புதிய 3 மீன்கள் கண்டுபிடிப்பு

நமது
புவிக்கோளத்தின் பெரும்பகுதியை கடல் சூழ்ந்து நிற்கிறது. கடல்களில் ஐந்தில் ஒரு
பகுதியை மட்டும்தான் மனிதர்கள் இதுவரை ஆராய்ந்திருக்கிறார்கள். இன்னும் நமக்குத்
தெரியாத எண்ணிறந்த உயிரினங்கள் கடல்களில் இன்றும் வாழ்கின்றன.
தென்
அமெரிக்காவின் மேற்குக் கரையில் ஆண்டெஸ் மலைத் தொடருக்கு இணையாக, பசிபிக் கடலில் 6
ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு அடகாமா கடல்குழி பகுதி பரந்து விரிந்து கிடக்கிறது. 8
ஆயிரம் மீட்டர் வரை ஆழமுள்ள பகுதி இது. இந்த அடகாமா (Atacama)
கடல்குழி பகுதியில் 24 ஆயிரத்து 600 அடி (7,500 மீட்டர்) ஆழத்துக்கு இரையுடன்
கூடியை ஒரு காமிராவை அறிவியலாளர்கள் அனுப்பி ஆய்வு செய்தனர்.
இந்த ஏழரை
கிலோ மீட்டர் ஆழத்தில் ஏதாவது கிடைக்குமா என்று ஆராய்ந்த போது, நீலம், பிங்க்,
பர்ப்பிள் ஆகிய மூன்று நிறங்களில் கண்ணாடி போல, நமது கண்ணால் ஊடுருவிப் பார்க்கக்
கூடிய ஜெல் போன்ற உடல்கொண்ட மூன்று புதிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு இந்த
மீன்கள் அதிக அளவில் செறிந்து வாழ்வதும் தெரிய வந்திருக்கிறது.
நத்தை மீன் என
அழைக்கப்படும் இந்த வகை மீன்களில் ஏற்கெனவே 400 வகை மீன்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
இவ்வளவு அடியாழத்தில் இப்போது மேலும் 3 புதுவகை மீன்கள் கிடைத்திருப்பது அறிவியலாளர்களுக்கு
மகிழ்ச்சியை ஊட்டியுள்ளது.
அதிலும்
மரியானா கடல்குழியில் 26 ஆயிரத்து 600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு நத்தை
மீன்தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மீன்களில் மிக அடியாழத்தில் வாழும் மீன் என்றநிலையில்
தற்போது அடகாமா (Atacama) கடல்குழியில் புதிய மூன்று நத்தை மீன் இனங்கள் கண்டுபிடிக்கப்
பட்டுள்ளன. அடகாமா நத்தைமீன்கள் என்று தாற்காலிகமாக இவற்றுக்குப் பெயர்
சூட்டப்பட்டுள்ளது.
இவ்வளவு
ஆழத்தில் வாழ்வதால் இந்த புதுவகை மீனுக்கு எதிரிமீன் என்று எதுவும் இல்லை. எந்த
மீனும் உணவுக்காக 5 மைல் ஆழத்துக்கு கீழ் முக்குளித்து வருவதில்லை. எதிரி
மீன்களிடம் இருந்து தப்புவதற்காகவே இப்படி கடலின் மிகஆழத்துக்கு வந்து இந்த நத்தை மீன்கள் நாளடைவில் சூழ்நிலைக்கேற்றபடி தங்களைத் தகவமைத்து இருக்கலாம் என
அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
26 ஆயிரம்அடி
கடல் ஆழத்தில், கண்ணைக் கட்டும் கும்மிருட்டில் 2 டிகிரி சென்டி கிரேடு குளிர் நிறைந்த
தட்பவெப்ப நிலையில் இந்த மீன்கள் உயிர் வாழ்வது அதிசயம்தான்.

இந்த அளவு
ஆழத்தில் உள்ள கடல்நீரின் அழுத்தம் நாம் வாழும் நிலத்தில் இருக்கும் அழுத்தத்தை
விட 2 ஆயிரத்து 500 மடங்கு அதிகம். இந்த அழுத்தம், நமது சுண்டுவிரல் மீது 800 கிலோ
எடையை வைப்பதற்கு சமமானது. இந்நிலையில் மென்மையான
கூழ்பசை போன்ற இந்த மீனின் உடல், கடலின் அதிக அழுத்தத்தைத் தாங்கி வாழ இந்த மீனுக்கு
உதவுகிறது. கடலின் அதிக அழுத்தம்தான், இந்த மீனின் உடல் துண்டுதுண்டாகப் பிரிந்து
விடாமல், ஒன்றர ஒட்டிவைத்து காப்பாற்றுகிறது.
பரிணாம வளர்ச்சியின் பரிசாகக் கிடைத்த இந்த அழகிய உடலால், நத்தை மீன்களால் இந்த குறிப்பிட்ட அளவு அழுத்தமுள்ள கடல் ஆழத்தில் மட்டுமே வாழ முடியும். மாறாக, இந்த மீனை கடல் மட்டத்துக்கு மேலே எடுத்து வந்தால், மறுகணமே அது உருகிக் கரைந்துவிடும் என்பது தெரிய வந்திருக்கிறது