Friday 18 March 2016

சேவல்கோழி மீன்  (Lion Fish)

முதல் பார்வைக்கு ஏதோ விண்வெளியில் இருந்து வந்த வேற்றுகோளைச் சேர்ந்த மீன்போல இது தோன்றும். ஆனால் சேவல் கோழி, சாவக்கோழி, சாமீன் என்றெல்லாம் வழங்கப்படும் இந்த பலவண்ண மீன், உண்மையில் இந்தியப் பெருங்கடலைப் பிறப்பிடமாகக் கொண்டது.
கண்ணைக் கவரும் பலவண்ணம் கொண்ட சேவல்கோழியில் ஏறத்தாழ 12 இனங்கள் உள்ளன, பெரிய மீன் முக்கால் அடி நீளம் இருக்கலாம்.
சிவப்பு, வெள்ளை, பழுப்பு, கிரீம், கருப்பு வரிகள் என கண்ணைப் பறிக்கும் சேவல் கோழிக்கு, உணர் இழைகளும் அமைந்துள்ளன.
அகன்ற விசிறித் தூவிகளையும், முரணழகு நிறங்களையும் காட்டி இது இரை மீனைக் கவரும். தன் இனத்தையும் உறவுக்கு அழைக்கும்.
சேவல்கோழி, ஒரு பார்க்கடல் மீன். பார்களில் கடல்நோக்கிய பகுதிகளே இதன் வாழ்விடம். இதர பார்மீன்களிடம் எப்போதும் எதிர்ப்பைக் காட்டி தன் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்காமல் இது தக்க வைக்கக் கூடியது. இது நீச்சல் திறமை உள்ள மீன்.
நடுநிலை ஒப்புமை தவறாமல், நீரில் தன்னை நன்கு நிலைநிறுத்திக் கொண்டு இரைமீனை மெதுவாக விரட்டி, ஒரு மூலையில் தள்ளி, இது இரை கொள்ளக் கூடியது.
பார்மீன்களில் ஏறத்தாழ 50 வகையான மீன்கள் இதன் இரைமீன்கள். பெரும்பாலும் இளம்மீன்களையே சேவல்கோழி இரையாக்கும். வாயைப் பிளந்து இரையை ஒரே விழுங்கில் இது விழுங்கக்கூடியது. பெரும்பாலும் காலை நேரமே இதன் இரையுண்ணும் வேளை.
இதன் அகன்ற வயிறு வழக்கத்தை விட 30 மடங்கு விரியக்கூடியது. சேவல் கோழியின் வயிற்றில் ஒரே வேளையில் 60 வகை இரைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
பார்களில் வாழும் இளமீன்களை 5 மாதத்தில் 79 விழுக்காடு இது தின்றழிக்கக் கூடியது.
சேவல்கோழி நஞ்சுள்ள மீன். 18 நச்சுமுள்களை இது கொண்டுள்ளது. இதில் 13 முள்கள் முதுகுத் தூவியில் காணப்படும். இதன் வித்தியாசமான வண்ண அமைப்பு எதிரிமீனை திகைக்க வைத்து தாக்குவதை ஊக்கப்படுத்தாது.
எனினும், சுறா, அஞ்சாளை, களவா, சாம்பல் நிற கிளாத்தி  மீன்கள், சேவல் கோழியை இரையாக்கக் கூடியவை. இதன் நஞ்சு, இந்தவகை மீன்களை ஒன்றும் செய்வதில்லை,
உதிர்க்கப்பட்ட சேவல்கோழி, சீலா போன்ற மீன்களுக்கும் இரையாகும். சேவல் கோழி 15 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது.

No comments :

Post a Comment