Thursday 16 January 2020


சுறாவின் கல்லீரல்


சுறா
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்என்பார்கள். அதைப்போல ஆயில் இல்லாத கல்லீரலின்றி சுறாமீன்கள் கடலில் குடியிருக்க முடியாது. ஆம். எண்ணெய் நிறைந்த கல்லீரல்கள் சுறா மீன்களுக்கு மிகமிகத் தேவை.
சுறாக்களுக்கு மற்ற விலங்குகளை விட வேறுபாடான கல்லீரல் உண்டு. சுறா மீனின் உடலுக்குள் இந்த கல்லீரல் அதிக இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும். கடலின் அடியில் கடல்தரையையொட்டி வாழும் சுறாக்களுக்கு கொஞ்சம் சிறிய கல்லீரல், அதாவது அவற்றின் உடல் எடையில் 5 விழுக்காடு அளவு கொண்ட சிறிய கல்லீரல் இருக்கும்.
பெருங்கடல்களின் மேற்பரப்பில் நீந்தித் திரியும் சுறாக்களுக்கு அவற்றின் உடல் எடையில் 25 விழுக்காடு அளவு கொண்ட பெரிய கல்லீரல்கள்  இருக்கும். சுறாவின் உடலுக்குள் உள்ள வெற்றிடத்தில் 90 விழுக்காடு இடத்தை கல்லீரலே பிடித்துக் கொள்ளும்.
கல்லீரலின் வேலை என்ன? வழக்கம் போல தின்ற இரையைச் செரிக்க வைப்பதுதான் கல்லீரலின் வேலை.  சுறாவின் கல்லீரலும் அந்த வேலையைச் செவ்வனே செய்யும். உட்புற வடிகட்டி போல செயல்பட்டு உணவைச் செரிக்கச் செய்வதுடன், ரத்தத்தைச் சுத்திகரிப்பது, கழிவுகளை வடிகட்டி நீக்குவது, சுறாவின் உணவில் உள்ள சத்துக்களைச் சேகரித்து அவற்றை சக்தியாக மாற்றி சுறாவின் உடலில் சேர்த்து வைப்பது போன்ற வழக்கமான வேலைகளை சுறாவின் கல்லீரலும் செய்யும்.
ஆனால், இதைவிட பெரிய அரும்பணி ஒன்று சுறாவின் கல்லீரலுக்கு இருக்கிறது. அது, சுறாவை நீரில் மிதக்க வைப்பது. . சுறாவின் உடல், கடல்நீரை விட கனமானது. மற்ற மீன்களைப் போல சுறாக்களுக்கு நீந்தப் பயன்படும் காற்றுப்பை இல்லை. இதற்கு மாற்றாகத்தான், எண்ணெய் நிரம்பிய கல்லீரலை இயற்கை, சுறாவுக்கு வழங்கியிருக்கிறது.
சுறாவின் பெரிய கல்லீரல், Squalene என்ற எண்ணெய்யால் நிரம்பியிருக்கும். இந்த எண்ணெய், கடல் நீரை விட எடை குறைந்தது. இந்த எண்ணெய் சுறாவின் உடல் எடையை மிதமாக்கி மிதக்கப் பயன்படுகிறது. இதனால், சுறா மூழ்கிப்போகாது.
சுறாக்கள் உயிர் வாழவேண்டுமானால் அவை தொடர்ந்து தொய்வில்லாமல் நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். செவுள் துளைகள் வழியாக கடல்நீரை உள்வாங்கி அவற்றில் இருந்து காற்றைப் பிரித்து மூச்சு விட்டபடி சுறா நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதே வேளையில் மிதப்புத் தன்மையும் சுறாவுக்கு முக்கியம். அதைச் செய்யத்தான் சுறாவின் கல்லீரலில் உள்ள எண்ணெய் பயன்படுகிறது.
மேய்ச்சல் சுறா
சுறாவின் பக்கவாட்டுத் தூவிகள் சுறா நீந்தும்போது அங்குமிங்கும் திரும்ப மட்டுமே பெரிதும் பயன்படும். தூவிகளை மட்டும் பயன்படுத்தி சுறா நீந்த முடியாது. அப்படி நீந்த நினைத்தால் ஏராளமான திறனை சுறா செலவிட வேண்டியிருக்கும். வெறும் உணவு மூலமாக மட்டும் இந்த திறனை சுறா பெற்று உயிர்வாழ்ந்து விட முடியாது. எனவே சுறா உயிர் வாழ கல்லீரலில் உள்ள எண்ணெய் மிகமுக்கியம்.
சுறா இனத்தில் அம்மணி உழுவைக்கு (Whale Shark) அடுத்தபடி, இரண்டாவது பெரிய சுறாவான மேய்ச்சல் சுறாவுக்கும் (Basking Shark), சில ஆழ்கடல் சுறாக்களுக்கும் அவற்றின் கல்லீரல்களில் அதிக அளவு எண்ணெய் இருக்கும். இவை மனிதர்களுக்கு மாமருந்தாகப் பயன்படுகின்றன. புற்றுநோய் தாக்கியவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ஒரு பகுதியாக சுறா எண்ணெய் பயன்படுகிறது. கூடவே, மனிதர்களின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தவும், மனிதர்களின் தோல் கறுப்பாகாமல் காத்து, தோல் என்றும் இளமை பொலிவுடன் பளபளவென விளங்கவும் சுறா எண்ணெய் பயன்படுகிறது.
953 கிலோ எடையுள்ள மேய்ச்சல் சுறாவின் கல்லீரலில் 2,081 லிட்டர் எண்ணெய் கிடைக்க வாய்ப்புள்ளது.

No comments :

Post a Comment