Friday 27 September 2019


முஞ்சோள் (Spotted Coral Trout) 


பார்ப்பகுதி வேட்டையாடி மீன்

களவா (Grouper) போன்ற பார்மீன்களில் ஒன்று முஞ்சோள். களவா, பன்னா மீன்களுக்கு இது மிகவும் நெருங்கிய உறவுக்கார மீன்.பிறந்த முதல் 3 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். அதன்பின்
இதன் வளர்ச்சி வேகம் குறையத் தொடங்கும். 120 செ.மீ. அளவுக்கு இது வளரக்கூடியது.
வளர்ந்த பெரிய மீன், 25 கிலோ எடையுடன் திகழ்ந்து ஏறத்தாழ 20 ஆண்டு காலம் உயிர்வாழக்கூடியது.
பார்மீன்கள் யாவுமே பொதுவாக அழகு நிறைந்தவை. முஞ்சோளும் அதற்கு விதிவிலக்கல்ல. இதன் மெல்லிய ஈரம்நிறைந்த வெண்மைநிற சதை மிகவும் ருசியானது. மீனை வெட்டியபிறகு இதன் சதைத் துண்டங்களை மென்மையாக கையாளாவிட்டால் அவை உடைந்து விடக் கூடியவை.
முஞ்சோள்களில் வளர்ந்த பெரிய மீன்கள் பார்களில் வாழும் பலவகை மீன்களை உணவாக்கக் கூடியவை. சிறிய முஞ்சோள்கள் இறால்கள், கணவாய்களை உணவாக்கிக் கொள்ளும்.
முஞ்சோள்
தங்கியிருக்கும் இடத்தில் பதுங்கியிருந்தபடி பொறுமையாகக் காத்திருந்து இரையை வேட்டையாடுவது முஞ்சோளின் வழக்கம். சிலவேளைகளில் நெத்தலி, வெங்கணா மீன் கூட்டங்களை விரட்டிச் சென்றும் இது வேட்டையாடும். அந்திமாலையும், அதிகாலைப் பொழுதுமே இதன் வேட்டை நேரம். உணவு உண்ணும் போது முஞ்சோள் மீன் வண்ணம் மாறக் கூடியது.
முஞ்சோளின் பெரிய வாய்க்குள் பல அடுக்கு கூரிய பற்கள் காணப்படும். சிலவேளைகளில் தனது இனத்தைச் சேர்ந்த குட்டி மீன்களையும் முஞ்சோள் இரையாக்கிக் கொள்ளும். மிகுந்த ஆர்வத்துடன் உணவை வேட்டையாடி உண்ணும் முஞ்சோள் மீன்கள், சில நாள்களில் உணவு எதையும் உண்ணாமல் வாழ்வதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முஞ்சோளின் அறிவியல் பெயர் Plectropomus maculatus.

Thursday 26 September 2019


ஊடகம் (Gerres Filamentosus)

ஊடகம் எனவும் சில வேளைகளில் ஊடான் எனவும் அழைக்கப்படும் சிறிய வகை மீன் இனம் இது. இந்த வகை மீன் இனத்தின் அறிவியல் பெயர் ஜெரஸ் (Gerres) எனத் தொடங்கும். இந்த  ஜெரஸ் என்ற சொல்லுக்கு, ‘ஒருவகை நெத்தலி மீன்என்பது அர்த்தமாம்.
Mojarro, Silver Biddy என்பது ஊடக இனத்தின் பொதுமைப் பெயர். ஊடகத்தில் மொத்தம் 28 வகைகள் இருக்கின்றன.
ஊடகத்தில் Gerres Filamentosus, வெள்ளிநிறம் கொண்ட மீன். உடல் முழுவதும் அடர்செதிள்கள் படர்ந்த மீன் இது. இதன் முதுகுத் தூவியில் முன்பக்க முதல்தூவி நீளமாக சாட்டைபோல இருக்கும். இந்த மீனுக்கான எளிய அடையாளம் இந்த சாட்டைத் தூவிதான். Whipfin Silver biddy என இந்த மீன் அழைக்கப்பட இதுவே காரணம். ஆனால், சில மீன்களுக்கு இந்த சாட்டைத் தூவி உதிர்ந்து விழுந்து விடவும் வாய்ப்புண்டு.

ஊடக மீனின் முதுகுத்தூவியில் 10 முதல் 11 கதிர்த்தூவிகளும், 9 முட்களும் இருக்கும். முதல் தூவியில் தொடங்கி அடுத்தடுத்த கதிர்த்தூவிகள் சரிவாக இருக்கும்.
ஊடகத்தின் அடிவயிற்றுப் பகுதியில், வால் தொடங்கும் இடத்தில் சிறிய கரடான முட்களுடன் சிறுதூவி இருக்கும். வால் கவை வால்.
ஊடகம் அதன் வாயைத் திறக்காதபோது, அதன் மேல்தாடை ஒரு சிறிய குழிக்குள் பொருந்தி இருப்பதைப் போலத் தோன்றும். உணவு உண்ண வாயைத் திறக்கும்போது, வாய் துருத்திக் கொண்டு கீழ்நோக்கி இருப்பதுபோலத் தோன்றும்.
அனைத்துண்ணியான ஊடகம், மணற்பாங்கான கரையில் கடல்தரையை ஒட்டி வாழும் மீன். சில வேளைகளில் இந்த மீன், கடல்நீரும் நன்னீரும் கலந்த கடற்கழிப் பகுதிகளிலும் வாழும். நன்னீரிலும் கூட ஊடகத்தால் வாழ முடியும்.
ஊடகத்தில் 51 மில்லி மீட்டர் முதல் 110 மில்லிமீட்டர் நீளமுள்ள சிறிய மீன்கள் விரைவாக உணவு உண்ணக் கூடியவை. அதுவே 111 மி.மீ. முதல் 180 மி.மீ. வரை வளர்ந்துவிட்டால் இதன் இரையுண்ணும் வேகம் குறைந்து விடும்.
250 மி.மீ. முதல் 270 மி.மீ. வளர்ந்தால் இரை தின்னும் வேகம் இன்னும் குறைந்து விட வாய்ப்புண்டு.
ஊடகத்தில் எந்த ஒரு மீனும் ஓரடியைத் தாண்டி வளர் வதில்லை. பெரிய ஊடகங்கள் மனிதர் களால் உண்ணப்படுகின்றன. இந்த வகை மீனை தூண்டில் இரையாகவும் மனிதர்கள் பயன் படுத்துவதுண்டு.
ஊடகத்தில் மஞ்சள்நிறத்தூவி கொண்ட ஊடகம், பத்தங்குலம் வரை வளரக்கூடியது.

Sunday 8 September 2019


குதிரை காலணி நண்டு (Horseshoe Crab)

நடமாடும் பல்கலைக்கழகம் என்ற சிலரை வர்ணிப்போமே. அதுபோல நடமாடும் புதை படிவம்’ (Fossile) என்று அழைக்கத்தக்க ஒரு கடலுயிர் குதிரை காலணி நண்டு (Horseshoe Crab).
ஆம்! புவிப்பந்தில் தோன்றிய காலத்தில் இருந்து, 445 மில்லியன் ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் ஓர் உயிரை வேறு எப்படி சொல் வதாம்?
குதிரை காலணி நண்டுகள் புவி உருண்டையில் ஓங்காரமாக உலவித் திரிந்த டைனோசார்களுக்கும் மூத்தவை. ஆனால், இந்த உயிர்வாழும் புதைபடிவம்அதன் அச்சுஅசல் வடிவம் மாறாமல் இன்றும் நம்மிடையே வாழ்வது அதிசயம்தானே?
குதிரை காலணி நண்டுக்கு ஏன் அந்தப் பெயர் என்று சொல்லத் தேவையில்லை. குதிரையின் லாட வடிவில் இருப்பதால் அந்தப் பெயர் என்பதை யாரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். குதிரை காலணி நண்டு Limulidae குடும்பத்தைச் சேர்ந்தது.
பெயரில் நண்டு என்று இருந்தாலும் குதிரை காலணி நண்டு, நண்டு இனத்தைச் சேர்ந்த தில்லை. நண்டு, வெட்டுக்கிளியை விட இது சிலந்தி, தேள்களுடன் அதிக உறவுள்ளது.
குதிரை காலணி நண்டுகளில் நான்கு வகைகள் உள்ளன. அவற்றில் அட்லாண்டிக் கடலில் ஓரினமும், எஞ்சிய மூன்றினங்கள் இந்திய, பசிபிக் கடல்களிலும் வாழ்கின்றன.
குதிரை காலணி நண்டு, கடலோர மென் மணல்பகுதி, சகதிப் பகுதிகளில் வாழும். வசந்த காலத்தில் நிலா ஒளியைப் பொழியும் காலத்தில் கடல் உரப்பாக இருக்கும் காலங்களில் இவை அதிக அளவில் கரைப்பக்கம் வரும்.
குதிரை காலணி நண்டுக்கு, ராணுவத்தினர் அணியும் இரும்புத் தொப்பி போன்ற முதுகுஓடு உண்டு. அந்த ஓட்டின் விளிம்பில் முட்களும் உண்டு. எனவே இந்த கடலுயிரினத்தைத் தூக்க வேண்டுமானல் ஓட்டைப்பிடித்தே விழிப்புடன் தூக்க வேண்டும். குச்சி போல நீட்டிக் கொண்டிருக்கும் வாலைப்பிடித்துத் தூக்குவது நல்லதல்ல.
குதிரை காலணி நண்டின் நண்டினங்ளைப் போலவே அதன் ஓடுகளைக் கழற்றிக் கொள்ளும். ஒரு குதிரை காலணி நண்டு அதன் வாழ்நாளில் 16 முதல் 17 முறை ஓடு கழற்றி புதிய ஓட்டைப் பெற்றுக் கொள்ளும்.
குதிரை காலணி நண்டை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அப்படியே திருப்பி உள்பக்கமாக நோக்கினால், முதல் பகுதியில் வாயும், ஐந்து இணை கால்களும் இருக்கும்.
முதல் இணை கால்கள், மற்ற இணைகால்களை விட சிறியதாக ஆனால் கிடுக்கி வடிவத்தில் இருக்கும். இதன்மூலம்தான் குதிரை காலணி நண்டு, சிப்பி, மட்டி, புழுக்கள் போன்றவற்றைப் பிடித்து உடைத்து நசுக்கி விழுங்கும். கால்களின் உதவியால் கடல்தரையில் குதிரை காலணி நண்டால் நடக்கவும் முடியும்.
இதன் இரண்டாவது பகுதியில் மூச்செடுக்க உதவியாக 5 இணை செவுள்கள் (Book Gills) உள்ளன. இவை மூச்செடுக்க மட்டுமின்றி தலைகீழாக நீந்தவும் உதவுகின்றன.
குதிரை காலணி நண்டின் மூன்றாம் பகுதி அதன் நீண்ட வால்தான். இந்த வால் குதிரை காலணி நண்டு நீந்தும் போது அதற்கு சுக்கான் போலப் பயன்படுகிறது. தப்பித்தவிர குதிரை காலணி நண்டு கவிழ்ந்துவிட்டால் மீண்டும் நிமிர்ந்து கொள்ள இந்த வால் பயன்படும். குதிரை காலணி நண்டின் வாலை டெல்சன் (Telson) என்பார்கள். ஆபத்தற்ற, நஞ்சற்ற வால் இது. இதன் மூலம் குதிரை காலணி நண்டு யாரையும் குத்தாது.
குதிரை காலணி நண்டுக்கு மொத்தம் 9 கண்கள். இவற்றில் 7 கண்கள் ஒட்டின் மேற்பகுதி யிலும், எஞ்சிய இரண்டு கண்கள் ஓட்டின் அடிப்புறத்திலும் அமைந்திருக்கும்.
அவரை போன்ற பெரிய மேலோட்டுக் கண்களில் ஒன்று கூட்டுக்கண். அதாவது மலர்க்கொத்து போன்ற கண். அதே போன்ற மற்றொரு கண், பக்கவாட்டு வெள்நேர்த்தசை கண்.
இவை தவிர மேல் ஓட்டில் ஃ என்ற எழுத்தைக் கவிழ்த்து வைத்தது போல சிறிய முக் கண்களும், அதன் கீழ்ப்பகுதியில் இன்னும் சிறிய 2 அடிப்புறக் கண்களும் இருக்கும். பின்னால் சொன்ன ஐந்து கண்களும் குதிரை காலணி நண்டின் எந்தத் திசையில் இயங்குவது என்பதை முடிவு செய்யக் கூடியவை. இதுபோக, இந்த ஐந்து கண்களும் ஒளியை ஏற்று பதிலளிக்கக் கூடிய திறனுடையவை.
குதிரை காலணி நண்டின் ஓட்டின் உள்ளே மற்ற இருகண்கள், நண்டை வழிநடத்த உதவுகின்றன. இந்த கடலுயிரின் வாலிலும் கூட வரிசையான ஒளியை வாங்கி திருப்பி யொளிக்கும் அமைப்பு உண்டு.
குதிரை காலணி நண்டுகள் இரவு நேரத்தில் இயங்கக்கூடியவை. சிறிய குதிரை காலணி நண்டு கள் தலைகீழாக நீந்த வல்லவை. இந்த வகை கடலுயிர்களின் ஆணை விட பெண்ணே மூன்றில் ஒருபங்கு பெரியது. குதிரை காலணி நண்டால் 8 முதல் 24 அங்குலம் வரை வளர முடியும்.
குதிரை காலணி நண்டில் பெண் நண்டுகள், கடல் தரையில் குழிகள் தோண்டி அதில் 60 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் முட்டைகள் வரை இடும். இவற்றில் இருந்து 5 வாரம் கழித்து குஞ்சுகள் பிறக்கும். பிறக்கும்போது குஞ்சுகள் சிறியதாக அப்பாவைப் போன்ற உருவத்துடன் குட்டி வாலுடன் காணப்படும். 11 வகை கடற்பறவைகளுக்கு குதிரை காலணி நண்டின் குஞ்சுகள் இரையாகும். குஞ்சுகளில் பத்து விழுக்காடு குஞ்சுகளே உயிர் பிழைத்து 8 அல்லது 9 ஆண்டுகளில் முழுவளர்ச்சி அடையும்.
வளர்ந்த குதிரை காலணி நண்டுகள் சுறா, மீன், ஆமை போன்றவற்றுக்கு உணவாகும். மனிதர்களுக்கு இவை தூண்டில் இரையாகவும், உரமாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன. குதிரை காலணி நண்டு 20 முதல் 40 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது.
நமது உடலில் உள்ள இரத்தம் உடல் முழுவதும் உயிர்க்காற்றைக் கொண்டு செல்ல இரும்புச் சத்தை அடிப்படையாகக் கொண்ட ஹீமோகுளோபின்களைப் பயன்படுத்துகிறது. ஆனால், குதிரை காலணி நண்டின் ரத்தம், அதன் உடல்முழுக்க உயிர்வளியை (ஆக்சிஜனை) கொண்டு செல்ல தாமிரம் கலந்த Hemocyaninஐப் பயன்படுத்துகிறது. தாமிரம் கலந்திருப்பதால் குதிரை காலணி நண்டின் இரத்தம் நீலநிறமானது. இந்த இரத்தம் மனிதர்களுக்கு மருத்துவ ரீதியாகப் பயன்படுகிறது.