கிறது.
கடல்குதிரையின் கூரிய குதிரை போன்ற மூக்கு, கடல்பார்களின் இண்டு இடுக்குகளில் இரைதேட உதவுகிறது. இதன் நீண்ட தாடைமூக்கு குழாய் வடிவானது. இறால் போன்ற சிறு இரைகளைக் கண்டால் கடல்குதிரை தனது குழாய் வாயால் அவற்றை சட்டென உறிஞ்சிக் கொள்ளும். கடல்குதிரையின் வாய் அப்போது Vacuum Cleaner போல வேலை செய்யும். இரை சற்று பெரிதாக இருந்தால் கடல்குதிரையின் வாயும் அதற்கேற்ப விரிந்து கொள்ளும். வாயில் பற்கள் இல்லாததால் கடல்குதிரையால் இரையை மெள்ள முடியாது. எனவே முழுதாக விழுங்கிவிடும்.
கடல்குதிரை இரையை விரட்டி வேட்டையாடாது. இவ்வளவு மெதுவாக நகரும் ஓர் உயிரால் எப்படி விரட்டி வேட்டையாட முடியும்? எனவே இருந்த இடத்தில் இருந்தபடியே இரைக்காகக் காத்திருந்து கடல்குதிரை வேட்டையாடும். நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 தடவைகள் இது இரை உண்ணும்.
கடல்குதிரைக்கு சூரைமீன், நண்டு போன்றவை எதிரிகள். இதுபோன்ற எதிரிகளிடம் இருந்து தப்பிக்க, பச்சேந்தி போல நிறம்மாறும் வித்தையும் கடல்குதிரையிடம் உண்டு. பளீர் சிவப்பு நிறம் முதல் பலவகை நிறங்களுக்கு கடல்குதிரையால் மாற முடியும். இப்படி உருமறைப்பு செய்வதன்மூலம் அருகில் வரும் இரையை ஏமாற்றி வேட்டையாடவும் முடியும்.
கடல்குதிரைகள் வாழ்நாள் முழுவதும் இணைபிரியாமல் வாழக் கூடியவை. ஆனால், ஆண், பெண்ணுக்கென தனித்தனி நிலப்பரப்பு உண்டு. இனப் பெருக்கக் காலத்தில் பெண் கடல்குதிரையே ஆணைத்தேடி வரும். அண்ணலும் நோக்கி அவளும் நோக்கும்போது இரண்டும் நிறம்மாறும். ஆண் கடல்குதிரை பெண்ணைச் சுற்றிச்சுற்றி வரும். ஆணும் பெண்ணும் சுற்றிச் சுழன்று நடனமாடும். இந்த இனப்பெருக்கக் காலம் திருநடனம் ஒருமணி நேரம் வரை நீடிக்கும்.
ஆண் கடல்குதிரையின் வால் தளத்தில் சிறிய அடைக்காக்கும் பை (Brood pouch) ஒன்று உண்டு. பெண் கடல்குதிரை அதன் முட்டைக்குழாய் ஒன்றைப் பயன்படுத்தி அதன்மூலம் தனது முட்டைகளை ஆணின் அடைகாப்புப் பைக்குள் செலுத்தும்.
இந்த முட்டைகளை ஆண் கடல்குதிரை, 10, 14 நாள்கள் முதல் 4 வாரம் அல்லது 6 வாரங்கள் வரை அடைக்காக்கும். (அடைகாக்கும் காலகட்டம் ஒவ்வொரு கடல்குதிரை இனத்துக்கும் வேறுபடும்).
அடைகாக்கும் காலம் முடிந்ததும், அடைக்காக்கும் பையில் உள்ள சிறிய ஓட்டை வழியாக பட்டாணி அளவுள்ள கடல்குதிரை குட்டிகள் வெளிவரும். பார்வைக்கு அப்பாவைப்போன்ற உருவத்துடன் இவை மிகச்சிறியதாக இருக்கும். இப்படி குட்டிகள் வெளிவரும் பேறுகாலம் 12 மணிநேரம் வரை கூட நீடிக்கும்.
பிறந்த குட்டிகளை அப்பா, அம்மா கடல்குதிரைகள் கவனிக்காது. பிறந்த உடனேயே குட்டிகள் தங்களை எதிரிகளிடம் இருந்து தற்காத்து, உணவு தேடிக் கொள்ள வேண்டியதுதான்.
கடல்குதிரைக் குட்டிகள் கடல்மட்டத்துக்கு வந்து பாசிகளுக்கு இடையே தங்களது வால்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கொண்டு மிதக்கும். சிறுசிறு இரைகளைத் தின்னும். நாளொன்றுக்கு மூன்றாயிரம் தடவைகள் (!) கடல்குதிரைக் குட்டி உணவு அருந்தும். கடல்குதிரைகளில் ஆயிரத்தில் ஒரு குட்டிதான் அப்பாவைப்போல பெரிதாக வளர வாய்ப்பிருக்கிறது.
கடற்புற்கள், பார்களின் நடுவே வாழும் கடல்குதிரைகள், குளிர்காலம் வந்துவிட்டால், தட்பவெப்பநிலையைக் கருதி, சற்று ஆழமான பகுதி களுக்குச் சென்று அங்கே தங்கும். குளிர்காலம் முடிந்தால் மீண்டும் தங்கள் பழைய இடங்களுக்குத் திரும்பும்.

No comments :

Post a Comment