Sunday 24 March 2019


நெத்தி மீன் (Unicorn fish)


நெத்தி மீன்
நெற்றியில் இரு விழிகளுக்கு இடையே இரு சிறு கொம்புகளைக் கொண்ட மீன் நெத்தி மீன். (Unicorn fish). Acanthuridae குடும்பத்தைச் சேர்ந்த மீன்களில் நெத்தி மீனும் ஒன்று. Acanthuridae என்ற பெயருக்கு வாலில் முள் கொண்ட மீன் என்று பொருள் கொள்ளலாம். ஒரண்டை (Powderblue Surgeon) , குரிசில் எனப்படும் Convict surgeon Fish போன்றவையும் இந்த Acanthuridae குடும்பத்தில் அடக்கம்.
பார்மீனான நெத்தி, பவழப்பாறைகளின் அருகே சிறுகூட்டமாகத் திரியும். பகல்வேளையில் இயங்கும் மீன். இது. நெத்திகளில் 17 வகை மீன்கள் உள்ளன. Tang, Surgeon மீன்களுக்கு உறவுக்கார மீன் இது.  20 முதல் 24 அங்குலம் வரை நெத்தி வளரக்கூடியது.
நெற்றியில் விழிகளுக்கு இடையில் இரு சிறுகொம்புகள் இருப்பதுதான் நெத்தி மீனின் முதன்மை அடையாளம். 2 அங்குல நீளம் வரை இந்த கொம்புகள் வளரும்.
Acanthuridae குடும்ப மீன்களுக்கு என்றே மூன்று வகை குணங்கள் உள்ளன. 1. இவற்றின் வால்பகுதியில் கத்திகள் போன்ற கூர்முட்கள் இருக்கும். 2. இவை பாசிகளை மட்டுமே உண்ணக்கூடிய சைவ மீன்கள். 3. இவை திடீரென நிறம் மாறக் கூடிய மீன்கள்.
வாலில் நீலநிற முட்கள்
Acanthuridae குடும்ப மரபின்படி நெத்தி மீனும் பாசிகளை உண்ணும் சைவ மீனே. நெத்திகளில் இளம்வயது மீன்கள் முழுக்க முழுக்க பாசிகளை உண்ணும். முதிர்ந்த மீன்கள் பாசிகளுடன் சேர்த்து, சிறு இறால்களின் புழுப்பருவ குஞ்சுகளையும் இரையாக எடுத்துக் கொள்ளும். கவுர் எனப்படும் மிதக்கும் சிறு நுண்ணுயிர் படலத்தில் அசைவ படலமான Zoo planktonஐயும் முதிர்ந்த நெத்தி மீன்கள் உணவாக எடுத்துக் கொள்ளும்.
நெத்தி மீனின் கொம்புகளைப் பொறுத்தவரை அவை எதற்காக என்பது இன்று வரை யாருக்கும் புரியவில்லை. இந்தக் கொம்புகளை நெத்தி மீன் ஆயுதமாகப் பயன்படுத்துவதில்லை. இந்தக் கொம்புகள் நீந்தவும் பயன்படுவதில்லை. உணர் கொம்பாகவும் இவை உதவுவதில்லை. பின் எதற்காகத்தான் இந்த கொம்புகள்? பருவகாலத்தின்போது துணையைக் கவர இந்தக் கொம்புகளை நெத்தி மீன் பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது. நெத்தி மீன்கள் வளர்ந்து பெரியதான பிறகே இந்த கொம்புகள் தோன்றுவது இந்த தகவலை உறுதி செய்வதாக உள்ளது.
வாலில் ஆரஞ்சு நிற முட்கள்
நெத்தி மீனின் வால் பகுதியில் வாலும், முன் உடலும் இணையும் இடத்தில் இருபுறமும் இரு இணைகளாக முட்கள் அமைந்திருக்கும். இந்த முட்கள் ஆரஞ்சு நிறம், நீலநிறம் என பல்வேறு நெத்தி இனமீன்களுக்கு ஏற்ப ஒவ்வொருவித வண்ணத்தில் காட்சியளிக்கும்.
இரு சிறு வட்டக்கவசங்களின் மேல், முன்நோக்கியபடி அமைந்திருக்கும் இந்த கூரிய முட்களை நெத்தியால் அங்குமிங்கும் அசைக்க முடியாது.
(ஆனால், Acanthuridae குடும்பத்தைச்சேர்ந்த சில மீன்கள் இந்த வால்புற கத்திகளை இங்குமங்கும் அசைக்கக் கூடியவை.)
நெத்தி மீன் திடீரென நிறம் மாறவும் கூடியது. Acanthuridae குடும்பத்தைச் சேர்ந்த ஒரண்டை மீன் (Powderblue Surgeon) எதிரியைப் பயமுறுத்த நிறம் மாறும். ஆனால், நெத்தி மீன்களில் புள்ளி நெத்தி மீன், கடலில் அது வாழும் குறிப்பிட்ட பகுதியில் சூழல்கேடு ஏற்பட்டால் நிறம் மாறக் கூடியது.
வண்ணம்...வனப்பு...
புள்ளி நெத்தி மீனில் வளர்ந்த பெரிய மீன்கள் நீலம்செறிந்த சாம்பல்நிறம் முதல் ஒலிவ பழுப்பு நிறம் வரை பல்வேறு வண்ணச்சாயல்களில் திகழக்கூடியவை.
கடலுயிர் காட்சியகத்தில் கண்ணாடித் தொட்டியில் வளர்க்கப்படும் புள்ளி நெத்தி மீன், நீரின் தன்மை கெட்டுப்போகத் தொடங்கினால் அடர்நிறத்துக்கு மாறும். இதன்மூலம் தொட்டி நீர் மாசுபட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம்.
புள்ளி நெத்திமீனின் பெரிய மூக்கும், அதன் முழு தலையும் ஒருமனிதனின் முகத் தோற்றத்தைப் போலவே காட்சி அளிப்பது வியப்பான ஒன்று. அதிலும், மனம் நிறைவடையாத ஏக்கம் நிறைந்த ஒரு மனிதனின் முகத்தைப் போல புள்ளிநெத்திமீன் தோன்றுவது இன்னும் வியப்புக்குரியது.
நெத்தி மீன்கள், பிறக்கும்போது நுண்ணுயிர்கள் போல சிறிதாகப் பிறந்து பிறகு பெரிதாக வளர்கின்றன என்றும் கூறப்படுகிறது.

Friday 22 March 2019


பயிந்தி (Sickle fish)


பார்வைக்குத் திரவி மீனைப் போல, ஆனால் திரவியை விட வட்டவடிவ உடல் கொண்டவை பயிந்தி மீன்கள். ஆங்கிலத்தில் இதை அரிவாள் மீன் என்ற பொருளில் Sickle fish என அழைப்பார்கள்.
பயிந்தி மீன்களில் பலவகைகள் உள்ளன. பெரிய பயிந்தி மீன்கள் ஓர் உணவுத்தட்டு அளவுக்குப் பெரியதாக இருக்கும். Drapane punctata என்பது பயிந்தி இன மீன் ஒன்றின் அறிவியல் பெயர்.
பயிந்தி மீன்களில் புள்ளிப் பயிந்தி, வெள்ளைப் பயிந்தி போன்றவை உண்டு. ஒலைப்பயிந்தி பாசிச் செடி போல நாற்றம் அடிக்கக் கூடியது. கோட்டுப் பயிந்திகளில் வரிப்பயிந்தி, கரும்பயிந்தி போன்றவையும் உள்ளன. கரும்பயிந்தியை கொம்புப் பயிந்தி என்றும் அழைப்பார்கள். பயிந்திகளில் திரளைப் பயிந்தியின் சதை பஞ்சு போல உண்பதற்குச் சுவையாக இருக்கும்.

Thursday 21 March 2019


திரவி (Spade fish)
 
வட்டத் திரவி
திரவி மீன்கள், எபிபிடே (Ephippidae) குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை வெப்பக்கடல் மீன்கள். அரிதாக குளிர்ந்த கடல்களிலும் இந்த வகை மீன்கள் காணப்படும்.

திரவி மீன் வகைகளில் ஒன்று வட்டத்திரவி (Ephippus orbis). இதற்கு நல்லதொரத்தீ என்ற பெயரும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். திரவியில் மற்றொன்று வண்ணாத்தி (Angel) மீனைப் போன்ற தோற்றம் கொண்ட அழகிய மீன்.
திரவி மீன்கள் தட்டுபோன்ற உடலமைப்பைக் கொண்டவை. கடலடியில் சிறுகூட்டமாகத் திரியும் மீன்கள் இவை.
திரவிகளின் வாய் மிகவும் சிறியது. தூண்டிலில் உள்ள இரைகளைத் தின்பதிலும், இரை கிடைக்கும் இடத்தில் காக்கைக் கூட்டம் போலத் திரள்வதிலும் திரவிகள் கைதேர்ந்தவை.
திரவியின் வாய் சிறியது என்பதால் இவற்றால் மனிதர்களைக் கடிக்க முடியாது. மனிதர்களின் உடலை கிள்ள அல்லது உடலில் உள்ள முடியைப் பிடித்து இழுக்க மட்டுமே இந்த மீனால் முடியும்.
திரவி மீன்கள் அனைத்துண்ணிகள். அதாவது கடல்சிற்றுயிர்களுடன் பாசிகள் போன்ற தாவர உயிர்களையும் இவை தின்னக் கூடியவை.
சிறிய சொரி (Jelly) மீன்களையும் திரவிகள் உண்ணும். ஆமைகளுக்கு அடுத்தபடி சொரி மீன்களை உண்ணும் கடலுயிர் திரவிதான்.
கடற்பஞ்சு, கடல்புழுக்கள், மென்மையான பவழம், பாசி, நண்டு, இறால் போன்றவற்றின் லார்வாக்கள் போன்றவற்றையும் திரவிகள் தின்னும்.
திரவிகளைத் தூண்டிலில் பிடிக்க சிறந்த இரை மட்டி (Clam) சதை. அல்லது நண்டு, இறால் இவற்றின் சதை.
திரவிகளில் ஒருவகைத் திரவி, பார்வைக்கு வண்ணாத்தி மீனைப் போல இருந்தாலும், இவற்றுக்கு இரு முதுகுத்தூவிகள் இருக்கும். (வண்ணாத்தி மீனுக்கு முதுகில் ஒரேஒரு தூவி மட்டுமே உண்டு)
இந்த வகை திரவியின் முதுகு முன்பக்க முதல்தூவியில் முட்கள் இருக்கும். அதையடுத்த பின்புற முதுகுத்தூவியில் மென்கதிர்கள் காணப்படும். அதிலும் பின்புற முதுகுத்தூவியின் முதலிரு இழைகள் மிகவும் நீளமானவை.  சிலவேளைகளில் மீனின் வாலையும் தாண்டி, இவை நீளமாகத் திகழும். முதுகின் பின்புறத் தூவியைப் போலவே அதே வடிவத்தில் மீனின் அடிப்புறத்திலும் அதேப்போன்ற தூவி அமைந்திருக்கும்.
இந்த வகை திரவியில் இளம் வயது மீன்களின் வெள்ளி நிற உடலில், மேலிருந்து கீழாக கரும்பட்டைகள் காணப்படும். முதிர்ந்த மீன்களின் இந்த கரும்பட்டைகள் வெளிறி மங்கலாகிவிடும்.
திரவி மீன்கள் மனிதர்கள் உண்ணத்தக்க மீன்கள்தான். ஆனால், சில நாடுகளில் இதை உண்ணும் பழக்கம் கிடையாது.

Wednesday 20 March 2019


பன்மீன் கூட்டம் (தொடர்ச்சி)

1201. சூரையில் காக்கா சூரை, 1202. கோரா, 1203. கோலாவில் மயில் கோலா, 1204. முரலில் கறிமுரல், 1205. வாளையில் நெடுவாளை, 1206. கொண்டைச் செவ்வாளை, 1207. செங்குழி, 1208. சுடுக்கான், 1209. இருவிரால், 1210. கருங்குல்லுட்டான், 1211. உரல், 1212. சவரா, 1213. கெள்ளல், 1214. சுறாவில் கருங்கண் சுறா, 1215. கரம்பத்திச் சுறா                (தொடரும்).


புள்ளி இலத்தி (Common Scat)

புள்ளி இலத்தி
கடலோரங்களில் வாழும் கண்கவர் மீன்களில் ஒன்று புள்ளி இலத்தி. இதை எலத்தி என்று அழைப்பவர்களும் இருக்கிறார்கள். Scatophagus argus என்பது புள்ளி இலத்தி மீனின் அறிவியல் பெயர்.
புள்ளி இலத்தி தட்டையான உடலைக் கொண்டது. ஓரடி நீளம் வரை வளரக்கூடியது. பெரிய கண்களும் சிறிய வாயும் கொண்ட மீன் இது. வட்ட வடிவ தாடையில் பல வரிசைகளாக பற்கள் அமைந்திருக்கும். இதன் தலையின் மேல் ஒரு பெரிய சரிவைக் காணலாம்.
உடல் முழுக்க சிறு சீப்புப்பல் வடிவ (Ctenoid) செதிகள் மூடியிருக்கும்.
புள்ளி இலத்தியில் இளம்மீன்களே மிக
அழகாக இருக்கும். புள்ளி இலத்தி மீன்களை இருவகை வண்ணச்சாயல்களில் காண முடியும். ஒன்று மின்னும் சிவப்பு. மற்றொன்று மிளிரும் பச்சை நிறம்.

இளம் புள்ளிஇலத்தி மீன்களில் மிளிரும் சிவப்பு அல்லது செம்பழுப்பு நிறம் துலங்கும். உடல் முழுக்க கருப்பு நிறத்தில் பெரிய வட்டப்புள்ளிகள் பொலியும். சிறுமீன்களில் 5 முதல் 6 வரை செங்குத்து பட்டைகளும் காணப்படலாம்.
முதிர்ந்த புள்ளி இலத்தி மீன்கள் அவற்றின் நிறம் குன்றி, மாற்று குறைந்து, அழகை இழந்து விடும்.
புள்ளி இலத்தியின் முதுகுத் தூவியில் 10 முதல் 11 முள்களும், 16 முதல் 18 மென்கதிர்களும் காணப்படும். முட்களும், மென்கதிர்களும் சிறிய காடிவெட்டு பள்ளம் ஒன்றினால் பிரிக்கப்பட்டிருக்கும். கீழ்அடிப்புறத் தூவிக்கு சற்று முன்பாக பலமான 4 முட்கள் அமைந்திருக்கும்.
புள்ளி இலத்தியின் முதுகு முள்குத்தும், அடிப்பகுதி முள்குத்தும் கடுமையான வலியையும், மயக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. முள் குத்திய இடத்தை வெந்நீரில் நனைப்பதன்மூலம் ஓரளவு வலியைக் குறைக்கலாம்.
புள்ளி இலத்திகள் கடலோரமாகவும், ஆறுகள் கடலில் சேரும் கழிமுகங்களிலும் வாழக்கூடியவை. சிறுமீன்கள் நன்னீரில் கூட வாழும். முதிர் பருவத்தில் இவை கடலை நாடி வந்து, கடலில் வாழத் தொடங்கும். புள்ளி இலத்திகள் வாழ குறிப்பிட்ட அளவு வெப்பம் தேவை. குளிர்க்கடல்களில் இவற்றால் வாழ முடியாது.
புள்ளி இலத்தி மீனின் உணவுப்பழக்கம் பற்றி சிறு குழப்பம் உள்ளது. இவை அனைத்துண்ணிகள் என்று கருதப்பட்டாலும் சிலர் இவை தாவரம் மட்டுமே உண்டு வாழும் மீன் எனக் குறிப்பிடுகிறார்கள்.
பாசிகளுடன் புள்ளி இலத்திமீன் கழிவுகளையும் உண்ணும் என்பது தெரிய வந்திருக்கிறது. இலத்தி மீனின் அறிவியல் பெயரான Scatophagus argus என்பதில் ஆர்கஸ் என்பது புள்ளிகளைக் குறிக்கிறது. ஆனால், ஸ்கேட்டோபகஸ் என்ற முதல்பெயர், Spotted feces eater என்ற பொருளில் அதாவது ‘சாணம் உண்ணும் மீன்’ என்ற பொருளில் அமைந்தது. ஆகவே இது கழிவை உண்ணும் மீன் எனத் தெரிகிறது. ஆங்கிலத்தில் கூட ஸ்கேட் (Scat) என்பது கழிவைக் குறிக்கும் சொல்தான்.
தலைமேல் சரிவு...
தமிழில் இலத்தி என்ற பெயர் யானையின் சாணத்தைக் குறிக்கும் சொல். அந்த வகையில் தமிழில் நம் முன்னோர்கள் மிகச்சரியான பெயரையே இந்த மீனுக்குச் சூட்டியிருக்கிறார்கள்.
புள்ளி இலத்தி மீனை பெரும்பாலும் மனிதர்கள் உண்ண மாட்டார்கள்.  இதை உண்ணும் பழக்கம் உள்ளவர்களும் கூட, பிடிபட்ட மீன் விரைவில் கெட்டுவிடும் என்பதால் மீனைப் பிடித்ததும் முதல்வேலையாக சுத்தம் செய்து விடுவார்கள்.
புள்ளி இலத்தி மீன் மலையாள மொழியில் நச்சுக்கறி மீன் என அழைக்கப்படுகிறது. நச்சு என்றால் நஞ்சு என்பது எல்லோருக்கும் தெரியும். கறிமீன் என்பது இது உண்ணக்கூடிய மீன் என்பதைக் குறிப்பிடுகிறது.

Sunday 17 March 2019


முண்டக்கண்ணி (Redcoat Squirrel fish)

‘முண்டகக் கண்ணி’ என்ற தமிழ்ச்சொல்லுக்கு ‘தாமரை போன்ற கண்ணுடையவள்’ என்று பொருள். ஆனால், இந்தப் பெயர் காலப்போக்கில் முட்டை போன்ற விழிகளைக் குறிப்பிடும் ‘முண்டக்கண்ணி’ என்று  வேறுவிதமாகத் திரிந்து விட்டது.
கடலில் வாழும் ஒரு மீனினத்துக்கும் இந்த  முண்டக்கண்ணி என்ற 
பெயர் வந்து வாய்த்துவிட்டது.
முண்டக்கண்ணி என அழைக்கப்படும் இந்தவகை மீன், ஆங்கிலத்தில் சிவப்பு உடை தரித்த அணில்மீன்’ என்ற பொருளில் Redcoat Squirrel fish என அழைக்கப்படுகிறது.
இதே வகை மீனுக்குத் தமிழில் தங்கபாப்பா என்ற பெயரும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். Sargocentron rubrum என்பது இந்த மீனின் அறிவியல் பெயர். Holocentridae குடும்பத்தைச் சேர்ந்த மீன் இது.
சிவப்பு நிறம் கொண்ட முண்டக்கண்ணி மீன் 6 முதல் 10 அங்குல நீளத்துக்கு வளரக் கூடியது. சிவப்பு நிறமுள்ள இந்த மீனின் உடலில் படுக்கை வசமாக வெள்ளி மற்றும் செம்பழுப்பு நிற வரிகள் காணப்படும்.
சிவப்பு விளிம்பு உள்ள பெரிய கண்களை உடைய மீன் இது. இந்த பெரிய கண்கள் காரணமாகவே முண்டக்கண்ணி என இந்த மீன் அழைக்கப்படுகிறது.
முண்டக்கண்ணி மீனின் செவுள் திறப்புப் பகுதியில் முட்கள் காணப்படும். நஞ்சுள்ள இந்த முட்கள் மனிதர்களுக்கு வலிநிறைந்த காயங்களை ஏற்படுத்தக்கூடியவை. இந்த செவுள் முட்கள் காரணமாக இந்த வகை மீன், வலைகளில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்புண்டு.
முண்டக்கண்ணி மீனின் வால்தூவி, அடித்தூவி, கன்னத்தூவி போன்றவையும் சிவப்பு நிறமாகக் காட்சி தரும். இந்த மீனின் முகத்தைச் சுற்றி வெள்ளைநிற கோடுகள் காணப்படும். கண்களுக்குக் கீழே கண்ணீர் வடிந்து காய்ந்து போன தடம் போல கோடு காணப்படும்.

முண்டக்கண்ணி மீன், 1 முதல் 60 மீட்டர் ஆழத்தில் காணப்படும். பார்களை அடுத்து வாழும் மீன் இனம் இது. பகலில் குகைகள், பார் இடுக்குகள், பார் மறைவுகளில் பதுங்கியிருந்து விட்டு இரவில்தான் இது சிறுகூட்டமாக வெளிவரும். இறால், நண்டு, சிறுமீன்கள் இதன் முதன்மை உணவு.
இந்தியப் பெருங்கடலிலும், மேற்கே செங்கடல், கிழக்கே ஜப்பான், தெற்கே ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் பகுதி போன்றவற்றில் இந்த மீன் இனம் காணப்படுகிறது. பசிபிக் கடலில் உள்ள டோங்கா தீவின் அருகிலும் அண்மையில் இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுபோக சூயஸ் கால்வாய் வழியாக இந்த மீன் இனம், நடுநிலக்கடலில் (மத்தியத்தரைக்கடலில்) ஊடுருவி, அதன் கிழக்குப் பகுதியில் வாழ்வது தெரிய வந்திருக்கிறது.
முண்டக்கண்ணிகளில் ஏறத்தாழ நூறு வகை மீன்கள் உள்ளன. இவற்றில் ஓர் இனம் 20 அங்குல நீளம் வரை வளரக்கூடியது.
முண்டக்கண்ணி மீன்கள் மிகவும் விழிப்பானவை. இவற்றைப் பிடிப்பது கடினம். ஏற்கெனவே கூறியதுபோல, செவுள் முட்கள் வலைகளில் சிக்கினால்  இவை பிடிபடும் வாய்ப்புண்டு.
முண்டக்கண்ணிகளில் வளர்ந்த ஆண் மீன்கள் நீண்ட தொலைவுக்குச் செல்லாது. கடலின் அடிஆழத்தில் வாழ்வதையே அவை விரும்பும். சிறுமீன்கள் மட்டும் கூட்டமாக நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு புதிய இடங்களுக்குப் பரவ வாய்ப்புண்டு.
முண்டக்கண்ணி மீன்கள் உண்ணத்தகுந்த மீன்கள்.

Tuesday 12 March 2019


வாள்மீன் (SWORD FISH)

வாள்மீன்
 பில் பிஷ் (Bill fish) எனப்படும் ஈட்டி போன்ற மூக்கு நீண்ட மீன்கள் சில கடலில் உள்ளன. அவற்றில் ஒன்று கொப்பரக்குல்லா  (MARLIN)  எனப்படும் கொப்பரன். மற்றொன்று தளப்பத்து (Sailfish).
கொப்பரக்குல்லா எனப்படும் கொப்பரனில் கருங்கொப்பரன், நீலக் கொப்பரன், வரிக் கொப்பரன், வெண் கொப்பரன் என நான்கு வகைகள். கொப்பரக்குல்லா, தளப்பத்து மீனை விட நீளம் அதிகமானது என்பதுடன் கொப்பரக்குல்லாவின் தலையில் சிறுதூவி உண்டு. தளப்பத்துக்கோ முதுகில் பெரிய படகுப்பாய் போன்ற தூவி உண்டு. மயில், அதன் தோகையை விரிப்பது போல இந்த பாய்த்தூவியை விரிக்கவோ மடக்கவோ தளப்பத்தால் முடியும்.
ஆனால் நாம் இப்போது பேச வந்திருப்பது கொப்பரக்குல்லாவையோ, அல்லது தளப்பத்தையோ பற்றி அல்ல. (இவற்றைப் பற்றிய பதிவு நமது வலைப்பூவில் ஏற்கெனவே உண்டு.)
Swordfish என அழைக்கப்படும் வாள்மீனைப், (Xiphias gladius) பற்றித்தான் இப்போது நாம் பேச வந்திருக்கிறோம்.
வாள்மீன், தளப்பத்து, கொப்பரக்குல்லா போன்ற மீன்களுடன் சேராத தனி வகை மீன் இனம் ஆகும். Xiphiidae என்ற குடும்பத்தில் உள்ள ஒரே ஒர் உறுப்பினர் இந்த வாள் மீன் மட்டும்தான். வாள் மீனுக்கு செதிள்கள் கிடையாது. இதர மூக்கு நீண்ட மீன்களுக்கும் வாள்மீனுக்கும் உள்ள முதன்மை வேறுபாடு இதுதான்.
வாள்மீன்கள் 5 முதல் 14 அடி நீளம் கொண்டவை. 46 கிலோ முதல் 536 கிலோ வரை எடையுள்ளவை.
வாள்மீனின் ஈட்டி போன்ற மூக்கு மிகவும் நீளமானது. தளப்பத்து, கொப்பரான் மீன்களின் கூர்ஈட்டி முனைகளைவிட வாள்மீனின் வாய்ஈட்டியே வலிமையானது. இதன் அறிவியல் பெயரில் உள்ள gladius என்ற சொல் இலத்தீன் மொழியில் வாளைக்குறிக்கிறது.
மீனின் மொத்த எடையில் இந்த ஈட்டியின் பங்கு மட்டும் 20 முதல் 30 விழுக்காடு. அகன்ற, தட்டையான இதன் ஈட்டி மூக்கு முழுக்க முழுக்க தற்காப்புக்கானது. ஆனால், இரையைத் தாக்கவும் இந்த ஈட்டிமூக்கை வாள் மீன் பயன்படுத்தும்.
அதுபோல வாள் மீனுக்குப் பற்கள் கிடையாது. இதனால் இரையைக் கடிக்காமல், ஒரே விழுங்காக வாள் மீன் விழுங்கி வைக்கும்.
எல்சால்வடார் நாட்டு அஞ்சல்தலை
சூரை, வெங்கணா, கணவாய் போன்றவை வாள்மீனின் முதன்மை உணவு. ஆனால், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி அனைத்து வகை இரைகளையும் தனதாக்கிக் கொள்ள வாள்மீன் முயற்சிக்கும். சிறிய வகை திமிங்கிலங்களையும் கூட வாள்மீன் தாக்கும் என்பது தெரிய வந்திருக்கிறது.
தனது கூரிய ஈட்டியால் இரைமீனை குத்துவதற்குப் பதிலாக வாள்மீன் வெட்டும். இந்த வெட்டு காரணமாக இரைமீன் காயமடைந்து ஓடமுடியாமல் தவிக்கும்போது அதை மேலும் துண்டாடி வாள்மீன் விழுங்கும்.
முதிர்ந்த வாள் மீனுக்கு முதுகில் பின்னோக்கி வளைந்த நீண்ட தூவி உண்டு. இந்த முதுகுத் தூவி மென்மயிர்களால் ஆனது. இந்த தூவி, வணங்காமுடியாக எப்போதும்  நிமிர்ந்து நிற்கக் கூடியது. இதை தேவைக்கேற்ப விரிக்கவோ மடக்கவோ வாள்மீனால் முடியாது. முதுகின் பின்புறம் சிறிய மற்றொரு முதுகுத்தூவியும் உண்டு.
வாள்மீனின் முதுகும், உடலில் இருபகுதி மேற்புறங்களும் கரிய தாமிரம் போலத் திகழும். உடலின் அடிப்புறம் கிரீம் நிறம். முதுக்குத்தூவிகள், கன்னத்தூவிகள், அடிப்புறத்தூவிகள் யாவும் அடர்வண்ணம் கொண்டவை.
வாள்மீனின் கண்கள் சற்றுப்பெரியவை. பெரிய விழிகள் காரணமாக கரிய இருளிலும்,  வாள்மீனால் பார்க்க முடியும். கொழுப்புச் சத்து நிறைந்த வாள்மீனின் உடல், அதிக ஆழத்தில் கூட முக்குளித்து இரையை வேட்டையாட உதவுகிறது.
வாள்மீனின் விழிகளுக்கு அருகில் உள்ள சிறிய தசைத்திசுக்கள் மூளையுடன் தொடர்புடையவை. இதனால் குளிர்ந்த கடலிலும் கூட தனது உடல் வெப்பத்தை வாள்மீனால் தக்கவைத்து, கதகதப்பாக்கிக் கொள்ள முடியும். இந்த தசைத்திசுக்களின் உதவியால் விழிகளைச் சூடாக்கி, அடியாழத்தில் கூட, விழிகளின் பார்வைத்திறனையும் வாள்மீனால் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
மிக ஆழத்தில், குறைந்த அளவு உயிர்க்காற்றைப் பயன்படுத்தி வாள்மீன் இயங்கக்கூடியது.
இரவில் இது செங்குத்தாக மேலே எழுந்து கடல்மட்டம் நோக்கி இரைதேடி வரக்கூடியது. இரவில் இரையுண்ணக் கூடியது.
வாள்மீன் கடலைவிட்டு அடிக்கடி துள்ளிப்பாயும். மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும். அந்தவகையில் கொப்பரான் மீன்களுக்கு அடுத்தபடி கடலில் மிகவிரைவாக நீந்தும் மீன் வாள்மீன்தான்.
வாள்மீன் கடலில் மேற்பரப்பில் நீந்திவரும்போது அதன் வளைந்த முதுகுத்தூவி கண்டிப்பாக பார்ப்பவர்களின் கண்களில் தட்டுப்படும். தூண்டில் மீனாக மீனவர்களிடம் இது சிக்கும்.
துள்ளி..துள்ளி..
தூண்டிலில் சிக்கும் வாள்மீன்கள் மிகவும் கடுமையாக 4 மணிநேரம் வரை போராடும். நீருக்கு மேலே துள்ளிக்குதித்து தப்பிக்கப் பார்க்கும். சிறிய ஓய்வுக்குப்பின் மீண்டும் புத்துணர்வு பெற்று போராட்டத்தைத் தொடரும். வாள்மீனின் வாய் மென்மையானது என்பதால் தூண்டில் மாட்டி, இதன் வாய்கிழிந்து விட வாய்ப்புண்டு.
வாள்மீன்களில் ஆணை விட பெண்ணே பெரியது.
நீண்ட ஈட்டிமூக்கு காரணமாக வாள்மீனுக்கு எதிரிகள் குறைவு. எனினும் குறிப்பிட்ட வகை சுறாக்கள், பெரிய கருப்பன் எனப்படும் கில்லர்வேல் (Killerwhale) ஓங்கல்களால் வாள்மீனுக்கு ஆபத்து உண்டு.
அதிலும் மேக்கோ (Mako) வகை சுறா, அதன் வேகம் மற்றும் கூர்மையான பல அடுக்குப் பல்வரிசையால் வாள்மீனை வெற்றி கொள்ள வாய்ப்புண்டு. இந்தப் போராட்டத்தின் போது வாள்மீனின் ஈட்டிமுனை மேகோ சுறாவின் தலையில் பாய்ந்து முறிய வாய்ப்புண்டு. அப்படி
தலையில் பதிந்து முறிந்த ஈட்டியைப் பதக்கம் போல சூடிக்கொண்டு மேகோ சுறாக்கள் கடலில் வலம் வருவதும் உண்டு.