Saturday 8 September 2018


குட்டிகளைக் காக்கும் கெழுது 

‘புலி தனது குட்டிகளைக் காப்பது போல சோழ மன்னன் கிள்ளி வளவன் சோழ நாட்டைக் காத்தான்‘ என்று சங்க கால புலவர் ஒருவர் கிள்ளி வளவனை புகழ்ந்தேற்றியிருக்கிறார். ஆண் கெழுது (கெளிறு) (Cat Fish) மீன் தனது முட்டைகளை அல்லது குட்டி களைக் காப்பது போல சோழ மன்னன் கிள்ளிவளவன் சோழ நாட்டைக் காத்தான் என்று அந்தப் புலவர் பாடியிருந்தாலும் கூட அதில் தவறு ஏதும் இருந்திருக்காது. பொருத்தமாகவே இருந்திருக்கும்.
கெழுது (கெளிறு) (Cat Fish) மீன்களில் பெண் மீன் எப்போதும் 4 ஆயிரம் முதல் ஒரு லட்சம் முட்டைகளை இடக்கூடியது. இவையே கடல் கெழுது மீனாக இருந்தால் ஒவ்வொரு முட்டையும் ஒரு கோலிக்குண்டு அளவுக்கு பெரியதாக இருக்கும்.
எண்ணற்ற முட்டைகளை இப்படி இட்டுத் தள்ளுவது மட்டும்தான் பெண் கெழுது மீனின் வேலை. மற்றபடி அவற்றை கருவுறச் செய்து காத்து, குட்டிகள் பொரித்த பின்னும் அவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிப்பது அனைத்தும் ஆண் கெழுது மீனின் வேலை.
கெழுது முட்டைகளில் கருவுறாத முட்டைகள் வெள்ளை நிறத்தில், ஒருவித பூஞ்சை படர்ந்து காணப்படும். அதுவே கருவுற்ற முட்டை என்றால் அடர் பழுப்பு நிறத்துக்கு முட்டைகள் மாறும். அவற்றின் உள்ளே கருப்புநிற உடல்கள் தென்படும்.
முட்டைகள் இட்டபின் பெண் கெழுது மீன் அதன் முட்டைகளைத் தின்றுவிட அதிக வாய்ப்புள்ளதால், முட்டைகளின் அருகில் பெண் மீனை ஆண் மீன் அண்ட விடாது. அது மட்டுமல்ல, ஆண் கெழுது, வால் மற்றும் தூவிகளை அவ்வப் போது விசிறி போல வீசி, முட்டை களைத் தூய்மையாக்கும். முட்டை களுக்கு உயிர்க்காற்று கிடைக்கவும் வழிவகுக்கும்.
முட்டைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பது போலத் தெரிந்தால் முட்டை களை வாயால் அள்ளியெடுத்து வாய்க்குள் வைத்து ஆண் கெழுது காப்பாற்றும். முட்டைகள் தட்பவெப்பநிலைக்கேற்ற 3 அல்லது 5 நாள் களில் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும். அதன்பிறகும் குஞ்சுகளை தனது வாயில் மறைத்து கெழுது மீன் பேணிக் காப்பாற்றும்.
குஞ்சுகள் அவ்வப்போது வெளியே வந்து உலவும் நிலையில், சிறுஆபத்து ஏற்பட்டாலும் தந்தையின் திறந்த வாயே குஞ்சுகளின் ஆபத்து கால புகலிடமாகும்.
குஞ்சுகள் வளர்ந்து பெரிதாகும் வரை தந்தை கெழுது உணவு எதுவும் உண்ணாது. கடும் பசியைத் தாங்கும். ஒரு மாத காலத்தில் குஞ்சுகள் இரண்டு அங்குல நீளம் வரை வளர்ந்து பெரியதானதும், தந்தையை விட்டு அவை நீங்கும். அதன்பின் தந்தை கெழுது அரசுப் பசியுடன் இரை தேடிச் செல்லும்.
அதன்பிறகு கெழுதின் குட்டிகள் தந்தையின் அருகே வரவே -கூடாது. அப்படித் தெரியாத்தனமாக தந்தை மீனின் அருகே அவை வந்தால் தவறாமல் அவையும் தந்தை கெழுதுக்கு உணவாகும்.

No comments :

Post a Comment