Saturday 10 February 2018

வங்கவராசி (Bombay Duck)

பார்த்த மாத்திரத்தில் சிலருக்கு பரவசத்தையும், சிலருக்கு கொஞ்சம் முகச்சுழிப்பையும்(!) அள்ளித்தரக்கூடிய ஒரு மீன் வங்கரவாசி.
அரபிக்கடலில் அதுவும் மும்பைக்கு அருகில் உள்ள கடல்பகுதியே இந்த மீனின் தாயகம். இதனால் ‘பாம்பே டக்‘ (Bombay Duck) என ஆங்கிலத்தில் அன்பொழுக இந்த மீன் அழைக்கப்படுகிறது.
Harpodon Nehereus என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படும் இந்த மீன், வாத்து என்ற பொருளில் ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டாலும் உண்மையில் இது Lizard எனப்படும் பல்லியின மீன்.
வங்கவராசிக்கு அதிசய மீன் என்ற பெயரும் உண்டு. ஆம். மராட்டிய கடல் மற்றும் லட்சத்தீவுகள் எனப்படும் முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் பகுதிகளில் தட்டுப்படும் இந்தமீன் விட்டு விட்டு சில கடல்களில் தென்படும், சில கடல்களில் தென்படாது. இதுபோன்ற ஒரு மீனை அதிசய மீன் என அழைக்காமல் என்ன செய்வார்கள்?
கூட்டமாகத் திரியும் பழக்கம் கொண்ட வங்கவராசி மீன்கள், வலசை போகும் பழக்கமும் கொண்டவை. சதைப்பற்றுள்ள இந்த மீனின் எலும்புகள் மிகவும் மென்மையானவை. தூவிகள் முட்கள் அற்றவை.
வங்கவராசியின் நீளம் 40 சென்டி மீட்டர் என்றாலும், பொதுவாக இந்த மீனினம், 25 சென்டி மீட்டர் நீளத்துடனேயே காணப்படும்.
பிடிபடும் மீன்களில் 20 விழுக்காடு மட்டுமே உடனடி உணவாகவும், 80 விழுக்காடு சம்பையாகவும் (கருவாடாகவும்) மாற்றப்படும். பாம்பே டக் எனப்படும் வங்கவராசியின் கருவாடு, பம்பிளி மாஸ் என அழைக்கப்படு கிறது.

முற்காலத்தில், பம்பாய் மெயில் மூலம் இந்த கருவாடுகள் கொல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டன. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல பம்பிளி மாஸ் கருவாடுகள் வரும் முன்பே அவற்றின் மணம் காற்றில் கலந்து பரவிய நிலையில், பம்பாய் மெயில் மூலம் இவை வந்த தால் இந்த மீனினம் பாம்பே டக் என இன்றளவும் பெயர் சூடிக் கொண்டுள்ளன.

No comments :

Post a Comment