Tuesday, 26 July 2016

மூரை (Sea Urchin)

தமிழக தென்பகுதி கடலோரத் தேரிகளில் காணப்படும் முள்ளிப்பூ போன்ற உருவம் கொண்ட கடல் உயிரினம் மூரை.

 முள்பந்து போன்ற இதன் உருவம், முள்ளம்பன்றியை நினைவுபடுத்தக்கூடியது. ஆங்கிலத்தில் Urchin என்ற பெயர் மூரைக்கு வந்தது இதனால்தான்.
மூரைகளில் ஏறத்தாழ 200 இனங்கள் இருக்கின்றன. கறுப்பு, சிவப்பு, பழுப்பு, இளஞ்சிவப்பு, ஊதா என பலவகை நிறங்களில், பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் இவை காணப்படும்
சிரட்டை முதல் தேங்காய் அளவிலான மூரைகள் உள்ளன. பனிக்கடலான துருவக் கடல்களைத் தவிர மற்ற எல்லாக் கடல்தரைகளிலும் மூரையைப் பார்க்க முடியும். சகதி, பார்களில் இவை அதிகம் தட்டுப்படும்.
மூரைகளின் உடலைச்சுற்றி முள்கள் காணப்படும். இவை அசையக் கூடியவை. மூரையை ஒருவர் தொட்ட மாத்திரத்தில் அந்த இடத்தை நோக்கி முள்கள் சிலிர்க்கக் கூடியவை.
உடலின் மேல் பகுதியில் இருக்கும் முள்கள் கீழ்நோக்கி வரவர சிறிய முள்களாக மாறும். 
மூரையின் முள்கள் மூரையை பாதுகாப்பது மட்டுமின்றி, மெதுவாக இடம்விட்டு இடம் நகரவும், உருமறைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. கடல்பார்களை மூரை ஒட்டிப்பிடித்துக் கொள்ளவும் முட்கள் பயன்படுகின்றன. மூரையின் முறிந்த முட்கள் மீண்டும் வளரக்கூடியவை. அதிக சேதம் ஏற்பட்டால் மட்டுமே முட்கள் மீண்டும் வளராது. முள்களின் முனையில் நகம் போன்ற அமைப்பும் உண்டு.
மூரையின் உடல் சுண்ணாம்புபோன்ற கடினத் தகடால் ஆனது. சிரட்டையைவிட சற்று தடிமன் குறைந்த தகடால் மூரை மூடப்பட்டிருக்கும். 
முட்களைத் தவிர நீண்ட குழாய் போன்ற கால்களும் மூரைக்கு உள்ளது. இந்த உறிஞ்சுக் கால்கள் மூலம் மூரை நகரவும், தன்னைச் சுற்றியுள்ள கடல்நீரில் மிதக்கும் உணவுத் துணுக்குகளை உறிஞ்சி உணவாக்கவும் செய்கிறது. உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இந்த உறிஞ்சுக்கால்கள் உதவுகின்றன.
மூரையின் வாய் அதன் அடிப்பகுதியிலும், மலத்துளை உடலின் மேற்பகுதியிலும் காணப்படும். இதன் வாய், அரிஸ்டாட்டிலின் விளக்கு என வித்தியாசமாக அழைக்கப்படுகிறது. 5 பற்கள் கொண்ட தகடு போன்ற வாயால் மூரை உணவை உட்கொள்கிறது. சிப்பி போன்றவற்றின் தோடுகளை உடைத்து உண்கிறது.
மூரைகள் ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் உயிர்வாழக்கூடியவை, செங்கடல் மூரை இனம் 200 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது.
மூரைகள் கூட்டமாக கடல்பார்களில தங்கும். இது ஓர் இரவு நடமாட்ட விலங்கு. பகலில் பார் இடுக்குகளில் மறைந்திருந்து இரவில் இவை இரை தேடி வெளிவரும். ஒளியை விரும்பாத மூரை, இருள் மற்றும் நிழலைத் தேடி ஒதுங்கும். ஒரே பாரில் குடியிருக்கும் மூரைகள் பையப் பைய பாரை அரித்து தாங்கள் ஒளிந்து வாழ ஓர் இருப்பிடத்தைத் தேடிக் கொள்ளும்.
மூரை ஓர் அனைத்துண்ணி. கடல்பாசிகள், கடற்புல், பூண்டுகளைத் தவிர இறந்த நண்டு, மீன், சிப்பி, கடற்பஞ்சு, கொட்லாஸ் போன்றவை இதன் முதன்மை உணவு. ஒரு மூரை இன்னொரு மூரையை உண்ண வல்லது. இரை இருப்பதை மோப்பத்தால் அறிந்து ஒரே நேர்க்கோட்டில் பயணித்து இரை இருக்குமிடத்தை மூரை அடையும்.
மூரையின் முதன்மை எதிரி நட்சத்திரமீன் மற்றும் கிளாத்தி மீன்கள்தான். நட்சத்திர மீன் மூரையை ஆரத்தழுவி அதை இரையாக்கிக் கொள்ளும். கிளாத்தி மீன் வேகவேகமாக மூரையின் முள்களை நொறுக்கி, ஓட்டை உடைத்து உணவாக்கிக் கொள்ளும்.
ஒரு பார்க்கடல் செழித்துகாணப்படுகிறது என்பதற்கான அடையாளங்களில் ஒன்று மூரை. மூரை மாசற்ற கடல்களில் வாழக்கூடியது. மூரை இருக்குமிடம் பார் செழிக்குமிடம்.
கடல் மாசுபட்டால் அங்கு முதலில் இறக்கும் உயிரினங்களில் ஒன்று மூரை. அதேப்போல மூரை உயிர் வாழ சிலவகை ஒட்டுண்ணிகள் கண்டிப்பாக வேண்டும். இந்த ஒட்டுண்ணிகளை நீக்கினால், முள்கள் உதிர்ந்து மூரை மெல்ல மடிந்து போகும்.
மூரையின் உள்ளிருக்கும் அரைதிரவ மஞ்சள்நிற பொருள் உண்பதற்கு மிகவும் ஏற்றது. கடலில்மிதக்கும் படகில் இருந்தபடி மூரையை பிளந்தால் அந்த வாசனைக்கு சுறா வர வாய்ப்புண்டு. கரையில் தீமூட்டி மூரையை சுட்டுத்தின்னும் பழக்கம் கடலோரத்தில் உண்டு.
கடலடியில் மூரையை ஒருவர் தொட்டதும் மூரை எச்சரிக்கையடைந்து பாரை இறுகப் பற்றிக் கொள்ளும். பிறகு கடப்பாரையில் அதை உடைத்து பிய்த்தெடுக்க மட்டுமே முடியும். மாறாக மூரையைத் தொட்டவுடன் தூக்கினால் எளிதாக அதை பாரில் இருந்து அப்புறப்படுத்தி விடலாம்.
மூரையின் முள்களுக்கு மூராங்குச்சி என்ற பெயர் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்த முடியும். கடற்கரை சிற்றூர்களில் அ, ஆ, இ என சிறார்களுக்கு எழுத்தறிவித்த பெருமை மூரையின் முள்களுக்கு உண்டு.

No comments :

Post a Comment