Sunday 11 August 2019


பாசியோ..பாசி!

கடல் பாசிகளின் எண்ணிக்கை என்ன என்பது இதுவரை யாருக்கும் சரிவரத் தெரியாது. இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
பாசிகளைப் பொறுத்தவரை அவை மனிதர்களும், டைனோசர்களும் புவியில் தோன்றும்முன் தோன்றியவை. கடல் உள்பட புவியின் நீர்ப்பரப்புகளில் மூன்றில் இரு பாகத்துக்கு இவை பரவிக் கிடக்கின்றன.
வளர்ந்த முற்றியபின் அழுகிப்போய் கடலுக்கு அடியில் தங்கி புதைப்படிவமாகி விட்ட கடற்பாசிகளைத் தான் நாம் இப்போது கச்சா எண்ணெய்யாகவும், இயற்கை எரிவாயுவாகவும் எடுக்கிறோம்.
கடல்வாழ் உயிர்களுக்கு உணவூட்டுவதிலும், கடலுக்கு உயிர்க்காற்றை அதிக அளவில் உருவாக்கித் தருவதிலும் கடற்பாசிகளின் பங்கு அளப்பரியது.
கடற்பாசிகளில் பலரகங்கள் உள்ளன. பச்சைப் பாசி, பார்ப்பாசி, வேர்ப் பாசி, தாலைப் பாசி, கட்டக் கோரை, கப்பைப் பாசி, கவட்டைப் பாசி, தேன் பாசி போன்றவை கடல்பாசிகளுள் சில. கடற்பாசிகளில் 70 வகை பாசிகள் முழுவதுமாக உண்ணத் தகுந்தவை. சில வகை பாசிகள் 53 முதல் 65 விழுக்காடு வரை உணவாகப் பயன்படக் கூடியவை.
கடல் பாசிகளில் ஒன்றான சாவாளைப் பாசி, ஆவுளியாக்களுக்கும், கடல்ஆமைகளுக்கும் சிறந்த உணவு. தேன் பாசியை கையால் பிழிந்தால் வழுவழுப்பான சாறு நம் கைகளில் வழியும்.
இத்தகைய கடல் பாசிகளில் ஒன்றுதான் கஞ்சிப்பாசி (Gracilaria Lichenoides). யாழ்ப்பாணப் பாசி எனவும் அழைக்கப்படும் கஞ்சிப்பாசி மிகச்சிறந்த அளவில் உணவாகப் பயன்படக்கூடியது. இதை கஞ்சி வடிவில் காய்ச்சிக் குடிக்கலாம்.
உணவாக மட்டுமின்றி புற்றுநோய் மூட்டுவலி போன்றவற்றுக்கு மருந்தாகவும் கஞ்சிப்பாசி பயன்படுகிறது. பற்பசை, சாயம், மது, காகிதம் உள்ளிட்ட 200 வகை பொருள்கள் தயாரிப்பிலும் கஞ்சிப்பாசி ஏதோ ஒரு வகையில் உதவுகிறது.
விண்வெளியில் பன்னாட்டு விண்வெளி மையத்தில் வாழும் வீரர்களுக்கு கஞ்சிப்பாசி உணவாகவும் பயன்படுகிறது என்பதுதான் இதில் சற்று வியப்புக்குரிய விடயம்.

1 comment :

  1. hlo sir i need a information on gracilaria lichenoides availability. can you please share the information that from where i can get.

    ReplyDelete