Wednesday 2 January 2019


ஒபா (Opha)

ஒரு மீனைத் துண்டுபோட்டால் அதன் ஒவ்வொரு பகுதி சதையும், ஒவ்வொரு விதமான வண்ணத்தில் இருக்க வாய்ப்புண்டா? ஒவ்வொரு பகுதி சதையும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்க முடியுமா? ஆம் அப்படிக்கூட ஓர் அதிசய மீன் இருக்கிறது. அந்த மீனின் பெயர் ஒபா.
புத்தாண்டு பிறந்து விட்டநிலையில் புதிய பதிவாக நம் கடல்களில் அதிக புழக்கம் இல்லாத இந்த ஒபா மீனைப் பற்றி பதிவிடுவோம்.

இந்த ஒபா (Opha) மீனின் அறிவியல் பெயர் Lampris regius. நிலா மீன், அரச மீன், ஜெருசலேமின் ட்டாக் (காட் மீன்), பெருங்கடலின் வாணலிச்சட்டி, கிராவோ என பலப்பெயர்கள் இந்த மீனுக்கு உள்ளன. ஒரு கார்ச் சக்கரத்தை விட இந்தமீன் சற்று பெரியதாக வளரக் கூடியது. ஏறத்தாழ வட்டவடிவில் இருப்பதால் நிலாமீன், சூரிய மீன் எனவும் இந்த மீனினம் அழைக்கப் படுகிறது.
ஒபா ஆறடி நீளம் வரை வளரக்கூடியது. 140 கிலோ வரை எடையிருக்கக் கூடியது. இதன் சிறிய வாயில் பற்கள் எதுவும் கிடையாது. முட்களற்ற மென்மையான தூவி களைக் கொண்ட மீன் இது.
இந்த வட்டவடிவ மீனின் செதிள்களற்ற மேலுடல் நீலநிறமாகவும் கீழ்நோக்கி வரவர உடல்நிறம் பச்சையாகவும் திகழும். மீனின் தாடையும், தூவிகளும் கிரிம்சன் நிறத்தவை. அடி வயிறு இளஞ்சிவப்பு வண்ணம். உடல் முழுக்க வெள்ளி நாணயங் களை அள்ளித் தெளித்தது போல இந்த மீன் அழகுற காணப்படும். பெரிய கண்களைச்சுற்றி பொன்னிறம் மின்னும்.
ஒபா மீனின் அடித்தூவிகள் மிக நீளமானவை. அரிவாள் போல இவை வளைந்து நிற்கும்.
ஒபா மீன், 50 மீட்டர் முதல் 400 மீட்டர் ஆழத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன். ஒபா, கூட்டமாகத் திரியாது. ஒன்றிரண்டாக மட்டுமே காணப்படும். சூரை மீன்களுடன் சேர்ந்து இது சுற்றித்திரியும். சூரைக்கு வைக்கும் தூண்டிலில் தப்பித்தவறி இந்த மீன் சிக்கி விடுவதுண்டு. சூரை போல இல்லாமல் தனி மீனாகத் திரிவதால், இந்த மீனின் விலை அதிகம் என்றாலும் இதைப்பிடிக்க மீனவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.
ஒபா மீனைத் துண்டுபோட்டால் அதன் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு வித வண்ணத்தில் மின்னும். எடுத்துக்காட்டாக, ஒபா மீனின் தலையின் பின்புற சதையும், முதுகெலும்புக்கு மேலுள்ள தசைப் பகுதியும் ஆரஞ்சு நிறமாக மிளிரும். வயிறு மற்றும் வயிற்றின் அருகில் உள்ள பகுதிகள் பிங்க் (Pink) நிறத்தில் தோன்றும். மார்புச் சதை பழுப்பு நிறமாக காணப்படும். மீனின் கன்னக்கதுப்புச் சதைகள் அடர்சிவப்பு நிறமாக அழகாகக் காட்சிதரும்.
ஒபா மீனின் பல்வேறு பகுதிகள் பல்வேறு சுவையுடன் இருப்பது இன்னொரு சிறப்பு.
இந்தமீனின் மேற்பகுதி சூரை மீனின் சுவையோடு இருக்கும். கன்னப்பகுதியில் இருக்கும் சதை மாட்டிறைச்சி போல ருசிதரக் கூடியது. ஒபா மீனை பச்சையாகவும் உண்ணலாம். இதை சுட்டு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.
மீன்கள் அனைத்துமே குளிர் ரத்தம் கொண்ட உயிர்கள். ஆனால், அரிதிலும் அரிதாக, ஒபாவின் ஒர் உள்ளின மீன் ஒன்று (Lampris guttatus) ஒரு வெப்ப ரத்த மீன். இந்த மீனின் பக்கத்துடுப்புகள் (Pectoral) அமைந்துள்ள கன்னச்சதை மிகவும் எடைகூடியது. மீனின் மொத்த எடையில் இந்த கன்னச்சதையின் எடை 17 விழுக்காடு. கன்னக் கதுப்புகளில் உள்ள துடுப்புகளை வேகமாக அசைப்பதன் மூலம் இந்த மீனின் ரத்தம் சூடாகி உடல் முழுவதும் ஓடுகிறது. இப்படி வேகமாக ஓடி சூடாகும் ரத்தம் மீனின் இதயத்தை வேகமாகத் துடிக்க வைக்கக் கூடியது. இதனால் சூரை மீனைப் போல ஒபா மீனும் வேகமாக ஓடக்கூடியது.
ஓபா மீன் ஆழ்கடல் மீன் என்பதுடன், அதிகம் பிடிபடாத மீன் என்பதால் அதைப் பற்றிய இன்னும் பல தரவுகள் அறியப்படாமலேயே உள்ளன. ஒபா மீனின் முதன்மை இரை கணவாய் (Squid) என்பதும், ஒபா மீன் ஆழ்கடலில் நெடுந்தொலைவுக்கு வலசை போகும் என்பதும் நாம் தெரிந்து கொண்டுள்ள இன்னும் சில தகவல்கள்.
கொசுறுத் தகவல்: ஒபா மீனையும், மோளா மீனையும் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. (மோளா மீன் பற்றிய பதிவு நமது வலைப்பூவில் ஏற்கெனவே உள்ளது).

No comments :

Post a Comment