Tuesday 19 April 2016

கட்டா (Queen Fish) 

வெப்பக் கடல் மீன்களில் ஒன்று கட்டா. இதன் அறிவியல் பெயர் Scomberoides Commersonnienus. இது சூரை இனத்தைப் போன்றது என்று சொல்லாமல் சொல்கிறது கட்டாவின் இந்த அறிவியல் பெயர்.

கட்டாக்களில பலவகைகள் உள்ளன. புள்ளிக் கட்டா, மஞ்சள் கட்டா, ஓமலி கட்டா, ஆரியக் கட்டா, செல் கட்டா, அம்முறிஞ்ச கட்டா என தமிழில் 12 வகையான கட்டாக்களின் பெயர்களைச் சொல்லலாம். கட்டாவில் பெரியது ஓங்கல் கட்டா.
புள்ளிக்கட்டாவின் இருபக்கங்களிலும் நேர் வரிசையில் 7 வெள்ளிநிறப் பொட்டுகள் அமைந்திருக்கும், கட்டா உயிருடன் இருக்கும்போது வெள்ளியாக மின்னும் இந்தப் பொட்டுகள், கட்டா இறந்ததும் கருஞ்சாம்பலாக மாறுவது அதிசயம்தான்.
கட்டாவின் முதுகு முன்புறம் கம்பி வேலி முள்கள் போல 7 முதல் 8 முள்கள் அமைந்திருக்கும், அதைத் தொடர்ந்து 19 முதல் 21 மென்தூவிகள் அமைந்திருக்கலாம். அதுபோல கீழ்ப்புற அடித் தூவிஅருகே  3 முள்களும், 16 முதல் 19 மென்தூவிகளும் காணப்படலாம்.
பார்களின் அருகே சிறுகூட்டமாகத் திரியும் கட்டாக்களுக்கு இதர மீன்களே உணவு. சிறுபற்களால் தூண்டில் கயிறைத்துண்டித்து இது தப்பக்கூடியது.
கட்டாவின் இறைச்சி வெண்மையானது. எனினும்  குழம்பில் இடுவதைவிட கருவாடாக மாற்றி உண்பதற்கே கட்டா ஏற்றது. இதை குழம்பில் இட்டு சாப்பிட்டால் பிளைவுட் பலகையை உண்பது போல இருக்கும் என்பது அனுபவம் மிக்கவர்களின் கருத்து.
சுட்டாலும் மணக்காது கட்டா என்பது கட்டா பற்றி தமிழில் வழங்கும் பழமொழி.
கிரேக்க பழங்கதைகளில் ஹிரா என்ற பெண்தெய்வம்தான் மயிலுக்கு புள்ளிகளை வைத்தது என்பதைப் போல,சீனப் பழங்கதைகளில் துவா பெ கோங் (Tua Peh Gong) என்ற பெண் தெய்வம்தான் கட்டா மீனின் உடலில் பொட்டுகளை வைத்ததாக நம்பப்படுகிறது. இதனால் சீனர்கள் கட்டாவை உண்ண மாட்டார்கள்.



No comments :

Post a Comment