ஈயூஜினி கிளார்க்
(Eugenie Clark).

இந்தப் பெண்மணி அமெரிக்காவின் கடற்கரை மாநிலங்களில் ஒன்றான ஃபுளோரிடாவில்
பிறந்தவர். (மே 4, 1922). அப்பா அமெரிக்கர்.
அம்மா ஜப்பானியர். சிறுவயதில் அப்பா இறந்துவிட,
அம்மா மற்றும் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் இவர் வளர்ந்தவர்.
சிறுமியாக இருந்தபோது, நியு யார்க்
நகரின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள கடலுயிர் காட்சியகத்தைப் பார்த்தார் ஈயூஜினி
கிளார்க். அந்தக்கணம் முதல் மீன்கள் மீது இவர்
காதலாகி விட்டார். மீன்களைப் பற்றி படிப்பதில் ஆர்வமான இவர்,
ஹண்டர் கல்லூரியில் உயிரியல் படிப்பை முடித்தார்.

ஈயூஜினி, எகிப்து நாட்டின் அல்கார்தாகாக்
பகுதியில் தங்கியிருந்து செங்கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பிளாட்டி, ஸ்வார்ட்டெயில் மீன்கள் உயிருள்ள குட்டிகளை
ஈனுவது பற்றிய இவரது ஆய்வுக்கு நியு யார்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் கிடைத்தது.
மீன்களிடத்தில் செயற்கைமுறை கருத்தரிப்பு முறையைச் செய்து காட்டிய முதல்
அமெரிக்கர் இவர்தான்.

1958ல் சுறாக்களின் நடவடிக்கை, போக்கு அவற்றின் மனஇயல்புகளை இவர் ஆராய்ந்தார். குறிப்பாக
லெமன் சுறாக்களை ஆராய்ந்தார். சுறாக்கள் அறிவற்றவை என்ற மூடநம்பிக்கையை
உடைத்தெறிந்தார்.
கடலில் அடிக்கடி முக்குளித்தவரான ஈயூஜினி, சுறாக்களுக்கான பாதுகாவலராக மாறினார். சுறா மனிதர்களுக்கு எதிரி, சுறா ஓர் ஆட்கொல்லிகள் என்பன
போன்ற கருத்துகளை மாற்ற உதவினார். சுறா பெண்மணி எனப் பெயர் பெற்றார்.
கல்லூரி பேராசிரியையாகவும் பணியாற்றிய ஈயூஜினி, பேத்தாமீன் (Pufferfish), கிளாத்திமீன்
(Triggerfish), கிளாத்தி இனத்தைச் சேர்ந்த File fish போன்ற மீன்வகைகளைப்
பற்றி சிறப்பான ஆய்வுகளைச் செய்தார். 1972ஆம் ஆண்டு,
‘செங்கடல் மோசஸ்’ எனப்படும் ஒருவகை அடல்மீனை (Sole fish) கண்டுபிடித்து அது தொடர்பாக இவர் நடத்திய ஆய்வு
சிறப்பானது. இந்த அடல்மீன் சுரக்கும் ஒருவகையான பொருள் சுறாக்களைத்
தடுத்து நிறுத்தக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
1973ஆம் ஆண்டு, மெக்சிகோ
பகுதியில் உள்ள கடல்குகைகளில் இவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த
குகைகளில் சுறாக்கள் வந்து நீண்டநேரம் அசைவின்றி சிலை போல காணப்படும். இதற்கான காரணத்தை இவர் ஆராய்ந்தார்.
அந்த குகையில் வழியும் ஒருவகை நன்னீர், சுறாக்களின்
மீதுள்ள ஒட்டுண்ணிகளை நீக்கக் கூடியது என்பதையும் கண்டறிந்தார். ஒட்டுண்ணிகளை உண்ணும் ஒட்டுமீன்கள் (Remoras) அந்தக்
குகைகளில் அதிகம் இருந்தது இதை உறுதிப்படுத்தியது.
![]() |
சுறா பெண்மணி |
1995ல் இவரது குழு, அம்மணி
உழுவை எனப்படும் பெட்டிச்சுறா (Whale Shark) முட்டையிடாமல்,
உயிருடன் குட்டியைத்தான் ஈனும் என்பதைக் கண்டுபிடித்தது. இவை தவிர செங்கடல் விலாங்குமீன்கள், இதர மீன்களைப் பற்றியும்
இவர் விரிவாக ஆய்வு நடத்தியிருக்கிறார்.
ஈயூஜினி கிளார்க், நேஷனல் ஜியாக்ரபி இதழில் அடிக்கடி கட்டுரைகள் வரைந்தவர். ‘ஈட்டியுடன் பெண்மணி’ (Lady with a Spear), ‘தி லேடி அண்ட்
த ஷார்க்ஸ்’ (The lady and the Sharks) போன்றவை அவரது நினைவு
தன்வரலாற்றுக்குறிப்புகள். குழந்தைகளுக்காக, ‘கடலடியில் ஒரு பாலைவனம்’ (The Desert Beneath the Sea) என்ற புத்தகத்தையும் ஈயூஜினி எழுதியிருக்கிறார். செங்கடலின்
மணல்நிறைந்த அடிப்பகுதியை இந்தப் புத்தகம் விவரித்தது. 1999ல்
ஈயூஜினி கிளார்க் ஓய்வு பெற்றார்.