பாலமீன் (Milk Fish) (Chanos Chanos)

நான்கடி நீளம் வரை வளரக்கூடிய பெரிய கடல்மீன் இது.
பாலமீன் நன்னீரிலும் வாழக் கூடியது. பெரிய கண்கள், கவை போல பிளந்த பெரிய வால், முதுகில்
ஒரேயொரு தூவி, பற்கள் இல்லாத வாய் போன்றவை பாலமீனின் முதன்மை அடையாளங்கள்.
பெரிய செதிள்களுடன் வெள்ளி நிறமாகத் துலங்கும் பாலமீனின்
உடல்மேற்பகுதி ஒலிவ பச்சை (Olive Green) நிறத்திலும், உடல்நடுப்பகுதி வெள்ளி நிறமாகவும்
மிளிரும். தூவிகள் சற்று மஞ்சள் சாயல் கொண்டவை.
பாலமீனின் கன்னத்தூவி மெழுகு தடவியதைப் போலவும், ஒற்றை
முதுகுத் தூவி, தோல்மூடியதைப்போல சற்று வழுவழுப்புத் தன்மையுடனும் காணப்படும். பாலமீனின்
உடலில் எலும்புகள் போக, ஊசிபோன்ற முட்கள் அதிகம் காணப்படும்.
பாலமீன்களில் பெண் மீன், 50 லட்சம் வரை முட்டைகளை
இடக்கூடியது. 24 மணிநேரத்தில் இந்த முட்டைகள் பொரிக்கக் கூடியவை. நன்னீரில் வாழக்கூடிய
மீன் என்பதால் பெரும்பாலும் இவை மீன் பண்ணைகளில் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன.
சரி. இந்த வகை மீன், பால்மீன் (Milk Fish) என அழைக்கப்பட
ஏதாவது காரணங்கள் உண்டா? உண்டு.
உடலில் மிளிரும் வெண்மை நிறம் காரணமாகவும், இந்த மீனின்
உடலை அரிந்தால் உள்ளே தெரியும் வெண்ணிறம் காரணமாகவும் இது பாலமீன் அல்லது பால்மீன்
என அழைக்கப்படுகிறது.
பற்களற்ற வாயும், எவ்வளவு கூட்டம் சேர்ந்து இரை தட்டுப்பாடு
ஏற்பட்டாலும் ஒன்றையொன்று கொன்று தின்னாத குணம் காரணமாகவும் இவை பால்மீன்கள் என பெயர்
பெற்றிருக்கலாம்.

பாலமீனுக்கு மிடாக்கா என்ற பெயரும் இருப்பதாக முன்பே
பார்த்தோம்.
இரைப்பழக்கத்தில் மிக சாதுபோல இருக்கும் பாலமீன்,
மடி வளைக்கும்போது உள்ளே கூட்டமாக சிக்கிக் கொண்டால் முரடாக மாறிவிடும்.
மடியில் இருந்து தப்ப, பூவாணம் போல வானில் பத்தடி
உயரம் வரை இறைந்தபடி இவை ஏறிப்பாயும். அவ்வப்போது படகுகளில் உள்ள மீனவர்கள் மீது வந்து
விழுந்து அவர்களுக்கு உடல்வலியை ஏற்படுத்தவும் பாலமீனால் முடியும்.