Friday 2 October 2015

கோஸ்தா என்றால் மாலுமி

போர்ச்சுக்கீசியர்கள் முத்துக்குளித்துறைக்கு தந்த குடும்பப் பெயர்கள் ஏறத்தாழ எண்பது.
பெர்னாண்டோ (பர்னாந்து), அல்மெய்தா, கோமஸ், லோபோ, மச்சாடோ, மோத்தா, வாஸ், வாய்ஸ், பெரைரா, கொரையா, மஸ்கரனாஸ், பீரிஸ், கூஞ்ஞே, தற்குரூஸ், தல்மேத்தா, கல்தேரா, கொரேரா, டி கோஸ்தா, ரோட்ரிகஸ், ரொட்ரிகோ, மிராண்டா, டிவோட்டா, பாய்வா, கர்டோசா, மெதடிஸ், டி சில்வா, டி சூசா, டி குரூஸ், டி ரோஸ், பிஞ்ஞோரா, அல்வாரிஸ், வல்தாரிஸ், வதேரா, கர்வாலியோ (கர்வாலோ), ரோச், விக்டோரியா, மொரேய்ஸ், சில்வேரா, காகு, குத்தாலினி,  லோபஸ், லியோன், மொரேல், மெல், மென்டிஸ், மெனஸ், மென்டோன்கா, கல்தேரா, பசங்கா, பிமன்டோ, ராயன், ராவேல், செக்குய்ரா, சோரிஸ்...

போன்றவை அவற்றுள் சில.
இவை தவிர நம் வாயில் நுழையாத, நம் பக்கம் புழக்கத்தில் இல்லாத போர்ச்ச்கீசிய குடும்பப் பெயர்களும் ஏராளமாக உள்ளன.
கவுத்தோ, சல்தான்கா, ஓர்த்தா, வர்த்தமா, மெஸ்கிட்டா, டி மெல்லோ, லிஸ்போவ, நொரன்கா, காமா, மெயினுர்லெஸ், காம்போய, அமரால், அல்பர்க்கர், அப்ரியு, வெய்ரா, டி வாலே, ஆசிவெய்ரா, மான்சான்றோ போன்றவறை அவற்றுள் சில...
போர்ச்ச்கீசிய குடும்பப் பெயர்களுக்கு உள்ள அர்த்தங்கள் விசித்திரமானவை.
எடுத்துக்காட்டாக டி கோஸ்தா என்ற பெயர் மாலுமியைக் குறிக்கிறது.
டி கோஸ்தா என்ற சொல்லுக்கு கடற்கரையில் இருந்து வந்தவர் என்றும் அர்த்தமாம்.
டி குரூஸ் என்றால் சிலுவையில் இருந்து வந்தவர் என்று அர்த்தமாம்.
லோபோ என்றால் ஓநாய் என்று அர்த்தம்.
(லோபோக்கள் வருத்தப்படவேண்டாம். ஐரோப்பாவில் சிங்கம்,புலி இல்லை. அங்கு மதிக்கத்தக்க பெரிய விலங்கு ஓநாய்தான். தவிர, ரோமானிய நாகரீகத்தைத் தோற்றுவித்த ரோமுலஸ், ரெமுசுக்கு பாலூட்டி அவர்களை வளர்த்தது ஓர் ஓநாய்தான்)
கோமஸ் என்றால் நல்ல மனிதர்.
டி சில்வா என்றால் காட்டில் இருந்து வந்தவர் என்று அர்த்தம்.
பெரைரா என்றால் இரும்புச் சுரங்கத்தில் இருந்து வந்தவர்.
செக்குய்ரா என்றால் வறண்ட பாலைநிலத்தில் இருந்து வந்தவர். சல்தான்கா  என்றால் அவர் ஸ்பெயின் நாட்டின் சல்தான்கா நகரில் இருந்து வந்தவர் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தோல் பதனிடும் வேலை செய்பவருக்கு கொரியா என்று பெயர்.
பியர் மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவே குடியிருந்தால் அவர் பெரைரா,
மொரெய்ஸ் என்றால் மல்பெரி மரங்களுக்கு நடுவில் வாழ்பவர் என்று அர்த்தம்.
கவுத்தோ என்றால் சுற்றிலும் புல்வெளி சூழ்ந்த இடத்தில் இருந்து வந்தவர்.
மிராண்டா என்றால் அற்புதமானவர், அன்பு நிறைந்தவர் என்று அர்த்தம்.
கொன்சால்வஸ் என்றால், ஆயுதமின்றி வெறும் கையால் சண்டையிடக் கூடிய வீரர்.
பிண்டோ என்றால் கண்ணாடி அணிந்தவர் என்று அர்த்தமாம்.



No comments :

Post a Comment