Wednesday 21 February 2018

காரல் (Pony fish)

காரல்கள்.. கடலில் உள்ள மிகச்சிறிய மீன்கள் இவை. காரல்களில் 9 இனங்களும், 48 வகைகளும் உள்ளன. மலேசியாவில் மட்டும் 22 வகை காரல்கள் இருப்பதாகச் சொல்வார்கள்.
சரி. தமிழ்நாட்டில் எத்தனை காரல்கள் இருக்கும்? இதோ ஒரு பட்டியல்.
அப்புக்காரல் (வலையில் வந்து அப்பும் காரல்), அமுக்கு காரல், கலி காரல், பொட்டுக்காரல், நெடுங்காரல் (விளக்குக் காரல்), மஞ்சள் காரல், மரவுக்காரல், வரிக்காரல், வரவுக் காரல், உருவக்காரல் (குதிப்புக் காரல்), ஊசிக் காரல், ஒருவாக் காரல், பெருமுட்டிக் காரல், கவுட்டைக் காரல், நெய்க்காரல், வட்டக்காரல், கண்ணாடிக் காரல் (சில்லாட்டை காரல், பளபளவென பாதரசம் பூசிய கண்ணாடி போன்ற உடல் உள்ள காரல்), குழிக்காரல், குல்லிக்காரல், ஓட்டுக்காரல், செவிட்டுக் காரல், சென்னிக்காரல், காணாக்காரல்காணா வரிக்காரல் (வரிக்காரலில் சிறியது), பெருவா காரல், காசிக்காரல், சுதும்பு காரல், சலப்பக் காரல், சலப்ப முள்ளுக்காரல், சளுவக் காரல், சலப்பட்டக் காரல், சிற்றுருவக் காரல் (சித்துருவக் காரல்), பஞ்சக் காரல், தீவட்டிக் காரல்கொம்புக் காரல், நாமக் காரல், பொடிக்காரல் (பூச்சிக் காரல்), பூட்டுக்காரல், முள்ளங்காரல், சுதுப்புனங் காரல், பெருவா காரல், கொடுங்காரல்… ஆக மொத்தம் 42 காரல்கள். தமிழில் இன்னும் பல காரல்கள் இருக்கலாம்.
காரல்களில் குதிப்புக்காரல், சுதும்பு காரல் இரண்டும் ஒரே வகை மீனாக இருக்கலாம். காரணம் குதிப்புக்கு சுதும்பு என்ற பெயரும் உண்டு.
காரல்கள், போனி பிஷ் (Pony fish) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. முகம் மட்டக்குதிரையின் (Pony) முகம் போல இருப்பதால், காரல்களுக்கு போனி பிஷ் என்பது பெயர்காரல்கள் பெருங்கூட்ட மீன்கள். இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பசிபிக் கடலின் பிஜி தீவுகள் வரை இவை காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் வரை இவை நீந்தித் திரிகின்றன.
காரல் மீன்களின் செதிள்கள் அற்ற, என்பு தோல் போர்த்த உடம்பு மிகவும் மென்மையானது. இதன் எலும்புகளை நாம் கடித்து உண்டுவிட முடியும். காரல் மீன்கள் மிகவும் எடை குறைந்தவை. அவுன்ஸ் கணக்கில் எடை கொண்ட மீன்கள் இவை.
காரல்களில் ஒளிவிடும் காரல்களும் உள்ளன. உணவுக்குழாய்களில் உள்ள ஒருவகை பாக்டீரியாவின் காரணமாக காரல்கள் இரவில் ஒளிவிடுகின்றன.
காரல்மீன்களில் மிகப்பெரிய மீனாக பெருமுட்டிக் காரலைக் கூறலாம். இந்த வகை மீன், 8 அங்குலம் முதல் 11 அங்குலம் வரை வளரக்கூடியது.

காரல் மீன்கள், உணவு உண்ணும்போது அவற்றின் வாயை குழாய் போல நீட்டி விரிக்க முடியும்

No comments :

Post a Comment