Friday, 11 March 2016

கருந்திரளி  (Sheepshead)

கருந்திரளி, wrasse எனப்படும் திரளி வகை மீன்களில் ஒரு ரகம். கருந்திரளியில் பலவகைகள் உள்ளன. ஒன்று கறுப்பும், ஆரஞ்சு சிவப்புமான திரளி. மற்றொன்று செங்குத்தாய் 6 வரிப்பட்டைகள் கொண்ட திரளி.
முதல்வகை கருந்திரளியில் ஆண் மீனுக்கு செம்மறி ஆடு போன்ற தலையும், சிவப்பு நிறக் கண்களும் இருக்கும்.  உடலின் முன்பாகமும், வால் உள்பட பின்பாகமும் கறுப்பாகக் காணப்படும். நடுப்பகுதி மட்டும் ஆரஞ்சு கலந்த சிவப்பாக மிளிரும்.  இம்மீனின் முதுகுத் தூவியில் முன்பாதி சிவப்பாகவும், பின்பாதி கறுப்பாகவும் துலங்கும். வாயின் அடிப்புறம் வெண்மையாக இருக்கும். உடல் செவ்வக வடிவமாகக் காட்சி தரும்.
இனப்பெருக்கக் காலத்தில் ஆண்மீனின் தலையில் ஒரு புடைப்பு தோன்றுவதும் உண்டு, ஆனால்,  பெண்மீனின் உடல் மாறுபட்டது. அது ஒரே மாதிரியாக ஆரஞ்சு சிவப்புநிறமாகத் தோன்றும்.
கருந்திரளியில் மற்றொன்று சாம்பல் நிறப் பின்னணியில் 6 வரிப்பட்டைகளுடன் ஏறத்தாழ ஓரடி நீளமுள்ள மீன். இதன் முதுகு வால் நோக்கி மெல்ல சரியும். முதுகுத் தூவியில் முள்தூவிகளும், மென்மையான கதிர்தூவிகளும் காணப்படும்.
பகலில் இரைதேடும் கருந்திரளி, இரவில் ஒரு படலத்தை உருவாக்கி அதற்குள் தங்கும். அதை இரைதேடும் எதிரிமீன்களால் மோப்பத்தால் கண்டுஉணர முடியாது.
தூங்குவதைப் போல தோற்றம் தருவது இந்த வகை கருந்திரளியின் இன்னொரு முக்கியப் பண்பு.

Sunday, 6 March 2016

தேளி (இருங்கெழுது)
(plotosus Canius)


கெளிறு இன மீன்களுக்கு கெழுது, கெழுத்தி என திசைப்பெயர்கள் அதிகம், பூனை போன்ற மீசை இருப்பதால் ஆங்கிலத்தில் கெழுதுக்கு Cat fish என்பது பெயர்.
கெழுது இன மீன்களில் ஒரு பிரிவான தேளியை,  Ell tail catfish வகைகளில் ஒன்றாகக் கருதலாம். இந்தியப் பெருங்கடலைத் தாயகமாகக் கொண்ட மீன் தேளி.
நச்சு முள்கள் கொண்ட கெழுது இன மீன்கள் பொதுவாக வரிகலந்த வண்ணங்களுடன் இருப்பதில்லை. ஆனால், தேளிகள் அதற்கு விதிவிலக்கு.
இந்தத் தேளிகளில் ஒன்று இருண்ட கருஞ்சாம்பல் நிறம் கொண்ட தேளி. இதன் உடல் வரிக் கோடுகள் பகலில் தெரியாது. இரவில் தெரியலாம்.
இதன் மீசைகள் கண்களைத் தாண்டியும் நீளமானவை. மீசையால் கடல்தரையைக் கிளறி இது இரைதேடக்கூடியது.
இதன் முதுகிலும், அடியிலும் தூவி
உண்டு. முதுகுப்பின் தூவியும், அடிப்புறப் பின்தூவியும் நீண்டு சென்று வால்தூவியுடன் ஒன்றரக் கலந்து முடியும்.
தேளி மீன் நஞ்சுள்ளது. இதன் முதுகு மற்றும் பக்கத்தூவிகளில் உள்ள முட்கள் நஞ்சுப்பையுடன் இணைந்திருப்பவை. பிடிப்பவர்களின் கைகளைக் குத்தி நஞ்சை செலுத்த வல்லவை.
தேளி உண்ணத்தகுந்த மீன்.




Wednesday, 2 March 2016

புள்ளிக்குறி மீன்


சரிந்த முன்நெற்றி, கூரிய மூக்கு, வெள்ளி உடல், சின்னஞ்சிறு புள்ளிகள்....புள்ளிக்குறி மீனின் அடையாளங்கள் இவை. குறிமீன்களில் 35 வகைகள் உள்ளன. புள்ளிக்குறி மீன் அதில் ஒன்று. தாடையை அரைத்து சத்தம் எழுப்புவது இந்த மீனின் குணம். ஆங்கிலத்தில் Grunter என்ற பெயர் வந்தது இதனால்தான்.
Spotted Grunter என அழைக்கப்படும் புள்ளிக்குறி மீன் இரைதேடும் விதம் அலாதியானது. செவுள் வழியாக நீரை உள்ளிழுத்து, அதை வாய் வழியே செலுத்தி, இது கடல் தரையை ஊதும்.
இது ஊதும் போது மணல் விலக, அதனுள்ளிருக்கும் ஆமை பூச்சி (Mole crab) நண்டுகள் குறிமீனுக்கு உணவாகும். தலைகீழாக நின்று இரையுண்ணும் வழக்கம் இதற்கு உண்டு. கடல்மட்டம் குறைந்த கரையோரப் பகுதிகளில் வால் நீருக்கு மேல் தெரிய இரையுண்பதும் புள்ளிக்குறி மீனின் பழக்கம்.
இது இரையுண்ணும் இடங்களில் சிறுசிறு மணல்குவியல்கள் காணப்படும். குறிமீன் வந்து சென்றதற்கான அழுத்தமான அடையாளங்கள் இவை.

தடித்த உதடு, சிறுவாய், பலவரிசைப் பற்கள், புள்ளிக்குறி மீனின் இதர அடையாளங்கள். தொண்டையில் உள்ள இதன் பல், இரையை நசுக்கப் பயன்படுகிறது.
புள்ளிக்குறி மீன் 15 ஆண்டுகாலம் வரை உயிர்வாழக்கூடியது. இதன் இன்னொரு வகை வெள்ளைக்குறி மீன். 35 வகைகள் கொண்ட மீன் என்பதால் புள்ளிக்குறி மீனுக்கு தமிழில் இன்னும் பல பெயர்கள் இருக்கலாம்.
கொறுக்கை, முள்ளங்கரா போன்ற பெயர்கள் இந்த மீனைச் சுட்டுவதாக இருக்கலாம், உறுதிப்படுத்த தேவை.
சிலவகை மீன்களுக்கு உள்ளது போல புள்ளிக்குறி மீனின் செவுளும் மனிதன் விரல்களைக் கிழிக்கக்கூடியது.


கடல் விரால் (வெறா)

இந்த மீன் செய்த பேறு என்னவோ தெரியவில்லை? தமிழிலும், ஆங்கிலத்திலும் இதற்கு பல பெயர்கள்.
ஆங்கிலத்தில் Black King Fish. Cobia. Lemon Fish. Sergent Fish என்றெல்லாம் இது அழைக்கப்படுகிறது. தமிழில் கடல்விரால் என்பதைத் தவிர கடச்சீலா, கடவுளா, வெறா என்ற பெயர்கள் இதற்கு வழங்கப்படுகின்றன.
நெய்மீன் எனவும் இது தவறாக அழைக்கப்படுகிறது.
ரிமோரா (Remora) என்ற உருவுமீன் போலவே உருவத்தில் விளங்கும் கடல் விராலுக்கு, உருவுமீனுக்குரியது போல ஒட்டும் உறுப்பு முதுகில் கிடையாது.
Rachycentron canadum என அறிவியல் பெயரில் அழைக்கப்படும் கடல்விரால், நீண்ட மெல்லிய உடலும், தட்டையான தலையும், பெரிய வாயும் உடையது.
கீழ்த்தாடை மேல் தாடையை விட சற்று முன்னோக்கி நீண்டிருக்கும். கருநிற பட்டை ஒன்று உடல் நடுவே ஓடி வாலில் முடியும், வால் கவை போல பிளந்திருக்கும்.
பெரிய கறுநிறப் பட்டைக்கு மேலே சிறிய இன்னொரு பட்டையும் அமைந்திருக்கலாம்.
பெரும்பாலும் கருப்பு கலந்த ஒலிவ நிற தோற்றம் கொண்ட கடல்விராலின் முதுகில் 9 முதல்10 முட்கள் இருக்கலாம். இவற்றில் பாதி, மீனின் முதுகுத் தூவியில் அடங்கியிருக்கும். இவற்றை உயர்த்தவோ தாழ்த்தவோ கடல்விராலால் முடியும்.
கடல் விரால் அடிப்படையில் நண்டுகளை அதிகமாக உண்டுவாழும். இந்த நண்டுதின்னி மீன்,சிலவேளைகளில் கூட்டமாக வாழும். பெரும்பாலும் தனித்துத் திரியும்.
 சந்தையில் இது சீலா மீன் என ஏமாற்றி விற்கப்படுவதும் உண்டு. 

Thursday, 25 February 2016

கீச்சான் (மொண்டொழியன்)


கீளி மற்றும் குறிமீன்களின் உறவுக்கார மீன் கீச்சான். Cresent Perch, Tiger Perch என்பன கீச்சானின் ஆங்கிலப் பெயர்கள்.  கடலில் மணல் தரையையொட்டித் திரியும் கரையோர மீன் இது. உடல்நெடுக படுக்கை வசமாக கரும்பழுப்புநிற வரிகள் ஓடும். வாலிலும் அவை நீளும். கீச்சானின் இந்த உருவத்தோற்றம் கடலடியில் அதை உருமறைப்பு செய்து கொள்ள உதவுகிறது.
கடல் தரையைக் கிளறி நண்டுகள், சிறுமீன்களை கீச்சான் இரையாகக் கொள்ளும், இதன் இன்னொரு முதன்மை உணவு உயிருள்ள மீன்களின் செதிள்கள்.
மணலுக்குள் பதுங்கியிருந்து அருகில் வரும் மீனின் வாலை இது கவ்வி இழுக்கும், அப்போது நடக்கும் இழுபறி போராட்டத்தில் மணல்புழுதி எழுந்து கண்மறைக்கும் நேரத்தில் எதிரிமீனின் செதிள்களை கீச்சான் கொத்தி எடுத்து உணவாகக் கொள்ளும்.
பெரிய மீன்களிடம் சிக்கும் போது தசைகளுக்கு வலுவூட்டி U போல வில்லாக வளைந்து எதிரிமீனின் வாய்க்குள் நுழையாமல் கீச்சான் தப்பிக்கும்.
நீரின் மேலிருந்து பார்க்கும்போது கீச்சானின் உடலில் இருக்கும் வரிக்கோலம், கிட்டத்தட்ட அம்பு எய்வோர் பயன்படுத்தும் குறிவட்ட இலக்குப் போலத் தோன்றும், அதனால் ஆங்கிலத்தில் Target Fish என்றொரு பெயரும் இதற்கு உண்டு.

Thursday, 11 February 2016

வரிப்பாறை (GOLDEN TREVELLY)

பளிச்சிடும் பொன்மஞ்சள் வண்ணத்தால் மற்ற பாரை இன மீன்களில் இருந்து விலகி தனித்துவமாகத் தெரிவது வரிப்பாரை. இதன் பொன்னிறமான உடலில் செங்குத்தாக 7 முதல் 12 வரிகள் ஓடும். கண்வழியாகவும் ஒரு வரி ஓடுவது சிறப்பானது.
இதன் தூவிகள் மஞ்சள் நிறத்தவை. தடித்த சதைப்பற்றுள்ள உதடுகள் இந்த மீனுக்குண்டு. இந்த வாயால் இரையை இது உறிஞ்சவும் கூடியது. வால் நுனிகள் கறுப்பில் தோய்ந்தவை.
வரிப்பாரை வளர வளர இதன் நிறம்மாறி வெள்ளிநிறமாகும். வரிகள் மங்கி மறைந்து திட்டுகளாக உருமாறும். வரிப்பாரைக்கு இளம்வயதில் வாயின் கீழ்த் தாடையில் பற்கள் இருக்கும். வளர்ந்தபின் பற்கள் இருக்காது.
சிறு வரிப்பாரை அம்மணி உழுவை, யானைத் திருக்கை, பெருஞ்சுறாக்களுடன் இணைந்து அவற்றின் அருகே உடன்நீந்தி துணை வரும். இதனால் இதர பெரிய மீன்களின் ஆபத்தில் இருந்து இது தப்பும்.
சுறாக்களின் அருகே அவற்றின் பார்வை படாத இடத்தில் வரிப்பாரை நீந்திவரும். அப்படியே கண்களில் பட்டாலும் பெரிய மீன்களால் உடனே உடல் திருப்பி இவற்றைக் கடிக்கமுடியாது.
பெருமீன்களின் மாங்குடன், அவை சிதறும் உணவையும் வரிப்பாரை உணவாகக் கொள்ளும். மீன்கள், சிறுநண்டுகள், இறால்களும் இதன் உணவு.
வரிப்பாரைக்கு நிறைய வெளிச்சம் தேவை என்பதால் சூரியஒளி படரும் கடல்மேற்பரப்பையொட்டி இது வாழும். கூட்டமீனான வரிப்பாரை ஒரு பார் மீன்.


அதிகாலையிலும், அந்திமயங்கும் வேளையிலும் இது உணவுண்ணும். வரிப்பாரை அரையடி முதல் இரண்டடி வரை வளரக்கூடியது. செம்பாரை, பொடிப்பாரை என வரிப்பாரைக்கு வேறு பல பெயர்களும் உள்ளன.

Tuesday, 9 February 2016

தளப்பத்து (மயில் மீன்)

ஈட்டி போன்ற கூரிய மூக்கு, தலை முதல் வால்வரை படகு பாய் போன்ற பெரிய தூவி, அதிவேக நீச்சல், துள்ளல் பாய்ச்சல்….தளப்பத்து மீனின் அடையாளங்கள் இவை. 4 முதல் 8 அடி நீள மீன் இது.
SAIL FISH என அழைக்கப்படும் தளப்பத்தின் இன்னொரு பெயர் மயில் மீன். இதன் பெரிய தூவியில் எண்ணற்ற கரும்புள்ளிகள் அமைந்திருக்கும். மயில் மீன் என்று இது அழைக்கப்பட இதுவே காரணம்.
கீழ்ப்புற முன்தூவிகள் இரண்டும் மெல்லிய நீளத்தூவிகளாக இருக்கும். வால் பிறை வடிவானது. வேகமாக நீந்த உதவுவது.
தளப்பத்து அதிவேகமாக நீந்தும்போது, இந்த தோகையை மடக்கி அதற்குரிய பள்ளத்தில் வைத்துக் கொண்டு இன்னும் அதிவேகமாக நீந்தும். இரை மீன் கூட்டதைப் பந்தாகச் சுருளச் செய்து, கூர்மூக்கால் அவ்வப்போது மீன்கூட்டத்தின் இரைமீன்களைக் காயப்படுத்தும்.
உதிர்ந்து உயிரிழந்துவிழும் மீன்களை உணவாகக் கொள்ளும். திறந்த பெருங்கடல் பரப்பில் 50 ஆயிரம் வரை முட்டைகளை இது இடும். நீர்ப்பரப்பில் மிதந்தலையும் தளப்பத்தின் முட்டைகளில் மிகச்சிலவே மீனாக உருக் கொள்ளும்.

கொப்பரக்குல்லா  (MARLIN)

தளப்பத்து போன்ற இன்னொரு மீன் கொப்பரக்குல்லா. இந்த மீன், தலையில் மட்டுமே பெரிய குல்லா போன்ற தூவியுள்ளது. இதன் தூவி வரவர சிறுத்து மறையும். ஆங்கிலத்தில் மர்லின் (MARLIN) என்று அழைக்கப்படும் கொப்பரக்குல்லா, ஹெர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய கடலும் கிழவனும் நாவல் மூலம், கடல்மீன்களில் கதாநாயக அந்தஸ்து பெற்ற மீனாக உயர்ந்தது.
தளப்பத்து மீனுடன் ஒப்பிடும்போது கொப்பரக்குல்லா நீளமானது. இந்த இரு வகை மீன்களுமே அதிவேகத்தில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியவை.

SWORD FISH என அழைக்கப்படும் வாள்மீன், (Xiphias gladius), தளப்பத்து, கொப்பரக்குல்லாவுடன் சேராத தனி வகை மீன் ஆகும். இந்த மூன்று மீன்களையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளக்கூடாது.