Monday 27 March 2017

கடல் அட்டை

எகினோடேர் (Echinoderms) என்ற சொல்லுக்கு தமிழில் முட்தோலி என்று பெயர். முட்தோலிகளில் மொத்தம் 6 ஆயிரம் வகைகள். மூரை (Sea urchin), உடுமீன் எனப்படும் நட்சத்திர மீன், கடல்அட்டை எல்லாமே இந்த முட்தோலி என்ற வகைப்பாட்டில் அடங்கக் கூடியவை. 6 ஆயிரம் வகை முட்தோலிகளில் 900 முதல் 1250 வகை கடல்அட்டைகளும் அடக்கம்.
கடல் அட்டைகள் நீண்ட குழாய் போன்ற உடல் கொண்டவை. இவற்றில் சில 2 சென்டிமீட்டர் நீளமே இருக்கும். மிகப்பெரியது மூன்றடி நீளம் வரை இருக்கலாம். தொலி (Leather) போன்ற தோல் (Skin) கொண்ட அமைதியான கடல் உயிரினம் இது. கடல் அட்டையை கையில் எடுத்தால் பிசுபிசுப்பான ஒரு திரவத்தை அது கக்கும். குடல் உள்பட உடலின் உள்ளிருக்கும் அனைத்து உறுப்புகளையும் உண்ண வரும் எதிரிக்கு அன்பாக அள்ளித்தரும் தரும் ஓர் உயிரினம் இது.
இப்படி குடல் போன்றவற்றை கக்கி, உடலுறுப்பு தானம் செய்யும் கடல் அட்டைக்கு, ஒன்றரை முதல் 5 வாரங்களில் இந்த உள்ளுறுப்புகள் மீண்டும் வளர்ந்து விடும். 
கடல் அட்டைகள் கறுப்பு, நீலம், பச்சை, பழுப்பு என பல தனித்தனி வண்ணங்கள் கொண்டவை. எதிரியிடம் சிக்கினால் குடல் விலக்கம் செய்யும் அறவழி கடல் அட்டைகள் ஒருபுறம் இருக்க, எதிரிகளை எதிர்கொண்டால் உடலை முரடாக்கி, விறைப்பாகி முரண்டு பிடித்து, அதன்மூலம் உண்ணப்படாமல் தப்பிக்கும் கடல் அட்டைகளும் உண்டு. உடலை விறைப்பாக்கியோ, தளர்த்தியோ பாறை இடுக்குகளில் இவை ஒளிந்து கொள்ளவும் செய்யும். தன் உடல் அமைப்பையும் மாற்றிக் கொள்ளும்.
கடல் அட்டை என்பது ஒருவகை விலங்குதான். இது காய்கறி அல்ல. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல, கடலடி மணலில் புதைந்தும் புதையாமலும் இருப்பது கடல் அட்டைகளின் பழக்கம். கடலில் சூரிய ஒளியால் ஏற்படும் வெப்பம் தாக்காமல் இருக்க இது மணலை தன்மேல் இட்டு மூடிக்கொள்ளும்.
கடல் மணலில் உள்ள நுண்சத்துகளும், அழுகிய பொருள்களுமே கடல் அட்டைகளின் உணவு. மணலைத்தின்று அதில் உள்ள நுண்சத்துகளை ஈர்த்து, இப்படி சுத்திகரிக்கப்பட்ட மணலை, சேமியா போன்ற இழையாக கடல் அட்டை வெளியே தள்ளும். கடல்அட்டை இப்படி வெளித்தள்ளும் மணல், தூய குருத்து மணல் ஆகும்.
பலகாலம் உணவின்றி உண்ணாநோன்பு இருந்து உடல் மெலிந்து போகும் கடல் அட்டைகளும் உண்டு.
கடல் அட்டையின் ஒரு முனையில் வாய். மறுமுனையில் மலத்துளை. மூளையற்ற உயிரினமான கடல்அட்டை, மலத்துளை வழியாக மூச்சுவிடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
இனி கடல் அட்டைகளின் சில வகைகளைப் பார்ப்போம்…
குச்சு அட்டை : தொட்டவுடன் புதுமணப்பெண் போல கொழகொழவென துவண்டுவிடக்கூடியது குச்சு அட்டை. மனிதர்கள் இதை உண்ண மாட்டார்கள்.
நூல்அட்டை: மஞ்சளும், மரப்பட்டை நிறமும் (கூடவே கொஞ்சம் காபி) கலந்த நிறமுடைய அட்டை இது. அதிகாலை நேரம் கடல் வற்றிக்கிடக்கும் போது குறிப்பிட்ட ஒரு பாதையில் இந்த அட்டைகளைத் தேடிச் சென்றால் ஒரு அட்டை கூட கண்ணில் படாது. (கடல் இப்படி அறம் பாய்ந்து கிடப்பதற்கு பட்டநீவாடு, கட்டவரத்து, குறுமி என பலப்பெயர்கள் உள்ளன)
கடலில், நண்பகல் வேளையில் வெள்ளம் பெருகி வாங்கல் ஏற்பட்ட பிறகு அதே பாதையில நாம் மீண்டும் பயணித்தால் இப்போது கணக்கற்ற கடல்அட்டைகளை அந்தவழியே காணலாம். கடல் வற்றும்போது மணலுக்குள் ஓரடி புதைந்து கொள்வதும், கடலில் பெருக்கு ஏற்படும் போது வெள்ளெலி போல, வெள்ளரிக்காய் போல, வெளியே மீண்டும், தலையைக் காட்டுவதும் இந்த கடல் அட்டைகளின் வழக்கம்.
நீரோட்டத்தில் உருளவும், புரளவும் செய்யும் இந்த கடல் அட்டைகள் நிறம் மாறவும் கூடியவை. இந்த கடல் அட்டையை ஆசைப்பட்டு கையில் எடுத்தால், ஒருவகை பசை போன்ற திரவத்தை இது கக்கும். வெண்ணிற சாக்கு நூல்போன்ற இந்தப் பிசுபிசுப்புப் பசை, எதன்மீது ஒட்டுகிறதோ அதை விடவே விடாது. தொட்டுத் தொடரும் இந்த பட்டுத்திரவம் நம் கை கால்களில் ஒட்டினால், முடியுடன் சேர்த்து இந்த பசையை பிய்த்து அகற்ற வேண்டியிருக்கும். பெவிகுயிக் போன்ற பசை தரும் இந்த பாசக்கார அட்டையை யாரும் உண்ண மாட்டார்கள்.
இலைப்பச்சை அட்டை : பச்சைப்பசேல் என இலைப்பச்சை நிறத்திலும், கருநீல நிறமாகவும் இரு வண்ணங்களுக்கு மாறக்கூடிய அட்டை இது. விலை உயர்ந்த இந்த அரிய அட்டை, தமிழகத்தின் வான்தீவு, கோபுரத்தீவு, புளுவுணி சல்லித்தீவு, காசுவார் தீவுகளில் கடலையொட்டிய பகுதிகளில் அதிகம் காணப்படும்.
பூரான் அட்டை, பாவைக்காய் அட்டை :  தூத்துக்குடி கடல்பகுதியில் மிக அதிக அளவில் கிடைக்கக் கூடிய அட்டையினம் இது. தேரி மணல் போல கடலடியில் கோடிக் கணக்கில் இவை குவிந்து கிடக்கும். திறமையான சங்கு குளிப்பவர் ஒருவர் நாளொன்றுக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கடல் அட்டைகளை எடுத்துவிட முடியும். உண்ணத்தகுந்த மிக அரிய இன கடல் அட்டையான இது, பொரித்த கணவாய் இறைச்சி போல சுவை கொண்டது.
வாய்ப்பகுதியில் நுண்ணிய குழாய் கால்களைக் கொண்ட இந்த அட்டை, அதன்மூலம் இரையை வாய்க்குள் செலுத்தக்கூடியது. இது குடலைக் கக்கி வெளியேற்றினால் கூட உள்சதை அரை அங்குலம் வரை காணப்படும். கடல்அட்டைகள், குடலோடு மணலையும் கக்கக் கூடியவை.
வின்னி அட்டை: துணிதுவைக்கும் போது அதில் உள்ள அழுக்கு நீங்க, பலநூறு குச்சங்கள் கொண்ட பிரஷ்சைப் பயன்படுத்துவோம் இல்லையா? அதுபோன்ற உருவத்தோற்றம் கொண்டது வின்னி அட்டை. பல ஆயிரம் நுண் கால்களால் இது நகரும். அப்படி நகரும்போது கடல்தரையில் 4 விரல்கடை அளவுக்கு ஒரு தடத்தை ஏற்படுத்திச் செல்லும்.

வின்னி அட்டையின் மேற்பகுதி சிவப்பு நிறமாகவும், வயிறு அடிப்பகுதி அழுக்கு வெள்ளையாகவும் திகழும். கடல்நீரில் இருக்கும்போது ஒன்றரை அடி நீளமான இந்த அட்டை கையில் எடுத்ததும் அரையடியாக சுருங்கி விடுவது ஓர் அதிசயமே. மீண்டும் நீரில் போட்டால் பழையபடி ஒன்றரை அடி நீளத்தை இது எட்டும். கடலடியில் வண்டல்படிந்த தரைகளில் காணப்படும் இந்த வின்னி அட்டை விலைமதிப்புள்ளது.
கறுப்பு அட்டை: தூத்துக்குடி பகுதி கடல் தாவுகளில் அதிகம் காணக்கூடிய அட்டையினம் இது. மனிதர்களின் பார்வையில் இது மதிப்புடையது.
அதுபோல கறுப்பு மற்றும் ரோஸ் நிறமான ஓர் அட்டை நல்லதண்ணீர்தீவு பகுதியில் கிடைக்கக் கூடியது. கையில் எடுத்தால் விறைப்பாகும் இந்த அட்டை, கையில் இருந்து விடுவித்தால் ஊதிவிட்ட பலூன் போல தொய்ந்து போகும். இந்த கருரோஸ் நிற அட்டை உண்ணத்தகுந்த அட்டை அல்ல.
கடல் அட்டைகளின் முக்கிய வாழ்விடம் பவழப்பாறைகளும், அதைச்சுற்றியுள்ள மணல்வெளிகளும்தான். ஓர் ஏக்கர் நிலத்தில் 2 ஆயிரம் அட்டைகள் வரை இருந்தால் அது வளமான கடல். கடல்அட்டைகள் மணலை உட்கொண்டு அதில் இருக்கும், நுண்ணிய தாவர, விலங்கு உயிர்களை உணவாக்கி ஆண்டுக்கு 60 டன் மணலை சுத்திகரித்து வெளியே தள்ளுகின்றன.
கடல் அட்டைகள், வெறும் உணவுக்காக மட்டும் மனிதர்களால் ஏற்றிப்
போற்றப்படுவதில்லை. மார்பக புற்றுநோய் செல், கல்லீரல் புற்றுநோய் செல்களை 95 விழுக்காடு வரை அழிக்கும் மாமருந்து என்பதாலேயே மனிதர்களால் கடல்அட்டைகள் மதிக்கப்படுகின்றன. கொண்டாடப்படுகின்றன.

Saturday 25 March 2017

மழுவன் (Tomato grouper)

கொடுவா (Sea Bass) எனப்படும் மீன் குடும்பத்தின் ஓர் உறுப்பினர்தான் களவா (grouper).
களவா மீனின் பொதுவான குணமே கூட்டம் சேராமல் தனித்து வாழ்வது தான். இடம் விட்டு இடம் பெயராமல், பெரும்பாலும் ஒரே பகுதியிலேயே களவா வாழும். அதிலும் பாறைப்பகுதிகள், பாறை நிறைந்த கரைப் பகுதிகள், ஆழம் மிகுந்த பவளப்பாறைப்பகுதிகள் களவா மீன் வாழ மிகச்சிறந்த இடங்கள்.
(களவா பற்றி நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில் ஏற்கெனவே ஒரு பதிவு உண்டு)
களவா மீன்களில் கார் அளவுக்கு பெரிய களவாக்கள் கூட உண்டு. இரையைக் கடித்துத்தின்பதும், சிலவேளைகளில் பெருந்தீனி தின்றபிறகு நீந்த முடியாமல், கடல்தரையில் தரைதட்டி நிற்பதும் களவா மீனின் பழக்கம். இருப்பிடத்தை விட்டு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் இது போகாது. முக்குளிப்பவர்களை இது பின்தொடர்ந்தாலும்கூட குறிப்பிட்ட அளவு தூரம் மட்டுமே இது தொடர்ந்து வரும். தனது ஆட்சிப்பரப்பு முடியும் எல்லைக்கு வந்தால் களவா மீண்டும் இருப்பிடத்துக்குத் திரும்பிக் கொள்ளும்.
களவா மீன்களில் சிறிய அளவிலான சிலவகை மீன்கள் cephalopholis என்ற அறிவியல் பெயருடன் விளங்குகின்றன. அந்த வரிசையில் உள்ள ஒரு மீன் மழுவன். இதன் அறிவியல் பெயர் cephalopholis sonnerati.
தகதகவென தக்காளிப்பழ நிறத்தில் செக்கச்செலேன மின்னுவதால் மழுவன் மீனுக்கு தக்காளி மீன் என்றே ஒரு பெயர் உண்டு. ஆங்கிலத்தில் இந்த மீன்
தக்காளி களவா (Tomato grouper) என அழைக்கப்படுகிறது.
லேசான பூனைக்கண் கொண்ட மழுவன் மீனுக்கு தலை முதல் வால் வரை கறுப்புநிற பொடிப்பொடிப் புள்ளிகள் காணப்படும். ஓரடி முதல் ஒன்றரை அடி நீளமுள்ள மீன் இது. 10 முதல் 150 மீட்டர் ஆழத்தில் இது காணப்படும். ஏறத்தாழ வட்டவடிவ வாலும், வளைந்த நெற்றியும் இதன் முதன்மை அடையாளங்கள்.
களவா இனத்தின் குணம் மழுவன் மீனிடமும் நீக்கமற உண்டு. பார்ப்பகுதிகளில் தனித்து திரியும் இந்த மீன் அந்தி சாயும் வேளைகளில் கடலடியில் தரையையொட்டி சிறுமீன்களை வேட்டையாடும். இரையை வாயால் உறிஞ்சு எடுக்கும். பெரிய வாயால் சிறுமீன்களை அப்படியே விழுங்கி வைக்கும்.

கார்க்கண்ணாடிகளைத் துடைத்து விடும் வைப்பர் துடைப்பான் போல, கடலடியில் பிறமீன் இனங்களை துடைத்து சுத்தப்படுத்திவிடும் வழக்கம் ஒரு சிறிய வகை இறாலிடம் (Shirmp) உண்டு. அந்த இறாலுடன் மழுவன் மீன் மிக நெருக்கம் பாராட்டும். அந்த இறால் இருக்கும் இடங்களில் மழுவன் மீனையும் நாம் காணலாம்.

Tuesday 21 March 2017

கடல் நண்டு

நீலக்கடல் முழுக்க நீக்கமற பரந்து நிறைந்திருக்கும் ஓர் உயிரினம் நண்டு. பார் எனப்படும் பவழப்பாறைக் கூட்டம், பார் தாழ்ந்த பகுதி, மணல்வெளி, மண்டி எனப்படும் சகதி நிலம்பல ஆயிரம் அடி பள்ளத்தாக்குஇப்படி கடலில், எங்கேயும், எப்போதும் காணப்படக்கூடிய ஓர் உயிரினம் இது.
அது, ஐஸ் நிறைந்த அண்டார்ட்டிகாவானாலும் சரி, சுள்ளென வெய்யில் சுடும் வெப்பக்கடலாக இருந்தாலும் சரி, நண்டுகள் உலா வராத, அல்லது நண்டுகளின் கால்படாத உலகக் கடல்கள் என்று எதுவுமே இல்லை.
ஓடுடைய ஆமை போல தோடுடைய ஓர் உயிரினம் நண்டு. பத்து கால்கள் கொண்ட டெகோபாட் (Decopod) என்ற வகைப்பாட்டில் நமது நண்டும் ஓர் உறுப்பினர். கல்இறால் போன்றவையும் இந்த டெகோபாட் பிரிவில் அடங்கும்.
நண்டுகளில் மொத்தம் 5 ஆயிரம் வகைகள் தேறும். பட்டாணி அளவுள்ள மீச்சிறு நண்டில் இருந்து, பதின்மூன்றடி குறுக்களவு உடைய பெத்தாம் பெரிய நண்டு வரை கடலில் உண்டு.
நண்டினங்கள் பொதுவாக இரு பெரிய கடிகால்கள், நடக்க உதவும் 4 இணைக்கால்கள் என மொத்தம் பத்து கால்களுடன் விளங்கும். பின்சர், Cheliped என்றெல்லாம் அழைக்கப்படும் நண்டின் கடிகால்கள், பலவிதங்களில் நண்டுக்குப் பயன்படக்கூடியவை.
இந்த கடிகால்களைத் தட்டிதட்டி ஒரு நண்டு மற்றொரு நண்டுடன் தகவல் பரிமாறும். சிப்பிகளின் ஓடுகளை உடைக்க இந்த கடிகால்கள் பயன்படும். சிலவேளைகளில் கத்தரிக்கோல் போலவும், சிலவேளைகளில் ஜப்பானியரின் சாப்ஸ்டிக் போல, உணவை எடுத்து உண்ணப் பயன்படும் குச்சியாகவும் கடிகால்கள் உதவுகின்றன. நண்டின் ஆயுதமாகவும் விளங்கும் இந்த கடிகால் ஒடிந்தால் மீண்டும் அது வளர்ந்து விடும்.
நண்டின் ஓடு கால்சியம் கார்பனேட்டால் ஆனது. நண்டின் பஞ்சு போன்ற மெத்மெத் உடலை இந்த ஓடுதான் பாதுகாக்கிறது. நண்டுகளின் ஓடு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வளராது. இதனால், நண்டு பெரிதாகும்போது ஓட்டைக் கழற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். இப்படி ஓடு கழற்றுவதை Molting என்பார்கள்.
ஆண் நண்டு பிறந்த முதல் ஆண்டில் 6 முதல் 7 முறை ஓடுகழற்றும். வளர்ந்தபின் ஆண்டுக்கு இருமுறை ஓடுமாற்றினால் போதும். பழைய ஒட்டைக் களைந்து புதிய ஓடு வளரும் வரை நண்டுகள் கரந்துறைந்து அதாவது மறைந்த வாழும்.
நண்டு, உணவகங்களில் மெனுகார்டு பார்த்து தேர்வு செய்து உண்ணும் உயிரினம் அல்ல. இறந்தமீன்கள், பாசி, கடல்புழு, ஏன் இதர நண்டினங்களையும் கூட நண்டு உண்ணும். நண்டுகள் எந்த திசையிலும் நகரக் கூடியவை. ஆனால், ஆபத்து ஏற்பட்டு விரைவாக ஓட வேண்டும் என்றால் பக்கவாட்டில்தான் நண்டு ஓடும். நண்டுகளில் நீந்தும் நண்டினங்களும் அதிகம். நண்டின் தட்டையான உடல் பாறை இடுக்குகளில் நுழைந்து மறைந்து கொள்ள உதவுகிறது.
நண்டின் கண், பலநூறு பொடிப்பொடி உருப்பெருக்கிகள் கொண்டது. இந்த கண்கள் மூலம், நண்டால் எந்தத் திசையிலும் பார்க்க முடியும். கடலுக்கு அடியில், ஏன்? மணலில் அரைகுறையாகப் புதைந்திருந்தாலும்கூட நண்டால் தெளிவாகப் பார்க்க முடியும்.
நண்டுகளுக்கு வலி உணரும் தன்மை இல்லை என்று ஒருகாலத்தில் நம்பப் பட்டது. ஆனால், வலி உணரும் தன்மையுடன், அதை நினைவில் கொள்ளும் ஆற்றலும் நண்டுக்கு உண்டு என்பது பிற்காலத்தில் தெரிய வந்திருக்கிறது.
பெண் நண்டுகளை ஆண் நண்டு தேர்வு செய்தால், (அல்லது ஆண் நண்டை பெண் நண்டு தேர்வு செய்தால்) பெண் நண்டின் கால்களைப் (?) பிடித்தபடி 4 நாள்களுக்குமேல் ஆண் நண்டு சுற்றித்திரியும். பெண் நண்டு தோட்டைக் கழற்றும்வரை ஆண் நண்டு காத்திருந்து, அதை தலைகீழாகப்புரட்டி, அதனுடன் காதல் கொள்ளும்.
களிநண்டு அதன் தோட்டைக் கழற்ற இறுகிய களிபோன்ற நிலமே உதவுகிறது. நீலக்கால் நண்டு, மூன்றுபுள்ளி நண்டு உள்பட நீந்தும் நண்டினங்களில் மிகப்பெரியது களிநண்டே. நண்டின் கால்களில், கடைசி இணை கால்களின் முனையில் உள்ள உள்ள துடுப்பு போன்ற பகுதி, நண்டுகள் நீந்துவதற்குப் பயன்படுகிறது.
உலகில், மீன்கள் அளவுக்கு மனிதர்களால் உண்ணப்படும் ஓர் உயிரினம் நண்டுதான். ஆண்டுக்கு 15 லட்சம் டன் நண்டுகள் உண்ணப்படுகின்றன.

சிலவகை நண்டுகளுக்கு உள்ள ஆற்றல் வியக்கத்தக்கது. கையில் எடுத்தால் பிஸ்கட் போல உடைந்துவிடக்கூடிய மெல்லிய ஓடுடைய ஒருநண்டு, சீலா மீனின் கூரிய பற்களால் கூட துண்டிக்க முடியாத கனமான மீன்பிடி வலையை சில மணித்துளிகளில் கடித்துக் குதறி விடும்

Sunday 19 March 2017

கொம்பன் சுறா (Hammerhead Shark)

சுறாமீன்கள் சும்மாவே வேட்டைக் கலைக்குப் பெயர் பெற்றவை. அதிலும் சில சுறாக்கள்,
தலைசிறந்த வேட்டைக்காரர்கள். அந்த தலை சிறந்த சுறாக்களில் ஒன்று கொம்பன் சுறா.

தலைமீது சுத்தியல் போல ஓர் உறுப்பைத் தாங்கிக் கொண்டு வலம் வரும் கொம்பன் சுறாவில் உலகம் முழுக்க 9 இனங்கள் உள்ளன. இந்த சுத்தித் தலையின் இருபுறமும்தான் கொம்பன் சுறாவின் கண்கள் அமைந்திருக்கும்.
கண்கள் அமைந்திருக்கும் இடம் காரணமாக, தலையைத் திருப்பாமலேயே 360 பாகைக்கு கொம்பன் சுறாவால் கடலைப் பார்க்க முடியும். பரந்து விரிந்த இந்த பார்வை காரணமாக, தலைக்கு மேலே நீந்துவது என்ன, கீழே நீந்தி வருவது என்ன என்பதையும் கொம்பன் சுறாவால் கண்காணிக்க முடியும்.
மற்ற சுறாக்களை விட கடலை வேகமாகவும், அதிக அளவிலும், அலசி ஆராய இந்த சுத்தித்தலை, கொம்பன் சுறாக்களுக்கு மிகவும் பயன்படுகிறது.
கொம்பன் சுறா ஒரு வெப்பக்கடல் மீன். இதன் முதன்மை இரை கடல்தரையில் மணலில் பதிந்திருக்கும் திருக்கை மீன்கள்தான். உயிர்கள் ஒவ்வொன்றுக்கும்  மின் துடிப்பு உண்டு. கொம்பன்சுறா அதன் தலையில் அமைந்திருக்கும் உணர்வான்கள் (Sensor) மூலம் கடலடியில் மணலில் பதிந்திருக்கும் திருக்கைகளின் மின் துடிப்பை எளிதாகக் கண்டுபிடித்து விடும். பிறகு, மணலைக் கிளறி திருக்கைகளை வேட்டையாடும்.
இதன் சுத்தியல் போன்ற தலை, இரை மீனை கடல்தரையில் அப்படியே அமுக்கிப் பிடித்து, இரையாக்கவும் பயன்படுகிறது.
திருக்கைகளைத் தவிர, சிறு சுறாக்கள், மீன், கணவாய், நண்டு, கல்இறால் போன்றவற்றையும் கொம்பன் சுறா உணவாக்கும். மற்ற சுறாக்களுடன் ஒப்பிடும்போது கொம்பன் சுறாவின் வாய் சிறியது. ஆனால், அதன் உள்ளே இருக்கும் முக்கோண வடிவ ரம்பப் பற்கள் கூர்மையானவை.
கொம்பன்சுறா வேகத்துக்குப் பெயர் பெற்றது, மிகவேகமாக உடலைத் திருகவும், வளைக்கவும் கொம்பன் சுறாவால் முடியும். உடலின் நடுநிலை ஒப்புமை மாறாமல் காக்க இதன் தலை பெரிதும் பயன்படுகிறது.

கொம்பன் சுறாக்களில் மிகப்பெரிய சுறா 20 அடி நீளம், 450 கிலோ நிறையிருக்கலாம். உயர்ந்த கூரிய முதுகுத்தூவிகள் இந்த மீனின் முதன்மை அடையாளம். கொம்பன் சுறாவின் மிகப்பெரிய இனச்சுறாக்கள், தனித்து திரியக் கூடியவை.
ஆனால் சற்றுசிறிய வகை கொம்பன் சுறாக்கள் 100 மீன்கள் கொண்ட கூட்டமாகத் திரிபவை. இந்த சிறிய வகை கொம்பன் சுறாக்களில் பெண் சுறா தனியாக வந்தால் ஆண்சுறாக்களிடம் மாட்டி திக்கித் திண்டாட வேண்டியிருக்கும். இதனாலேயே பெரும்கூட்டத்துடன் சேர்ந்து வரும் பழக்கத்தை பெண் சுறாக்கள் கொண்டுள்ளன. கூட்டத்தில் தனக்குப் பிடித்தமான ஆண் சுறாவைக் கண்டால், உடலில் ஓர் உதறலை ஏற்படுத்தி அதன் மூலம் மற்ற பெண் சுறாக்களை விலகச் செய்து, விரும்பிய ஆணுடன் பெண் சுறா காதல் கொள்ளும்.
கொம்பன் சுறா ஓர் இரவுநேர வேட்டையாடி. கடலில் முக்குளிப்பவர்களை கண்டு கொம்பன் சுறா எரிச்சல் அடைந்தால், தனது எரிச்சலை வெளிக்காட்டி முக்குளிப்பவரை எச்சரித்த பிறகே தாக்கும். எச்சரிக்காமல் தாக்குதல் நடத்தாது. கொம்பன் சுறா, பெரிய அளவில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சுறா அல்ல. ஆனால், பல மைல்களுக்கு அப்பால் உள்ள மனிதனின் இதயடித்துடிப்பை கூட கொம்பன் சுறாவால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
கொம்பன் சுறாவைப் பற்றி இன்னும் இரு ருசிகர தகவல்கள். மிகவும் ஆழம் குறைந்த கரைப்பகுதி வரை வந்து கலக்கு மட்டைச் சுறாக்களை கொம்பன் சுறா வேட்டையாடக் கூடியது.
சூரிய வெய்யில் சுள்ளென படும் அளவுக்கு உடலின் மேல்பகுதி நீரின் மேல் தெரிய கொம்பன் சுறா நீந்துவதால் சூரிய ஒளியில் இதன் தோல்நிறம் சற்று மாறுவதும் உண்டு.

அதுபோல கடலடியில் திருக்கை வேட்டையாடும் கொம்பன்சுறா, கடலின் மேல் மட்டத்திலும் வலுவாடி என்ற புள்ளித்திருக்கை மீன்களை வேட்டையாட முயற்சிப்பதுண்டு. அப்போது கொம்பன் சுறாவிடம் இருந்து தப்பி புள்ளித்திருக்கைகள் நீரின்மேல் தவ்வி வானத்தில் பறப்பதும் உண்டு