Monday, 30 December 2019


கூடு விட்டு கூடு..
முனிவன் நண்டு


கூடுவிட்டு கூடு பாய்தல் என்று சொல்வார்களே. அதுபோல அடிக்கடி கூடுவிட்டு கூடு மாறும் ஒரு கடலுயிர் இருக்கிறது. அதுதான் துறவி நண்டு, தவசி நண்டு என அழைக்கப்படும் முனிவன் நண்டு (Hermit Crab).

முனிவன் நண்டு அச்சுஅசலாக நண்டு இனத்தைச் சேர்ந்தது அல்ல. என்றாலும் கூட இது நண்டாகவே கருதப்படுகிறது. முனிவன் நண்டுகளில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 1,100 வகை நண்டுகள் உள்ளன. முனிவன் நண்டுகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று தரைவாழ் நண்டு. மற்றொன்று நீர்வாழ் நண்டு.
நண்டு இனங்களுக்கு அவற்றின் உடலைச் சுற்றி வலிமையான கவசஓடு ஒன்று உண்டு. முனிவன் நண்டுக்கு இயற்கை ஏனோ அது போன்ற வலிய ஓட்டுடல் கவசம் ஒன்றை தர மறந்து விட்டது. முனிவன் நண்டின் வயிற்றுப் பாகம் மிக மென்மையான பகுதி என்பதால், கொல்லுண்ணி கடலுயிர்கள் எது வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் முனிவன் நண்டின் வயிற்றுப்பாகத்தைத் தாக்கி, அதை இரையாக்க முடியும். குறிப்பாக கணவாய்களால் எந்த நேரத்திலும் ஆபத்து உண்டு.
இந்த ஆபத்தில் இருந்து தப்ப, முனிவன் நண்டு தேர்ந்தெடுத்த வழிதான் கூடு தேடி அதற்குள் குடியிருக்கும் பழக்கம். தன் உடல் அளவுக்கு ஏற்ற சங்கு அல்லது நத்தைக்கூடு ஒன்றைத் தேர்வு செய்து அதற்குள் மறைந்து கொள்வதும், தேவைப்படும் நேரங்களில் அந்த கூடை நகர்த்திக் கொண்டு அங்குமிங்கும் திரிவதும் முனிவன் நண்டின் வழக்கம்.
‘நீறில்லா நெற்றி பாழ்’ என்பது பழமொழி. அதைப்போல கூடு இல்லா முனிவன் நண்டு பாழ் என்பது புதுமொழி. கூடு இல்லாத முனிவன் நண்டு, கவசத்தைத் தொலைத்த வீரன் போல ஆகி கணவாய்களுக்கு எளிதாகப் பலியாகிவிடும். எனவே கூடு தேடி. வாடகை பிரச்சினையின்றி அங்கே முனிவன் நண்டு குடியிருக்கிறது.
சிலவேளைகளில் முனிவன் நண்டு அதன் கூட்டைவிட சற்றுப் பெரியதாகி. 8  செ.மீ. அளவுக்கு வளர்ந்து விட்டால் வேறு பெரிய கூடு தேட வேண்டிய நெருக்கடி ஏற்படும். பெரிய கூடு ஒன்றைத் தேடி முனிவன் நண்டு அங்குமிங்கும் அலையத் தொடங்கும்.
உணவு வேளை...
வேறு முனிவன் நண்டுகள் குடியிருக்கும் கூடுகளில் போய் வீண் தகராறு செய்யாமல் கைவிடப்பட்ட காலியான கூடுகளைத் தேடிச் சென்று முனிவன் நண்டு குடிபுகுந்து கொள்ளும். சிலவேளைகளில் ஒரு கூட்டில் வாழ்ந்த முனிவன் நண்டு இறந்து விட்டால் அதன் உடலில் இருந்து வெளிப்படும் மணத்தை முகர்ந்து அந்த காலிக் கூட்டைக் கைப்பற்ற மற்ற முனிவன் நண்டுகள் அங்கே விரைந்து வருவது உண்டு. முனிவன் நண்டுக்கு முடிகளால் மூடப்பட்ட பலநூறு ’மூக்குகள்’ உள்ளன. அதன்மூலம் அழகாக அவற்றால் மோப்பம் பிடிக்க முடியும்.
முனிவன் நண்டுக்கும் உடல் ஓட்டை கழற்றும் பழக்கம் உண்டு. சட்டை சிறிதாகி உடலைப் பிடித்தால் நம் சட்டையைக் கழற்றிவிட்டு வேறு பெரிய சட்டையை அணிவோம் இல்லையா? அதுபோல முனிவன் நண்டும் அதன் மேல்ஓட்டைக் கழற்றி புதிய ஓட்டை பெற்றுக் கொள்ளும். மென்மையான இந்த புதிய ஓடு உறுதியாவதற்கு நாளாகும் என்பதால் அந்த கால கட்டத்தில் ஏறத்தாழ 4 முதல் 8 வாரங்கள் முனிவன் நண்டு மணலுக்குள் புதைந்து ஒளிந்து வாழும்.
இந்த ஓடு கழற்றப்படும் காலகட்டத்தில் கூடு இல்லாத வேறு முனிவன் நண்டு வந்து, கூடுகழற்றிய முனிவன் நண்டை தின்று விட்டு கூட்டை தனதாக்கிக் கொள்வதும் நடக்கக் கூடியதுதான். ஆம். முனிவன் நண்டுகளிடம் தன்னினத்தையே கொன்று தின்னும் பழக்கம் உண்டு.
அதுபோல, கூடு சிறிதாகிப்போய், வேறு கூடு தேடி அலையும் முனிவன் நண்டு, தனது அளவுக்கேற்ற காலிக்கூடு அந்தப் பகுதியில் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டால் மற்றொரு முனிவன் நண்டுடன் சண்டையிட்டு அதன் கூட்டை பிடுங்கிக் கொள்ளத் தயங்காது. முனிவன் நண்டுகளுக்கு பற்கள் கிடையாது என்றாலும், நகங்கள், கால்களைப் பயன்படுத்தி சண்டையிட்டு ஒன்றையொன்று பிய்த்துக் கொள்ளும்.
தரையில் நடைபழகல்
சிலவேளைகளில் தனது உடலை விட தான் வசிக்கும் கூடு சிறியதாகிவிட்டால் அடுத்தமுறை ஓடு கழற்றும்போது தனது உடலை பெரிதாக்குவதற்குப் பதிலாக சிறிதாக்கிக் கொள்ளும்(!) அரிய திறமையும் முனிவன் நண்டுக்கு உண்டு. இன்னொருபுறம், வெவ்வேறு அளவிலான முனிவன் நண்டுகள், அவை வளரும்போது ஒன்றின் கூட்டை அதைவிட சிறிய மற்றொறு நண்டுக்கு இயல்பாக விட்டுக் கொடுப்பதும் உண்டு.
கடலில் வாழும் முனிவன் நண்டுக்கு, கடல்வாழ் கடற்பஞ்சு உயிரினமான கடல்சாமந்திக்கும் (Sea Anemon) நெருங்கிய உறவு உண்டு. நாம் வீடுகளில் தொட்டியில் பூஞ்செடியை வளர்ப்பது போல, முனிவன் நண்டு அது குடியிருக்கும் கூட்டில் கடல் சாமந்தியை வளர விடும். இதில், முனிவன் நண்டுக்கு இரண்டு விதமான பயன்கள். ஒன்று சாமந்தி வாழும் கூடு இயற்கையோடு இயைந்து போவதால் முனிவன் நண்டு எளிதாக உருமறைப்பு செய்து கொள்ள முடியும்.
இரண்டாவதாக, கடல் சாமந்தியின் கொட்டும் தன்மையுடைய கொடுக்குகள் காரணமாக சாமந்தி இருக்கும் கூட்டை பிற கொல்லுண்ணி உயிர்கள் தொடத் தயங்கும். இதனால் முனிவன் நண்டு ஆபத்தின்றி வாழ முடியும். இது முனிவன் நண்டு பெறும் இரண்டாவது பயன்.
சரி. கடல்சாமந்தியை கூட்டில் வளர்ப்பதால் முனிவன் நண்டுக்குப் பயன்கள் இருக்கின்றன. இதனால் கடல் சாமந்திக்கு என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். இந்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் கடல் சாமந்திக்கும் பயன் இருக்கிறது. முனிவன் நண்டு இரையுண்ணும்போது சிதறும் மிச்ச மீதங்களை கடல் சாமந்தி உணவாக்கிக் கொள்ளும். கடல் சாமந்தியின் இந்த பயன்பாடு காரணமாக முனிவன் நண்டு வேறுவேறு கூடுகளுக்கு மாறினாலும் அந்தகூடுகளிலும்கூட கடல் சாமந்தியை இடம்பெறச் செய்து விடும்.
ஓட்டின் மேல் கடல் சாமந்தி
முனிவன் நண்டுகள் தன்னினத்தை உண்ணக் கூடியவை என்று முன்பே பார்த்தோம். இதைத்தவிர இறந்த மீன்கள், கணவாய், நண்டு, இறால், கடல்குதிரை, சிப்பி, காய்கறி, பழம், விதை, கடற்புழுக்கள், பாசி போன்றவற்றையும் முனிவன் நண்டு உண்ணும். மென்மையான வாய்ப்பகுதியில் உள்ள சிறு தூரிகைத்தும்பு போன்ற அமைப்பைப் பயன்படுத்தி நீரில் உள்ள நுண்ணுயிர்களையும் இது வடிகட்டி உண்ணும்.
கடலில் வாழும் முனிவன் நண்டுகள் கடல்நீரில் உள்ள காற்றை செவுள்களால் பிரித்து மூச்செடுக்கும். நிலம் வாழ், முனிவன் நண்டுகள் அவற்றின் செவுள்களால் மூச்செடுக்க அதிகமான ஈரப்பதம் தேவை. இதனால் தான் தரைவாழ் முனிவன் நண்டுகளுக்கு, ஓட்டுக் கூட்டின் பின்புறத்தில் நீர் சேர்த்து வைக்கும் பழக்கம் உண்டு.
முனிவன் நண்டுகள் 30 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவை. மனிதர்கள் உண்ணக்கூடிய ஒரு கடலுயிர் இது.

No comments :

Post a Comment