Friday 6 May 2016

மாப்பு மீன்களும் கூட்ட மீன்களும்

கடலில் 200க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் கூட்டமாகத் திரியும் பண்புள்ளவை. இப்படி கூட்டம் கூட்டமாக மீன்கள் கூடித்திரிவதில் இரு வகைகள் உள்ளன. ஒன்று மாப்பு மீன்கள். இன்னொன்று கூட்ட மீன்கள்.
ஒரே இனத்தைச் சேர்ந்த மீன்கள் ஒன்றாகத் திரண்டு ஓர் ஒழுங்கின்றி திரிந்தால் அவை மாப்பு மீன்கள் (Shoal).
அதுவே ஒருங்கிணைப்புடன், ஒத்திசைவுடன் ஒரே திசையில் ஒற்றுமையாக மீன்கூட்டம் நகர்ந்தால் அவை கூட்டமீன்கள். (Scholl Fish)
மீன்கள் இப்படி கும்பலாகவோ அல்லது கூட்டமாகவோ திரிய முதன்மை காரணம், பெரிய இரைதின்னி மீன்களிடம் இருந்து தப்புவதற்காகவே.
மீன்கள் மாப்பு மீன்களாகத் திரிவதைவிட ஒழுங்குமிக்க கூட்டமீனாகத் திரியும்போது அவை வேறு பெரிய மீன்களுக்கு இரையாகும் வாய்ப்பு மிகமிக குறைகிறது.


அதிக பாதுகாப்புடன் இருக்கும் கூட்டமீன்களுக்கு இரை தேடுவதும், தனக்கான இணையைத் தேடுவதும் எளிதான வேலை. அதுமட்டுமின்றி தனியாக நீந்தும்மீனை விட கூட்டமீன்கள் குறைந்த அளவு சக்தியை செலவிட்டு மிகவேகமாக நீந்த முடியும்.
கூட்டமீன்கள் நீந்தும்போது ஒவ்வொரு மீனும் குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட தொலைவில் குறிப்பிட்ட வேகத்தில் நீந்தும். நிற்கும்போதும் திரும்பும்போது இதே துல்லியம் காக்கப்படும். ஒத்திசைவுடன் நீந்தும் கூட்டமீன்கள் ஓர் ஒற்றை உயிர்போலத் தோன்றும். ஒவ்வொரு மீனையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மாயக்கயிறு பிணைத்து வைத்திருப்பது போல ஒரு மாயத்தோற்றம் உருவாகும்.
சுறா, சூரை போன்ற பெரிய கொல்மீன்கள் நெருங்கினால், கூட்டமீன்கள் இரு பிரிவாகப் பிரிந்து கொல்மீனைத் தாண்டிச் சென்று மீண்டும் இணைந்து கொள்ளும். இதுபோன்ற கூட்ட மீன்கள் பெரிய இரைகொல்லி மீன்களின் மூளையில் பளுவை ஏற்படுத்தி அவற்றை இரைபிடிக்க விடாமல் தடுப்பது ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
ஓர் ஆப்பு வடிவில், ஒரே திசையில் நகரும் கூட்டமீன்கள் பொதுவாக சீலாக்களிடம் இருந்து தப்ப, சுறா ஒன்றின் உதவியை நாடி சுறாவை பக்கத் துணையாக கொண்டு முன்னேறும். கூட்டமீன் நெத்தலி போன்ற சிறிய மீனாக இருக்கும் நிலையில் சுறா அதை இரையாக எண்ணும் வாய்ப்பு குறைவு.
மாப்பு மீன்களைப் பொறுத்தவரை அதில் உள்ள ஒவ்வொரு மீனும் தன்னிச்சையாக நீந்தக்கூடியவை. சிலஇன மீன்கள் சிலவேளைகளில் மாப்பு மீன்களாகவும், சில வேளைகளில் கூட்ட மீன்களாகவும் திரிவது உண்டு.
அவை மாப்பு மீன்களோ, கூட்ட மீன்களோ எதுவாக இருந்தாலும் மீன்கள் கூட்டமாக ஒன்றுகூடும் போது அவற்றின் கண்கள் அதிகரிக்கின்றன. இப்படி அதிக கண்களைக் கொண்ட மீன் கூட்டத்தால் இரையைக் கண்டுபிடிப்பதும், பெரிய மீன்களின் மேல் கண்வைத்துக் கொண்டு அதிகநேரம் எடுத்து இரை உண்ணவோ முடியும். மீன்கள் கூட்டமாகத் திரிய இதுவும் ஒரு முதன்மை காரணம்.

No comments :

Post a Comment