Saturday 16 April 2016

பேத்தா மீன் (பலாச்சி) (Puffer Fish)

பேத்தா மீன்களில் ஏறத்தாழ 120 வகைகள் உள்ளன. முரடான கடினத் தோல் உடைய மீனினம் இது. சிலவகை பேத்தாக்கள் உடல் முழுக்க முள்கள் சூழ்ந்தவை.  பருத்து விரிந்த முள்ளுப் பேத்தா, பார்வைக்கு பலாப்பழம் போல இருப்பதால் பலாச்சி என்ற பெயரும் அதற்கு மிகவும் பொருத்தமானது.
பேத்தாவுக்கு செதிள்கள் கிடையாது. மிக மெதுவாக நீந்தும் மீன் இது. தேவைப்படும் போது வெடிக்கும் வேகத்திலும் இது நீந்தக்கூடியது. எல்லா திசையிலும் பேத்தாவால் எளிதாகத் திரும்ப முடியும். கூரிய கண்பார்வை கொண்ட பேத்தா, பின்பக்கமாகவும் நீந்த வல்லது.
 பெரிய மீன்கள் தன்னைத் தின்ன முயன்றால், அல்லது மிரட்டினால், பேத்தா நொடிப்பொழுதில் நீரையோ அல்லது காற்றையே உள்ளிழுத்து, பந்து போல பலமடங்கு தனது உருவத்தைப் பெரிதாக்கிக் கொள்ளும். இதன்மூலம் பகை மீன்களிடம் இருந்து இது தப்பவும் முடியும்.
பேத்தாவின் மேல்தாடை, கீழ்த்தாடைகளில் இரண்டிரண்டு பற்கள் இருக்கும். பற்கள் மிகவும் வளர்ந்து விடாமல் தடுக்க பவளப்பாறைகள் அல்லது சிப்பிகளைக் கொரித்து, தனது பற்களை  குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளராமல் பேத்தா  அவ்வப்போது சரிசெய்து கொள்ளும். சிப்பி, சிறுமீன்கள், பவளப் பாறை, பார்ப்பாசி போன்றவை பேத்தாவின் உணவு.
கிட்டத்தட்ட எல்லா பேத்தாக்களுமே நஞ்சுள்ளவை. பேத்தாவின் உடலில் உள்ள டெட்ராடாக்ஸின் நஞ்சு, சயனைடைவிட 1200 மடங்கு சக்தி வாய்ந்தது. ஒரே ஒரு பேத்தாவில் உள்ள நஞ்சு 30 பேர்களைக் கொல்லக்கூடியது.
ஆனால், ஏமாந்த நேரத்தில் பேத்தாவை இரையாக்கிக் கொள்ளும் சுறாமீன்களை  இந்த நஞ்சு ஒன்றும் செய்வதில்லை என வியப்பானது.
பார்க்க அழகான இந்த பலூன் மீன்களில் சில, பச்சோந்தி போல நிறம் மாறவும் கூடியவை.

No comments :

Post a Comment