Sunday 24 March 2019


நெத்தி மீன் (Unicorn fish)


நெத்தி மீன்
நெற்றியில் இரு விழிகளுக்கு இடையே இரு சிறு கொம்புகளைக் கொண்ட மீன் நெத்தி மீன். (Unicorn fish). Acanthuridae குடும்பத்தைச் சேர்ந்த மீன்களில் நெத்தி மீனும் ஒன்று. Acanthuridae என்ற பெயருக்கு வாலில் முள் கொண்ட மீன் என்று பொருள் கொள்ளலாம். ஒரண்டை (Powderblue Surgeon) , குரிசில் எனப்படும் Convict surgeon Fish போன்றவையும் இந்த Acanthuridae குடும்பத்தில் அடக்கம்.
பார்மீனான நெத்தி, பவழப்பாறைகளின் அருகே சிறுகூட்டமாகத் திரியும். பகல்வேளையில் இயங்கும் மீன். இது. நெத்திகளில் 17 வகை மீன்கள் உள்ளன. Tang, Surgeon மீன்களுக்கு உறவுக்கார மீன் இது.  20 முதல் 24 அங்குலம் வரை நெத்தி வளரக்கூடியது.
நெற்றியில் விழிகளுக்கு இடையில் இரு சிறுகொம்புகள் இருப்பதுதான் நெத்தி மீனின் முதன்மை அடையாளம். 2 அங்குல நீளம் வரை இந்த கொம்புகள் வளரும்.
Acanthuridae குடும்ப மீன்களுக்கு என்றே மூன்று வகை குணங்கள் உள்ளன. 1. இவற்றின் வால்பகுதியில் கத்திகள் போன்ற கூர்முட்கள் இருக்கும். 2. இவை பாசிகளை மட்டுமே உண்ணக்கூடிய சைவ மீன்கள். 3. இவை திடீரென நிறம் மாறக் கூடிய மீன்கள்.
வாலில் நீலநிற முட்கள்
Acanthuridae குடும்ப மரபின்படி நெத்தி மீனும் பாசிகளை உண்ணும் சைவ மீனே. நெத்திகளில் இளம்வயது மீன்கள் முழுக்க முழுக்க பாசிகளை உண்ணும். முதிர்ந்த மீன்கள் பாசிகளுடன் சேர்த்து, சிறு இறால்களின் புழுப்பருவ குஞ்சுகளையும் இரையாக எடுத்துக் கொள்ளும். கவுர் எனப்படும் மிதக்கும் சிறு நுண்ணுயிர் படலத்தில் அசைவ படலமான Zoo planktonஐயும் முதிர்ந்த நெத்தி மீன்கள் உணவாக எடுத்துக் கொள்ளும்.
நெத்தி மீனின் கொம்புகளைப் பொறுத்தவரை அவை எதற்காக என்பது இன்று வரை யாருக்கும் புரியவில்லை. இந்தக் கொம்புகளை நெத்தி மீன் ஆயுதமாகப் பயன்படுத்துவதில்லை. இந்தக் கொம்புகள் நீந்தவும் பயன்படுவதில்லை. உணர் கொம்பாகவும் இவை உதவுவதில்லை. பின் எதற்காகத்தான் இந்த கொம்புகள்? பருவகாலத்தின்போது துணையைக் கவர இந்தக் கொம்புகளை நெத்தி மீன் பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது. நெத்தி மீன்கள் வளர்ந்து பெரியதான பிறகே இந்த கொம்புகள் தோன்றுவது இந்த தகவலை உறுதி செய்வதாக உள்ளது.
வாலில் ஆரஞ்சு நிற முட்கள்
நெத்தி மீனின் வால் பகுதியில் வாலும், முன் உடலும் இணையும் இடத்தில் இருபுறமும் இரு இணைகளாக முட்கள் அமைந்திருக்கும். இந்த முட்கள் ஆரஞ்சு நிறம், நீலநிறம் என பல்வேறு நெத்தி இனமீன்களுக்கு ஏற்ப ஒவ்வொருவித வண்ணத்தில் காட்சியளிக்கும்.
இரு சிறு வட்டக்கவசங்களின் மேல், முன்நோக்கியபடி அமைந்திருக்கும் இந்த கூரிய முட்களை நெத்தியால் அங்குமிங்கும் அசைக்க முடியாது.
(ஆனால், Acanthuridae குடும்பத்தைச்சேர்ந்த சில மீன்கள் இந்த வால்புற கத்திகளை இங்குமங்கும் அசைக்கக் கூடியவை.)
நெத்தி மீன் திடீரென நிறம் மாறவும் கூடியது. Acanthuridae குடும்பத்தைச் சேர்ந்த ஒரண்டை மீன் (Powderblue Surgeon) எதிரியைப் பயமுறுத்த நிறம் மாறும். ஆனால், நெத்தி மீன்களில் புள்ளி நெத்தி மீன், கடலில் அது வாழும் குறிப்பிட்ட பகுதியில் சூழல்கேடு ஏற்பட்டால் நிறம் மாறக் கூடியது.
வண்ணம்...வனப்பு...
புள்ளி நெத்தி மீனில் வளர்ந்த பெரிய மீன்கள் நீலம்செறிந்த சாம்பல்நிறம் முதல் ஒலிவ பழுப்பு நிறம் வரை பல்வேறு வண்ணச்சாயல்களில் திகழக்கூடியவை.
கடலுயிர் காட்சியகத்தில் கண்ணாடித் தொட்டியில் வளர்க்கப்படும் புள்ளி நெத்தி மீன், நீரின் தன்மை கெட்டுப்போகத் தொடங்கினால் அடர்நிறத்துக்கு மாறும். இதன்மூலம் தொட்டி நீர் மாசுபட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம்.
புள்ளி நெத்திமீனின் பெரிய மூக்கும், அதன் முழு தலையும் ஒருமனிதனின் முகத் தோற்றத்தைப் போலவே காட்சி அளிப்பது வியப்பான ஒன்று. அதிலும், மனம் நிறைவடையாத ஏக்கம் நிறைந்த ஒரு மனிதனின் முகத்தைப் போல புள்ளிநெத்திமீன் தோன்றுவது இன்னும் வியப்புக்குரியது.
நெத்தி மீன்கள், பிறக்கும்போது நுண்ணுயிர்கள் போல சிறிதாகப் பிறந்து பிறகு பெரிதாக வளர்கின்றன என்றும் கூறப்படுகிறது.

No comments :

Post a Comment