Friday, 20 October 2017

விளமீன் (Emperor)

கடல்மீன்களில் ஓர் இனம் விளமீன். விளைமீன் என்ற பெயரும் இதற்கு உண்டு. விளமீன்களில் மொத்தம் 35 வகை. முன்சரிந்த நெற்றியும், ஆப்பிரிக்க மக்களின் உதடுகள் போல தடித்த பெரிய உதடுகளும் இந்த இன மீனின் முதன்மை அடையாளம்.
பார்மீன்களில் ஒன்றான விளமீன், பெரும்பாலும் கடலடியில் பார்களின் இண்டு இடுக்குகளில் மறைந்து வாழும்.
விளமீன் ஒருவகையில் செப்பிலி இன மீனுக்கு உறவுக்கார மீன். சிறுகூட்டமாக வாழும் விளமீன்கள், பார் அடிக்குகைகளில் வரிநவரை போன்ற மற்ற இன மீன்களுக்கும் இடம் தந்து வாழும். தன்னைப் போல பிறரையும் நேசிக்கும் மீன் விளமீன்.
பவழப்பாறைகளின் அடியில் உள்ள ரகசியக் குகைகளில் மறைந்திருந்து, அந்திபட்டு இருள் சூழ்ந்ததும், விளமீன்கள் இரைதேடி வெளிக்கிளம்பும்.
இரைதேடும் போது வரிநவரையுடன் சேர்ந்து இது இரை தேடும்.
விளமீன்களுக்கு மிக உறுதியான பற்கள் உண்டு. இதன்மூலம் நண்டு போன்றவற்றின் ஓட்டை உடைத்து விளமீன் இரையாக்கும். விளமீன்களின் தசை பொதுவாக வெள்ளை நிறத்தது. அப்போதுதான் நண்டைத் தின்று, மனிதரிடம் பிடிபட்ட விளமீன், நண்டு போல மணம் வீசக்கூடியது.
விளமீனின் பற்கள் பசிபிக் கடல்தீவான டோங்காவில் (Tonga) ஒரு காலத்தில் நாணயங்களாகப் பயன்பட்டிருக்கின்றன.
விளமீன்கள் சிறுமீன்களையும் உண்ணும். கிளிக்காய் (Kilikai) எனப்படும் கடற்காய்களையும் விளமீன் உண்ணும் என்று உறுதி செய்யப்படாத ஒரு தகவல் கூறுகிறது.
விளமீனில் சிறிய மீன்கள் கோடுகள், வரிகள், புள்ளிகளுடன் வேறு இன மீன்களைப் போலத் தோற்றம் தரும். வயதான பிறகே இவை விளமீனுக்கு உரிய உருவ அமைப்பைப் பெறும்.
சிறிய விளமீனின் குட்டிகள், நச்சுத்தன்மை நிறைந்த ஒருவகை தட்டைப்புழுவைப் போல வித்தியாசமாக நீந்தி எதிரிகளைப் பயமுறுத்தி உயிர் பிழைக்கும்.
விளமீன்களில் 35 வகை எனப் பார்த்தோம்.
இவற்றில் தாழ விளமீன், ஒரியா விளமீன், கருணா விளமீன், பருவ விளமீன், தாடி விளமீன், பெருவா (பெரியவாய்) விளமீன், ஓலை விளமீன், கருக்கா விளமீன், தெளுவாட்டு விளமீன், தீன விளமீன், உரட்டுக்காப்புளி விளமீன், கொப்புளி சரிந்த விளமீன், பொட்டிட்ட விளமீன் போன்றவை அடங்கும்.
இவற்றில் ஒரியா விளமீன், நீல நிறமும், நீண்ட முகமும் கொண்டது. கருக்கா விளமீன், ஊசி போன்ற பற்கள் உடையது.
இளம்பச்சை நிறமும், இளஞ்சிவப்பு நிறமும் கொண்ட உரட்டுக்காபுளி விளமீனுக்கு செவிப்பக்கம் பொட்டு உண்டு. இந்த மீனில் கற்றாழை மணம் போன்ற ஒருவகை முசும்பு (மணம்) வீசும்.
நெற்றியில் பொட்டு உள்ள பொட்டிட்ட விளமீன் சுவையாக இருக்காது. கடுக்காய் போல இதன் சுவை இருக்கும். கொப்புளி சரிந்த விளமீனுக்கு ஒன்று முதல் ஒன்றரை அங்குல தொப்பூழ் (கொப்புளி) உண்டு.
விளமீனில் மிகச்சிறியதை கொதளிக்குட்டி என அழைப்பார்கள்.
தூண்டிலில் சிக்கினால் துள்ளிப் பாயாமல் பார்களுக்குள் தூண்டிலைக் கொண்டு ஓடும் பழக்கம் உள்ளது விளமீன்.

பளிச்சென மின்னும் சிவப்புத் தோல் கொண்ட செவ்விள மீன் (Red Emperor) மீன் உண்மையில் விளமீன் இனத்தைச் சேர்ந்ததல்ல. அது வேறுவகை மீன்.

Thursday, 12 October 2017

தீவுகளும் கடல் உயிர்களே..

கடலையும், கடல் உயிரினங்களையும் போல கடல்தீவுகளும் உயிர் உள்ளவையே.
மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகளைப் பற்றி இப்போது ஒரு சிறிய பருந்துப் பார்வை பார்க்கலாம்.
தூத்துக்குடிக்கு மிக அருகே உள்ள தீவு ‘முசல் தீவு‘ என அழைக்கப்படும் முயல் தீவு (Hare Island). தூத்துக்குடியுடன் ஒட்டியும், ஒட்டாமலும் இருக்கும் இங்கே ஒரு சிறிய கிறிஸ்துவத் தேவாலயம் உண்டு. இப்போது, தூத்துக்குடி நகரோடு சாலை வழியே இணைக்கப்பட்டிருக்கும் இந்தத் தீவு ‘ராஜ தீவு‘ எனவும், கலங்கரை விளக்கம் அமைந்திருப்பதால் ‘கோபுரத் தீவு‘ எனவும் அழைக்கப்படுகிறது.
முயல்கள் அதிகம் இருந்ததால் இந்த தீவுக்கு ‘முயல்தீவு‘ என்ற பெயர் வந்திருக்கலாம்.
70களில் இந்தத் தீவில் இறங்கி இலந்தைப் பழம் பறித்துத் தின்றதையும், இரவில் அழுங்கு (Ant eater) எனப்படும் எறும்புத்தின்னி ஒன்று, வள்ளத்தில் ஏறி பரபரப்பூட்டியதையும் நண்பர் ஒருவர் என்னிடம் நினைவுகூர்ந்தார்.
தூத்துக்குடிக்கு அருகே உள்ள மற்றொரு தீவு வான் (Van) தீவு. இங்கே ஆயிரக்கணக்கான சொரிமீன்கள் கூட்டம் கூட்டமாக கரையேறி இறந்து கிடந்த காட்சியை இன்னொரு நண்பர் மலரும் நினைவுகளாக விவரித்திருக்கிறார்.
தூத்துக்குடிக்கு அருகே இருந்த பாண்டியன் தீவு, புன்னையாடு(?) தீவு போன்றவை துறைமுக விரிவாக்கத்தால் அழிந்து போனதாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து வடகிழக்கே கரை பிடித்து ராமேசுவரம் நோக்கிச் சென்றால் காசுவார் (Kasuvar) தீவு, விலங்குச்சல்லி மற்றும் கரைச்சல்லி தீவுகள்.
விலங்குச் சல்லியை, விலாங்கு சல்லி என்பவர்களும் இருக்கிறார்கள். விலாங்கு என்பது ஒருவகை கடல்மீன் என்பதால் இந்த தீவுக்கு விலாங்குச் சல்லி என்ற பெயர் வந்திருக்கலாம் என்று அவர்களது கருத்து. ஆனால், தென் தமிழக கடற்புறங்களில் கரை என்பதற்கு எதிர்ப்பதம் விலங்கு. எனவே கரைச்சல்லி தீவுக்கு எதிரே இருக்கும் இந்த தீவை விலங்குச்சல்லி என்பதே சரியானது. பொருத்தமானது.
வேம்பாறு தாண்டி வாலிநோக்கம் வரை சென்றால் உப்புத்தண்ணித்தீவு, நல்ல தண்ணிதீவு மற்றும் புழுவுணிச்சல்லி (Pulvinichalli) தீவுகள். நல்லதண்ணீர்த் தீவு பெயருக்கேற்ப நீர்வளத்துடன் தென்னை மரங்கள் செறிந்த தீவு.
இங்கே கடலோரம் வாழும் கறுப்பு கலந்த இளஞ்சிவப்பு நிற கடல் அட்டை, கையில் எடுத்தவுடன் விறைப்பாகி, பின்னர் காற்றுபோன பலூன் போல தொய்ந்துவிடக் கூடியது. உணவாகப் பயன்படாத இந்தவகை கடல் அட்டைகள் நல்ல தண்ணீர்த்தீவு அருகே அதிகம்.
நல்ல தண்ணீர்த்தீவு அருகே களித்தீவு என்ற மணற்பாங்கான வெளி உண்டு.
புழுவுணி சல்லித் தீவைப் பொறுத்தவரை அதை புலிவன் சல்லி என்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், புழுவுணி என்பது மணலில் வாழும் சிறிய பூச்சியினம். மணலில் உட்கார்பவர்களை, மூட்டைப் பூச்சி போல கடித்து புழுவுணிகள் ரத்தம் குடிக்கக் கூடியவை. புழுவுணி பூச்சிகள் காரணமாகவே இந்தத் தீவுக்கு புழுவுணிச்சல்லி (Pulvinichalli) என்ற பெயர் வந்திருக்கலாம்.
கீழக்கரைக்குத் தெற்கே அனல்பார் தீவு, வாலிமுனைத்தீவு, அப்பாத்தீவு, பூவரசன்பட்டித்தீவு, தலையாரித்தீவு, வலைத்தீவு, முள்ளித்தீவு போன்றவை உள்ளன.
வலைத்தீவில் கிழத்தேரியம்மாள் (கித்தேரியம்மாள்) (புனித காதரைன்) கோவில் உண்டு.
இன்னும் ஹோர் தீவு (Haro) (Hare) (Horo) மணலித்தீவு (Manoli),  மாகாளிப்பட்டித்தீவு (Mahalipatti), பூமறிச்சான் தீவு,  புலிவலசைத் தீவு, குருசடைத் தீவு, சிங்கித்தீவுகளும் இருக்கின்றன.
மணலித் தீவிலும், தலையாரித் தீவிலும் சுண்ணாம்பு படிவங்கள் அதிகம்.
மணலித் தீவில் கலம் கட்டி மீன்பிடிக்கும் வழக்கம் முன்பு இருந்துள்ளது.
(முழங்கால் அளவுக்கு கடல்நீர் விரிந்து பரந்து அங்கு மீன்கள் செறிந்திருந்தால் அது கலம். தூத்துக்குடியில் கொக்குமேய்ஞ்சான் கலம் உண்டு)
அனல் பார் தீவுக்கு ஆனைப்பாறைத் தீவு என்ற பெயர் உண்டு. இங்கு பாறைகள் அதிகம்.
பூமறிச்சான் தீவு, 3 தீவுகள் கொண்ட ஒரு கூட்டம். இந்தத் தீவுக்குப் பள்ளிவாசல் தீவு என்ற பெயரும் உள்ளது.
சிங்கித் தீவு அல்லது சிங்களே தீவு, முன்பு சிங்கள மீனவர்கள் வந்து தங்கிச் சென்ற இடமாக கருதப்படுகிறது.
குருசடை அல்லது குருசடித் தீவில் பூவரசு மரங்கள் அதிகம்.
மக்கள் வாழாத இந்தத் தீவுகளில், ஆழிப்பேரலைக்குப்பின் விலங்குச்சல்லி, பூவரசன்பட்டி தீவுகள் மாயமாய் மறைந்து விட்ட.ன. அண்மையில் வான்தீவு  இரண்டாக உடைந்து நீரில் மூழ்கியது தெரிய வந்திருக்கிறது. கடல் கொண்ட நம் குமரிக்கண்டமான லெமூரியாவும் ஒருவேளை இப்படித்தான் மறைந்திருக்குமோ என்னவோ?